3 வது உலகப்போருக்கு முன்னோட்டமா?
வடகொரியாவின்
அணு ஆயுத சோதனை-
3 வது உலகப்போருக்கு முன்னோட்டமா?
கடந்த செப்டம்பர் 9 அன்று வடகொரியா தனது 5 வது அணு ஆயுத சோதனையை உலகமே அதனை
எதிர்த்தாலும் வெற்றிகரமாக நடத்திக்காட்டிவிட்டது. ஐ.நா சபை விதித்த 5 பொருளாதார தடைகளை மீறி வடகொரியா இவ்வாண்டில் நிகழ்த்தும் இரண்டாவது அணு ஆயுத சோதனை இது. பல நாடுகளின் கண்டன எதிர்ப்புகளைத்
தாண்டி நிகழ்த்தப்பட்ட இந்த அணு ஆயுத சோதனை என்பது ஒப்பீட்டளவில் முன்பு நடந்த சோதனையைக்
காட்டிலும் வலிமை வாய்ந்தது. வடகொரியா நடத்திய 4 வது அணு ஆயுத சோதனையில் 6 கிலோ டன்கள் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது
எனில் தற்போது நடத்தப்பட சோதனையில் 20 கிலோடன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்
என்பதோடு இது 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா ஜப்பான் மீது வீசிய அணுகுண்டின்
சக்திக்கு சமம் என திகில் கிளப்புகிறது தென்கொரியாவின் வானிலை அமைப்பு.
அணுவைப் பிளந்ததால்
நடுக்கம்
அணுகுண்டு சோதனை பெருமிதம் நெஞ்சில் இருக்கும்போது
அதன் பக்கவிளைவாக 5.3
ரிக்டர் அளவு நிலநடுக்கம் சோதனை நடந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது.
முன்னர் நடந்த சோதனையின் போது
நிலநடுக்க அளவு 4.8 என்ற தகவல்களை எளிமையாக புறந்தள்ள முடியாது.
உலக அமைதிக்கு இது கேடு விளைவிக்கும் செயல்பாடு என்று தன் கண்டனத்தை
பதிவு செய்த அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க படையினரை தென் கொரியாவிற்கு
அனுப்பியுள்ளார். வடகொரியாவின் துணிச்சலான இச்சோதனை தென்கொரியா,
ஜப்பான், சீனா, அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகாரப்போட்டி குறித்த பயத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அதை மக்களும் தெரிந்துகொள்ளும்படி அவர்களின் அடுத்த கட்ட செயல்பாடுகளும் அமைந்துள்ளன.
சீனாவில் அண்மையில் செப்டம்பர் 4 அன்று சர்வதேச
தலைவர்கள் கலந்துகொண்ட 11 வது ஜி-20 மாநாடு
நிறைவடைந்துள்ள சூழலில் வடகொரியா போட்ட குண்டு உலக நாடுகளுக்கு வயிற்றை கலக்கியுள்ளது.
1948, செப்டம்பர் 9 வடகொரியா உருவான தினமாகும்.
மிகத்துல்லியமாக அணு ஆயுத சோதனை
திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது கண்கூடான உண்மை.
தொழில்நுட்பத்தில்
அதிவேகம்
வடகொரியாவின் அணு
ஆயுத வேகம் ஆச்சர்யப்படுத்தும்படியான 4ஜி வேகம்தான். ஏனெனில் அவர்களின் முதல் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டதே
2012 ஆம் ஆண்டில்தான் என்றால் உங்களால் நம்பமுடியுமா? தந்தையை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு வடகொரியா அதிபரான அவரது
மகன் கிம் ஜங் யுன் பதவியேற்றதிலிருந்து 33 கண்டம் தாவும் ஏவுகணைகள்
இதுவரை விண்ணில் வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியுள்ளன. இவரது அப்பா
இரண்டாம் கிம் ஜங்கும் லேசுபட்டவரல்ல. மொத்தம் 17 ஆண்டுகள் ஆட்சியில் 16 கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதித்தவர்தான்
என தென்கொரியா உளவுத்துறை திக் திக் தகவல் தெரிவிக்கிறது. வடகொரியா
அதிபராக கிம் ஜங் பதவியேற்ற பின்னரே அணு ஆயுத சோதனைகள் கிடுகிடு வேகம் பிடித்தன.
