பிபிசி 100 பெண்தலைவர்களின் ஒருவர், விஜி பென்கூட்டு
நாற்காலிக்கான போராட்டம்!
கேரளாவைச் சேர்ந்த தையற்கலைஞரான விஜி பென்கூட்டு, பிபிசி நிறுவனத்தின் 100 பெண் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
கேரளாவில் எளிய தையற்கலைஞராக பணிபுரிந்து வரும் விஜி பென்கூட்டு, போராடியது நாற்காலிக்காகத்தான். பதவிக்கான நாற்காலி அல்ல; பெண்களின் உரிமைக்கான நாற்காலி அது. கோழிக்கோட்டிலுள்ள ஸ்வீட் மீட் தெருவில் தையற்கலைஞராக உள்ள விஜி, பெண் தொழிலாளர்கள் கடைகளில் அமர்வதற்கான சட்ட உரிமையை கேரள அரசிடம் போராடிப் பெற்றுத் தந்துள்ளார்.
மற்றுமொரு மகிழ்ச்சிகரச் செய்தியாக, பிபிசி பெண்கள் பட்டியலிலும் இடம்பிடித்து நம்பிக்கை மனுஷியாக சாதித்துள்ளார் விஜி. ” 2009 ஆம் ஆண்டு பெண் தொழிலாளர்களுக்கான கழிவறைக்காக போராடி வசதிகளைப் பெற்றோம். தற்போது இங்கு பணியாற்றும் எண்ணிக்கையில் முன்பு பெண் தொழிலாளர்கள் பணிபுரிய வாய்ப்பு தரவில்லை. ” என்கிறார் விஜி.
ஏஎம்டியூ(Asankhaditha Meghala Thozhilali Union - AMTU) என்ற பெண் தொழிலாளர்களுக்கான சங்கத்தை தொடங்கி பெண்களின் உரிமைகளுக்காக மாநில அரசிடம் பேசத் தொடங்கினார் விஜி. 2014 ஆம் ஆண்டு மே 1 அன்று, இரிக்கல் சமரம் என்ற பெண்தொழிலாளர்களுக்கான அமரும் போராட்டத்தை தொடங்கினார்.
ஜவுளித் தொழிலாளர்கள் பங்கேற்ற இப்போராட்டத்தில் வேலை நேரத்தில் பெண்கள் நாற்காலியில் அமர்வதற்கான உரிமை தேவை என வாதிட்டார் விஜி பென்கூட்டு.
பெண் தொழிலாளர்களின் தொடர்ந்த போராட்டம் நீள, கோரிக்கைகளுக்கு அரசு பணிந்தது. விளைவாக, கேரள அரசு 2018 ஆம் ஆண்டு ஜூலையில் வணிக கடைகள் சட்டம்(1960) இல் மாறுதல்களை செய்தது. இதில் பெண்கள் அமருவதற்கான, பணிநேரம் வரையறுப்பு, விதிமீறல் தண்டனைகள் ஆகியவற்றை சீர்திருத்தி வெளியிட்டது. இப்போராட்டத்திற்கான அங்கீகாரமாக பிபிசி நிறுவனம், விஜி பென்கூட்டுவை நூறு பெண் தலைவர்கள் பட்டியலில் சேர்த்து பெருமைப்படுத்தியுள்ளது. இப்பட்டியலில் ஆஸ்திரேலியா பிரதமர் ஜூலியா கில்லார்ட், நோபல் பரிசு வென்ற வேதியியலாளர் பிரான்சஸ் அர்னால்ட், நியூயார்க் பங்குச்சந்தை தலைவரான ஸ்டேசி கன்னிங்காம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நன்றி: டெக்கன் கிரானிக்கல்