காட்டுத்தீயை தவிர்ப்பது எப்படி?
காட்டுத்தீ இயற்கை வளத்திற்கு சாபக்கேடு!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற காட்டூத்தீ அவலத்தால் வீடுகள், விவசாயம் ஆகியவற்றை இழந்தோரின் வேதனைகளை செய்தியாக படித்திருப்போம். அதைக்கடந்த இயற்கை பாதிப்பை பலரும் அறிவதில்லை.
சிலசமயங்களில் இயற்கையாகவும் பல நேரங்களில் மனிதர்களின் இடையீட்டினாலும் பற்றிப் பரவும் காட்டுத்தீ, காடுகளின் இயற்கை வளங்களை எரித்து சாம்பலாக்குகிறது. இதன் பக்கவிளைவாக உருவாகும் கார்பன் வாயுக்கள் ஓசோன் படலத்தை தாக்குவதோடு பனிமூட்டமாக மாசுக்களை காற்றில் கலக்கச்செய்து சூரிய ஒளியை தாவரங்கள் பெறமுடியாமல் தடுக்கின்றன. இதனால் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கமுடியாமல் தாவர இனங்கள் அழியும் நிலை உருவாகிறது.
”காட்டுத்தீயினால் அழிந்த வீடுகள், பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம். ஆனால் இதன் விளைவாக ஏற்படும் சூழல்கேடுகளை நாம் கண்டுகொள்வதில்லை” என்கின்றனர் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாடைன் உன்கர் மற்றும் தட்பவெப்பநிலை இயற்பியல் கழகத்தின் பேராசிரியரான சூ யூ.
காட்டுத்தீ குறிப்பிட்ட வனப்பகுதியை அழித்தாலும் இதன் விளைவாக உருவாகும் தூசுப்படலம் பல நூறு கி.மீ தூரத்திலுள்ள பயிர்களையும் அழிப்பதோடு கார்பன் அளவையும் பெருமளவு அதிகரிக்கிறது என்பதே இவ்விரு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கூறும் உண்மை.
தாவரங்கள் அழிந்து ஏற்படும் பஞ்ச இழப்பையும் மீறியதாக உள்ளது காட்டுத்தீ ஏற்படுத்திய இழப்புகள் குறித்த சேத விவரங்கள். 2002-11 வரையிலான காட்டுத்தீ, அதன் இழப்புகள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை உன்கர் மற்றும் சூ யூ அடிப்படையாக வைத்து ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கை நேச்சர் கம்யூனிகேசன் அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது. கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த வரி விதிக்கும் அபாய நிலையில் அனைத்து நாடுகளின் அரசுகளும் உள்ளன.