மூளையைத் தின்னும் கிரேட் டிட்ஸ் பறவை: ஏன் இந்த கொலைவெறி?




Image result for great tits




வன்முறைக்குப் பழகும் பறவைகள்!

 பருவச்சூழல் மாற்றங்கள், பறவைகளின் குணநலன்களின் மாற்றத்தை ஏற்படுத்துவதாக உயிரியல் ஆய்விதழ் தகவல் தெரிவித்துள்ளது. 

பருவச்சூழல் மாற்றங்களால் கடல்நீர் மட்டம் உயர்வது, குடிநீர் தட்டுப்பாடு, வெப்பம் உயர்வது ஆகியவை மனிதர்களை மட்டுமல்ல பறவைகளையும் பாதிக்கிறது. இதனை கரன்ட் பயாலஜி என்ற ஆய்விதழின் பத்தாண்டு கால ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது.

வாழ்க்கைச்சுழற்சி மாற்றம்!

ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களில் அதிகம்  காணப்படும் பறவை கிரேட் டிட்ஸ்(Parus major).  வசந்தகாலத்தில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் பறவை, கிரேட் டிட்ஸ். இதைப்போன்றே, அங்கு வாழும் ஃபிளைகேட்சர் எனும் பறவை ஆப்பிரிக்காவுக்கு இனப்பெருக்கத்திற்காக இடம்பெயர்கிறது.  தற்போது பருவநிலை மாறுதல்களால் இருபறவைகளுக்கான உணவு ஆதாரங்கள் தட்டுப்பாடாகி வருகின்றன.

இச்சூழ்நிலை இரு பறவை இனங்களுக்குமிடையே யார் பிழைத்திருப்பது என்ற பெரும் போரை ஏற்படுத்திவிட்டது. வெப்பமயமாதலால் பறவைகளின் இனப்பெருக்க காலம், கருவுறும் கால மாற்றம் ஆகியவை, அதன் வாழ்க்கை சுழற்சியிலும் திகைப்பூட்டும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆராய்ச்சிக் காலத்தில் கிரேட் டிட்ஸ் பறவைகள், திடீரென குறிவைத்து ஃபிளேகேட்சர் பறவைகளை தீவிரமாக வேட்டையாடியது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆராய்ச்சியை 2007 -2016 வரை செய்து ஃபிளைகேட்சர் பறவைகள் கிரேட் டிட்ஸ் பறவைகளால் வேட்டையாடப்படுவதை உறுதி செய்துள்ளார் குரோனிங்கன் பரிணாம அறிவியல் கழக உயிரியலாளரான ஜெல்மர் சாம்ப்ளோனியஸ்.

குரூரக்கொலை!

ஜெல்மரும் அவரின் சக ஆராய்ச்சியாளர்களும் டச்சு தேசியப்பூங்காக்களில் பத்து ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சி முடிவுகள், உயிரியலாளர்களிடையே பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையில்  86(மொத்த பறவைகள் 88) ஃபிளைகேட்சர் பறவைகள் கிரேட் டிட்ஸால் தாக்கப்பட்டு இறந்துள்ளன.  ”மேற்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கு ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயரும் ஃபிளைகேட்சர்களின் மெல்லிய உடல் அமைப்பு, கிரேட் டிட்ஸ் பறவைகளுடன் போரிடுவதற்கு ஏற்றதல்ல” என்கிறார் உயிரியலாளரான ஜெல்மர். இதில் கிரேட் டிட்ஸ் பறவை குறிப்பாக ஃபிளைகேட்சர் பறவைகளை தாக்கி ஆண் பறவைகளை மட்டுமே கொன்று போடுகிறது. இந்த தாக்குதல் நாம் நினைப்பதை விட குரூரமானது.

உணவுப்போட்டியினால் எதிரியைக் கொல்வது இயல்பாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எதிரியைக் கொன்று அதன் மூளையை மட்டும் தின்னுவது கிரேட் டிட்ஸ் பறவையின் புதிய வழக்கமாகி இருப்பது  எதிர்வரும் ஆபத்தை உணர்த்துகிறது. இறந்துபோன அனைத்து ஃபிளைகேட்சர் பறவைகளின் தலைகளிலும் கடுமையான ரத்தக்காயங்கள் உள்ளன.

கருவுறுதல் முந்துகிறது!

இயற்கையில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளால் இருபறவைகளும் கூடுகட்டும் போட்டியில் ஒன்றொன்று அழிக்க முயற்சித்து வருகின்றன. அனைத்துக்கும் வெப்பமயமாதல்தான் காரணம். வெப்பமயமாதலால், கிரேட் டிட்ஸ் பறவைகளின் இனப்பெருக்க காலமும், இடம்பெயர்தலும் வேகமாக மாறியுள்ளது.
“ஃபிளைகேட்சர் பறவைகளில் ஆண்கள் கொல்லப்படுவது உண்மை. இதனால் இடம்பெயர்வுக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படாது.” என்கிறார் ஜெல்மர். ஆனால் பறவைகளின் குணங்கள் அடியோடு மாறுவது கவனிக்க வேண்டியது அவசியம். பெண் இணைகள் கிடைக்காத ஆண் பறவைகள் என்றாலும் அவை அதிக எண்ணிக்கையில் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும். இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை முன்னதாகவே கண்டுணர்வது, மனிதர்கள் பேரழிவிலிருந்து தம்மை மீட்க உதவும்.


தகவல்:Current Biology.

வெளியீடு: தினமலர், காலைக்கதிர் - பட்டம்