ஜாலி பிட்ஸ் -ரோனி ப்ரௌன்
ஆசிட் பாட்டிலோடு
ரக்ஷாபந்தன்!
டெல்லியின் வணிகப்பகுதியான
கன்னாட் பிளேஸ்.
குண்டூசி டூ ஃபிட்ஜெட்ரன்னர்வரை கிடைக்கும் அக்கட்டிடத்தின் பி பிளாக்கில்
முகத்தை மறைத்து கூனிக்குறுகி ரிதுராய் அமர்ந்திருக்கிறார். தன்
சகோதரியின் பிரேஸ்லெட் கடையை அவரின் பிள்ளைகளோடு சேர்ந்து கவனித்துக்கொள்ளும் ரிதுராய்,
கடைக்கு வருபவர்கள், தனக்கு உதவியவர்களின் கைபிடித்து
மலர்ச்சியோடு ரக்ஷாபந்தன் கயிறு கட்டியபடி இருக்கிறார். அவரின்
கை அன்றும் வெறுமையாகவே இருக்கிறது.
இன்று ஆதரவற்று
அமர்ந்திருக்கும் ரிதுராய்க்கும் முன்பு கணவன் இரு பிள்ளைகள் என குடும்பம் இருந்தது. 19 வயதில்
பாலுறவுக்கு மறுத்ததால் கோபத்தில் ஒருவன் வீசிய ஆசிட்டால், முகம்
மட்டும் உருகி குலையவில்லை; அவரின் வாழ்வும்தான். முதலில் குடும்பம் கைவிட்டது, அலங்கோல முகத்தால் எங்கு
வேலை கிடைக்கும்? பிறகு தன் சகோதரியின் கருணையால் கிடைத்ததுதான்
கன்னாட் பிளேசின் பிரேஸ்லெட் வியாபாரம். கடந்த ஆண்டுகளைவிட ஆசிட்
தாக்குதல் அளவு 300% அதிகரித்துள்ளது. 2004 இல் 27 ஆக இருந்த எண்ணிக்கை 2014 இல் 309 ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம்
ஆசிட்தாக்குதல்களில்(185) முதலிடம் வகிக்கிறது என தகவல் கூறுகிறது
தேசிய குற்றப்பதிவு ஆணையம்.
கொல்கத்தாவில்
திருநங்கை டாய்லெட்!
ரேஷன்கார்டு, மண்ணெண்ணெய்,
செத்தவர்களை எரிக்கவும் ஆதார் என தினமும் வைவோல்டேஜ் பதட்டத்தை தாங்கி
வாழும் இந்தியர்களிலிருந்து சோபன் முகர்ஜி மாறுபடுவது, ஒடுக்கப்படும்
திருநங்கைகளைப் பற்றிய அளவில்லாத அக்கறையினால்தான். அப்படி அவர்
சாதித்தது என்ன?
கொல்கத்தாவைச்
சேர்ந்த இளைஞரான சோபன் முகர்ஜி, திருநங்கைகளுக்கான 4 டாய்லெட்டுகளை
உருவாக்கித் தந்திருக்கிறார். அதற்குத்தான் அவருக்கு மேற்குவங்க
திருநங்கை வாரியத்தின் ரஞ்சித் சின்கா உட்பட பாராட்டுகளை அள்ளித்தெளிக்கின்றனர்.
கொல்கத்தாவின் பன்ஸ்த்ரோனி பகுதியில் நான்கு டாய்லெட்டுகளை திருநங்கைகளுக்கென
ஸபெஷலாக அமைத்திருக்கின்றனர். "கல்லூரி சென்றுவந்தபோது திருநங்கைகள்
கழிவறையை பயன்படுத்த முடியாத அவலத்தை பார்த்தேன். அதற்கு ஏதாவது
செய்யலாம் என்று எனது ஐடியாவை கவுன்சிலர் மஜூம்தாரிடம் சொன்னேன் அவரும் புரிந்துகொண்டு
டாய்லெட்டுகளை உருவாக்கி தந்தது மகிழ்ச்சி" என புன்னகைக்கிறார்
சோபன் முகர்ஜி. மாற்றத்தின் தலைவன்!
டிவியில் லைவ்
பன்ச்!
ஸ்டூடியோவுக்குள்
சண்டைகள் நடந்தால் நாசுக்காக தப்பித்து விடலாம். முக்கியமாக யாருக்கும் தெரியாது.
ஆனால் லைவாக சனியன் சகடைகள் தேடிவந்து முகத்திலே குத்தினால் என்ன செய்வது?
