விடை தெரியாத 5 மர்மங்கள்(தொகுப்பு:விக்டர் காமெஸி )
விடை தெரியாத 5 மர்மங்கள்(தொகுப்பு:விக்டர் காமெஸி )
பல்வேறு புலனாய்வாளர்கள், காவல்துறையினர்,
மீட்புப்படை என அனைவரையும் மறக்கமுடியாமல் அலைய வைத்து துப்பு துலக்கச்செய்தாலும்
விடை தெரியாமல் பாடாய்படுத்திய 4 மர்மச் சம்பவங்களின் காக்டெய்ல்
தொகுப்பு இதோ உங்களுக்காக....
டியாடோவ் மர்மத்திற்கு
விடை!
1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யாவின்
உரால் மலைப்பகுதியில் மலையேற்றம் செய்வதற்காக வந்த குழு ஒன்று 1 மாதமாகியும் நாடு திரும்பவில்லை என்ற தகவல் அறிந்த மீட்புப்படை சம்பவ இடத்திற்கு
சென்றனர். மைனஸ் 24 டிகிரி குளிர் மலைப்பகுதியில்
அவர்களது தங்கியிருந்த கூடாரத்தை கண்டுபிடித்தபோது, கீழ்பகுதியில்
வெளியே சென்றதற்கான கத்தி கீறல்கள் இருந்தன. அக்குழு தங்கியிருந்த கூடாரத்தினுள்
எட்டிப்பார்த்தபோது அவர்கள் பயன்படுத்திய உடைகள்
மற்றும் ஷூக்கள்,கேமரா, கம்பளி உடைகள் இருந்தன
மேலும் நிறைய காலடித்தடங்கள் இருந்தன.
இதில் வெற்று காலடித்தடங்களும் அடக்கம். தீவிர தேடுதல் வேட்டையினால் மே மாதம் பனி உருகிய பிறகு 9 பேரின் உடல்களும்(7 ஆண்கள், 2 பெண்கள்)
மீட்கப்பட்டன. அவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து
ஆராய்ந்தபோது, பெரும்பாலோனோர்க்கு உடல் வெப்பநிலை குறைந்து மரணம்
ஏற்பட்டிருந்தது. ஆனால் இரண்டு பேருக்கு மண்டை ஓடு உடைந்தும்,
இரண்டு பேருக்கு மார்பெலும்பு முறிந்தும், பெண்
ஒருவருக்கு நாக்கு காணாமலும் போயிருந்தது. ஸ்வர்லோவ்ஸ் பகுதியைச்
சேர்ந்த யேகாட்டரின்பர்க் எனும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவர்கள் என்று
கண்டறியப்பட்டது. இவர்களின் குழுத்தலைவராக இகோர் டியாடோவ் செயல்பட்டதால்,
இச்சம்பவம் இவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
மரணத்திற்கான சரியான காரணம் இன்றுவரையிலும்
கண்டுபிடிக்கப்படவில்லை.
விலங்குகள் தாக்கியிருக்கலாம் அல்லது பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று
கூறினாலும் எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை. இப்பகுதியில்
ஏலியன்களின் நடமாட்டம் தென்பட்டது எனவும் செய்திகளை கொளுத்தி வீசி திகிலை தொடர்ந்து
கூட்டுகிறார்கள்.
டாமன் சுட் தெரியுமா?
ஆஸ்திரேலிய போலீஸ்காரர்களை தூக்கத்திலும் புலம்ப வைத்த வழக்குதான் டாமன் சுட்.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிலெய்டு நகரில் கடற்கரையில் இறந்துகிடந்த
ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கிடைத்த பேப்பரில் இருந்த பெர்சியன் வார்த்தைகள்தான்
டாமன் சுட்(Taman shud) ஆகும். அவரின் பாக்கெட்டில்
இருந்து கிடைத்தவை ரயில் டிக்கெட், சிகரெட்டுகள், சீப்பு, டாமன் சுட் என எழுதியிருந்த தாள் என்பதைத் தவிர
வேறு எதுவும் நஹி.
டாமன் சுட் என எழுதியிருந்த தாள் பாரசீக கவிஞர் உமர்கய்யாம் எழுதிய அரிய கவிதைகளின்
தொகுப்பிலிருந்து கிழிக்கப்பட்டிருந்தது(Rubaiyat of Omar Khayyam). போலீஸ்
கண்டறிந்தது டாமன் சுட் என்பது அந்த புத்தகத்தின் இறுதி வார்த்தை என்பதை மட்டும்தான்.
பிணப்பரிசோதனையில் இறந்தவர் உடலில் விஷம் இருந்தது வழக்கை இன்னும் இடியாப்பச்
சிக்கலாக்கியது. போலீசார் பல்சுவர் தாண்டி தேடியதில் கிடைத்த
கவிதை நூலில் குறிப்பிட்ட டாமன் சுட் பக்கம் கிழிக்கப்பட்டிருந்ததோடு மற்ற இடங்களிலும்
எக்கச்சக்க சங்கேத வார்த்தைகள் நிரம்பியிருந்தன.
