உலகை மாற்றிய வணிகத்தடங்கள்! -ச.அன்பரசு
உலகை மாற்றிய வணிகத்தடங்கள்! -ச.அன்பரசு
உலகை விரிவடையச்செய்து பல நாட்டு
மக்களை பன்னாட்டு கலாச்சாரங்களோடும் கைகோர்க்கச்
செய்யும் நாகரிகப்போக்குக்கு வழிவகுத்தது எது? நம்முன்னே விரிந்துள்ள
சாலைகள்தான். தொன்மைக்காலம் தொடங்கி வணிக சரக்குகளை வாங்குவதற்கு
வணிகர்கள் சென்று வந்த வழித்தடங்களே இன்றும் முக்கியமான பாதைகளாக உறுதியாக உருவாகியுள்ளன.
வியாபாரத்திற்காக உருவாக்கப்பட்ட வழித்தடங்களின் வரலாறைத்தான் இங்கே
முதலடி எடுத்து வைத்து படிக்கப்போகிறோம். வாருங்கள்!
பட்டு சாலை
சீனாவையும் ரோம நாட்டையும் இணைக்கும் 6 ஆயிரத்து 500
கி.மீ தொலைவு நீண்ட பட்டுசாலை மிகவும் பழமையானதும்
புகழ்பெற்றதுமான வணிகச் சாலையாகும். சீனப் பட்டுத்துணிகள் இவ்வழியே
கொண்டு செல்லப்பட்டு லாபகரமாக விற்பனை நடைபெற்றதால் பட்டுச்சாலை என்று பெயர் பெற்றது.
1877
ஆம் ஆண்டு பட்டுச்சாலை என்ற பெயரை இந்த சாலைக்கு வைத்தவர் ஜெர்மானிய
புவியியலாளரான பெர்டினண்ட் வான் ரிச்தோஃபென் (Ferdinand von Richthofen) என்பவராவார். முதல் நூற்றாண்டிலிருந்து இச்சாலை வழியே ரோம நாட்டுக்கும் சீனாவுக்கும் கம்பளி,
வெள்ளி, தங்கம் என பொருட்கள் பண்டமாற்றாக பரிமாறிக்கொள்ளப்பட்டு
வணிகம் நடைபெற்று வந்தது. வணிகத்தின் வழியே கலைகள், தொழில்நுட்பம்,
மதம் உள்ளிட்ட பலவும் பரிமாறிக் கொள்ளப்பட இச்சாலையே முக்கியகாரணம். இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள சாமர்கண்ட்(தற்போது உஸ்பெகிஸ்தானின்
பகுதி) அன்றைய காலத்தில் அறிவுஜீவிகளின் கூடாரமாக திகழ்ந்தது.
பட்டுச்சாலை வழியே இந்தியா, பெர்சியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளோடு வர்த்தகம் சக்கைபோடு
போட்டது.
சீனாவின் ஷியான் பகுதியிலிருந்து சீனப்பெருஞ்சுவர்
வழியே பாமிர் மலைத்தொடரிலிருந்து ஆஃப்கானிஸ்தான் வழியே சென்று மத்திய தரைக்கடல் துறைமுகத்தில்
நிறைவடைகிறது. 13 ஆம் நூற்றாண்டில் பட்டுப்பாதை சென்ற பகுதிகள்
பலவும் மங்கோலியர்கள் ஆக்கிரமிக்க, வணிகம் நெருக்கடியைச் சந்தித்து பின் மீண்டது.
இப்பாதை வழியாக சீனாவுக்குள் வந்த முதல் ஐரோப்பியர் இத்தாலியப் பயணியான
மார்கோபோலோ ஆவார். கலாச்சாரங்களின் பரிமாற்றம் வழியே நாடுகள்
வளம் பெற்றாலும் கொள்ளை நோயான பிளேக் நோய்க்கிருமிகளையும்
வணிகர்கள் பட்டுப்பாதை வழியே பல நாடுகளுக்கும் பரப்பினார்கள் என்று விஞ்ஞானிகள் விநோத
குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.
2014 ஜூன் மாதம் யுனெஸ்கோ அமைப்பு பட்டுப்பாதையை உலகப் பாரம்பரிய இடமாக
அங்கீகரித்து தொன்மை வழித்தடத்திற்கு கௌரவம் சேர்த்தது.