ரஷ்ய ரிப்போர்டருக்கும் நிகழ்ந்தது இதேதான்.
ரஷ்யாவின் புகழ்பெற்ற
நேஷ்னல் என்டிவியின் லைவ் நிகழ்ச்சி அது. லைவில் டிவியின் செய்தியாளர் ராணுவ
அணிவகுப்பு குறித்த செய்தியை ஆதி முதல் அந்தம் வரை பிய்த்து உதறி பேசிக்கொண்டிருந்தபோதுதான்
நடந்தது அந்த விபரீதம். திடீரென டிவி பிரேமுக்குள் மூர்க்கமாக
நுழைந்த குடிபோதை மனிதர், 'நாங்கள் உக்ரைனை எடுத்துக்கொள்வோம்'
என்று கோஷமிட்டவரை "ஏய் சும்மாயிரு,
அப்படியெல்லாம் பேசக்கூடாது" என்று தம்பி
மாதவனாய் மாறி பதறி தடுத்தார் செய்தியாளர். கேட்பாரா அவர்?
"நீ சொல்லி நான் கேட்கணுமா? அதெப்படி என்னை
அப்படி சொல்லலாம்?" என லைவிலேயே செய்தியாளரை ஆக்ஷன் கிங்காக
மாறி முகத்திலேயே குத்தியதில் அலறிவிட்டார் செய்தியாளர். கேமரா அனைத்தையும் டிஆர்பி மேட்டராக
மாற்றியது சமர்த்து என்றாலும் நியூஸ் வாசிக்கும் நிகிதா முகத்தில் நிமிஷ நேரத்தில்
வந்து போனது மரணபீதி. ஜஸ்ட் சில் பாஸ்!
அன்று வீக் மாணவர்
இன்று எஞ்சினியரிங் வின்னர்!
எஞ்சினியரிங் என்பது
ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை படிப்பாகிவிட்டது. பெற்றோர்களின் நச்சரிப்பு தாங்காமல்
4 வருஷம் படித்தாலும் கேம்பஸ் வேலையெல்லாம் அரியர் கிளியர் செய்தால்தானே
கிடைக்கும்? வீக் மாணவன் என்ற ஆசிரியர்கள் கார்னர் செய்த குஜராத்
சிறுவன் அவர்களின் ஒப்பீனியன்களை தூளாக்கி ஃபாஸ்ட் ட்ராக்கில் எஞ்சினியராகியிருக்கிறான்.
எப்படி?
குஜராத்தின் ஜாம்நகரைச்
சேர்ந்த
15 வயது நிர்பய் தாக்கூர், குஜராத் டெக்னாலஜி யுனிவர்சிட்டியில்
புல்லட் ட்ரெயின் வேகத்தில் எஞ்சினியரிங் முடித்ததுதான் சூப்பர் பரபர நியூஸ்.
சிறுவயதில் வீக் மாணவர் என டீச்சர்களால் கிண்டல் செய்யப்பட்ட நிர்பய்
தாக்கூர், 8-10 வகுப்பை ஆறு மாதத்திலும், 11-12 ஆம் வகுப்பை வெறும் மூன்றே மாதத்தில் ஓவர்டேக் செய்தது முந்தைய அசுர சாதனை.IGCSE
சிலபஸ் முறையில் நிர்பய் தாக்கூர் இந்த அசத்தல் சாதனையை படைத்துள்ளார்.
தினமும் 9 மணிநேரம் வகுப்புகள் நடத்தப்பட்டு செய்த
ஸ்பெஷல் சாதனை இது. அடுத்து பத்து எஞ்சினியரிங் டிகிரிகள் முடிப்பது
நிர்பய் தாக்கூரின் லட்சியமாம். ஸ்டூடண்ட் நம்பர் 1!
காரில் கடத்தப்பட்ட
லேம்ப்போஸ்ட்!
போதையின் ஹேங்ஓவரில்
அடுத்தவீட்டின் கதவைத்தட்டுவது, தெருவில் நாயை கட்டிப்பிடித்து ஜீவகாருண்ய தூக்கம்
போடுவது என குடிமகன்களின் அட்டகாசம் ஒருவகை என்றால் மேல்நாட்டு குடிமகன்கள் போதையின்
ஹேங்ஓவரில் செய்வது எல்லாமே பெயில் கிடைக்காமல் ஜெயில் செல்லும் ரூட்டுதான்.
