பசுமைச்சட்டங்கள் அமலாகாதது ஏன்?





Related image
bankruptcysoapbox.com





பசுமைச் சட்டங்கள் அமலாகாதது ஏன்?

  உலகம் முழுக்க அறிவிக்கப்பட்ட பசுமைச் சட்டங்கள் முறையாக நடைமுறையில் அமலாகவில்லை என்று ஐ.நா சபை கூறியுள்ளது.

உலக நாடுகளில் அமலான பசுமைச்சட்டங்கள், விதிகள் மிகவும் மோசமான நிலையில் கடைப்பிடிக்கப்படுவதாக ஐ.நா சபை வருத்தம் தெரிவித்துள்ளது. உலகில் கடந்த நாற்பது ஆண்டுகளில் 38 சதவீதச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பசுமையைக் காக்கும் முயற்சியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

தடுமாற்றம் ஏன்?

இந்தியா சரியான முறையில் சுற்றுச்சூழல் சட்டங்கள் செயல்படுத்தாததால் உணவு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்னைகளை நாம் சந்தித்து வருகிறோம். நாட்டிலுள்ள நீர் ஆதாரங்களை முறைப்படுத்துவதற்கான சட்டம் 1974இல் அமலானது. ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளாக செயல்படுத்தப்படாத இச்சட்டத்தினால், சரியான நேரத்தில் கிடைக்கவேண்டிய அவசியமான பயன்கள் இன்று நம் கைவிட்டுப் போய்விட்டன.

”நாம் கொள்கைகளை உருவாக்குவதில் புத்திசாலிகள்தான். ஆனால் அமலாக்குவதில்தான் பெரும் சுணக்கம் நிலவுகிறது. பொறுப்பற்ற அல்லது செயலற்ற அமைப்புகளினால் வரும் பிரச்னை இது. இச்செயல்பாடுகளை கண்காணிப்பதிலும் இந்திய அரசின் கவனக்குறைவு அதிர்ச்சி தருகிறது ” என்றார் அறிவியல் மற்றும் சூழல் மைய இயக்குநரான சுனிதா நரைன்.


பட்டியலில் சரிவு

கடந்த ஆண்டு வெளியான உலக சூழல் செயல்பாடு பட்டியலில்(Global Environment Performance Index (EPI) ) இந்தியாவின் இடம் 177(180நாடுகளில்).  யேல் பல்கலைக்கழகம் நாட்டின் காற்று, பல்லுயிர்த்தன்மை, பசுமை இல்ல வாயு ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு சூழல் செயல்பாட்டு பட்டியலைத் தயாரித்துள்ளது. 2016இல் இப்பட்டியலில் இந்தியா 141 ஆவது இடத்தில் இருந்தது.

அதற்காக இந்தியாவில் விதிகள் உருவாக்கப்படவே இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். ஏராளமான சட்டங்கள், விதிமுறைகள் என அனைத்தும் சட்டநூல்களில் மட்டுமே இருப்பதுதான் பிரச்னை. இந்தியாவில் செயல்பட்டு வரும் 300 க்கும் மேற்பட்ட  நிலக்கரிச் சுரங்கள் விதிமுறைகளை உடைத்து நிலம், நீர், காற்று என அனைத்தையும் மாசுபடுத்தி வருகிறது. இத்தகவல்கள் இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை 2015 ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்தது. 

விதிகள் புறக்கணிப்பு

இந்திய அரசின் சுற்றுச்சூழல்துறை மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகளை புறக்கணிப்பது தனியார் தொழிற்சாலைகள் அல்ல; விதிகளை முறைப்படுத்தும் பொறுப்புள்ள மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும்தான்(மூன்றில் இருபங்கு). 
அண்மையில் மேகாலயாவில் நடந்த  சுரங்க விபத்து இதற்கு சரியான உதாரணம். 2015 ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம், மேகாலயாவிலுள்ள சுரங்கங்களை(Rat hole mines) மூடுவதற்கு பரிந்துரைத்தது. ஆனால் அரசு அந்த பரிந்துரையை புறக்கணிக்க, நான்கே ஆண்டுகளில் சட்டவிரோத சுரங்கத் தொழில் கொழிக்கத் தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 21 ஆயிரம் சூழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. உலகில் ஐம்பது நாடுகளில் பசுமை நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் செயல்படுகின்றன. அதோடு 88 நாடுகளில் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என்பது ஒருவரின் உரிமை எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளன என தகவல் தருகிறது ஐ.நாவின் அறிக்கை. ”ஐ.நாவின் புதிய அறிக்கை,  மாசுபாடு குறித்த புதிய தகவல்களையும், வெப்பமயமாதல், பல்லுயிர்த்தன்மை ஆபத்துகளையும்  விரிவாகக் கூறி தீர்வுகளை முன்வைக்கிறது” என்கிறார் ஐ.நாவின் சிறப்பு செய்தியாளரான டேவிட் போய்ட்.

தன்னார்வலர்கள் படுகொலை

உலகில் 35 நாடுகளில் செய்த ஆய்வுகளின் படி, 2002 முதல் 2013 வரை 908 சூழலியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் உலகெங்கும் 197 சூழலியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொருளாதார வளர்ச்சியோடு மக்கள் வாழ்வதற்கான உயிர் ஆதாரங்களுக்கும் உலகில் இடமுண்டு என்பதை அரசுகள் புரிந்துகொள்வது அவசியம். இம்முயற்சிக்கு நாம் அனைவரும் தோள் கொடுத்தால்தான் எஞ்சியுள்ள காடுகளை, இயற்கை வளங்களைக் காக்கமுடியும்.

தகவல்: Down to earth

வெளியீடு: தினமலர் பட்டம்