சென்னை மாநகராட்சியின் சைக்கிள் பூங்கா
ஜாலியான சைக்கிள் சவாரிக்கு ரெடியா?
செய்தி: சென்னை கார்ப்பரேஷன், விரைவில் சைக்கிள்களை வாடகைக்கு விட 25 சைக்கிள் பூங்காக்களை அமைக்கவிருக்கிறது.
உலக நாடுகள் பலவற்றிலும் கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக சைக்கிள் பயணங்களை பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் சைக்கிள்களில் மக்கள் பயணிக்க தனிப்பாதைகள், வாடகை சைக்கிள் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் சைக்கிள்களை வாடகைக்கு விடும் ஸ்டார்ட்அப்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. சென்னை கார்ப்பரேஷன் 25 சைக்கிள் பூங்காக்களை அமைக்கவிருக்கிறது. இதன்மூலம் 250 சைக்கிள்களை முதல்கட்டமாக வாடகைக்கு அளிக்க உள்ளது.
சைக்கிள் நேச நாடுகள்
உலகில் டென்மார்க்கின் கோபன்ஹேகன், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் ஆகிய நகரங்கள் சைக்கிள் பயணங்களுக்கு புகழ்பெற்றவை. சைக்கிள் பயணங்களுக்கேற்ப பாதைகள் இங்கு உண்டு.
திட்டம் வெல்லுமா?
தமிழக அரசின் நோக்கம், திட்ட அளவில் நன்றாக உள்ளது. ஆனால் நடைமுறையில் நிறைய சிக்கல்களை சந்திக்கவிருக்கிறது. முதலில் சைக்கிளை ஓட்டுவதற்கான சரியான பாதைகள் அமைக்கப்படவில்லை. இரண்டாவது, சைக்கிள் பூங்காக்களை அமைப்பதற்கான இடங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
முதல்கட்டமாக சைக்கிள் பூங்காக்கள் திருமங்கலம், அண்ணாநகர், ஷெனாய் நகர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட இருக்கின்றன.
சவால்கள் இவைதான்
தமிழகத்தில் சைக்கிள்களுக்கான தனிப்பாதை கிடையாது. பரிசோதனை முயற்சியாக அமைக்கப்பட்ட பகுதிகளிலும் அவை பராமரிக்கப்படவில்லை (கே.கே.நகர், சிவானந்தா சாலை). சாலைகளிலுள்ள குழிகள், குப்பைகள் ஆகியவை சைக்கிள் சவாரிக்கு பெரும் வில்லன்களாய் எழுந்து நிற்கின்றன. “எனக்கு சைக்கிள் ஓட்டுவது பிடிக்கும்தான் ஆனால் பீக் ஹவரில் ஓட்டுவது கடினம். ஹார்ன்களை இடைவிடாமல் அழுத்தி பைக் ஓட்டிகள் எரிச்சலூட்டுகிறார்கள்” என்கிறார் அண்ணாநகரைச் சேர்ந்த ஜி.பரத்.
சைக்கிள் திட்டம்!
தொடக்கத்தில் 250 சைக்கிள்களும் பின்னர் இவற்றின் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்தப்படவிருக்கிறது. சைக்கிள் பூங்காக்களின் எண்ணிக்கையும் விரைவில் 500 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
சைக்கிள் பூங்கா உள்ள பகுதியில் சைக்கிள்கள் செல்வதற்கான பாதைகள் அமைக்கப்படவிருக்கின்றன. முதலில் இதற்காக சாலையில் தனித்தடுப்புகளைக் கொண்டு சைக்கிள் பாதைகளை அமைக்கவிருக்கின்றனர்.
அரசு உதவி தேவை
தில்லி, அமராவதி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சைக்கிள் பூங்காக்களை உருவாக்கிய அனுபவம் கொண்டது ஸ்மார்ட்பைக் நிறுவனம். தமிழகத்தில் சைக்கிள் திட்டத்தை செயல்படுத்தப் போவது இந்த நிறுவனம்தான். “குறுகலான ரோடுகள் சைக்கிள் ஓட்டுவதற்கு சிக்கலைத் தரும். அரசின் ஆதரவு முழுமையாகக் கிடைத்தால் இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்” என்கிறார் நிறுவன திட்ட இயக்குநரான அபிநந்தன் மல்கோத்ரா. இத்திட்டத்திற்கு கூடுதல் கமிஷனரான எம். கோவிந்த் ராவும் ஆதரவாக உள்ளார்.
எதிர்ப்பும் உண்டு
அண்ணாநகரில் இருபது இடங்களிலும் மெரினா கடற்கரையில் 5 இடங்களிலும் சைக்கிள் சேவை தொடங்க உள்ளது. சைக்கிள் பூங்கா அமைப்பதில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. அண்ணாநகரில் போகன்வில்லா பார்க்கில் சைக்கிள்களை பூங்கா அமைக்கும் திட்டத்தை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை. திட்டத்தை மாற்ற மக்கள் புகார் மனுவை கார்ப்பரேஷனிடம் அளித்துள்ளனர். விரைவில் மாற்றங்கள் சாத்தியப்படும்.
தகவல்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
வெளியீடு: தினமலர் பட்டம்