பசுமை வீடுகள் கட்டலாம் வாங்க!
குங்குமம்\ ஷாலினி நியூட்டன் |
பரவும் பசுமைக் கட்டிடங்கள்
பிஜூ பாஸ்கர் |
இந்தியாவில் பிளாஸ்டிக் மற்றும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி வீடுகளைக் கட்டும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
பறவைகள், தேனீக்கள் தங்களுக்கான வீட்டை கட்டிக்கொள்ளும்போது மனிதர்களால் கட்ட முடியாதா? தற்போது இந்தியா முழுக்க குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வீடுகளை கட்டிக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த பிஜூ பாஸ்கர், அருகில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தனது வீட்டை 45 நாட்களில் கட்டியுள்ளார். செலவு வெறும் 3.25 லட்சம் மட்டுமே. “இயற்கைப் பொருட்கள் என்றாலும் பல ஆண்டுகள் உறுதியாக இருக்கும். நாங்கள் பிறரின் வீடுகளைக் கட்டுவதற்குக் காசு வாங்குவதில்லை. பதிலாக உணவுகளை அல்லது பொருட்களைக் கேட்டு வாங்கிக்கொள்வோம் ” என்றார் பாஸ்கர்.
கிராமத்தினருக்கு தன்னல்(Thannal) எனும் அமைப்பு மூலமாக வீடுகளைக் கட்டித்தந்து வருகிறார். கிடைக்கும் இடத்தில் விறுவிறுவென குறைந்த ஆட்களைக் கொண்டே வேலை பார்த்து பசுமை வீடுகளை எழுப்பிவிடுவது தன்னல் குழுவின் சாமர்த்தியம். 2011 ஆம் ஆண்டு தொடங்கி செயற்பட்டுவரும் தன்னல் அமைப்பு, ஊடகங்களை கவனமாக தவிர்த்துவிட்டு உழைத்து வருகின்றனர்.
சொந்தவீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. இதில் மலிவான விலையில் வேகமான பாதுகாப்பான கட்டுமானம் என்பது பிஜூ பாஸ்கரின் கட்டுமானச் சிறப்பு. இதுவரை தன்னல் அமைப்பு, 50க்கும் அதிகமான பயிற்சி பட்டறைகளை நடத்தி மக்களுக்கு சூழலியல் கட்டுமானங்களை பிரசாரம் செய்துள்ளது.
இவர்களைப் போலவே கொடைக்கானலில் கருணா தம்(Karuna Tham) என்ற அமைப்பு, பிளாஸ்டிக்குகள் மற்றும் பயன்படாத டயர்களைப் பயன்படுத்தி குடியிருப்புகளை உருவாக்கித் தருகின்றனர்.
இயற்கை வழி
களிமண் வீடு கட்ட நிறைய நுட்பங்கள் உண்டு. மணல், களிமண், பசுவின் சாணம் மற்றும் சிறுநீர், எலுமிச்சை ஆகியவற்றை ஒன்றாக கலக்கி பயன்படுத்துவது, மேற்சொன்ன கலவையை கற்களாக்கி உலரவைத்து பயன்படுத்துவது, பலகைகளை இணைத்து களிமண்ணை இணைப்புகளுக்கு பூசிக்கட்டுவது, மூங்கில் மற்றும் களிமண்ணை ப் பயன்படுத்திக் கட்டுவது என முறைகளும் மாறுபடும். இதில் அடித்தளத்திற்கு மட்டும் மணலை மூட்டைகளில் நிரப்பி பயன்படுத்துகின்றனர். ”சிமென்டை கட்டுமானத்திற்கு பயன்படுத்தினால் உங்கள் வீடு மூச்சுவிடுவதை நிறுத்திவிடும்” என்றார் தன்னல் பிஜூ பாஸ்கர்.
பொதுவாக வீடு கட்ட களிமண், பயன்படாத டயர்கள், டின் டப்பாக்களை பயன்படுத்துகின்றனர். பூச்சுக்காக முட்டையின் வெள்ளைக்கரு, வெல்லம், நெல்லிக்காய், வெந்தயம், ஸ்டார்ச் மாவு, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
செலவு எவ்வளவு?
குறைந்தபட்சத் தொகையாக ஒரு வீடு கட்ட ஒன்றே கால் லட்சம் ரூபாய் பிடிக்கும். ஒரு சதுர அடிக்கும் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் வரை செலவாகும் என்பது தோராய மதிப்பு. முதலில் பாஸ்கர் கட்டிய வீடுகளை வசதி உடையவர்கள்தான் கட்டமுடியும் என்று சுற்றுப்புற மக்கள் நினைத்தனர். ஆனால் கஜா புயலிலும் விழாத வீடு என்பதால், மக்கள் இப்போது பாஸ்கரின் தன்னல் அமைப்பை வீடு கட்டித்தர அழைப்பு விடுத்து வருகின்றனர். “இங்குள்ள உள்ளூர் மக்கள் நாங்கள் கட்டும் வீடுகளை சந்தேகம் போக பார்த்தபின்னரே, வீடு கட்டிக்கொடுக்க எங்களை அணுகினர். இதேபோல கேரளத்திலும் 15 விவசாயிகளுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம்” என்றார் பாஸ்கர்.
இந்தியாவில் பசுமை வீடுகள்
லிட்டில் கிரீன் கஃபே, பெங்களூரு
கட்டுமானங்களில் முடிந்தளவு ஆற்றலைச் சேமிக்கிற நிறுவனம் இது. இயற்கை காற்றோட்டம், சுவர்களுக்கு இயற்கை நிறங்கள், பழைய தேக்குமரங்களை பயன்படுத்துவது, நாற்காலிகள், மறைப்புகளுக்கு கரும்பு என அசத்துகிறார்கள்.
கேம்ப், மும்பை
மூங்கில் கூரை, மறுபயன்பாட்டு மரங்கள், காகிதக் குழாய்கள் என யோசித்து வடிவமைத்து அசத்துகிறார்கள்.
தி அட்லியர், பெங்களூரு.
இந்நிறுவனத்தின் கட்டுமானங்கள் டென்ட்போல தேவையானபோது பிரித்து எடுக்க முடியும். காகித குழாய்கள், மூங்கில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தகவல்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்
வெளியீட்டு அனுசரணை: தினமலர் பட்டம்