பெய்ன்கில்லர் அடிக்‌ஷன் - கிளம்பும் புதிய ஆபத்து! -ச.அன்பரசு




பெய்ன்கில்லர் அடிக்ஷன் - கிளம்பும் புதிய ஆபத்து! -.அன்பரசு





கிரிக்கெட், ஃபுட்பால், டென்னிஸ் என எந்தவொரு விளையாட்டிலும் வீரர்களுக்கு திடீரென அடிபட்டுவிட்டால் உடனே இன்ஸ்டன்டாக பிசியோதெரபி சிகிச்சை செய்வதை பார்த்திருப்பீர்கள். தசைகிழிவு, எலும்பு முறிவு ஆபரேஷன் செய்யும்வரை அவர்கள் வாழ்வதே பெய்ன்கில்லர் மருந்துகளில்தான் என்பதை அறிவீர்களா? இன்று புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கும் வலியைக் குறைக்க பாலியேட்டிவ் கேர் எனும் வலி நிவாரணி சிகிச்சையே இன்றைய மெடிக்கல் மார்க்கெட்டில் செம ஹாட். ஆனால் உங்கள் உடல், வலிநிவாரணிகளுக்கு அடிமையாகிவிட்டால் என்னாகும் என்பது உங்களுக்கு மட்டுமல்ல உலகையே உலுக்கிவரும் பிரச்னையும் கூட.

வேதனையிலும் கொட்டும் காசு!

வலிநிவாரணிகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆக்ஸிகான்டின் அல்லது ஹைட்ரோகோடோன் ஆகியவை முதலில் வலியைப் போக்குவதாக இருந்தாலும், பின்னாளில் ஏற்படும் பக்கவிளைவுகள் வார்னிங் அலாரம் அடிக்கின்றன. டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன், குமட்டல், மலச்சிக்கல் வரை பிரச்னைகள் சூயிங்கம்மாய் நீள்கின்றன. டோண்ட் வொரி, இதற்கும் தீர்வாக மாத்திரைகள்,ஸ்ப்ரே மருந்துகள் வரை மார்க்கெட்டில் கொட்டிக்கிடக்கின்றன  என்ன? உங்கள் பர்ஸ் கொஞ்சம் கனமாக இருக்கவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் மருந்து கம்பெனிகளின் கூரைபிய்த்துக் கொட்டும் டாலர்கள் கிடைப்பதே பெய்ன்கில்லர் பிஸினஸில்தான். ஆனால் இதன் இன்னொரு பக்கம் ஒளியின் நிழல் போல இருளானது. அமெரிக்காவில் 2015 இல் மட்டும் வலிநிவாரணி ஓவர்டோஸாகியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரம். தற்போது அரசின் விதிகளுக்குட்பட்டு வலிநிவாரணி பிரச்னையால் நோய்க்குரிய மருந்துகளோடு ஓபியாய்ட்ஸ்களையும்(ஓபியம்-மார்பின்) இணைத்து கொடுத்து ஓவர்டோஸ் பிரச்னைகளை தீர்க்கின்றனர். மருந்து கம்பெனிகளைப் பொறுத்தவரை பெய்ன்கில்லர்கள் என்பது காமதேனுபோல என்பதை கண்டுகொண்டால் காசு பார்க்காமல் விடுவார்களா? 2016 ஆம் ஆண்டில் 336 மில்லியன் பிரிஸ்கிரிப்ஷன் மூலம் கிடைத்த லாபம் 8.6 பில்லியன்!(பத்தில் ஒன்பது அமெரிக்கர்கள்) என்கிறது QuintilesIMS அமைப்பின் தகவல் அறிக்கை.

அரசு மூலம் தடையற்ற லாபம்!

"மருந்து கம்பெனிகள், பிரிஸ்கிரிப்ஷனில் எழுதப்படும் வலிநிவாரணிகளிலேயே பல பில்லியன் டாலர்களை பார்த்துவிடுகிறார்கள். தற்போது அதிகளவிலான ஓவர்டோஸ் மருந்துகளிலும் காசு பார்க்க தொடங்கியுள்ளனர்" என திகில் உண்மைகளை பேசுகிறார் பிராண்டெய்ஸ் பல்கலையின் மூத்த அறிவியலாளரும், வலிநிவாரணி வல்லுநருமான டாக்டர் ஆண்ட்ரூ கொலோட்னி. வலிநிவாரணி மற்றும் வலிநிவாரணியின் பக்கவிளைவுகளுக்கான மருந்துகள் என இரண்டையும் பிரகாசமான பிஸினஸ் வாய்ப்பாக மருந்து நிறுவனங்கள் பார்ப்பதால் விஷம் போல விலையை ஏற்றி காசு பார்ப்பது தற்போதைய ட்ரெண்ட். "ஏழை மக்களுக்கு அதிக விலையின்றியும் வரித்தொல்லைகளின்றியும் மருந்து கிடைப்பது மனிதநேயத்தேவை" என்கிறார் மசாசூசெட்ஸ் வலிநிவாரணி சங்கத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் பார்பரா ஹெர்பர்ட்.

