அறிவியல் செய்திகள்! - தொகுப்பு : சரோஷா, பெல்லம் சுரேஷ்
உலகம் சுற்றிய
பலூன்காரர்
பைக்கில் மித வேகத்தை
தொடும்போது நெஞ்சு பதறி மெதுவா போ நண்பனின் தோள்பட்டையை இறுக்கும் நமக்கு, வானத்தில்
பலூன் மூலம் காற்று முகத்தில் அறைய பறக்க முடியுமா? என்ற கேள்வி
நியாயமே இல்லை. ரஷ்யாக்காரர் ஒருவர் பலூன் மூலம் தொடர்ச்சியாக
ப்ரேக் எடுக்காமல் 11 மணிநேரம் பயணம் செய்து உலகம் சுற்றி வந்து சாதனை செய்திருக்கிறார்.
ஃபெடோர் கொன்யுகோவ்
(65) எனும் ரஷ்ய நாட்டுக்காரர் 56 மீட்டர் உயரமும்,
8 டன்கள் எடையும் கொண்ட ஹீலியம் பலூன் மூலம் சிலி, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில்
ஆகிய நாடுகளைக் கடந்து இடைநிற்காமல் உலகம் சுற்றிவிட்டு ஜூலை 12 அன்று, ஆஸ்திரேலியாவின் நார்தம் எனுமிடத்தில் 6
ஹெலிகாப்டர்கள் உதவியுடன் அலுமினிய தாளில் உருவான பலூனில் காற்று மெதுவாக
இறக்கப்பட பாதுகாப்பாக தரையிறங்கினார்.
ரஷ்யாவைச் சேர்ந்த
ஃபெடோர் இச்சாதனை செய்யும் முதலாவது மனிதர்
என்று கூறிவிட முடியாது.
2002 ஆம் ஆண்டு அமெரிக்க வணிகரான
ஸ்டீவ் ஃபாசெட் என்பவர் 13 நாட்கள் மற்றும் 8 மணிநேரத்தில் 33 ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து சாதனை
புரிந்திருக்கிறார். இந்த 14 ஆண்டு சாதனையை
பெடோர் ஜூலை 12 ம் தேதி வெற்றிகரமாக தனது பயணத்தை நிறைவு செய்ததன்
மூலம் தகர்த்து புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
பாரம்பரிய பாதிரியார் குடும்பத்தைச் சேர்ந்த ஃபெடோர் 11 நாட்கள், 6 நாட்களை செலவழித்து 34 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து
உலகை சுற்றி வந்திருக்கிறார். எரிபொருளின் அளவை சரியாக அட்ஜஸ்ட்
செய்து மிதமாக வைத்துக்கொண்டதன் மூலம் ஒரு
மணிநேரத்திற்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் 10 ஆயிரத்து 614 மீட்டர் உயரம் வரை பறந்து, விரைவாக பயணத்தை நிறைவு செய்ய உதவியது. ஒரு நாளுக்கு
4 மணி நேரங்கள் உறங்கியதோடு, 40 நிமிடங்களுக்கு
ஒருமுறை எழுந்து பல்வேறு எந்திரங்களின் இயக்கங்களை சரிபார்த்துக்கொண்டு படபடப்போடு
பயணித்தேன். அண்டார்டிகா புயல், உறைய வைக்கும்
மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிர் ஆகியவற்றை 2 மீட்டர் நீளம், 1.8 மீ அகலம் கொண்ட பலூன் பெட்டியில்
அமர்ந்து சகித்துக்கொண்டு பயணித்தேன் என தனது பயண அனுபவங்களின் த்ரில் தருணங்களை விரிவாக
பேசுகிறார் ஃபெடோர்.
வேர்ல்டு ஏர் ஸ்போர்ட்
பெடரேஷன் அமைப்பு ஃபெடோரின் சாதனை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால்
என்ன? நாங்க குத்துறோம்
சார்! உங்கள் நெஞ்சில் சூப்பர் பலூன் மாஸ்டர் மெடல்.
சிறிது காலம் டூர் அடித்துவிட்டு வந்து வீட்டைப்
பார்த்தால் சுற்றிலும் கசகசவென சிலந்திவலை கட்டியிருந்தால் நமக்கு எவ்வளவு சுருக்கென
கோபம் வந்துவிடுகிறது.
ஆனால் தற்போது அதே சிலந்தி வலை வடிவமைப்பில் கார்பன் இழைகளின் மூலம்
கட்டிடங்களை அமைப்பதுதான் ட்ரெண்டிங்காக பரவிவருகிறது.ஜெர்மனியைச்
சேர்ந்த ஸ்டட்காட் பல்கலைக்கழகம்தான் இதனை உருவாக்கியுள்ளது.
சிலந்திவலை வடிவமைப்பை ஸ்வார்ம் கட்டிடக்கலை
என்று குறிப்பிடுகின்றனர்.
ஸ்கட்காட் பல்கலைக் கழகத்தின்(1829) கணக்கீட்டு
வடிவமைப்பு துறை சார்ந்த மாணவியான மரியா யப்லோனினாவின் கண்டுபிடிப்பாகும். சிறிய ரோபாட்டுகளை பயன்படுத்தி செய்யும் கார்பன் இழைகளைப் பயன்படுத்தி சுவற்றில்
தொங்கும்படியான படுக்கைகளை உருவாக்கி அசரடிக்கிறது இவரது குழு. சரி கார்பன் இழைகள் வேறு என்ன துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன?
1800
ஆம் ஆண்டு கார்பன் இழைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் 1960 ஆம் ஆண்டில்தான் வர்த்தகரீதியாக மக்களின்
பயன்பாட்டிற்கு வந்தது. கார்பனிலிருந்து செயற்கை முறையில் உருவாக்கப்படும்
இழைகள்தான் கார்பன் இழை என்று அழைக்கப்படுகிறது. பிளாஸ்டிக்கின்
பாலிமர் பசையில் உள்ள கார்பனை சூடாக்குதல், அழுத்தம் கொடுத்தல்,
ஆவியாக்குதல் செயல்முறையில் குறைந்த எடையுடையதாக வலுகொண்டதாக தயாரித்துப்
பெறலாம். விண்வெளி ஆய்வுகள், விண்வெளி வாகனங்கள்,
கார்கள், செயற்கைக் கோள்கள், இசைக்கருவிகள், வீட்டு பயன்பாட்டுப்பொருட்கள்,
கட்டுமானப்பொருட்கள், காற்றாடிகள், பாலங்கள் உள்ளிட்டவைகளில் கார்பன் இழைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
2010 ஆம் ஆண்டு கார்பன் இழைகளின் தேவை ஆண்டுக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன்களாக இருந்தது. 2017 ஆம் ஆண்டு இதன்
சந்தை மதிப்பு 7.3 பில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் இந்த தொழில்நுட்பத்தினை தற்போதுதான்
பயன்படுத்தி விரிவாக அறிந்து வருகிறோம். இந்த கார்பன் இழைகளைப் பயன்படுத்தி
இதுவரையிலும் இல்லாத புதுமையான முறையில் கட்டிடங்களை அமைக்கும் திட்டமிருக்கிறது என
ஆழ்ந்து யோசித்து பதிலை தருகிறார் துறை இயக்குநரான அசிம் மென்கெஸ்.