அதிர்ஷ்டவசமாக அதில் ஒரு அலைபேசி எண் இருக்க, அதை தொடர்பு
கொண்டனர். ஆஸ்திரேலிய பெண்ணுக்கு சொந்தமான அந்த எண்ணை தொடர்புகொண்டு
இறந்தவர் குறித்து போலீஸ் விசாரிக்க, இறந்தவர் யார் என்று எனக்கு
தெரியாது. அவர் வைத்திருந்த கவிதைப்புத்தகத்தை நான் முதலில் வைத்திருந்து
பின் வேறொருவருக்கு படிக்க கொடுத்தேன் என்று கூறினார். போலீசாருக்கு
முட்டுச்சந்தில் எருமைகளோடு சிக்கியது போல திகைப்பாயிருந்தது.
2009 ஆம் ஆண்டு அடிலெய்டு பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த மின் பொறியியல் பேராசிரியரான டெரக் அபோட் என்பவர் முழுக்க சங்கேத வார்த்தைகளைக்
கொண்டுள்ள இதனைத் திறக்க பயன்படுத்தும் வார்த்தை டாமன் சுட் என இருக்கவேண்டும் என கூறினார். ஆஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு
உளவு ஆட்கள் ஒருவர் இவர் என்று ஒரு யூகச் செய்தி சுற்றிவருகிறது ஆனாலும் இன்றுவரை அப்புதிர்
விடுவிக்கப்படவில்லை. இறந்துபோனவர் யார் என இன்றுவரை தெரியவில்லை
என்பதே நிஜம்.
ஜூலியா வாலசை கொன்றது
யார்?
1931 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று லிவர் பூல்(இங்கிலாந்து) நகரத்திலுள்ள காப்பீடு விற்பனையாளரான வில்லியம் ஹெர்பர்ட் வாலஸ்(52) என்பவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர்
வில்லியமை மெலனோவா கார்டன்ஸ் ஈஸ்ட் என்ற முகவரிக்கு வரச்சொல்லுகிறார். வில்லியம் புது பாலிசி போட ஆள் சிக்கியிருச்சு என மகிழ்ந்து அந்த தொலைபேசி
நபர் கூறிய அட்ரசுக்கு இரவு 7.30 க்கு சென்றார். ஆனால் அந்த நபர் கூறிய முகவரியை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
8.45 க்கு சோர்வாக வீடு திரும்பினால், வீட்டில்
சமையலறையில் வில்லியமின் மனைவி ஜூலியா தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில்
இறந்து கிடந்தார். கூட்டி கழித்து பார்த்த போலீஸ் நேராக வந்து
வில்லியம் கையில் விலங்கை மாட்டியது. ஆனாலும் நீதிமன்றத்தில்
குற்றத்தை நிரூபிக்க முடியாததால் வில்லியம் தூக்கிலிருந்து தப்பினார். தனது அலுவலகத்தில் பணத்தை ஏமாற்றிய 2 பேரை அண்மையில்தான்
வில்லியம் பதவி நீக்கம் செய்திருந்தார். அவர்கள்தான் வில்லியமின்
மனைவி ஜூலியாவை கொலை செய்திருக்கவேண்டும் என்ற ஒரு கோணம் உள்ளது. இங்கிலாந்தின் பல்வேறு க்ரைம் எழுத்தாளர்களையும்
குழப்பியடித்த வழக்கில் பலரும் பல்வேறு முடிவுகளுக்கு வந்தனர் என்றாலும் அதிகாரப்பூர்வமாக
இதற்கு முடிவு என்றால் காவல்துறை உதட்டை பிதுக்குகிறது.
கடலில் கலந்த கடத்தல் மன்னன்
1971 ஆம் ஆண்டு நவம்பர் போர்லாண்டிலிருந்து
சியாட்டில் சென்று கொண்டிருந்த போயிங்(727) விமானத்தை கடத்திய
நபரை குறிக்கும் புனைப்பெயரே டி.பி. கூப்பர்
ஆகும். விமானத்தின் பாதி வழியில் தன்னுடைய சூட்கேஸில் பாம் வைத்திருப்பதாகவும்
நான் சொன்னபடி விமானிகள் கேட்கவேண்டுமென கூப்பர் மிரட்ட, அவர்
சொன்னபடி சியாட்டில் டகோமா விமானநிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு 36 விமானப்பயணிகளை இறக்கி விட்டு 2 லட்சம் டாலர்கள் தொகையோடு 4 பாராசூட்களையும் பெற்று விமானத்தில்
மீண்டும் பயணித்தார். ஏறத்தாழ விமானம் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும்போது முன்பக்க கதவின் வழியாக பசிபிக் கடலில்
குதித்தார். அமெரிக்காவின் எஃப்பிஐ பல திறன்களோடு 100 எலுமிச்சை சக்தியோடு துப்பு துலக்கியும்
மிஷன் இம்பாசிபிள் ஆனது. பணத்தோடு தப்பிய அந்த மர்ம மனிதன் யார்
என்பதை இன்றுவரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். அத்தனை பேரையும்
அந்தரிகி மென்டலு என சொல்லாமல் சொல்லிய அவர் இறந்துவிட்டார் என நம்பப்படுகிறது.
