சாக்லெட்டுக்கு விருது வென்ற கோவை இளைஞர்
லிவ்மின்ட் |
கோவையைச் சேர்ந்த அருண் விஸ்வநாதன் இத்தாலியில் நடைபெற்ற சாக்லெட் போட்டியில் வெற்றிபெற்று சித்ரம் கிராஃப்ட்ஸ் சாக்லெட் கம்பெனியை பிரபலப்படுத்தி உள்ளார்.
உலகளவிலான கம்பெனிகள் கலந்துகொள்ளும் போட்டியில் பங்கேற்ற அருண், மாம்பழ ஃப்ளேவர் சாக்லெட்டுக்காக வெண்கலப்பத்தகம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியரின் நிறுவனம் ஒன்று சாக்லெட்ட்டிற்கான விருது பெறும் முதன்முதல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நவம்பரில் சாக்லெட் போட்டியில் இறுதிக்குள் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைத்தவர், அபாரமான வெற்றி பெற்று உலக அரங்கில் இந்திய சாக்லெட்டுகளுக்கான சந்தையையும் திறந்துள்ளார். அருண், கார்னெல் பல்கலையில் உணவு அறிவியல் பாடம் கற்றவர்.
எட்டுப்பேர் கொண்ட குழு, சித்திரம் சாக்லெட் நிறுவனத்தை நடத்துகிறது. சாக்லெட்டின் அடிப்படையான கோகோவை தமிழகம் மற்றும் கேரளத்திலுள்ள சில விவசாயிகளிடம் அருண் வாங்கிவருகிறார். கோவையில் உள்ள கஃபேயின் பின்புறம் சித்திரம் சாக்லெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இவர் சான்றிதழ் பெற்ற சாக்லெட் டேஸ்டரும் கூடத்தான்.
”சாக்லெட் கம்பெனியின் பெயர், நிறம் ஆகியவற்றை கூறியது என் அம்மாதான். ஆனால் சாக்லெட் நிறுவனம் தொடங்கப்பட்டு சாதனை விருதுகளை வெல்வதற்குள்ளாகவே அவர் உடல்நலம் குன்றி இறந்துவிட்டார். அம்மாவுக்கு பிடித்த சிவப்பு, நீலம், கத்தரிப்பூ நிறம் என மூன்று நிறங்களில் சாக்லெட்டுகளின் கவர்களை தயாரிக்கிறோம்” என்கிறார் அருண்.
ஹாட் சாக்லெட்டுகளில் மட்டும் 25 வெரைட்டியில் அசத்தியுள்ளார் அருண். விரைவில் சென்னை, பெங்களூருவிலும் கஃபே திறக்கும் ஏற்பாடுகளில் உள்ளார். இந்தியாவில் மாண்டெல்ஸ், ஃபெரிரோ, நெஸ்லே உள்ளிட்ட நிறுவனங்கள் சாக்லெட் சந்தையைக் கையகப்படுத்தியுள்ளன. இந்நிலையில், உள்நாட்டிலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிகரான தரத்தில் சாக்லெட்டுகள் தயாரிக்க முடிவது நமது திறன் குறித்த பெருமிதத்தை ஏற்படுத்துகிறது.
நன்றி: லிவ் மின்ட்(ஷர்மிளா வைத்தியநாதன்)