படுக்கையறையில் ஆணிகளைப் பயன்படுத்தி கார்பன்
இழைகளின் மூலம் வேறுபட்ட முறையில் படுக்கைகளை அமைத்து கிரியேட்டிவிட்டியோடு இடத்தையும்
சரியாக பயன்படுத்த முடியும். பல்வேறு சுவர்களிலும் பயன்படுத்துவதற்கான முயற்சியை
தொடங்கிவிட்டோம் என கூறுகின்றனர். பார்ப்பதற்கு பூனை தொட்டில்
போல இருந்தாலும் படு ஸ்ட்ராங். சரி இதில் எப்படி ஏறி எப்படி இறங்குவது
என்ற கேள்விக்குத்தான் யாருமே பதில் சொல்ல மாட்டேன்கிறார்கள். நீங்களாவது சொல்லுங்களேன் சார்?
உலகின் ஆழமான கடல்குகை
தெற்கு சீன கடல்பகுதியில் உள்ள பராசல் தீவு
அருகில் கடல்குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் நடுவே உள்ள இந்த கடல்குகையின்
ஆழம் 984 அடி(300 மீ). இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கடல்குகையை விட(202 மீ.,லாங் தீவு, பஹாமா,) இது 91 மீ. ஆழம் அதிகம். பிரமாண்டமான ஈஃபில் டவரினை இந்த கடல்குகைக்கு உதாரணமாக கொள்ளலாம்.
இதனை கடல்மட்டத்திற்கு மேலே இருந்து
பார்த்தால் நீலநிறத்தில் தெரியும் எனவே நீலத்துளை என்று அழைக்கப்படுகிறது.
2.58 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
கடல்நீர் தற்போது உள்ளதை விட 120 மீட்டர் குறைவாக இருக்கும்போது கடல்குகை உருவானதாக கூறப்படுகிறது. இதனுள்ளே சுண்ணாம்பு பாறைகள் அல்லது பவளப்பாறைகள் வளருகின்றன. பெரும்பாலான கடல்குகைகளில் நன்னீர் மற்றும் கடல்நீர் கலந்திருக்கும்.
நீர்பரப்பில் கடல்குகை பெறும் நீலநிறத்திற்கு நீரின் அடர்த்தியும் இதனுள்
இருக்கும் சுண்ணாம்பு படிவுகளும்தான் காரணம். ஆஸ்திரேலியா,
எகிப்து, மத்திய அமெரிக்காவில் உள்ள பெலிஸ் ஆகிய
நாடுகளில் கடல்குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் ட்ராகன் துளை என்று அழைக்கப்படும்
இந்த கடல்குகை நூற்றாண்டுகளுக்கு மேலாக அங்கே
இருக்கிறது.
இந்த கடல்குகையின் உள்ளே மனிதர்கள் சென்று பார்க்க முடியாதபடி கடும்
அழுத்தம் நிலவுவதால் ஷன்சா பவளப்பாறை ஆராய்ச்சி நிறுவனம் எந்திரன்களை பயன்படுத்தி ஆழத்தை
துல்லியமாக அளவிட்டு அறிந்துள்ளனர். அதோடு இதில் வாழும் புதிய 20 வகை மீன்களையும் கண்டறிந்துள்ளனர். இந்த ட்ராகன் கடல்குகையில் மேலும் 300 அடிக்கு மேல்
சென்று ஆராய்ந்தால் அங்கு ஆக்சிஜன் உள்ளதா என்பது தெரியவரும். கடல்குகையை ஆராயும்போது, கடலின் நீர்மட்டம், சீதோஷ்ண நிலை ஆகியவை முந்தைய காலகட்டங்களில்
என்னென்ன பரிமாண மாற்றங்களை அடைந்து வந்துள்ளது என்பதோடு நில அமைப்பு, நீரியல் அமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றைக் கண்டறிய
முடியும் என சீனாவின் கடல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் யாங் சுவோசெங் நம்பிக்கையோடு
கூறுகிறார். ஆழமான விஷயம்தான் இது.
30 நிமிடத்தில்
நீரில் கரையும் புதுமை பேட்டரி
உளவு நிறுவனங்கள் தான் பயன்படுத்தும் பொருட்களை
யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது தினுசான தொழில்நுட்பம் கொண்டு அழித்துவிட்டு வேறிடத்திற்கு
தப்பிவிடுவார்கள்.
அவர்களுக்கு கிடைத்த தொழில்நுட்பம் நமக்கும் கிடைத்தால் நல்லதுதானே?
இனி நாம் பொருட்களில் பயன்படுத்துகிற பேட்டரிகளை கூட அதன் ஓர் சுவடு
கூட இன்றி அழித்துவிட முடியும். எப்படி சார் முடியும் என்கிறீர்களா?
இதோ இப்படித்தான்!
தற்போது அமெரிக்காவின் ஆமெஸ் நகரிலுளம்மள
அமைந்துள்ள ஐயோவா ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள
புதுமையான பேட்டரிகள் நீரில் 30 நிமிடத்தில் கரைத்து தன்னை அழித்துக்கொள்கின்றன.
ஒளி, வெப்பம் நீர்மம் என குறிப்பிட்ட
வகையில் அழியும் தன்மை கொண்ட நிலையற்ற மின்னணு பொருட்கள் குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக
நடைபெற்று வந்தன. மின்னணுப் பொருட்களில் நிலைத்தன்மைகொண்டதாக,
சக்தி வாய்ந்ததாக, அதிக நாட்கள் தாக்குப்பிடிக்கும்
தன்மை கொண்ட மின்னணு பொருட்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது இந்த ஆய்வின்
தன்மையை உங்களுக்கு விளக்கும். ஆனால் இதனை தகர்த்து ஐயவோ பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த ஆய்வாளர்கள் 2.5 வோல்ட் மின்சக்தி தரும் பாலிமர் கலந்த
லித்தியம் அயான் பேட்டரிகளை உருவாக்கியுள்ளனர். 1 மி.மீ சுற்றளவும், 5 மி.மீ நீளமும்
கொண்ட இந்த பேட்டரிகள் 30 நிமிடங்களில் நீரில் கரைந்து தன்னை
அழித்துக்கொண்டு விடுகிறது.
