நூல் விமர்சனம் :1984 சீக்கியர்கள் படுகொலை




1984 சீக்கியர்கள் படுகொலைஜெ.ராம்கிகிழக்கு


அக்டோபர் 30 அன்று இந்திராகாந்தி பாதுகாவலர்களால் சுடப்பட்டார். அடுத்த நாள் இந்திராகாந்தியின் உடல் அஞ்சலி செலுத்தப்படும்போது தொடங்கிய சீக்கியர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்களால் மேற்கு டெல்லியிலுள்ள திலக் விகார் காலனி முழுக்க விதவைகளாக சீக்கியப்பெண்கள் நிறையும் அளவு கொடூரமானதாக மாறியது.

ராஜீவ்காந்தி அரசு திட்டமிட்டு நிகழ்த்திய படுகொலையில் அதிகம் பலியானது டெல்லியில் வாழ்ந்த லாபனா எனும் தலித் சீக்கியர்கள்தான். இது பெரியளவு பஞ்சாபின் ஜாட் சீக்கியர்களை பாதிக்கவில்லை என்றாலும் சீக்கியர்களின் மீதான பயம் இ்ந்திராகாந்தி இறந்தபோது பெருமளவு உருவானது உண்மை. அத்தருணத்தில் நேர்மையாக செயல்பட்ட கவாய் உள்ளிட்ட டெல்லி போலீஸ் ஜெனரல், பின்னாளில் அரசினால் பழிவாங்கப்பட்டது காங்கிரஸ் அரசுக்கு களங்கம்.




அக்டோபர் 31,நவம்பர்1, நவம்பர் 2  என மூன்றுநாட்களில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம். அரசின் கணக்கு 2,733 மட்டுமே. கொள்ளை, தாக்குதல் என பாதிக்கப்பட்ட சீக்கிய மக்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் மேல் என ராம்கி விவரிக்கும் புள்ளி விவரங்கள் நெஞ்சில் வேதனைக்கனலை கொட்டுகின்றன.   சீக்கியர்களின் மதம், அவர்களின் பழக்க வழக்கம் எனத்தொடங்கி வரலாற்றில் அவர்களின் இடம் பற்றி பேசுவது நூலை கவனத்துக்குரிய ஒன்றாக மாற்றுகிறது. தூர்தர்ஷன், ஆகாஷ்வாணி அரசின் அடிவருடிகளாக கள்ள மௌனம் சாதித்த நேரத்தில் துணிச்சலாக உண்மைச்செய்திகளை களத்திற்கு சென்று வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் தைரியம் பெருமைக்குரிய ஒன்று.

சீக்கியர்களை இனப்படுகொலை செய்ய திட்டமிட்டு சாதித்த தரம்சிங், ஜெகதீஷ் டைட்லர்  ஆகியோரின் பங்கு பற்றிய தகவல்கள் கசாப்பு கடைக்காரனை ஆடு நம்பிய கதையை நினைவூட்டுகின்றன. மால்வா எனும் பூர்வகுடிகளை , நாட்டிற்கு உழைத்த மக்களை எதிர்பாராமல் நடந்த பிழைக்காக வேட்டையாடிய நிகழ்வு வரலாற்றில் மறக்க முடியாத கறை, களங்கம். காங்கிரஸ் அதனை அற்ப மானிய உதவிகளால், மறு குடியேற்றங்களாலோ சரிசெய்துவிட முடியாது என்பதே உண்மை. திருமணப்பெண்ணின் முன்னால் அவளது தந்தையை எரித்து, பெண்ணை நிர்வாணமாக்கி கெடுத்தது, கெரசின் ஊற்றி எரிக்க அலறித்துடிப்பவர்களை வேடிக்கை பார்ப்பது, புகார்களை கண்டுகொள்ளாமல் விடுவது, நேர்மையாக செயல்பட்டவர்களை ட்ரான்ஸ்பர் செய்வது என ராஜீவ்காந்தி அரசு செய்த செயல்களை பின்னாளிலும் சீக்கிய மக்கள் மறக்க முடியாது. மன்னிக்க வாய்ப்புண்டுதான்.ஆனால் எந்நாளும் எந்த அரசையும் நம்புவதற்கு அவர்கள் முட்டாள்களில்லை.




கிழக்கு பதிப்பகத்தில் வெளியீடான இப்புத்தகம், இந்தியாவின் வேறுபாடுகளையும், அரசியல் களங்கங்களையும் குறியீடான மொழியில் பேசுகிறது. சில சமயம் நேடிரடியாகவுமே!. உண்மைக்கு பல கோணங்கள் உண்டு என்பதை இந்நூலை வாசித்தால் நீங்கள் அறியமுடியும். மனதை தைரியப்படுத்திக்கொண்டு வாசிப்பதுதான் பெரிய சவால்.
-கோமாளிமேடை டீம்.