கண்டுபிடிப்பாளர் விருது பெற்ற இந்தியப்பெண்




Image result for dr krithi


செய்தி: இந்தியாவைச் சேர்ந்த சூழல் உயிரியலாளரான டாக்டர் கிரித்தி காரந்த், இந்த ஆண்டிற்கான  பெண் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு(Women of Discovery) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விங்க்ஸ் வேர்ல்ட் க்வெஸ்ட்(WINGS WorldQuest ) என்ற நிறுவனம் வழங்கும் பெண் கண்டுபிடிப்பாளர் விருதுக்குத் தேர்வாகியுள்ள இரண்டாவது இந்தியப்பெண் டாக்டர் கிரித்தி காரந்த். வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் பெண் கண்டுபிடிப்பாளர் விருது டாக்டர் கிரித்திக்கு வழங்கப்படவிருக்கிறது.

களப்பணியில் சாதனை

கர்நாடகத்தின் மங்களூருவில் பிறந்த கிரித்தி கார்ந்த் வைல்டுசேவ்(Wildseve) என்ற தன்னார்வ நிறுவனத்தைத் தொடங்கி சூழலியல் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார். வன மக்களுக்கு மறுகுடியமர்வை உறுதிப்படுத்திய சாதனைக்குத்தான் விருது வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் பத்ரா வனப்பகுதியிலுள்ள 12 ஆயிரம் குடும்பங்களுக்கான மறுகுடியமர்த்தல் பணிகளையும், அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரும் பணிகளை  அர்ப்பணிப்பாக செய்து சாதித்திருக்கிறார் கிரித்தி காரந்த்.

”வைல்டுசேவ் திட்டத்தைத் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பே வனப்பாதுகாப்பு, மனிதர்கள் - விலங்குகள் மோதல், காப்பகங்கள் ஆகியவை குறித்து பதினைந்து ஆண்டுகளாக ஆய்வுகளைச் செய்து வந்தேன். மக்கள் இழப்பீடுகளைப் பெறுவதற்காக இலவச எண்ணையும் அவர்களுக்கு கொடுத்தோம். அரசுடன் இணைந்து எங்களது நிறுவனம் செய்யும் முயற்சி இது ” என்றார் கிரித்தி காரந்த். உலகப்புகழ் பெற்ற உயிரியலாளரான உல்லாஸ் காரந்தின் மகள். காடுகள் குறித்த ஆராய்ச்சியில் தனக்கென தனிப்பாதையை அமைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

படிப்பும் பணியும்

அமெரிக்காவில் ஃப்ளோரிடா கல்லூரியில் கிரித்தி காரந்த், சூழலியல் படிப்பில் இணைந்து படித்துக்கொண்டிருந்தார். அப்போது, மருத்துவர் மைக்கேல் பின்ஃபோர்டின் ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டு அவரின் பணிகளில் இணைந்தார். இந்த அனுபவங்களே இந்தியா திரும்பிய பின்னர் களப்பணிகளில் உதவின. பத்ரா வனவிலங்கு சரணாலயத்தில் தன் முதல் திட்டத்தை தொடங்கினார். 

" எனது தந்தை எனது விருப்பங்களில் தலையிடவில்லை. உனக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துப் படி என்று அவர் கூறியதால்தான் என்னால் இத்துறையில் சுதந்திரமாக இயங்க முடிந்தது" என்ற கிரித்தி காரந்தின் தாயார், டாக்டர் பிரதீபா காரந்த் ஆட்டிசக் குழந்தைகளுக்காக பல்லாண்டுகளாக உழைத்த பெருமை கொண்டவர்.

கிரித்தியுடன் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லாலி லிசென்டென்பீல்ட் என்ற பெண்மணியும் சூழலியல் பிரிவில் பரிசைப் பெறுகிறார். இவர், ஆப்பிரிக்கன் பீப்பிள் அண்ட் வைல்ட்லைஃப் என்ற அமைப்பைத் தொடங்கி சூழலியல் அக்கறையை விதைத்து வருகிறார். பெங்களூருவிலுள்ள கானுயிர் ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான கிரித்தி, காடுகள் குறித்து 90 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். ”பெண்கள் ஆராய்ச்சித்துறைக்கு தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும். இந்தியாவில் ஆராய்ச்சிக்கு அரசு மேலும் அதிகளவில் நிதி உதவிகளை வழங்கினால் புதிய கண்டுபிடிப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் தம் கண்டுபிடிப்பை அறிவை மக்களிடம் பகிர்ந்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம்” என உறுதியாகப் பேசுகிறார் டாக்டர் கிரித்தி காரந்த்.



விங்க்ஸ் ஆஃப் க்வெஸ்ட்

அறிவியல் துறையில் பெண்களின் கண்டுபிடிப்புகள், பங்களிப்பை ஊக்குவிக்க உருவான பரிசு இது. 2003ஆம் ஆண்டு மில்ப்ரி போல்க் மற்றும் லெய்லா ஹேட்லி லூஸ் ஆகியோர் இணைந்து விங்க்ஸ் வேர்ல்டுக்வெஸ்ட் அமைப்பைத் தொடங்கி பரிசைத் தொடங்கினர். இதுவரை 70 பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு பரிசளித்துள்ளதோடு, 6 லட்சம் டாலர்களை பரிசாகவும் ஆராய்ச்சி உதவித்தொகையாகவும் வழங்கியுள்ளனர்.

நன்றி: டெக்கன் கிரானிக்கல், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

வெளியீடு: தினமலர் பட்டம்

உச்சரிப்பு படி கிரித்தி - கிருதி என வாசிக்கவும். 

பிரபலமான இடுகைகள்