ஐயவோ பல்கலையின் எந்திரப்பொறியியல் பிரிவின்
துணை பேராசிரியரான ரெஸா மான்டஸமி நிலையற்ற மின்னணு பொருட்கள் குறித்து பல ஆண்டுகளாக
ஆராய்ச்சி செய்து வந்த நிலையில் தற்போது குறிப்பிடும்படியான வெற்றியை பேட்டரிகளை கண்டுபிடித்ததன்
மூலம் பெற்றிருக்கிறார்.
இவரது ஆராய்ச்சி குறித்த தகவல்கள் பாலிமர் சயின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பாலிமர் மூலம் செய்யப்பட்டுள்ள முதல் பேட்டரி
இதுதான்.
மற்ற சாதாரண மின்னணு பொருட்களை விட தானே அழியும் பொருட்கள் சிறந்தவை.
அவை குறிப்பிட்ட காலம் முடிந்ததும் தன்னை கரைத்துக்கொள்கிறது என்பதைத்
தாண்டி சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டது என அழுத்தம் திருத்தமாக நம்பிக்கையோடு பேசுகிறார்
ரெஸா. புதிய கண்டுபிடிப்பான இந்த லித்தியன் அயன் பேட்டரி அனோடு,
கேதோடு, எலக்ட்ரோலைட் செபரேட்டர், ஆல்கஹால் கலந்த பாலிவினைன் பொருட்களை கொண்டஇரு அடுக்குகள் என மொத்தம்
8 அடுக்குகளைக் கொண்டுள்ளது.
பேட்டரி நீரில்
கரையும் என்றாலும் முழுமையாக கரைந்துவிடாது. இதில் உள்ள நானோ மூலக்கூறுகளால்
அனைத்தும் சிதைவடையாதுத என்றாலும் எலக்ட்ரோட்ஸ் உடைந்தால் மட்டுமே சிதைவடையும்.
வணிகரீதியில் உள்ள பேட்டரிகள் போல ஆற்றலை வெளிப்படுத்தவேண்டும்.
மின்சக்தி குறைவாக நிலையாக இல்லையென்றால் மின்னணு பொருட்கள் வேலை செய்யாது
அல்லவா? இவை பல்வேறு அடுக்குகளையும் சிக்கலான அமைப்பையும் கொண்டிருப்பதாக
அமைப்பது, பல்வேறு நிலைகளில் பேட்டரிகளை மெல்ல உருவாக்கிவருவது
என மூன்று நிலை சிக்கல்களை சமாளித்தே பேட்டரிகளை அரும்பாடுபட்டு உருவாக்கியிருக்கிறேன்
என தைரியமாக பேசுகிறார் ரெஸா. சவால்கள் இல்லாமல் சாதனை சாத்தியமா
என்ன?
உலகிலேயே உயரமான 360 டிகிரி
கோபுரம்
ஒரு கட்சியின்
ஆட்சியில் அமைக்கப்படும் புதிய கட்டிடங்கள் காலம்தாண்டி அவர்களது பெயரை கூறுபவை. தங்கள்
சாதனையாக சொல்லப்படுவதற்காக கட்டுவது தாண்டி நகரின் வருவாய்க்காகவும் ட்ரெண்டியாய்
ஸ்லிம்பிட்டாய் அமைந்துவிடுவதும் உண்டு. அடுத்த பாராவில் நீங்கள்
படிக்கப்போவதும் அப்படி அமைந்த கோபுரம் குறித்துத்தான்.
இங்கிலாந்தின்
தென்பகுதியில் உள்ள பிரைட்டன் நகரில் பிரிட்டிஷ்
ஏர்வேய்ஸ் நிறுவனத்தில் உலகிலேயே உயரமான சிக்கென்ற வடிவில் கண்காணிப்பு கோபுரம்(i360) ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதில் புதுமையான விஷயமாக, நகரும் வகையில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கோள வடிவ அமைப்பின் மூலம் சசெக்ஸ்
பகுதியின் கடற்கரை அழகை துளியும் சிந்தாமல் சிதறாமல் ரசிக்க முடியும். இந்த கோபுரமானது 161.75 மீட்டர் உயரமும், 4.5
மீட்டர் சுற்றளவும் கொண்டுள்ளது. லண்டன் ஐ என்று
அழைக்கப்படும் இக்கோபுரம், கடல் மட்டத்திற்கு மேல்
138 மீட்டர் உயரத்திற்கு ஒரே நேரத்தில் 200 நபர்களை
அழைத்துச் சென்று பிரைட்டன் நகரை வெவ்வேறு கோணங்களில் பார்த்து ரசிக்க வைக்கிறது.
ஐ360 கோபுரம்
அழகாக மக்களை ஈர்க்கிற அதேயளவு சர்ச்சைகளும் அதனை விடாமல் தீயாய் சுற்றி வருகின்றன.
ஸ்லிம்மாக ஐ360 டிகிரி கோபுரம் இருக்கிறது என பாராட்டுகள் குவியும் அதேநேரம்,
பாலுறவைக் குறிக்கும் பொம்மை போல் காட்சியளிக்கிறது, பார்க்க அழகாக இருந்தாலும் சிறிய நகரமான பிரைட்டனுக்கு இது பொருந்தாது,
கடற்கரைக்கு பொருத்தமில்லாத கோபுரம் இது என ஆக்ரோஷமாக இதனை எதிர்ப்பவர்கள் எண்ணிக்கையும்
அதிகம்தான். ஆனால் மக்களின் மனதை காந்தமாய் கவர்ந்த 90
டன் எடை கொண்ட ஐ360 கோபுர கண்ணாடி கோளம் ஏற்கனவே
கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்து பிறவிப்பயனை அடைந்துவிட்டது.
பிரைட்டன் நகர
சுற்றுலாவிற்கான புதிய அடையாளமாக மாறிய 360 டிகிரி கோபுரம் லாலிபாப், டூநட் என மக்களால்
செல்லமாக அழைக்கப்படுகிறது. ஐ 360 கோபுரம்
கட்ட செலவழிக்கப்பட்ட தொகை மட்டும் 46.2 மில்லியன் பவுண்டுகளாகும்.
