நீட் எதற்கு?







Image result for neet ban

நீட் : ஏன் எதிர்க்கிறது தமிழ்நாடு?

பாலசுப்பிரமணியம் முத்துசாமி
நீட்டுக்கு எதிரான கூட்டமைப்பு
ஆழி பதிப்பகம்
ரூ.30


நீட் என்ற தேர்வு எதற்கு? இதன் விளைவாக மருத்துவத்துறையில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை கல்வித்துறை சார்ந்த ஆளுமைகள் விரிவாக விளக்கியுள்ள நூல் இது.

எட்டு கட்டுரைகளில் நீட் தேர்வு எப்படி மருத்துவத்துறையை தனியார் மயத்திற்கான வாசலாக மாற்றி கிராமப்புற சுகாதார வசதிகளை அழிக்கும் என்பதை நேர்த்தியாக விளக்கியுள்ளனர்.

பிளஸ்டூ தேர்வு மதிப்பெண் முறைகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் பிரச்னையின்றி படித்துவரும் நிலையில் மாநில பாடத்திட்டத்திற்கு எதிராக கேள்விகளை தயாரித்து தேர்வுகளை நடத்தும் இந்திய அரசின் கபட நோக்கத்தை நீட் தொடர்பான கேள்விகள் பகுதியில் மரு. திவ்யா தனஞ்செயன்  விரிவாக கேள்வி பதில் முறையில் விரிவாக அம்பலப்படுத்தியுள்ளார்.

தமிழகம் பிற இந்திய மாநிலங்களை விட சுகாதார வசதிகளில் முன்னோடியாக உள்ளதோடு எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களை விட சிறந்த மருத்துவர்களை ஆண்டுதோறும் உருவாக்கி வருகிறது என்ற தகவலும் ஆச்சரியம் அளிக்கிறது. சாதனை என்று பீற்றிக்கொள்ளாமல் இயல்பாகவே நடைபெறும் செயல்பாடாகவே தமிழகத்தில் அதிகாரிகளின் நேர்மையான செயல்பாடால் மருத்துவத்துறை முன்னேறி வருவது பெருமைக்குரிய செய்தி.

இளநிலை, முதுநிலை என இரண்டிலும் நீட் தேர்வு வைத்து படிக்கும் ஆர்வமுள்ள கிராமப்புற மாணவர்களை  விரக்தி கொள்ளவைக்கும் நீட் தேர்வு, மருத்துவத்துறையை மனிதநேயமற்றதாக மாற்றும் என முனைவர் கலையரசனின் கட்டுரை பொட்டில் அடித்தாற்போல பேசுகிறது.

இந்தியாவிலுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 23 மருத்துவமனைகளை தமிழகத்தில் உள்ளன. ஏறத்தாழ 12%. இவையெல்லாம் நீட் தேர்வு இல்லாமல் சாதித்தவை என கூறப்படும் கட்டுரைகளும், மக்கள் நலக்குறியீடு தகவல்களும் இந்திய அரசு நீட் தேர்வை அமுல்படுத்த காட்டும் வேகத்தை சந்தேகிக்க வைக்கின்றன.

நீட் தேர்வு தற்போது அமுலாகி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதிவரும் நிலையில், தனியார் கட்டணகொள்கை ஒழிந்து கல்வியின் தரம் அதிகரித்துள்ளதா? என்ற கேள்விக்கு அரசிடம் எந்த பதிலுமில்லை.


தனியார் பயிற்சி நிலையங்கள் இதில் லாபம் கொழிப்பதோடு மாநில அரசின் பாடத்திட்டத்தை புறக்கணித்து மத்திய அரசின் பாடத்திட்டத்தை வலிந்து மாநிலங்களில் திணிப்பதாகவே மாறிவருகிறது என்பதே கண்ணில் தெரியும் உண்மை.

எத்திட்டங்களும் முழுமையானவை கிடையாது. காலப்போக்கில் அதன் குறைகளை பல்வேறு தரப்பினரிடமும் பேசி ஆலோசனை செய்து அதனை தீர்ப்பதே புத்திசாலித்தனம். ஆனால் நீட், இந்திய அரசு - மாநில அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கே மாறி உள்ளது ஏற்புடையது அல்ல. மாநில அரசுகளின் அதிகாரத்தை டெல்லிக்கு மாற்றும் இந்திய அரசின் தன்மை அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரான ஒன்று. அத்தகைய மோசடி திட்டங்களில் ஒன்று நீட் என்பதை பாலசுப்பிரமணியம் முத்துசாமி  தொகுத்த நூலை படித்தாலே அறியலாம்.

-கோமாளிமேடை டீம்


பிரபலமான இடுகைகள்