கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம்! சென்னை கார்ப்பரேஷன் ஐடியா



Image result for கழிவுநீர் சுத்திகரிப்பு
IndiaSpend


கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம் !

சென்னை குடிநீர் வடிகால் வாரியம் (CMWSSB) கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீர் தயாரிக்கலாம் என்ற திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்துள்ளது. 

பருவமழை தவறியதாலும், முறையான மழைநீர் சேகரிப்பு வசதிகள் கடைபிடிக்காததும் சென்னையின் குடிநீர்ப் பிரச்னையை அதிகரித்துள்ளது. மழைநீர் பொய்த்ததால் சென்னைக்கு நீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர் வற்றிவிட்டது. இந்நிலையில் எதிர்வரும் கோடையை எப்படிச் சமாளிப்பது? இதற்குத்தான் குடிநீர் வடிகால் வாரியம் கழிவுநீரை சுத்திகரித்து தினசரி, 260 மில்லியன் லிட்டர் நீரை குடிநீராக வழங்கும் திட்டத்தை அரசுக்கு அளித்துள்ளது. இதற்கான தொழிற்சாலையை அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

குடிநீர் கிடைக்குமா?

இத்திட்டத்தின் மூலம் பெருங்குடி ஏரி, நாராயணபுரம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, போரூர் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, ரெட்டி ஏரி ஆகிய நீர்நிலைகள் பயன்பெறவிருக்கின்றன. தற்போது நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக பத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, பெறப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அருகிலுள்ள ஏரிகளில் செலுத்தப்படும். இதில் நான்கு நிலையங்கள் பத்து மில்லியன் லிட்டரும், மீதியுள்ளவை 6 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.

சுத்திகரிப்பு முறை

கழிவுநீரை சுத்திகரித்து வழங்குவது தமிழகத்திற்கு புதிதல்ல. 1991 ஆம் ஆண்டில் கொடுங்கையூரில் தொழிற்சாலைகளுக்காக சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. முதலில் கழிவுநீரை எஸ்டிபி(Sewage Treatment plant(STP)) எனும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்புகின்றனர். இங்கு இரண்டு கட்ட சுத்திகரிப்பு நடைபெறுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீரை, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு ஆகியவற்றில் சேர்க்கின்றனர். லிட்டருக்கு 800 மி.கி உப்புகள் நீரில் கரைந்துள்ளன. நூறு மி.லி நீரில் 5,500 அளவுக்கு பாக்டீரியாக்கள் இருப்பதை MPN(Most Probable Number) கண்டுபிடித்தனர்.

நெசப்பாக்கத்திலுள்ள கழிவு சுத்திகரிப்பு நிலையம்,  கழிவுகளிலிருந்து வேதிப்பொருட்கள் இன்றி நைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் திறனில் வெற்றி பெற்றுள்ளது. ஐஐடி மெட்ராஸ், கழிவுநீரை சுத்திகரிக்கும் முறையை முன்னமே சோதித்து பார்த்துள்ளது.  “ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புக்கும், எங்களுடைய கண்டுபிடிப்புக்கும் உள்ள  வித்தியாசம், நாங்கள்  கூடுதலாகப் பயன்படுத்தும் கார்பன் ஃபில்டர்கள்தான்” என்றார் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர்.

“நாங்கள் செய்த சுத்திகரிப்பு சோதனை திருப்திகரமான  முடிவுகளைத் தந்தது. அரசு தற்போது சுத்திகரிப்புக்கான லேயர்கள், மற்றும் ஃபில்டர்களை அதிகரித்துள்ளது. இதனால், நீரின் தரம் கூடும்” என்கிறார் ஐஐடி மெட்ராஸின் பேராசிரியரான லிஜி பிலிப்.  சோதனையில் ஒரு லிட்டரில் 450 மி.கி. உப்புகளும், பாக்டீரியா கிருமிகள் அற்ற நீர் கிடைத்தது பலரையும் உற்சாகப்படுத்தி உள்ளது.


கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள்
கழிவுநீர் மையம் முந்தைய திறன், தற்போதைய திறன்  ஏரிகள்
பெருங்குடி             126 60  பெருங்குடி ஏரி,நாராயணபுரம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை
நெசப்பாக்கம் 117 60 போரூர்
கோயம்பேடு 214 60 அயனம்பாக்கம் ஏரி
கொடுங்கையூர் 270 80 ரெட்டேரி
மொத்தம் 727 260