இதனை மார்க்ஸ் பார்ஃபீல்டு ஆர்கிடெக்ட்ஸ் எனும் கட்டுமான நிறுவனத்தைச்
சேர்ந்த டேவிட் மார்க்ஸ் மற்றும் ஜூலியா பார்ஃபீல்டு எனும் தம்பதிகள் கலக்கலாக உருவாக்கியுள்ளனர்.
சூழலுக்கு கேடு விளைவிக்காத கட்டிட அமைப்பு, இயற்கையான
காற்றோட்ட அமைப்பு என கட்டும்போதே பலரின் பாராட்டுக்களைப் பெற்ற கட்டிடமான ஐ360
கடந்த வாரம் திறக்கப்பட்டது. ஆண்டிற்கு
8 லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கும் என அரசு நம்புகிறது.
கண்களால் அள்ளிப்
பருகும் அழகுக்கும் இக்காலத்தில் விலையுண்டு என்பதால் இந்த கண்காணிப்பு கோபுரத்தில்
ஏறி கடற்கரையை ரசிக்க உங்கள் பாக்கெட்டில் 15 பவுண்டுகள்(1296 ரூபாய்) தேவை. நமக்கும் லைட்ஹவுஸ்
இருக்கு பாஸ்!
நாசாவின் அதிசக்தி
வாய்ந்த எஸ்எல்எஸ் ராக்கெட்
விண்வெளியை ஆராயும்
பணியில் செயற்கைகோள்தான் முதன்மை ஹீரோ. அதனை குறிப்பிட்ட வேகத்தில் புவியீர்ப்பு
விசை தாண்டி விண்வெளிக்கு தள்ளும் ராக்கெட்டின் சக்தி இல்லையெனில் செயற்கைக்கோள் கடலில்தான்
மிதக்கும். எனவேதான் செயற்கைக் கோள்களைப்போலவே அதை விண்வெளியில்
ஏவ உதவும் ராக்கெட்டுகளையும் அக்கறையோடு தொடர்ந்து அப்டேட் செய்கிறார்கள். சுதந்திரதேவி சிலையை விட உயரமான,
உலகில் அதி சக்தி வாய்ந்த பிரமாண்ட ராக்கெட் ஒன்றை தயாரித்துள்ளது அமெரிக்காவின் நாசா. அறிவியல்
உலகெங்கும் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது பிரமாண்ட ராக்கெட்டான எஸ்எல்எஸ்தான்.
அண்மையில்(ஆக.18) ஸ்டென்னிஸ் விண்வெளி மையத்தில் எஸ்எல்எஸ்(Space Launch System) ராக்கெட்டை சோதனை செய்தபோது 7.5 நிமிடங்களில் துல்லியமாக இலக்கை
அடைந்து நாசா விஞ்ஞானிகளை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர்எஸ்
-25 எனும் எஞ்சினைப் பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டுள்ள 3வது ராக்கெட் இதுவேயாகும். பின்வரும் மாதங்களில் 3 ராக்கெட்டுகள் சோதிக்கப்பட இருக்கின்றன. எதற்கு இந்த
வேகம் என்று அப்பாவியாய் கேட்டால், 2030 ஆம் ஆண்டு செவ்வாய் கோளுக்கு
மனிதர்களை செல்ல வேண்டுமே! என அட்டகாசமான பதில் வருகிறது.
பல்லாண்டுகளாக
ஆராய்ச்சி செய்து உருவாக்கியதில் எஸ்எல்எஸ் ராக்கெட்தான் மிகவும் வலிமை வாய்ந்தது என
பெருமையுடன் தகவல் பகிர்கிறார் மிசிசிபி ஸ்டென்னிஸ் விண்வெளி மையத்தைச் சேர்ந்த வானியலாளர்
ரிக் மாஸ்ட்ராசியோ.
செவ்வாய் செல்ல
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரமாண்டமான எஸ்எல்எஸ் ராக்கெட்டில் 4 ஆர்எஸ்
எஞ்சின்களும், இரண்டு ராக்கெட் பூஸ்டர்களும் இடம்பெற்றிருக்கும்.
இதில் பயன்படுத்தப்படும் ஆர்எஸ்-25 எஞ்சின் இதற்கு
முன்பு 135 விண்வெளித்திட்டங்களுக்கு ஏறத்தாழ 30 ஆண்டுகளாக(1981-2011) பயன்பட்டு வந்த ஒன்றுதான்.
அப்புறம் எதற்கு வீணாக ஒரு டெஸ்ட் என்கிறீர்களா? ஆர்எஸ் -25 எஞ்சினுக்கும் ராக்கெட்டுக்கும் இடையிலான
தகவல் தொடர்பு சரியாக இருக்கிறதா என சோதிக்க வேண்டாமா? வரும்
இலையுதிர்காலத்திலும் இச்சோதனைகள் தொடரும். எஞ்சினில் பயன்படுத்தப்படும்
கட்டுப்பாட்டு அமைப்புகள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து சான்றிதழ் பெற்ற பின்னரே
மற்ற பணிகள் தொடரும் என பொறுப்பாக பதில் கூறுகிறார் அலபாமாவில் உள்ள மார்ஷல் விண்வெளி
மையத்தின் ராக்கெட் லிக்யூட் எஞ்சின் மேலாளரான ஸ்டீவ் வாஃபோர்டு.
புதிதானவை இவைதான்!
எஸ்எல்எஸ் ராக்கெட்டினை
மற்ற நாசாவின் ராக்கெட்டுகளோடு ஒப்பிட்டால்
அவற்றை விட இவை சற்றே வெயிட் ஜாஸ்தியாக 8.4 டன்கள் எடையுள்ளது. அதோடு இதன் உந்து சக்தியும் 8 சதவிகிதம் அதிகம்.
மற்ற ராக்கெட்டுகளில் 22 டன்கள் பொருட்களை விண்வெளிக்கு
கொண்டு செல்லலாம் எனில், எஸ்எல்எஸ் ராக்கெட்டில் 70 டன் பொருட்களை கொண்டு செல்லலாம். இதில் மேற்பகுதியில்
அமைந்துள்ள ஓரியன் எனும் விண்கலத்தில்தான் வானியலாளர்கள் செவ்வாய் கோளுக்கு செல்ல இருக்கிறார்கள்.
