விழிப்புணர்வு காமிக்ஸ்!-ச.அன்பரசு


பெண்ணுடலைக் கொண்டாடும் விழிப்புணர்வு காமிக்ஸ்! -.அன்பரசு


அரசுக்கு ஆதரவான டெக்ஸ் வில்லர் மற்றும் அவரது சகாக்கள் பழங்குடிகளை பொசுக்கும் ரத்தவேட்டையும், இரும்புக்கை மாயாவியின் உலகைக் காப்பாற்றும் ஆக்ஷன் அத்தியாயங்களும்தான் காமிக்ஸில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்று மாறிவருகிறது சமகால நிகழ்வுகளைப் பேசும் ஏராள காமிக்ஸ் எழுத்தாளர்களும், ஓவியர்களும் உருவாகி வருவதற்கு ஒரு சின்ன சாம்பிள்தான் Spreading Your Wings காமிக்ஸ்.

"நான் முதன்முதலில் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்திற்கு வந்து கிராமப்புற பெண்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கியபின்தான் மாதவிடாயின் சவால்களை அனுபவப்பூர்வமாக உணரத்தொடங்கினேன். அமெரிக்காவில் பள்ளியின் வகுப்பில் எனது முதல் மாதவிடாய் வந்தபோது, என் பெற்றோர் பூக்களோடும், மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் என்னை அரவணைத்துக்கொண்டனர். ஆனால் அது இந்தியாவில் பதட்டமும் வலியும் கொண்டதாக இருப்பது எனக்கு புதிய அனுபவம்" என புத்துணர்ச்சியோடு பேசத்தொடங்கினார் அமெரிக்காவின் போஸ்டன் நகரைச்சேர்ந்த சமூக செயல்பாட்டாளரான அரீனா அபாடியன் ஹெய்ஃபெட்ஸ். உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புற பெண்களுக்கான ராஜீவ்காந்தி மகிளா விகாஸ் பரியோஜனா எனும் திட்டத்தில் 2014 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிற பெண்மணி இவர்."இந்தியா பன்மைத்துவம் கொண்ட கிராமம் மற்றும் நகரம் பொருளாதாரங்களை இணைத்து செயல்படும் சுவாரசியங்கள் நிறைந்த நாடு. இச்சமூகத்தில்  பாலியல் சமநிலைக்கான வாசலை ஏற்படுத்துவதே என் லட்சியம்" என படபடவென ஆர்வமுடன் பேசுபவர்தான் பெண்ணுடலைக் கொண்டாடும் காமிக்ஸின் பிரம்மா.

பல்வேறு காமிக்ஸ் இருக்கும்போது பெண்களுக்கான காமிக்ஸின் தேவையென்ன? " பொதுவாக நாம் பாடப்புத்தகங்களின் வழியே உடலைப்பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றுவிடுகிறோம். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, உடலில் நுட்பமான செயல்பாடுகள் எவ்வாறு நடக்கின்றன என்பதைப் பற்றி ஆழமாக அறியாதவர்களாகவே இன்றும் இருக்கிறோம்" என்ற விரிவாக பேசிய அரீனாவுக்கு பெண்களுக்கான காமிக்ஸ் உருவாக்கும் ஐடியா தோன்றக்காரணம், கிராமப்புற பெண்களிடம் செய்த சுகாதார ஆராய்ச்சிதான். இதன் விளைவாக பல்வேறு உள்ளூர் என்ஜிஓக்களையும் ஒருங்கிணைத்து இளம்பெண்களுக்கு பாலுறுப்பு சுத்தம் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கிறார் அரீனா. "இந்தியச் சமூகத்தில் பெண்களின் பாலுறுப்பு பற்றி பேசுவது அவமானத்துக்குரியதாக கருதப்படும் அறியாமைதான் பிரச்னைகளுக்கான மூலகாரணம். சுகாதாரம் குறித்து டீன் ஏஜ் பெண்களிடம் பேசும்போது, அவர்களுக்கு உண்மை புரிந்தாலும் அவர்களின் பெற்றோர்களிடமும், சொந்தங்களிடமும் விளக்கமுடிவதில்லை" என ஆழமாக பேசுகிறார் அரீனா.
இவரின் பயிற்சி வகுப்புக்கு வந்த பெண்ணின் தோழி, மாதவிடாய் ரத்தப்போக்கை நிறுத்த, சைக்கிளைத் துடைக்கும் கந்தல் துணியை பயன்படுத்தியிருக்கிறார். இதன்விளைவாக பாலுறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டும் அதைப் பற்றி வெளிப்படையாக எப்படி பேசுவது என நெஞ்சுக்குள்ளேயே புழுங்கி இறுதியில் நோய்த்தொற்றினால் கருப்பை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்தான் அரீனாவை இச்செயல்பாட்டில் தான் போகவேண்டிய தூரம் அதிகம் என்பதை உணர்த்தியது. "நோய்த்தொற்றின் உடல்நலக்குறைவைக்கூட வெளியே சொல்வது அவமானம் என்று நினைத்து பரிதாபமாக இறந்த எளிய பெண்ணின் மரணம் பல நாட்கள் என்னை தூங்க விடவேயில்லை. அடுத்த தலைமுறையை உருவாக்கும் பெண்ணின் பாலுறுப்பை பற்றிய அறியாமையை மாற்ற நினைத்தபோதுதான் காமிக்ஸ் ஐடியா கிடைத்தது" என புன்சிரிப்போடு பேசுகிறார் அரீனா.