பல்வேறு தோல்விகளைத் தாண்டி
விண்ணிலேறிய ஏவுகணைகள் இலக்கை அடைந்து வெற்றிகளை
மண்ணுக்கும் அறிவித்திருக்கிறது. பல நாடுகளின் தடைகளுக்குப் பிறகும் அணு ஆயுதங்களை நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து
ஏவும் வழிமுறைகளை கண்டுபிடித்து அமெரிக்க படையினரை ஆசியப்பகுதிகளில் கும்பலாக பயத்தோடு
காக்க வைப்பது என்றால் சாதாரண விஷயமா என்ன?
உச்சமாகும் அதிகாரப்போட்டி
வடகொரியாவின் அணு
ஆயுத சோதனையினால் தென்கொரியாவில் ஏவுகணை தடுப்பு
அமைப்பினை வேகமாக உருவாக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருவது வடகொரியாவுக்கு கடும் கோபத்தை
உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் அதிகாரப்போட்டிக்கு நிலத்திலும் கடலிலும் கடும் சவால்
தரும் நாடான சீனா, வடகொரியாவின் அணு சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு,
தென் கொரியாவில் அமைக்கப்படும் அமெரிக்க ராணுவ தளங்கள், குவிக்கப்படும் ராணுவப்படையினரையும் விரும்பவில்லை.
டியர் லீடர் வரலாறு
வடகொரியா மக்களினால்
டியர் லீடர் என அன்போடு அழைக்கப்படும் இரண்டாம் கிம் ஜாங் யுன் டிசம்பர் 17, 2011 அன்று மரணமடைந்த பிறகு, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிம் ஜாங் யுன் கட்சி,
ராணுவம் நாடு மூன்றையும் தன் அதிகாரத்திற்குள் கொண்டு வந்தார். 1983 ஆம் ஆண்டு இரண்டாம் கிம் ஜாங்கின் மூன்றாவது மனைவிக்கு
பிறந்த கிம் ஜாங் யுன், தனது அண்ணன்களை இருவரையும் தாண்டி இவர்
தந்தையின் இருக்கைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சரியகரமான ஒன்றுதான். சுவிட்சர்லாந்து நாட்டில் கல்வி கற்ற கிம், ராணுவத்தில் இனி ஏகாதிபத்தியத்தை
ஏற்க முடியாது. மக்கள் ராணுவத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி
நாட்டின் அச்சுறுத்தல்களை களைவோம் என பொதுவிழா ஒன்றில் பேசியிருப்பது இவரது செயல்பாடுகளை
புரிந்துகொள்ள உதவும். அந்தரங்க வாழ்க்கையை கிம்மைப்போல யாரும்
காற்று படாமல் காக்க முடியாது. பொதுநிகழ்வில் கிம் அருகில் பெண்
ஒருவர் டிப்டாப்பாக அமர்ந்திருந்த படக்காட்சி ஒன்றை வெளியிட்ட அரசு டிவி, கிம் ரிசொல் ஜூ என்ற பெண்ணை மணந்துகொண்டதாக அறிவித்தது. மக்களுக்கு நம்புவதைத் தவிர வேறு வாய்ப்பே கிம் அளிப்பதில்லையே! தற்போது நடந்த அணு ஆயுத சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜப்பான்,
தென்கொரியா வடகொரியா மீது பொருளாதார தடைகளை மீண்டும் விதிக்கவேண்டும்
என வற்புறுத்துகின்றன. தொடர்ந்து விதிக்கப்படும் தடைகள் நாட்டின்
ஏற்றுமதி உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதோடு வடகொரியா முழுக்க தனிமைப்படுத்தப்படும்
ஆபத்தும் உள்ளது. அணு ஆயுத சோதனையில் வெளிப்படும் கதிர்வீச்சு
மக்களை மெல்ல கொல்லும் என்றால், உடனடியாக ஏற்படும் நிலநடுக்கத்தின்
பாதிப்புகள் என்பது நாம் அறியாதவையல்ல. ஒரு ஏகாதிபத்தியத்தை ஒழிக்க
நாம் இன்னொரு ஏகாதிபத்திய நாடாக மாற வேண்டுமா என்ன?
நன்றி:
-ச.அன்பரசு தொகுப்பு: சுனந்தா சௌகான், பிரமோத், ரோனி ப்ரௌன்