4 மீ உயரமும், 2.4 மீ. சுற்றளவும்
கொண்ட ஆர்எஸ்-25 எஞ்சின்கள் ஒவ்வொன்றும் 5 லட்சம் பவுண்டு எடையிலான உந்துவிசை வலிமை வாய்ந்தவை. இதில் எரிபொருளாக திரவ ஹைட்ரஜன்(LH2), திரவ ஆக்சிஜன்(LOX)
பயன்படுத்தப்பட்டுள்ளது. எஸ்எல்எஸ் ராக்கெட்டுகள்
109 சதவிகித ஆற்றலை வெளியிடுவதோடு, விண்ணில் பாயும்
போது 6000 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உருவாக்குகிறது எனும்போதே
இதன் சக்தியை அறிந்திருப்பீர்கள். பார்த்துக்கொள்ளுங்கள். மனிதர்கள் இல்லாமல் விண்கல சோதனை
2018 செப்டம்பர், அன்றும், எஸ்எல்எஸ்-2 சோதனை 2021 (அ)
2023 ஆம் ஆண்டு தொடங்கும் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த ராக்கெட் கண்டுபிடிப்பு,
நாசாவுக்கு மட்டுமல்லாது வணிகரீதியில் இயங்கும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும்
போயிங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் எதிர்காலத்தில் உதவக்கூடியதாக மாறலாம். செவ்வாயும் இனி பக்கம்தான்!
ஆஸ்திரேலியாவில்
கர்ஜித்த மைக்ரோலயன்
பிடரிமுடி சிலிர்க்கும்
பாயும் சிங்கத்தை மினிமலிசமாக அணில் போன்ற
உருவத்தில் பார்த்தால் அதை சிங்கம் என்று ஒப்புக்கொள்வீர்களா? ஆனால்
ஆதாரத்தோடு அடித்து பேசினால் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்! ஆஸ்திரேலியாவின்
க்வின்ஸ்லாந்தில் உள்ள வடமேற்குப்பகுதியான ரிவர்ஸ்லெய்(யுனெஸ்கோ
தொன்மையான இடம்(1994)) எனும் இடத்தில் மைக்ரோலயன் எனும் உயிரியின்
தொல் படிமங்களை ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
பரிணாம வளர்ச்சியில்
மாற்றம் ஏற்பட்டு நாம் மனிதர்களாக உருவானது மற்ற உயிர்களுக்கும் பொருந்தும். எனவேதான்
600கிராம் கொண்ட இந்த உயிரியை சிங்கத்தின் மைக்ரோ உருவமாக மைக்ரோ லயன்
என்று அழைக்கிறார்கள்.
சிறிய துறுதுறு
விலங்கான மைக்ரோலயன்
18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மரத்தில் வாழ்ந்திருக்கக்கூடும் என
ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். தங்களது கண்டுபிடிப்புக்கு
மைக்ரோலியோ அட்டன்பாரோகி என பெயர் சூட்டியுள்ளனர். சரி யார் இந்த
அட்டன்பாரோ?
1926, மே
8 அன்று இங்கிலாந்தின் லண்டனில் பிறந்த பொருளாதாரம் கற்ற டேவிட் அட்டன்பாரோ
சூழலியலில் ஆர்வம் கொண்டவர். பிபிசி தொலைக்காட்சியில் ஜூ க்விஸ்ட்,
தி லைஃப் ஆன் எர்த் எனும் இரு தொடர்களை தயாரித்து இயக்கி புகழ்பெற்றவர்.
நவீன இயற்கை வரலாறு ஆவணங்களின் தந்தை என அழைக்கப்படுபவர். அதற்கேற்ப இயற்கை தொடர்பான தொடர்களை எழுதி, தயாரித்து
இயக்குவது என தன்னை இயற்கை சூழல் பணிகளுக்கு அர்ப்பணித்துக்கொண்டவர் எனலாம்.
மேற்கூறிய காரணங்களுக்காகவே ஆய்வாளர்கள் தமது கண்டுபிடிப்புக்கு அட்டன்பாரோவின்
பெயரை வைத்து தமது வழிகாட்டிக்கு மரியாதையைக் காட்டி நெகிழ்ந்துள்ளனர்.
மைக்ரோலயனின் பற்கள், மண்டையோடு
உள்ளிட்ட படிமங்களின் மூலம் அது சிங்கத்தின் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும்
பூனைக்குட்டி போன்ற உருவத்தில் இருந்திருக்கிறது என்று விளக்குகிறார் நியூ சவுத் வேல்ஸ்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அன்னா கில்லெஸ்பி.
மியோசென் மழைக்காடுகளில்
மைக்ரோலயனில் இரு வகை விலங்குகள் வாழ்ந்துள்ளன. ஒன்று பூனை அளவிலும், மற்றொன்று நாய் அளவிலும் இருப்பதால் இரண்டின் இரை உண்ணும் பழக்கங்களும் வேறுபட்டவையாக
இருக்கலாம். மரங்களின் மேலே வாழும் மைக்ரோலயன் பல்லிகள்,
பூச்சிகள், சிறு பறவைகளை பிடித்து உண்டு வாழ்ந்து
வந்திருக்கலாம். நத்தை உண்ணும் விலங்கு, பிரமாண்ட கோலா கரடிகள், பிளாடிபஸ் எனும் விலங்கு,
பழைமையான விந்து படிமம் உள்ளிட்டவை
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மைக்ரோலியோ 600கி, பிரிசிலியோ
2கி.கி, வாகாலியோ
30 கி.கி., தைலாகோலியோ
130 கி.கி என உருவம் மற்றும் எடை அடிப்படையில சிங்கத்தின்
குடும்பம் வகைப்படுத்தப்பட்டுள்ளது என விரிவாக பொறுமையாக விளக்குகிறார் ஆராய்ச்சியாளர்
அன்னா கில்லெஸ்பி
தொடர்ந்து செய்யப்படும்
ஆராய்ச்சியில் கிடைக்கும் ஆதாரங்களின் மூலம் மைக்ரோலயனின் பழக்கவழக்கங்கள் குறித்த
துல்லியமாக அறிய முடியும் என்கிறார் ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்தவரான மைக் ஆர்ச்சர். தொடரும்
ஆராய்ச்சியில் மேலும் புதிதாய் கிடைக்கும் படிமங்கள் பல்வேறு உயிரிகளை நமக்கு அறிமுகப்படுத்தி
வரலாறை அறியவைக்கலாம். மரத்திற்கு வேர் எவ்வளவு முக்கியமோ எந்தவொரு
இனத்திற்கும் வரலாறு அவசியம்தானே!
விபத்தில் சிக்கி உடல் பாகங்களில் எதில் அடிபட்டாலும் மூளை மரணம்(Coma)
அடையவில்லை
எனில் அவருக்கு சிகிச்சையளித்து காப்பாற்றி விட முடியும்.
