பிரபலங்களின் தொப்பிகள் -கயல்விழி பாமா




பிரபலங்களின் தொப்பிகள்

   அரசியலோ சினிமாவோ தன்னை சிறப்பாக வெளிப்படுத்துகிறவர்களே ஜெயிக்கிறார்கள் என்பது ஹிஸ்டரி சொல்லும் உண்மைகாந்தியின் கண்ணாடி, எம்.ஜி.ஆரின் ரஷ்ய குல்லா மற்றும் கண்ணாடி, பாரதியின் தலைப்பாகை என இவையின்றி இவர்களை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இந்த  புகழ்பெற்ற மனிதர்கள் அணிந்த தொப்பிகளைப் பற்றி பார்ப்போமா?

சர்ச்சிலின் ஹோம்பர்க் தொப்பி

   உலகப்போரின்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தனது சுருட்டுகளுக்கு மட்டுமல்ல, தலையில் அணிந்த  தொப்பிகளுக்காகவும் புகழ்பெற்றவராவார்.. நடுவில் அழகிய ரிப்பன் வைத்து கம்பளியில் தைக்கப்பட்ட இத்தொப்பியின் மேற்பகுதியில் இதனை தனித்துவமாக காட்டும் ஒரு பள்ளம் ஒன்றுண்டு. முதன்முதலில் தயாரிக்கப்பட்ட ஹோம்பர்க் தொப்பிகள் இன்றைய  தொப்பிகளைவிட பெரியவை.

   1880 ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசரான 7 ஆம் எட்வர்ட் ஜெர்மனி, பேட் ஹாம்பர்க் நகருக்கு சென்றார். அங்கு வழங்கப்பட்ட ஹாம்பர்க் தொப்பியின் அழகில் மயங்கி, அதனை எங்கும் பயன்படுத்த தொடங்க உலகமே அவரை லைக் செய்து ஹாம்பர்க் தொப்பிக்கு ஆர்டர் குவிந்தது. காட்பாதர் படத்தில் நடிகர் அல்பசீனோ ஸ்டைலாக அணிந்திருப்பதும்கூட ஹாம்பர்க் தொப்பிதான். ஹாம்பர்க் தொப்பியில் சர்ச்சில் பல்வேறு வெரைட்டிகளை ட்ரை செய்தாலும் அவருக்கு நச்சென ஃபிட்டானது, கருப்பு ரிப்பன் வைத்த சாம்பல் நிற ஹாம்பர்க் தொப்பிதான். இது ஏலத்தில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 958 ரூபாய்க்கு விலைபோனது தெரியுமா? சர்ச்சில்னா சும்மாவா!

 நெப்போலியன் இருமுனைத்தொப்பி
   மக்களிடம் தன்னை பிரசன்ட் செய்வதில் படுகில்லாடியான நெப்போலியன் தனது ஆற்றலை வெளிக்காட்டும் விதமாகவே வாழ்விறுதிவரை தன் தோற்றத்தை அமைத்துக் கொண்டார். 1807  ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவுக்கு எதிராக நெப்போலியன் குதிரையில் கம்பீரமாக  இருமுனைத் தொப்பியோடு(Bicorne) போர்க்களம் புகுந்தார். இந்த புதுமையான தொப்பியினால் நெப்போலியனுக்கு கம்பீர அடையாளத்தோடு, படையினரும் அவரை அடையாளம் காண முடிந்தது. ஆண்டுக்கு 4 தொப்பிகளுக்கு ஆர்டர் சொன்ன நெப்போலியனிடம் மொத்தம் 120 தொப்பிகள் கலெக்ஷனில் இருந்தன. ஆனால் இன்று நெப்போலியனின் தொப்பிகளாக நம்மிடம் இருப்பது வெறும் 19 மட்டுமே. இருமுனைத் தொப்பிகள் பல்வேறு அருங்காட்சியகங்களில் மக்கள் பார்வையிட வைக்கப்பட்டுள்ளன. இந்த தொப்பியின் விலை 2.4 மில்லியன் டாலர்களாகும். புரட்சித் தொப்பி!

