உலகின் முதல் முகமாற்று அறுவைசிகிச்சை -தொகுப்பு:சரஸ் சோபியா.



உலகின் முதல் முகமாற்று அறுவைசிகிச்சை
 -தொகுப்பு:சரஸ் சோபியா. 


உலகில் நடைபெறும் பல்வேறு பணிகளில் விபத்து ஏற்படுவது சகஜம். ஆனால் அந்த விபத்து உடலில் ஏற்படுத்தும் தழும்புகளையும் வலிகளையும் தாண்டி நடைமுறை வாழ்க்கைக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. நம்மைப்போல ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்த பேட்ரிக் தன் வாழ்க்கை ஒரே நாளில் தலைகீழாக மாறும் என நினைத்திருப்பாரா?   அன்று அவர் வாழ்வில் நடந்த சம்பவம் அவரது வாழ்வை முதலிலிருந்து தொடங்க செய்தது. நடந்தது என்ன?

2001 ஆம் ஆண்டு மிசிசிபியில் வசித்து வந்த தீயணைப்பு வீரரான பேட்ரிக் ஹர்டிசன்னுக்கு மிசிசிபி மாநிலத்தின் கட்டிடம் ஒன்றில் தீ பிடித்ததாக அழைப்பு வர, தன் குழுவோடு கிளம்பி அந்த இடத்திற்கு சென்றார். அங்கு உள்ளே தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஹர்டிசன் மேல் தீயோடு கட்டிடக்கூரை இடிந்து விழுந்ததில் தலை, கண்புருவங்கள், உதடு, காதுகளில் கடுமையான நெருப்பு காயம் ஏற்பட்டது. 63 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து உயிர்பிழைத்ததே ஆச்சரியம் எனும்போது முகம் உருகி உருக்குலைந்து போனதைப்பற்றி எப்படி கவலைப்பட முடியும்? சிதைந்துபோன முகத்துடனே பல்வேறு சிகிச்சைகளை செய்து சமாளித்துக் கொண்டு முகத்தை சீர்செய்து புதிய முகத்தைப் பெறுவதற்கான தோலைப் பெற 14 ஆண்டுகள் காத்திருந்தார்ஆகஸ்ட் 12, 2015 அன்று நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து ஹர்டிசனை அழைத்து சாலைவிபத்தில் இறந்த டேவிட் ரோட்பர்க் என்பவரின் முகத்திலுள்ள தோலை அவருக்கு பொருத்த முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவித்து அவரது நம்பிக்கை வீணாகாமல் காத்தனர்.


100 மருத்துவர்கள், நர்ஸ்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என 26 மணி நேரங்கள் கடும் உழைப்பில் 42 வயதான ஹர்டிசனுக்கு புதிய முகம் தரும் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
எனக்கு இது 37 வது முகமாற்று அறுவை சிகிச்சை என்றாலும், இந்தளவு மோசமான காயங்கள் பட்ட ஒருவருக்கு தலைமுடி, புருவங்கள், காதுகள் உள்ளிட்டவற்றை உருவாக்கும் விரிவான அறுவை சிகிச்சை என்பது புதிதான ஒன்றுதான். இதனை பலரும் புரிந்து கொள்ளும்படி சரியான அறிக்கை ஒன்றினை தயாரிக்க நினைத்தோம். தானம் பெற்று பொருத்திய புதிய தோலினை இவரது உடல் எளிதாக ஏற்றுக்கொண்டது சிரமத்தை குறைத்தது என்கிறார் அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மரு. எட்வர்ட் ரோட்ரிக்ஸ்.

முகமாற்று அறுவைசிகிச்சைக்கு முன்பு என்னால் தூங்கவோ, வண்டி ஓட்டவோ ஏன் கண்களை மூடக்கூட முடியாது. இன்று நான் பேசலாம், மூச்சுவிடலாம், சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு காரணமான டேவிட் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என நெகிழ்கிறார் புதிய முகத்தால் வாழ்வு பெற்ற தீயணைப்பு வீரர் பேட்ரிக் ஹர்டிசன்.

விரிவான அறுவை சிகிச்சை ஏற்பாடுகளோடு தயாரான நூறு மருத்துவர்கள், ஹர்டிசனின் முகத்தில் எந்தளவு அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டுமென திட்டமிட்டு குறித்துக்கொண்டு, பின் டேவிட்டின் தலை மற்றும் முகத்தின் தோலை வெட்டியெடுத்தனர். அவரது முகத்தில் சிலிகானால் ஆன முகமூடியை அணிவித்தனர். அறுவை சிகிச்சைக்காக நியூயார்க் நகரத்தின் மருத்துவமனை அருகிலேயே ஹர்டிசன் தங்கி ஹர்டிசன் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இந்த அறுவை சிகிச்சை முழுவதும் பல்கலைக்கழகத்தினால் மாணவர்களின் கல்வி நோக்கத்திற்காக முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்டிசன், புதிய முகம் பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். இனி தன் முகத்தை மறைத்தபடி பொதுஇடங்களில் நடமாடும் அவசியம் இருக்காது எவ்வளவு பெரிய விடுதலை! அதோடு இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சை மருத்துவத்துறையின் அதிவேக முன்னேற்றத்தையும் உலகம் அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது நன்மைதானே?
நன்றி:   
.அன்பரசு.









பிரபலமான இடுகைகள்