1980 ஆம் ஆண்டு 8 வயது சிறுவன் கொண்டு வந்த 3
சிதைந்து போன 20 டாலர் நோட்டின் வரிசை எண் கூப்பர்
கடத்திக்கொண்டு போனது என்பது இன்னொரு சுவாரசியம். டிக்கெட்டில்
டான் கூப்பர் என்ற பெயர் இருந்தாலும் தகவலை பிறருக்கு கூறும்போது டி.பி. கூப்பர் என மாற்றி கூறிவிட அது அப்படியே தொடர்ந்துவிட்டது.
அமெரிக்க விமான பயண வரலாற்றிலேயே வெற்றிகரமான கடத்தல் சம்பவம் இது ஒன்றுதான்.
அண்மையில் ஹிஸ்டரி சேனலில் விமானத்தை கடத்தியவர் ப்ளோரிடாவில் வசிக்கும்
72 வயதான முன்னாள் ராணுவ வீரராக பணிபுரிந்த ஒருவர் என தனது ஆவணப்படத்தில்
கூறியிருந்தது. தில்லுக்கு
துட்டு!
பறந்து சென்ற அமெலியா
உலகத்தை முதன்முதலில் சுற்றி வந்த பெருமை
விமானியான அமெலியா இயர்ஹார்ட்டுக்கு(1897) லேடி லிண்டி என்ற பெயரும்
உண்டு. 16 ஆவது பெண் விமானியாக பணியாற்ற உரிமம் பெற்றவர் இவர். 1932 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலை தனியாக இடைநிற்காமல்
கடந்த பெண் எனும் சாதனை மகுடமும் இவருக்கு
சொந்தமானதுதான். 1935 ஆம் ஆண்டு ஹோனலூலு,
ஹவாய், ஓக்லாண்டு, கலிஃபோர்னியா
ஆகிய பகுதிகளுக்கு தனியாக விமானத்தை ஓட்டிச்சென்று சாதனை புரிந்தார் அமெலியா. 1932 ஆம் ஆண்டு தனது வழிகாட்டியான ஃப்ரெட் நூனன் உடன் சேர்ந்து உலகத்தை
சுற்றிவர திட்டமிட்டார். 1937 ஆம் ஆண்டு செய்த விமான பயணத்தில்
ஹவாய், ஆஸ்திரேலியாவிற்கு இடையேயுள்ள ஹோலண்ட் தீவு செல்ல
4 ஆயிரத்து 110 கி.மீ.
கடந்தால் விமானத்திற்கான எரிபொருள் நிரப்ப முடியும். அங்கு அமெரிக்க கடற்படைக்கு தனது விமானம் குறித்த தகவல்களை தெரிவிக்க முடியும்.
இறுதியாக இரவு 8.45 கிடைத்த அமெலியாவின் செய்தியைப்
பார்க்கும்போது அவர் விமானத்திலா அல்லது தீவில் இருக்கிறார் என்பது பற்றி தெளிவான சித்திரம் கிடைக்கவில்லை.
அமெலியா காணவில்லை என்றதும் அமெரிக்க கடற்படை சுறுசுறுப்பாக பணியாற்றத்
தொடங்கியது. மற்ற கப்பல்களை இதனை பின்தொடர்ந்து பணியாற்றியும்
விமானத்தின் சிறிய ஸ்க்ரூவைக் கூட அவர்களால் கண்டுபிடிக்கவில்லை. கிர்பாணி பகுதியில் உள்ள நிகிமாரோரோ அடோல் எனும் தீவுப்பகுதியில் நீர்மூழ்கி
எந்திரன்களின் மூலம் தேடுதல் வேட்டை நடத்தினால் விமானம் குறித்த துப்பு கிடைக்கலாம்
என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பசிபிக் தீவுப்பகுதிகளில்
இவரது உடை பொருட்கள் அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. 1939
ஆம் ஆண்டு அமெலியா இறந்துவிட்டார் என அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது. நமது
ஏர்போர்ஸ் விமானம் கூட காணோமே சார்! விடாது மர்மம்!
நன்றி:
ச.அன்பரசு, பிருந்தா மகேஷ்