ஆப்ரஹாம் லிங்கனின் தொப்பி
   18 - 20 ஆம் நூற்றாண்டு மத்தியில் அரசு விழாக்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட டாம்ஹேட் தொப்பி உலக வணிகம், மேல்தட்டு வர்க்கத்தை, முதலாளித்துவத்தை, அமெரிக்காவை குறிப்பது என சிம்பிளாக கூறலாம். அமெரிக்காவின் 16 வது அதிபராக பதவியேற்று அடிமைமுறைக்கு சீல் வைத்த  கருப்பினத் தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் அணிந்தது 20 செ.மீ. பட்டில் செய்த டாப் ஹேட் தொப்பிதான். மேஜிக் செய்பவர்களின் சாய்ஸூம் கூட இதேதான்.
    6 அடி 4 அங்குல உயர லிங்கன், தனது அடையாளமாக மாற்றிக்கொண்ட டாப் ஹேட் தொப்பியை, இறுதியாக படுகொலை செய்யப்பட்டபோதும் அணிந்து வரலாற்றிலும் பதிவு செய்துவிட்டார். இந்த டாப் ஹேட் தொப்பியில் பல்வேறு சொற்பொழிவுக்கான குறிப்புகளை எழுதி தனது தொப்பியில் வைத்து தொலைநோக்காக  பயன்படுத்தினார்  லிங்கன் என்றும் செய்தி உள்ளது. 1865 ஏப்ரல் 14 அன்று ஃபோர்டு தியேட்டரில் ஜான் வைக்ஸ் பூத் என்பவரால் லிங்கன் கொல்லப்பட்டபின் லிங்கன் நினைவகத்தில் பாதுகாக்கப்பட்ட தொப்பி, தற்போது வாஷிங்டனில் ஸ்மித்சோனியன் நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டுவிட்டது. தற்போது மிகவும் அரிதாகவே தயாரிக்கப்படும் இத்தொப்பிக்கு மவுசு குறையவேயில்லை. விடியல் நாயகனின் தொப்பி!

ஜாக்கி கென்னடியின் பில்பாக்ஸ் தொப்பி
   1930 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த தொப்பி சிம்பிள் அழகினாலேயே அனைவரது  மனங்களையும் திருடியது. சிறிய உருளை வடிவ மாத்திரைகள் போல இருந்ததால் பில்பாக்ஸ் என அழைக்கப்பட்டது. முதன்முதலில் ரோமவீரர்களால் தலையில் அணியப்பட்ட பனோனியன் கேப், பில்பாக்ஸ் தொப்பிக்கு ஆதாரம்கம்பளி, பட்டு, சிறுத்தை தோல் ஆகியவற்றால் பில்பாக்ஸ் தொப்பி தயாரிக்கப்படுகிறது.

   அமெரிக்க அதிபரான ஜான் கென்னடியின் மனைவி ஜாக்கியின்  உடைகளின் நேர்த்தி உலக பிரசித்தம். விளிம்புகள் இல்லாத பெண்கள் அணியும் இந்த தொப்பியை தனது பிங்க் நிற உடைக்கு மேட்சாக அணிந்து தன் கணவரோடு டெக்ஸாஸின் டல்லாஸ் நகருக்கு வந்தார். துரதிருஷ்டவசமாக, கென்னடி அங்கு  படுகொலை செய்யப்பட்டார். கடும் துக்கத்தில் ரத்தத்தில் நனைந்த தனது உடையை மாற்றாமல் பிடிவாதமாக கணவரின் உடலை மடியில் தாங்கியபடி விமானத்தில் பயணித்தார். பின், அவ்வுடைகளை மேரிலேண்டில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்திற்கு வழங்கிவிட்டார். ஆனால் அவரது செயலாளரிடம் கொடுத்த பில்பாக்ஸ் தொப்பி என்ன ஆனது என்பது இன்றுவரை யாரும் அறியாத மிஸ்ட்ரி. த்ரில்லர் ஸ்டோரி!
                      நன்றி:கயல்விழி பாமா
தொகுப்பு: ரியாஸ் பதான், சரோஷா



பிரபலமான இடுகைகள்