உலகெங்கும் உறுப்புகள் தானமளிப்பது பரவலாகி வரும்நிலையில்
மூளை மரணம் என்பது இன்று எங்கும் பேசப்படும் ஒரு சொல்லாக மாறியுள்ளது. மூளைமரணம் ஏற்பட்ட நிலையில் நோயாளி இருந்தாலும் அவர்களை மீயொலி மூலம் மீட்கலாம் என்ற நம்பிக்கை விதையை மனதில் ஊன்றியுள்ளார் கலிஃபோர்னியா லாஸ்ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின்(UCLA) உளவியல் மற்றும் நரம்பியல் துணைப்பேராசிரியரான மரு. மார்டின் எம். மாண்டி.
இதில் பயன்படுத்தப்படும் மீயொலி என்பது புதிதான ஒன்றல்ல.
மீயொலி என்பது 20 ஆயிரம் ஹெர்ட்ஸ்க்கும் மேற்பட்ட அதிர்வெண்ணை கொண்டது.
இதனை நாய், டால்பின், வௌவால் உள்ளிட்டவை உணர்ந்துகொள்ளமுடியும். இதனை வேதியியல் உட்பட பல்வேறு துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த மீயொலிகளை பயன்படுத்தி மூளை மரணம் அடைந்தவரின் தாலமஸ் எனும் மத்திய செயல்பாட்டு பகுதியைத் தூண்டி அவர்களை உணர்வுகளை ஏற்படுத்த முடியும் என தனது அநாயசமான கண்டிபிடிப்பு குறித்து ஆழமாக பேசுகிறார் மாண்டி. இந்த மீயொலிகள் இல்லாவிடில் நேரடியாக தாலமஸ் பகுதியில் எலக்ட்ரோடுகளைப் பொருத்தி அதன் மூலம் நியூரான்களை தூண்டவேண்டிய நிர்பந்தம் இருக்கும்.
தோலினுள் எதையும் செலுத்தாமல் நாங்கள் இதனை சாதித்திருக்கிறோம். தற்போது வெற்றி கிடைத்தாலும் இன்னும் பல்வேறு நோயாளிகளுக்கு இதனை சோதனை செய்யும் தேவை இருக்கிறது என
விரிவாக விளக்கிப் பேசுகிறார் மரு. மாண்டி. உலகிலேயே மிகவும் ஆபத்தான மூளை சிதைவுகளுக்கு இந்த மருத்துவ முறை பயன்பட்டிருக்கிறது என்பது இதன் தனிச்சிறப்பு. இந்த சோதனைக்கு தேவையான கருவிகளை பிரெய்ன்சோனிக்ஸ் எனும் நிறுவனத்தின் தலைவரும்,
யுசிஎல்ஏவின் உளவியல் மற்றும் உயிரியல்நடத்தை அறிவியல் துறையின் பேராசிரியரான அலெக்சாண்டர் பைசிட்ரிஸ்கி உருவாக்கி தந்ததோடு இந்த ஆராய்ச்சியிலும் பங்கு கொண்டிருக்கிறார்.
சிறிய காஃபி கப் அளவு இருக்கும் இந்த கருவி மூளையில் குறிப்பிட்ட செறிவான அளவில்
30 நிமிடங்களுக்கு மீயொலியை உருவாக்கி மூளையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுயநினைவு சிகிச்சைக்கு சிறிய அளவிலான பதிலை வெளிப்படுத்தும் தன்மை நோயாளிகளுக்கு இருத்தல் அவசியம்.
சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களில் ஆமாம் இல்லை என்று கூறுமளவு நோயாளி தேறியது இக்கருவியின் திறனுக்கு சாட்சி. மூளையில் உள்ள தாலமஸ் பகுதியில் மனநிலை குறித்த பல்வேறு செயல்பாடுகள் நடைபெறுவதால், அதனை தூண்டுவதன் மூலமே அவரை சுய உணர்வு நிலைக்கு கொண்டுவர முடியும்.
மீயொலி கருவி விலை குறைவானது என்பதோடு இதனை ஹெல்மெட் போன்ற ஒன்றில் பொருத்தி சிறிது சுயநினைவு இருக்கும் ஒருவரையும் காப்பாற்றி விட முடியும் என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைவரும், நரம்பியல் பேராசிரியரான பால் வெஸ்பா.
மீயொலி வௌவால் இரை தேட என்று நினைத்தால் மனிதர்களையும் எழுப்புகிறதே!
ஆன்டி பாக்டீரியா
சோப்புகளுக்கு அமெரிக்கா விதித்த தடை
கைகழுவுவது பற்றி
நமது அம்மாக்களுக்கு அக்கறை இருக்கிறதோ இல்லையோ ஜெர்ம்ஸ் வந்துடும், பாக்டீரியா
குட்டி போட்டுடும் என சோப்பு வியாபாரிகளின் ஓயாத விளம்பரக் கூக்குரல்கள் கார்டூன் சேனல்களிலிருந்து
கனவுகள் வரை விடாமல் நம்மை உசேன் போல்டாய் துரத்தி வருகின்றன. அண்மையில் அமெரிக்க அரசு ஆன்டி பாக்டீரியா சோப்புகளை தடை செய்திருக்கிறது.
எதற்கு இந்த தடை என விரிவாக எக்ஸ்ரே ரிப்போர்ட் இதோ...
பல லட்சம் செலவு
செய்து கிருமிகளை எங்கள் சோப் 100 சதவிகிதம் அழிக்கிறது என்று பன்னாட்டு சோப்பு
நிறுவனங்கள் தொண்டை வறளக் கூவினாலும் ட்ரைக்ளோசென் கலந்த சோப்புகள் உண்மையில் கிருமிகளை
அழிக்கிறது என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த
144 தடை முடிவு. மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட
19 வேதிச்சேர்மானங்களுக்கும் நோ சொல்லியிருக்கிறது அமெரிக்காவின்
உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான எஃப்டிஏ(FDA).
சாதாரண சோப்புகளைக்
காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு கிருமிகளை பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அழிக்கின்றன
என்பதற்கு எவ்வித ஆதாரமும் இதுவரை இல்லை என்பதனால்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என
சிம்பிளாக தங்களது முடிவு குறித்து கூறுகிறார் எஃப்டிஏவின் மருந்து ஆராய்ச்சி பிரிவின்
இயக்குநரான ஜேனட் வுட்காக்.