பயிற்சி வகுப்பில் கூறும் பல்வேறு தகவல்களை எழுத்துக்களாக அச்சிடாமல் படங்களாக அச்சிட்டால் குழந்தைகளுக்கு அது எளிதாக புரியும் என்ற அரீனாவின் சிந்தனைக்கு ஆயிரம் லைக்ஸ் கொடுக்கலாம். "ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவரும் எந்த புத்தகங்களும் குழந்தைகளுக்கு தங்களுடைய உடலைப்பற்றிய அறிவை வெளிப்படையாக கூறவில்லை என்பதாலும், குழந்தைகள் படிக்க ஏதுவாகவும் படக்கதைகள் கொண்ட காமிக்ஸாக நூலை உருவாக்க முடிவெடுத்தோம். இம்முறையில் காமிக்ஸிலுள்ள தகவல்களை படிக்கும் குழந்தைகள் தம்முடைய உடலை அவமானத்துக்குரிய ஒன்றாக  நினைக்க மாட்டார்கள்" என ஆர்வம் மிளிர பேசுகிறார் அரீனா.

நூறு பக்கங்கள் கொண்டதாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் உருவாகி வரும் Spreading Your Wings காமிக்ஸ் மக்களது நிதியுதவியுடன் 2 ஆயிரம் பிரதிகள் தயாரிக்கப்படவிருக்கிறது. "பட்டாம்பூச்சி புழுவிலிருந்து உருவாகி வளர்வதை பார்க்கவே பயமாக இருக்கும். ஆனால் அது பட்டாம்பூச்சிக்கு இயற்கையான இயல்பான நிகழ்வு. அதைப்போலவேதான் மனிதர்களான நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். நம் அறிவையோ, உடலையோ பிறருடன் ஒப்பிடும் அவசியமேயில்லை. நாம் நமது பன்மைத்துவத்தை கொண்டாட வேண்டிய தருணம் இது" என புன்னகையுடன் விடைதருகிறார் சமூக செயல்பாட்டாளர் அரீனா. பள்ளிகள், கல்லூரிகள் என்ஜிஓக்களுக்கு குறைந்த விலையில் ஜூபான் பதிப்பக வெளியீடாக அக்டோபர் 2017 இல் இந்த காமிக்ஸ்  வெளியிடப்படவிருக்கிறது.

உலக சுகாதாரச்சந்தை!
உலகளவில் பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களுக்கான சந்தை மதிப்பு - 42.7 பில்லியன், ஆசிய பசிபிக் பகுதி- 48.9%
2016-2022 இல் வளரும் சந்தை வளர்ச்சி -6.1%
நாப்கின் சந்தையில் டாப் நிறுவனங்கள் - P&G
Kimberly-Clark,,Edgewell personal care,Hengan Group

இந்தியாவில் சுகாதாரம்!
ரத்தசோகை குறைபாட்டில் இந்தியாவின் இடம் - 170
ஊட்டச்சத்து, எடை குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் - கல்வி அறிவற்றோர்(51%), கல்வி அறிவுள்ளோர்(31%),பட்டியல் இனத்தவர்(44%)
இந்தியாவில் நாப்கின் பயன்படுத்தும் பெண்களின் அளவு -12%
இந்தியாவின் சுகாதாரச்சந்தை மதிப்பு - 3950 மில்லியன் டாலர்கள்(2004-2005)
இந்தியச் சந்தை மதிப்பு - விஸ்பர்(P&G,50.4%), ஸ்டேஃப்ரீ(J&J 23%), கோடெக்ஸ்(2.2%)
(Global Nutrition Report 2016, Euromonitor International 2016, National Family Health Survey 4 data for 2015-16 , technavio.com)


தொகுப்பு: பெல்லம் தேவி, சுப்ரீம் விஜய்முரளி
நன்றி:குங்குமம் வார இதழ்!