குறைந்தபட்ச மாத வருமானம்(UBI) சாத்தியமா?





Image result for universal basic income scheme
Government Yojana


குறைந்தபட்ச மாத வருமானத்தை வழங்குவது சாத்தியமா?
இந்திய அரசு, ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியை வழங்கவிருப்பதாக பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளது.
அண்மையில் இந்திய அரசு தாக்கல் செய்துள்ள 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் குறைந்தபட்ச  வருமானமாக வழங்க உள்ளது. ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. குறைந்தபட்ச மாத வருமானம் என்றால் என்ன? வறுமையைக் குறைப்பதற்கு இதில் என்ன வாய்ப்பு உள்ளது? 

மக்களின் வேலை, சொத்து, வருமானம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அரசு, அவர்களுக்கு வழங்கும் குறைந்தபட்ச மாத வருமானம்(Universal basic income UBI) ஆகும். இதனை இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பின்பற்றிவருகின்றன. இந்தியாவில் இதனைப் பின்பற்ற முடியுமா? முடியாதா? என பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.

குறைந்தபட்ச வருமானம் எதற்கு?

அரசு மக்களுக்கு அளிக்கும் மானியமாக குறைந்தபட்ச மாத வருமானத்தை கருத முடியாது. அரசு வழங்கும் இத்தொகை, ஒருவரின் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே தீர்க்கும். நாட்டில் அதிகரிக்கும் வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலைவாய்ப்பின்மை பிரச்னைகளை  குறைந்தபட்ச மாத வருமானம் திட்டம் குறைக்க வாய்ப்புள்ளது. இதனை கீழ்க்காணும் முறையில் வழங்கலாம்

1.குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குவது, 2.குறிப்பிட்ட சேவைகளை பெறும் கூப்பன்களாக அல்லது வவுச்சர்களாக வழங்குவது, 3.குடும்பத்திலுள்ள குறிப்பிட்ட நபருக்கு மட்டும் வழங்குவது, 4.அனைத்து மக்களுக்கும் நிதியை வழங்குவது, 5.ஒருவரால் பணியாற்ற முடியுமா என்ற நிபந்தனையற்று நிதியை வழங்குவது. மேற்சொன்ன யோசனைகளை பேசிக் இன்கம் எர்த் நெட்வொர்க் (Basic Income Earth Network -BIEN) அமைப்பு பரிந்துரைத்து பிரசாரம் செய்து வருகிறது.
 
உலகளவில் சோதனை

குறைந்தபட்ச வருமானம் கொண்ட ஏழை மக்களுக்கு மாத வருமானம் வழங்குவதே திட்டத்தின் நோக்கம். உலகில் குறிப்பிட்ட கால அளவில் நிதியை வழங்குவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு கென்யா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகளில் குறைந்தபட்ச மாத வருமானம் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. ”குறைந்தபட்ச மாத வருமானம் என்பது நிபந்தனையின்றி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவது அவசியம். சமூக இடைவெளியை நீக்க இதுபோன்ற திட்டம் அவசியம்” என்கிறார் குறைந்தபட்ச மாத வருமான திட்ட தன்னார்வலரான சரத் தவலா.

இந்திய அரசுக்கு குறைந்தபட்ச மாத வருமான திட்டம் என்பது புதிதல்ல. டெல்லி, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சோதனை முறையில் இத்திட்டம் முன்னமே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது.

தெலங்கானா அரசு அண்மையில் விவசாயிகளின் நண்பன் என்ற பெயரில் அமலாக்கிய திட்டம் குறைந்தபட்ச மாத வருமானத்தை அடிப்படையாக கொண்டதுதான். இத்திட்டத்தின்படி  விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாயை அரசு வழங்குகிறது.

நிதி எங்கே?

“குறைந்த பட்ச மாத வருமானத்திற்கான நிதியை இந்திய அரசு தற்போதுள்ள நலத்திட்ட நிதியளவில் தரமுடியும். ஆனால் நலத்திட்ட உதவிகளையும் குறைந்தபட்ச மாத வருமானத் திட்டத்தையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது” என எச்சரிக்கிறார் அசோகா பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர்  அஸ்வின் தேஷ்பாண்டே.

தற்போது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில்(GDP)  5- 10 சதவீத நிதி நலத்திட்ட உதவிகளுக்காக செலவிடப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு ஊழல் தொடர்பாக வெளியான பட்டியலில் இந்தியாவின் இடம் 78(180 நாடுகளில்). எனவே ஊழலை ஒழிக்காமல் மக்களுக்கு இடையேயுள்ள வறுமைநிலையை ஒழிப்பது சாத்தியமில்லை. புதிய மாத வருமான திட்டத்தை சோதனையாக அமல்படுத்தினாலும் கூட பிற நலத்திட்டங்களை தொடர்வது பெரும் நிதிச்சுமையாக மாறி அரசின் கழுத்தை நெறிக்கும்.

பொருளாதார ஆய்வு(ES)

இந்திய அரசு குறைந்தபட்ச மாத வருமானத்திட்டத்தை பொருளாதார ஆய்வு அடிப்படையில் செயல்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்போது அதனை தேசிய அளவிலும், நிபந்தனையின்றியும், குறிப்பிட்ட அமைப்பு வழியாகவும் செயல்படுத்துவது அவசியம்.

1.டெண்டுல்கரின் வறுமைக் கொள்கைப்படி(2016-17) வறுமைக்கோட்டை அமைத்தால் இந்தியருக்கு தலா ரூ.7, 620 வழங்கும்படி இருக்கும். ஏறத்தாழ 75 சதவீத மக்கள் இந்த மாத வருமான வரம்பில் வருவார்கள். 

2. உள்நாட்டு உற்பத்தியில் பொருளாதார ஆய்வுப்படி 4.9 சதவீத நிதி(ஜிடிபி படி) அரசுக்கு செலவாகும்.
3. குறைந்தபட்ச மாத நிதியை ஆதார் மூலமாக வங்கிக் கணக்கில் செலுத்த முடியும். இதில் வயது முதிர்ந்த, விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்கள் கிடைக்கலாம்.

தகவல்:basicincome.org

நன்றி: காலைக்கதிர் மாணவர் பதிப்பு பட்டம்