வாசனைச் சாலை
ஸ்பைஸ் ரூட் என சிம்பிளாக சொல்லலாம். கிழக்கையும் மேற்கையும்
இணைக்கும் இந்த வழித்தடம் 15 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவைக் கொண்டது.
கிழக்கு நாடுகளிலிருந்து கிடைத்த மிளகு, கிராம்பு,
ஜாதிக்காய், லவங்கப்பட்டை உள்ளிட்ட வாசனைப் பொருட்களுக்கு
ஐரோப்பாவில் பெரும் கிராக்கி. 15 ஆம் நூற்றாண்டில் மேற்கூறிய
பொருட்களின் விலையை மீட்டருக்கு மேல கொடுங்க என கெடுபிடியாய் அரேபியர்களும்,
மேற்கு ஆப்பிரிக்க வணிகர்களும் உயர்த்திக் கேட்க, எதற்கு கொடுக்கவேண்டும் கிஸ்தி என ஐரோப்பியர்கள் நேரடியாக கிழக்கு நாடுகளின்
வாசல் சென்று வணிகம் செய்ய வழி தேடினர். வாசனைச்சாலை தொடக்கம்
அதுதான்.
நவீனக் கப்பல்கள் நீண்ட தொலைவையும்
எளிதாக்க, மேற்கத்திய நாடுகள், சீனா,
ஜப்பான, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளோடு வணிகத்தை
வலுப்படுத்தினார்கள். ஐரோப்பியர்கள் கிழக்கு நாடுகளோடு கொண்ட
உறவிற்கு பின் வாசனைப்பொருட்களின் பங்கு அதிகம். 1492 ஆம் ஆண்டு
கிறிஸ்டோபர் கொலம்பஸ் கப்பலேறியதும் மிளகைத்தேடித்தான் என்றாலும் இறுதியில் கிடைத்தது
அமெரிக்காதான். தற்போதைய
இந்தோனேஷியா உள்ளிட கிழக்கு இந்தியப்பகுதிகளை அதிகாரம் செய்ய ஆங்கிலேயர்களும்,
டச்சுக்காரர்களும் போட்டா போட்டி
போட காரணம், வாசனைப்பொருட்களிலிருந்து குறைவில்லாமல் கொட்டிய பணம்தான் காரணம். அந்நாட்டின் மொலுக்காஸ் பகுதியில் மட்டுமே அன்றைய காலத்தில் ஜாதிக்காய்,
கிராம்புகள் கிடைத்தன. அதிகாரப்போட்டி உச்சமாக,
போர் நடக்க இப்பகுதிகள் காலனியாதிக்கத்திற்குட்பட்டு அதன் வளங்கள் சுரண்டப்பட்டு
விற்பனைக்கு கொண்டு செல்ல உதவியதும், பின்னாளில் தாராளமயமாக்கலின்
கதவாக மாறியதும் வாசனைச்சாலைதான். ம
தேயிலைச்
சாலை
சீனாவின் தென்மேற்கு சிச்சுவானிலிருந்து
ஹெங்டுவான் மலைப்பகுதி வழியே 365 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள
திபெத் தலைநகரம் ஹாஸா வரை உள்ள 9 ஆயிரத்து 656 கி.மீ தொலைவுள்ள பழமையான பாதையே தேயிலைச் சாலையாகும்.
இதனை சிலர் தெற்கு பட்டுச்சாலை என்றும் கூறுகிறார்கள். 10 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு நதிகள்
பாய்ந்தோடும் இந்த சாலை வழியே சீனர்கள் தேயிலையை திபெத்திற்கு விற்பனை செய்து குதிரைகளை
வாங்கிவரும் பழக்கம் தொடர்ந்து வருகிறது. முதலில் இருந்த தேயிலைச்சாலை
அழிந்துபோய் இன்று கார்கள், வண்டிகள் செல்லும்படியான பாதையே இருக்கிறது.
