அலமாரியில் குற்றவாளி- சைகோ ஃபேமிலி அலப்பறை
அதிபர் படையில் சீக்கியர்!
அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு
படையில் முதன்முறையாக இணைந்துள்ள இந்திய வம்சாவழி சீக்கியர் வரலாறு படைத்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவில்
பிறந்தவர் அன்ஷ்தீப்சிங் பாட்டியா. அமெரிக்க பாதுகாப்பு படைக்கான பயிற்சிகளை முடித்து
அண்மையில் அதிபரின் பாதுகாப்பு டீமில் இணைந்துள்ளார். டர்பன் அணிவதற்கான கோர்ட் அனுமதியைப்
பெற்றுள்ள சீக்கியர் அன்ஷ்தீப், தன் பத்து வயதிலேயே அமெரிக்காவுக்கு வந்துவிட்டார்.
கான்பூரில் வாழ்ந்த அன்ஷ்தீப்பின் குடும்பம், 1984 ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலை பிரச்னைகளால்
லூதியானாவுக்கு இடம்பெயர்ந்து 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு விமானம் பிடித்தனர்.
கடந்த சில மாதங்களில் மூன்றுக்கு மேலாக தாக்குதல்கள் சீக்கியர்களின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள
நிலையில அன்ஷ்தீப்பின் பாதுகாப்பு படை செய்தி ஆசுவாசம் தருகிறது.
2
தங்க டிஃபன்பாக்சில் சோறு!
ஹைதராபாத்திலுள்ள நிஜாம் மியூசியத்தில்
திருடுபோன தங்க டிஃபன்பாக்ஸை போலீஸ் அரும்பாடுபட்டு மும்பை வரை சேசிங் செய்து மீட்டுள்ளனர்.
ஹைதராபாத்திலுள்ள நிஜாம் மியூசியம்,
தங்கம், வெள்ளி, மரகதம், ரூபி என தொன்மையான பொருட்களைக் கொண்டது. கடைசி ஹைதராபாத் நிஜாம்
உஸ்மான் அலிகான் மற்றும் அவரது தந்தை பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள் ஆகியவையும் கண்காட்சியில்
வைக்கப்பட்டிருந்தன. அங்கு வென்டிலேட்டர் உடைத்து உள்ளே என்ட்ரியான முகமது கௌஸ், பாஷா,
முகமது முபீன் ஆகிய தோஸ்த்துகள் இருவரும் தங்க டிஃபன்பாக்ஸ், மரகதம், ரூபிக்கற்களை
திருடிக்கொண்டு மும்பைக்கு தப்பினர். ஆனால் போலீஸ் சிசிடிவி வீடியோவை துல்லியமாக பார்த்து
இரு தோஸ்துகளையும் ரவுண்ட்அப் செய்து மடக்கியது. விசாரணையில், நட்சத்திர ஹோட்டல்களில்
தங்கி தினசரி தங்க டிஃபன்பாக்ஸில் மீல்ஸ் சாப்பிட்டு மகிழ்ந்த கதை வெளியாகி உள்ளது.
தங்கத்தட்டில் சோறு திங்க யாருக்குத்தான் ஆசை இல்லை?
துறவியிடம் நஷ்ட ஈடு!
குஜராத்தைச் சேர்ந்த வயதான தம்பதியினர்
துறவி மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். துறவி வேறு யாருமல்ல: எதிர்காலத்தில்
தம்மை காப்பாற்றுவான் என நம்பிய அவர்களது மூத்த மகன்தான்.
குஜராத்தைச் சேர்ந்த லீலாபென்,
பிகிபென் ஆகிய இருவரும் துறவியான மகன் தர்மேஷ் மீது வழக்குபதிவு செய்து அவர் கல்விக்கு
செலவழித்த ரூ.20 லட்சத்தை இழப்பீடாக தரக்கோரியுள்ளனர். இத்தம்பதியினருக்கு தர்மேஷூடன்
பிறந்த மனநிலை குறைபாடான இளைய மகனும் உண்டு. ஓய்வுபெற்ற அரசு பணியாளர் லீலாபென், பென்ஷன்
தொகையாக மாதம்தோறும் பெறும் ரூ.30 ஆயிரத்தில் இளையமகனுடன் வாழ்ந்துவருகிறார்.
