அசரடிக்கும் புதுமை கட்டிடங்கள்



அசரடிக்கும் புதுமை கட்டிடங்கள் - தொகுப்பு: சோமவீர சுந்தர்


    கட்டிடங்கள் கட்டுவது தலைக்கு மேலே ஒரு கூரை என்ற பழைய கருத்தையெல்லாம் என்றோ தாண்டிவிட்ட இன்றைய நவீன கட்டிடங்கள் குறிப்பிட்ட நகரின் பெருமை மிக்க பேஷன் அடையாளமாகவே வடிவமைக்கப்படுகின்றன. கட்டிடம் புகழ்பெற்றுவிட்டால், கட்டிடத்தை வடிவமைப்பாளரின் பெயரை வாழ்நாள் முழுக்க உலகுக்கு சொல்லும் போர்ட்போலியோவாக அமைந்து, வரலாற்றிலும் பதிவாகிறது. இதோ இங்கு நாம் காணப்போவதும் அப்படி கிரியேட்டிவிட்டியை கரைத்து ஊற்றிய கட்டிய விருது வென்ற சில கட்டிடங்களைத்தான்.

நட்பு மையம்(Friendship center), வங்காளதேசம்

    2011 ஆம் ஆண்டு வங்காள தேசத்தின் தொன்மையான இடமொன்றினால் இன்ஸ்பிரேசன்  ஆன காஷப் மெஹ்பூப் சௌத்ரி, அர்பனா என்னும் தொண்டு நிறுவனத்திற்காக கட்டிய அழகு கட்டிடம்தான் இது. வங்காளதேசத்தின் கைபந்தா எனுமிடத்தில் இந்த நட்பு மையம் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் டாகாவில் பிறந்த காஷப்பின் தந்தையும் கட்டிட பொறியாளர்தான். 1995 ஆம் ஆண்டு காஷப், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில்(BUET) கட்டிடக்கலை பயின்றவராவார். புகைப்படம், ஓவியம் என முத்திரை பதித்த இவர் மூன்று நூல்களையும் எழுதி வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார். கட்டிடத்தின் மேல்தளத்தில் பசுமைப் பூங்கா போன்றிருக்கும் இக்கட்டிடம் உள்ளூரில் கையினால் செய்யப்படும் கற்களின் மூலம் கட்டப்பட்ட,  இயற்கையான காற்றோட்ட வசதி கொண்ட கட்டிடமும் கூட. பண்டைய துறவிகள் வாழ்ந்த இடம் போல தோன்றும், சிறு வரப்புகள் போலமைந்த இக்கட்டிடம், வெள்ளம், நிலநடுக்கம் என இயற்கை பேரழிவுகளுக்கும் ஈடுகொடுக்கும்படி, சிங்க வலிமையில் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு வகுப்புகள், சந்திப்புகள் என நிகழ்வுகளுக்கு வாடகைக்கு கிடைக்கும்.

ஹூடங் குழந்தைகள் நூலகம்(Hutong), சீனா

    2014 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங்கில் டைனன்மென் சதுக்கம் அருகில் 9 சதுர மீட்டர் அளவில் ஹூடங் குழந்தைகள் நூலகம் மற்றும் கலை மையம் கட்டப்பட்டுள்ளது. கான்க்ரீட் கலவையோடு சீன மையை சோதனை முறையில் கலந்து சாம்பல் நிற கற்கள், கதகதப்பு தரும் பிளைவுட்டையும் பயன்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் இந்த கட்டுமானத்தில் மறுசுழற்சி பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. நூலகம் கட்டப்பட்டுள்ள இடத்தில் உள்ள 600 ஆண்டு பழமையான மரத்தினை பாதிக்காத வகையில் கட்டுமானம் அமைந்துள்ளது. குழந்தைகளின் நூலகத்தில் அவர்கள் அமர்ந்து படிக்க குறைவான உயரத்தில் இருக்கைகள், மரத்தின் கிளைகள் பாதிக்கப்படாதபடி எளிதில் நகர்த்தும் படியான லைட் ஸ்டீல்களால் உருவான அமைப்புகள் என வசீகரிக்கின்றன. இந்த ஹூடங் நூலகத்தை ஸாவோ, ஸாங் கே என இரு கட்டிடக்கலைஞர்கள்  உருவாக்கியுள்ளனர்.