பொதுவாக இந்த கைகழுவும்
சோப்புகளில் காணப்படும் முக்கியமான வேதிப்பொருள் ட்ரைக்ளோசன் ஆகும். முதலில் மருத்துவர்கள் கைகழுவப் பயன்பட்டு
வந்த பொருளான ட்ரைக்ளோசன் 1960 முதல் உலகெங்கும் பாக்டீரியா,
பூஞ்சை உள்ளிட்டவற்றுக்கு எதிராக பற்பசை, சோப்பு,
சலவை சோப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றில்
உள்ளே நுழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1997 ஆம் ஆண்டு
முன்னணி பற்பசை நிறுவனத்திற்கு எஃப்டிஏ, சோதனையில் பயன்கள் மற்றும்
ஆபத்து அடிப்படையில் ட்ரைக்ளோசன் வேதிப்பொருளை பற்பசையில் பயன்படுத்த அனுமதி கொடுத்தது.
தற்போது ட்ரைக்ளோசன் இல்லாத பொருட்களே உலகில் இல்லை என்ற நிலையில் அது
திடீரென தடை செய்யப்பட்டுள்ளது உடனடி கவனம் காரணம் இருக்கிறது.
ட்ரைக்ளோசன் மற்றும்
ப்ளூரைடு பற்பசை பற்சிதைவு உள்ளிட்டவற்றை பெருமளவு குறைப்பதாக நிறுவனங்கள் கூறினாலும், குழந்தைகளின்
ஹார்மோன்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி தசைச்சிதைவுகளை ஏற்படுத்துகிறது எனவும் அறிவியல்
ஆய்வு முடிவுகள் தீர்மானகரமாக தகவல் தெரிவிக்கின்றன என தீர்க்கமாக பார்வையோடு உரையாடுகிறார்
இயற்கை வளங்கள் பாதுகாப்பு கழகத்தின் மூத்த வழக்கறிஞரான மா வூ. இவர்தான் இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை தடை செய்ய எஃப்டிஏவிடம்
முறையிட்டவர்.
தடை அறிவிக்கப்பட்டுவிட்டால்
வியாபாரத்தை நிறுத்திவிட முடியுமா என்ன? தொடை தட்டிக்கொண்டு களமிறங்கிய
நிறுவனங்கள் உடனடியாக ட்ரைக்ளோசனுக்கு மாற்றாக மூன்று பொருட்களை(பென்ஜால்கோனியம் குளோரைடு, பென்ஸெத்தோனியம் குளோரைடு,
குளோரோசைலெனோல்) உடனடியாக தம் பொருட்களில் சேர்த்து
சந்தைக்கு அனுப்பிவிட்டனர். எஃப்டிஏ அறிவித்த தடை என்பது ஒரு
ஆண்டில் முழுமையாக அமலுக்கு வரும். மேலும் இந்த தடை நுகர்வோர்
பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மருத்துவமனையில் கைகழுவ பயன்படுத்தும் சோப்புகளுக்கு பொருந்தாது.
தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மட்டுமே நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்
பொருட்கள் எவை என அடையாளம் காட்டும். கருணையில்லாத வணிக சுழலில்
இருந்து நம்மை காக்க பகுத்தறிவு அவசியமும் அவசரமும் கூடத்தான்.
கோடை காலத்தை குளிர்காலமாக்கும்
நானோபோரஸ் உடை
வேலை, படிப்பு
இதெல்லாம் தாண்டி நல்ல உடை தரும் தன்னம்பிக்கையை யாரும் தரவே முடியாது. அந்த உடை வெறும் அழகு என்பதைத்தாண்டி உடலின் வியர்வையை உறிஞ்சி காற்றோட்டமாக
உடலை கூலாக மினி ஏசி போட்டதுபோல வைத்திருந்தால் எப்படியிருக்கும்? சூப்பர்தானே! பருத்தியை விட உடலை ஜிலுஜிலுவென வைத்திருக்கும்
புதிய செயற்கை இழை ஒன்றை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நாம் வெயிலில் வாடாமல்
வசதியாக வாழ கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நானோபோரஸ் பாலிஎத்திலின்(nanoPE) என்பதுதான் ஆராய்ச்சியாளர்கள் மூளையில் வியர்வை சுரக்க கண்டுபிடித்த அந்த
செயற்கை இழை. பல்வேறு செயற்கை இழைகள் உடைகளில் பயன்படுத்தப்பட்டாலும்
நானோபோரஸ் மாறுபடுவது
உடலிலிருந்து வெளியேறும் அகச்சிவப்புக் கதிர்களை தடுக்காதவண்ணம் காக்கின்ற தன்மையில்தான்
நம் மனங்களை கொள்ளையடிக்கிறது. இந்த வேறுபாட்டில் பருத்தி இழை துணிகளை விட
டாப்பாக சோதனையில் தேறி நம்பிக்கை அளித்திருக்கிறது.
சுற்றுப்புறத்தில் ஏற்படும் வெப்பநிலை
மாறுபாடுகளை சமாளித்து உடலை குளிர்வடைய செய்ய நமது உடல் மேற்கொள்ளும் செயல்பாடுதான்
வியர்வை. மூன்று அடுக்குகளாக உருவாக்கப்பட்டஇந்த செயற்கை இழை
துணியில் பாலிஎத்திலின் இரண்டு அடுக்குகளும், ஒரு அடுக்கில் பருத்தி
இழைகள் அதன் அமைப்பிற்காக சிறிது சேர்க்கப்பட்டுள்ள இந்த உடையானது, உடல் வெப்பநிலையை 1.4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கிறது.
இதோடு ஒப்பிடும்போது பருத்தியிழையானது 6 டிகிரி
செல்சியஸ் வெப்பநிலையை அதிகரிக்கிறது. பிளாஸ்டிக் இழை என்றாலும்
இதிலுள்ள நுண்துளைகள் மூலமாக வியர்வை வேகமாக ஆவியாக்கப்படுகிறது. மேலும் உடல் வெளிப்படுத்தும் அகச்சிவப்பு கதிர்களையும் நானோபோபிரஸ் உடை எளிதில்
வெளியே தள்ளிவிடுவதால் உடல் விரைவாக குளிர்வடைகிறது. இதனால் குளிர்சாதன
வசதிக்கான செலவு குறைகிறது. மேலும் இந்த உடையை தயாரிப்பதற்கான
செலவும் மிக குறைவு என்பது மக்கள் இதனைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும்
என்கிறார் இந்த நானோபோபிரஸ் இழை ஸ்டான்ஃபோர்டு
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் யூ க்யூ.