வியாபாரம் தடதடத்த காலத்தில் ஒரு ஆண்டிற்கு 20 ஆயிரம் குதிரைகளுக்கு 8 ஆயிரம் டன்கள் தேயிலைத்தூளை பண்டமாற்றாக
கொடுத்து வியாபாரம் நடந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்போது,
ஜப்பான் சீனாவின் பல்வேறு கடல்மார்க்கங்களையும் தன் பிடியில் கொண்டுவர,
மக்கள் புழக்கம் குறைந்த தேயிலைச்சாலையைப் பயன்படுத்தி நடந்த சரக்குப்பொருட்கள்
பரிமாற்றமே உயிர் காத்தது. நடத்தினர். பட்டு மற்றும் பீங்கான் உள்ளிட்டவற்றை
விட தேயிலையின் மதிப்பு அதிகமாக இருந்த காலம் அது. 90 கிலோ தேயிலையை
சுமந்தபடி 3 மாதம் தேயிலைச்சாலையில் பயணித்தால் திபெத் தலைநகரை
அடைந்து அங்கு 60 கிலோ தேயிலைக்கு ஒரு குதிரையை வாங்கி வரலாம்.
தியானத்தின் விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படும் தேநீரை, இங்கு பல்வேறு தலைமுறையாக வாழும் திபெத் துறவிகள், வறுக்கப்பட்ட
பார்லி மாவோடு கலந்து பருகி வருகிறார்கள்.
உப்புச்சாலை
பண்டைய காலத்திலிருந்தே உப்பு முக்கிய
பண்டமாற்று பொருளாக பயன்பட்டு வந்த ஒன்று. சம்பளத்தை குறிக்கும்
ஆங்கிலச்சொல் உருவாகி வந்ததே சால்ட் என்ற லத்தீன் சொல்லிலிருந்துதான்(sal) என்பது அனைவரும் அறிந்ததே. வெள்ளைத் தங்கம் என்றழைக்கப்பட்ட
உப்பு, தயாரிக்கும் இடங்கள் முக்கியமான வணிக மையமாக திகழ்ந்து
வந்தன. ரோம் நகரின் அருகிலுள்ள ஆஸ்டியாவிலிருந்து இத்தாலி உள்பகுதிகள்
மற்றும் அட்ரியாடிக் கடற்பகுதிகள் வரை உப்புச்சாலைகள் செயல்பட்டு வந்தன. ரோமின் படைவீரர்களுக்கு சம்பளத்தின் ஒருபகுதியாக உப்பு இருந்தது.
12 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியின்
வடக்குப்பகுதியில் லுன்பர்க் பகுதில் செயல்பட்டு வந்த 100 கி.மீ உப்புச்சாலை உப்புவணிகத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. லுன்பர்க் பகுதியிலிருந்து தயாரிக்கப்பட்ட உப்பு, பால்டிக்
கடற்கரையில் இருந்த லுபெக் எனும் துறைமுகத்தில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
20 நாட்களுக்கு ஒருமுறை விற்பனை செய்யப்பட்ட உப்பு பல்வேறு நகரங்களின்
வழியே சென்றபோது வரி விதிக்கப்பட்டு, அதன்மூலம் நகரங்களும் செழிப்பை
பெற்றன.
சஹாரா
வணிகச்சாலை
4 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட
சஹாரா வணிகச்சாலையில் வணிகர்கள ஒட்டகங்களின் மீது சரக்குகளை ஏற்றி சஹாரா பாலைவனத்தை
கடந்து விற்பனைக்கு எடுத்து சென்றனர். இதில் தங்கம், உப்பு, துணிகள், அடிமைகள் மற்றும்
துப்பாக்கிகள் உட்பட இப்பாதையில் முக்கிய வணிகப்பொருட்களாக எடுத்துச்செல்லப்பட்டன.
இதன்மூலம் இஸ்லாம் மதம் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு பரவியது.
16 ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த இப்பாதையினை ஐரோப்பியர்கள்
அடையாளம் கண்டு அதனை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அட்லாண்டிக் கடல் பகுதி வர்த்தகம் மேலோங்கிய பிறகு கரையோரப் பிரதேசங்களிலிருந்து
கடல்பகுதிகளுக்கு வியாபாரம் நகர, சஹாரா வணிகச்சாலை தன் முக்கியத்துவத்தை
மெல்ல இழந்தது. வணிக உறவு என்பது பல்வேறு ஆட்சி மாற்றங்களுக்கும்,
போர்களுக்கும், சர்வாதிகாரங்களுக்கும் காரணமாக
அமைந்துள்ளது என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை அறியலாம். பிஸ்னஸ் என்றால் சும்மாவா?
-ச.அன்பரசு.