சூப்பர்கிலென்(Superkilen), டென்மார்க்

    2012 ஆம் ஆண்டு டென்மார்க்கில் கோபன்ஹேகன் மாவட்டத்திலுள்ள நோரேப்ரோ எனுமிடத்தில் கட்டப்பட்ட சூப்பர்கிலேன் பூங்கா 1 கி.மீ தொலைவிற்கு நீண்டு ஆச்சர்யம் தருகிறது. சிவப்பு சதுக்கம், கருப்பு சந்தை, பசுமை பூங்கா என 3 பிரிவுகளாக  3 நிறங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  சிவப்பு சதுக்கம் அதிநவீனமாக கஃபே, இசை, விளையாட்டுக்கான இடமாகவும், கருப்பு சந்தை கிளாசிக் அழகில் நிரூற்றுகள், உட்காரும் பெஞ்சுகள் அமைந்தும், பசுமைப் பூங்கா நடந்துசெல்ல ஏற்ற இடமாகவும் நன்கு திட்டமிட்டு இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பன்மைத்தன்மையை வெளிக்காட்டும் வகையில் நிரூற்றுகள் மொராக்கோவிலிருந்தும், ஜப்பானிலிருந்து சிற்பங்கள், சீனாவிலிருந்து பனைமரங்கள், கத்தாரிலிருந்து நியான் பலகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சூப்பர்கிலன் பூங்காவினை ஜார்கே இன்ஜெல் என்ற பொறியாளர் மொத்த வித்தையையும் கொட்டி வடிவமைத்துள்ளார். பிக் ஆர்க்கிடெக், டோபோடெக்1 என்று இரு நிறுவனங்களும், சூப்பர்ஃப்ளெக்ஸ் என்ற கலைக்குழுவினரும் ஒன்றிணைந்து இந்த பூங்காவை 11 மில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கியுள்ளனர்.

தபியத் நடைபாதைப்பாலம்(tabiat bridge), ஈரான்

    2014 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு இன்றுவரை பிரபலம் குறையாத ஒரு இடமாக இருப்பது ஈரானில் டெஹ்ரானில் கட்டப்பட்ட தபியத் நடைபாதைப் பாலமாகும். பாலம் என்றால் வேகமாக கடந்துவிட நிர்பந்திக்கும் சூழல் இல்லாமல் இந்த தபியத் பாலத்தில் அதிக நேரத்தை மலைகளை, வனங்களை பார்த்தபடி செலவழிக்கலாம்.  பெரும் பிரமாண்ட தூண்களில் நிற்கும் 270 மீ. நீளம் கொண்ட இந்த பாலத்தில் மூன்று அடுக்குகளில் அம்சமாக அமைந்த ரெஸ்டாரண்டுகள், அமரும் இருக்கைகள், கஃபே ஆகியவை எளிதில் இதனை கடக்க முடியாமல் செய்கின்றன.மரத்தின் கிளைகள் போன்ற வடிவமும், 2000 டன்கள் எடையும் கொண்ட இந்த தபியத் நடைபாலத்தை லெய்லா அராஹியன் என்ற இரானிய பெண் பொறியாளர் வடிவமைத்துள்ளார்

இஸ்ஸாம் விவகாரத்துறை கட்டிடம், லெபனான்

    2014 ஆம் ஆண்டு பெய்ரூட்டிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 21 மீ. உயரத்தில் 3 ஆயிரம் ச.மீ பரப்பளவில் புதுமையான வடிவத்தில் இஸ்ஸாம் பொதுமக்கள் கொள்கை மற்றும் விவகாரத்துறை அலுவலகத்தை ஸாகா ஹதித் ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. லெபனானின் முன்னாள் துணைபிரதமரான இஸ்ஸாம் ஃபேர்ஸ் என்பவர் அளித்த நன்கொடையினால் வடிவம் பெற்ற கட்டிடம் இதுஇந்த வளாகத்திலுள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேலான வயது கொண்ட பழமையான ஃபைகஸ் சைப்ரஸ் ஆகிய மரங்களை அகற்றாமல் அதற்கேற்ப கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது சிறப்பு. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மக்கள் என அனைவரும் எளிதில் புழங்கும்படி திட்டமிட்டு செமினார் அறை, அயல்நாட்டு கொள்கை ஆராய்ச்சியாளர்களுக்கான அறை, மக்கள் சந்திப்பதற்கான இடம், நீரை மறுசுழற்சி செய்து மரங்களுக்கு பயன்படுத்துவது என அத்தனையும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 21 நூற்றாண்டிற்கான லட்சியங்களை பிரதிபலிக்கும் கட்டிடம் இது என பெருமிதமாக கூறுகிறார் பல்கலைக்கழக வேந்தர் பீட்டர் டோர்மன்.
நன்றி: 
.அன்பரசு     


பிரபலமான இடுகைகள்