தேசிய மருந்தியல் கல்வி மற்றும்
ஆராய்ச்சி கழகத்தில்(NIPER) படித்துமுடித்த தர்மேஷ், 2015 ஆம் ஆண்டு திடீரென ஆன்மிக
நாட்டம் ஏற்பட சாதுவிடம் தீட்சை பெற்று உடனே துறவியானார். பெற்றோர் கெஞ்சியும் வீட்டைவிட்டு
வெளியேறி துறவியான தர்மேஷ், பெற்றோருக்கு தர பணம் ஏதுமில்லை என கோர்ட்டில் கூறிவிட்டார்.
பராமரிப்பு தொகையை பெறுவதே தர்மேஷின் பெற்றோருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.
4
அலமாரியில் குற்றவாளி!
காணவில்லை என்று கூறப்பட்ட போதைப்பொருள்
குற்றவாளியை அவரது வீட்டின் அலமாரியிலிருந்து போலீசார் கண்டுபிடித்து ஷாக் ஆகியுள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதலாக டெல்லி
-– காசியாபாத் பார்டரில் போதைப்பொருட்களை விற்று வந்த குலாப்சிங் மீது கொலைவழக்கு உள்ளிட்ட
க்ரைம் கேஸ்கள் உண்டு. அவரை போலீஸ் விசாரணையிலிருந்து மீட்க அவரது மனைவி அஞ்சு, கான்ஸ்டபிள்
அஜய் சங்கர் தன் கணவரை கடத்திவிட்டதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாரளித்தார். உடனே
காவலர் அஜய் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டாலும் குலாப்சிங்கை காவலர்
அஜய் கடத்தியதற்கான நானோ தடயமும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை.
ஓராண்டு அலைச்சலுக்கு பிறகு எஸ்.பி
மவுரியா, உத்தரவின் பேரில் குலாப்சிங் வீட்டில் திடீர் ரெய்டு நடத்தியபோது அலமாரியில்
ஓராண்டாக மறைந்து வாழ்ந்த குலாப் பிடிபட்டார். இதற்கு மனைவி அஞ்சுவும், மகனும் உடந்தை
எனவும் தெரியவந்துள்ளது. “கடந்த ஆண்டு காவலர் அஜய் என்னை பலமணிநேரம் விசாரித்து டார்ச்சர்
செய்தார். அவரை பழிவாங்கவே அவர்மீது புகார்கூறி தலைமறைவானேன்” என்று பதில் கூறியிருக்கிறார்
குலாப்சிங். சைக்கோ சாடிஸ்ட் பேமிலி!
5
கோமாதா பேப்பர்!
பசுவின் சாணத்தை எரிபொருளாக, உரமாக
பயன்படுத்துகிறோம். விவசாயிகளுக்கு பொருளாதாரரீதியில் உதவும் வகையில் அதனை காகிதம்
தயாரிக்க பயன்படுத்தி கவனம் ஈர்த்துள்ளது ராஜஸ்தான் அரசு.
அண்மையில் காதி நிறுவனத்தின் துணை
நிறுவனமான குமரப்பா தேசிய காகிதக்கழகம், பசு சாணத்தை பயன்படுத்தி தயாரித்த காகிதத்தை
சிறுகுறு நிறுவன அமைச்சர் கிரிராஜ்சிங் வெளியிட்டார். இதன்மூலம் பசுக்களை வளர்க்கும்
விவசாயிகளுக்கு உதவுவதோடு, சாலையில் தேங்கும் சாணக்கழிவுகளும் குறையும் என்பது ராஜஸ்தான்
அரசின் நம்பிக்கை. ராஜஸ்தானிலுள்ள 1,160 அங்கீகாரம்
பெற்ற பசு காப்பகங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளன என்பதால் சாணத்திற்கு
பிரச்னையில்லை. பசுவின் சிறுநீரில் வீடுகளை கழுவும் பொருட்களையும் அரசு அங்கு விளம்பரம்
செய்து வருகிறது. அப்ப, மக்களுக்கான திட்டங்கள் எதுவுமில்லியா?