முதலில் பருத்தி
இழையினை குளிர்காலத்தில் பயன்படுத்தியபோது வெப்பத்தை தக்க வைத்தாலும் கோடையில் வெப்பம்
அதிகரிப்பதை பருத்தியிழை தடுக்கவில்லை. அப்போது பேட்டரியில் பயன்படுத்தப்படும்
பாலிஎத்திலினின் தன்மையை அறிந்து அதனைப் பயன்படுத்த ஆர்வம் உண்டானது. மற்ற துணிவகைகளை விட மென்மையானதும், வளையக்கூடியதுமான
இந்த இழையில் பருத்தியின் நெசவு நயம் மட்டும் இருக்காது. பல்வேறு
இழைகளோடு இணைத்து இதனை நாங்கள் சோதித்து வருகிறோம். இன்னும் சில
ஆண்டுகளில் இதனை வணிகரீதியில் சந்தைப்படுத்துவோம் என நம்பிக்கையோடு சொல்லி விடைதருகிறார்
ஆராய்ச்சியாளர் யூ க்யூ. மரம் வளர்ப்பது தொலைநோக்கில் நன்மை தருவது
என்றாலும் இதுபோன்ற முயற்சிகள் அதுவரை வெயிலின் கடுமையிலிருந்து காப்பாற்றக்கூடும்.
பாக்டீரியாவை உடலில்
செலுத்திய விஞ்ஞானி
அதிக நாட்கள் வாழவேண்டும்
என்கிற இயற்கையை மீறும் ஆசை மற்ற உயிரிகளைவிட மனிதனுக்கு அதிகம். எனவேதான்,
வாழும் காலத்தில் வீரியம் தரும் தங்க பஸ்பம், சிட்டுக்குருவி
லேகியம் என கடைசியாக வந்து நிற்பது அதிக வாழ்நாள் தரும் சஞ்சீவி மூலிகை (அ) மருந்தாகவே இருக்கும். உலகம்
முழுக்கவே அப்படித்தான் என ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் அதிக நாட்கள் வாழ பாக்டீரியாவை தன்னுடலில்
செலுத்தி அதை உலகத்திற்கும் நிரூபித்துவிட்டார்.
மாஸ்கோவின் ஸ்டேட்
பல்கலைக்கழகத்தில் உறைந்த பாறைகள் மண் குறித்த ஜியோக்ரையாலஜி பிரிவின் தலைவராக பணிபுரியும்
அனடோலி ப்ரௌச்கோவ் எனும் ஆராய்ச்சியாளர்தான் 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான
பாக்டீரியாவை தன் உடலில் செலுத்தி சோதித்துள்ளார். எதற்கு?
வாழ்நாளை அதிகரித்து வாழ்வாங்கு வாழத்தான். பாக்டீரியா
தன்னை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகவும், உடல் தற்போது சோர்வுறுவதில்லை
என்றும் நம் தலையில் அடித்து சத்தியம் வேறு செய்கிறார். 2009 ஆம் ஆண்டு சைபீரியன் யாகுட்ஸ் பகுதியில் உள்ள மம்மூத் மலைப்பகுதியில் உறைந்த
பனிக்கட்டிகள் உள்ள இடத்தில்தான் தொன்மையான பாக்டீரியாவான பேசில்லஸ் எஃப் எனும் நுண்ணுயிரியை
பெற்றிருக்கிறார் ப்ரௌச்கோவ். பாக்டீரியாவை தன்னுடலில் செலுத்திக்கொள்ள காரணம்
என்னவென்று கேட்டபோது, பேசில்லஸ் எஃப் பாக்டீரியா இவ்வளவு காலம்
அங்கு உயிரோடு இருந்தது அந்த இடத்தின் தன்மையும், பாக்டீரியத்தின்
திறனும்தான் காரணம் என்பதை உணர்ந்தேன். எனவே அதனை எலி,
பழ ஈ இரண்டிலும் செலுத்தி சோதித்தபோது பாசிட்டிவான முடிவுகளே வந்தன என்று
காரணம் சொல்லி புன்னகைக்கிறார் ஆராய்ச்சியாளர் ப்ரௌச்கோவ்.
இந்த பாக்டீரியாவை
இவர் மட்டும்தான் கண்டுபிடித்தார் என்று கூற முடியாது. முன்னர்
வாழ்ந்த மிகப்பெரிய யானையான மம்மூத் எனும்
இறந்துபோன யானையின் மூளையிலிருந்து பேசில்லஸ் எஃப் பாக்டீரியாவை சைபீரிய ஆராய்ச்சியாளர்
விளாதிமிர் ரெபின் என்பவரும் கூட உறைந்த நிலையில் கண்டறிந்துள்ளார்.
நான் பாக்டீரியாவை
உடலில் செலுத்திக்கொண்டதால் இரண்டு ஆண்டுகளாக ப்ளூ காய்ச்சலே என்னிடம் எட்டிப்பார்க்கவில்லை. ஆஸ்பிரின்
மாத்திரையை நாம் பயன்படுத்துகிறோம் அது பலன் தருகிறது. ஆனால்
அது எப்படி செயல்பட்டு பலன் தருகிறது என்பதை நாம் அறிவதில்லை அதுபோலவே இந்த பாக்டீரியாவின்
இயக்கம் குறித்து எனக்கு தெரியாது என்றாலும் அதன் விளைவுகளை அறிய முடிகிறது.
பாக்டீரியா இத்தனை ஆண்டுகளாக உயிர் வாழ்ந்ததை கண்டுபிடிக்க முடிந்தால்
அதன் மூலம் மனிதர்களும் அதிக காலம் வாழலாம் புதிரான உண்மைகளை படபடவென சொல்லிவிட்டு
சிரிக்கிறார் பேராசிரியர் மரு.அனடோலி ப்ரௌச்காவ்.
இதன் உடலில் உள்ள
புரோட்டின் அமைப்புகளை ஆராய்ந்து ஜீன்களை அழியாமல் காப்பது எதுவென ஆராய்ந்தால் மனிதர்களை
அழியாமல் காப்பது குறித்த பல உண்மைகள் தெரியும். அதோடு அதன் நோய் எதிர்ப்புத்
தன்மையை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் நாம் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்
என்கிறார் மரு.ப்ரௌச்கோவ் ரிசர்ச்செல்லாம் ஓகே. ஆனால் தன்னையே எலியாக்கி உண்மையை கண்டுபிடிக்கும்
டெக்னிக்தான் சற்று பீதி தருகிறது.
நன்றி:
-ச.அன்பரசு, அக்நெடான் பியர்சன்