ஆனால் பிராக்டிகல் நிஜம், தினசரி அமெரிக்காவில் வலிநிவாரணி அதீதமாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 91. அரசு, அதீத வலிநிவாரணி பிரச்னையைத் தீர்க்க Naloxone(1985), Buprenorphine(1970) ஆகிய இரு மருந்துகளை வெளிப்படையாக சிபாரிசு செய்தது. அடுத்து மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அரசு சுகாதாரத்துறையோடு அமெரிக்காவின் 50 மாநிலங்களும் இம்மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதற்கான சட்டத் தடைகளை மெல்ல நீக்கினர். ஆனால் அதீத வலிநிவாரணி பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்களை, உலுக்கினால் காசு கொட்டும் பணமரமாகவே கணித்த மருந்து நிறுவனங்கள், மெல்ல அம்மருந்துகளை தங்கள் பிராண்ட் வழியாக கொள்ளை லாபத்துக்கு விற்கத் தொடங்கின. நாலோக்ஸோன் மருந்து சந்தை மதிப்பு 1.3 பில்லியன்.

மாத்திரையிலும் காப்புரிமை தந்திரம்!

கடந்த செப்டம்பரில் 35 மாநிலங்கள் இன்டிவியர் என்று மருந்து கம்பெனி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏன்? வஞ்சகமான அநீதியான முறையில் வலிநிவாரணியான சபோக்ஸோன் மருந்தை கைப்பற்றி போட்டிகளை அழிக்கிறது என்பதுதான் அதன்மீதான கம்ப்ளைண்ட். 2002 இல் போட்டியின்றி வலிநிவாரணியை விற்க லைசென்ஸ் வாங்கி அது முடியும்போதே, ஃபிலிம் முறையிலான வலிநிவாரணியை 2023 வரையில் மேற்சொன்ன முறையில் விற்பனைக்கு கொண்டுவந்ததோடு, மாத்திரை வடிவிலும் கட்ட ரேட்டுக்கு விற்கிறது. 61% சந்தையை பாக்கெட்டில் வைத்திருப்பதோடு, 1 பில்லியன் டாலரையும் தன் பேங்க் அக்கவுண்டில் ஏற்றிய இன்டிவியரின் நேர்மை இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே! " எங்கள் மருந்துகள் நன்றாக வேலை செய்வதால் மக்கள் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்" என்பதுதான் குற்றச்சாட்டுக்கு இன்டிவியர் நிறுவனத்தின் பதில்.
அரசு எந்த வலிநிவாரணி மருந்தை வாங்கவேண்டும் என்பது வரை மூர்க்கமான அரசியல் லாபி அலை, மனித உயிர்களை தூக்கிப்போட்டு விளையாடுகிறது. அமெரிக்காவின் பொதுமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அதீத வலிநிவாரணி மாற்று மருந்தான விவிட்ரால், ரெவியா ஆகியவற்றுக்கு மட்டும் அரசு ஒரு ஆண்டுக்கு செலவழிக்கும் தொகை 100 மில்லியன் டாலர்கள். இதனைத் தேர்ந்தெடுக்க வைக்க அதன் தயாரிப்பு நிறுவனம் லாபிக்கு செலவழித்த தொகை 13.5 மில்லியன் டாலர்கள். ஒப்பந்தமானாலும் அரசுக்கு கொடுக்கும் மருந்தின் விலையை ஏற்றி வைத்து விளையாடுவதும் மருந்து நிறுவனங்களின் புதிய குரூர யுக்தி.  2009 இல் விவிட்ராலின் விலை 800 டாலர்கள் எனில் 2015 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் விலை 1,309 டாலர்கள் என எவரெஸ்ட் உயரமாகியிருந்தது.

இது மட்டுமல்ல ஓஐசி எனும் பாலியேட்டிவ் கேர் சிகிச்சைகளுக்கான மருந்துகளின் விலைகளும் விர்வேகம் காட்டுகின்றன. அமிதிஸாவின் விலை 173 டாலர் டூ 350 டாலராகவும், ரெலிஸ்டரின் விலை 1500 ஆகவும் அதிகரித்துள்ளது. "மருந்து கம்பெனிகள் நோயை ஏற்படுத்திவிட்டு அதை குணப்படுத்த மருந்தை நம்மிடம் விற்கின்றன." என நெஞ்சிலறையும் உண்மை பேசுகிறார் போர்ட்லாந்தைச் சேர்ந்த வலிநிவாரணி வல்லுநரான டாக்டர் மார்க் பப்ளிக்கர். இதற்கான தீர்வாக, குறிப்பிட்ட விலையில் அரசு மொத்தமாக மருந்துகளை கொள்முதல் செய்வது அல்லது மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிப்பது ஆகிய சாத்தியங்கள் உள்ளன. சரியான ராயல்டிக்கு மருந்துகளை நிறுவனங்கள் தயாரித்து மக்களுக்கு வழங்குவதற்கு இது ஒரு வாய்ப்பு" என புன்னகையோடு பேசுகிறார் phRMA  வணிக அமைப்பின் உறுப்பினரான கெய்ட்லின் கரோல். கடந்த ஜூனில்தான் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் விலை உயர்வு குறித்து மருந்து கம்பெனிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

பாக்ஸ் 1
பிஸினஸ் பிஸினஸ்!

அதீத வலிநிவாரணி சந்தை மதிப்பு - 4.4 பில்லியன் டாலர்கள்(2015)
2024 இல் சந்தை மதிப்பு - 12.4 பில்லியன் டாலர்கள்
 பாலியேட்டிவ் கேர் மருந்து விற்பனை(உலகளவில்)- 1.9 பில்லியன் டாலர்கள்(2014)
2022 இல் வளர்ச்சி - 2.8 பில்லியன் டாலர்கள்

 நன்றி: குங்குமம் வார இதழ்!
தொகுப்பு: விக்னேஷ் அல்லாடி, உமேஷ் சௌரியா