நெதர்லாந்தின்
லெலிஸ்டாட் போலீஸ் செக்போஸ்டில் எதார்த்தமாக அந்த காரை கவனித்தபோதுதான் ஷாக்கானார்கள். பின்னே கூரையில் இரண்டு லேம்ப்போஸ்ட்களை நீட்டியவாறு கார்
வந்தால் பதறமாட்டார்களா? மனதை ஸ்ட்ராங்காக்கிக் கொண்டு காரை கைபோட்டு
நிறுத்தி லிஸ்ட்படி, லைசென்ஸ், ஆர்சிபுக்
கேட்டனர். குளறி பதில் சொன்னவர் என்ன சொல்கிறார் என போலீசாருக்கு
புரிவதற்குள் போதையில் தள்ளாடி சரிந்த மனிதருக்கு ஆல்கஹால் டெஸ்ட் சோதனைக்கூட ஒத்துழைக்கவில்லை. விலையின்றி பெட்ரோல் போட்டது,
விளக்குகம்பம் திருடியது என விதிமீறல்களை கடமை தவறாமல் விறைப்பாக பதிவு செய்த
போலீசார், தற்போது அந்த போதை மனிதரை கஸ்டடியில் தூங்க வைத்து,
காரோடு விளக்குகம்பத்தையும் காவல் காத்து வருகின்றனர். இன்டர்நேஷ்னல் போலீஸ்!
ஆஸ்திரேலியாவின் ஜி டாக்ஸ்!
இந்தியாவில் அமலான
ஜிஎஸ்டியை சமாளிக்க ஹோட்டல், மெஸ்களில் ஏற்றிய விலை உயர்வே இன்னும் புரியாமல்
நமக்கு கண்ணைக்கட்டுகிறது. இதில் ஆஸ்திரேலியாவில் போடும் ஜி டேக்ஸ்
பற்றி நமக்கென்ன? மேட்டரே அதுதான்.
ஆஸ்திரேலியாவின்
மெல்பர்னிலுள்ள ஹேண்ட்ஸம் ஹெர் கஃபேயில்தான் ஜி டாக்ஸ் அமுலாகியுள்ளது. இதில்
என்ன ஸ்பெஷல்? கஃபேவுக்கு வரும் ஆண்கள் மட்டும் 18% ஜிடேக்ஸை பில்லோடு சேர்த்து கட்டவேண்டும். எதற்கு ஆண்கள்
மட்டும்? பெண்களுக்கு ஆண்களை விட சம்பளம் குறைவு என்பதால் அதை
ஈடுகட்டவே ஜிடேக்ஸ் அதாவது பாலின வரி. ஜிடேக்ஸ் பணத்தை பெண்கள்
அமைப்புக்கு கஃபே நன்கொடை அளித்துவிடுமாம். ஹேண்ட்ஸம் ஹெர் கஃபே
ஜி டாக்ஸ் வரியினாலேயே உலகெங்கும் செம ஃபேமஸாகிவிட்டது. வாங்கவேண்டிய
வரி!
ஆபீசுக்கு போக
ஆறுதான் ரூட்!
ட்ராஃபிக்கினால்
ஒரு மனிதர் இப்படியெல்லாம் விரக்தி அடைவாரா என்று ஊர் உலகத்தில் அனைவருமே அப்படியொரு
ஆச்சர்யம். பெஞ்சமின் டேவிட்டின் ஐக்யூவின் கதை
அப்படி ப்ரோ!
ஜெர்மனியின் ம்யூனிச்
நகரைச் சேர்ந்த பெஞ்சமின் டேவிட்டுக்கு தினசரி ட்ராஃபிக் கடும் எரிச்சலை தர, என்ன செய்வது
என அலாரம் செட் பண்ணி யோசித்தார். அடுத்தநாள், ஆபீஸ் செல்லும் ரூட்டில் உள்ள ஐசர் என்ற
ஆற்றில் எட்டிக்குதித்துவிட்டார். யெஸ். சட்டை, போன், பர்ஸை வாட்டர்ப்ரூப் பேக்கில் கழற்றி தோளில் மாட்டிக்கொண்டு
நிக்கரோடு நீந்தி ஆபீஸ் சேர்ந்திருக்கிறார் பெஞ்சமின். ஒன்றல்ல
இரண்டல்ல முழுதாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இதே ரூட்டில் 2 கி.மீ முங்கு நீச்சல் போட்டு ஆபீஸ் சென்றுகொண்டிருக்கிறார் இந்த புதிய பாதை மனிதர்.
ஏன் பாஸ் இப்படி என்றால், 'சாலையை விட ஆறு புத்துணர்ச்சியாக
இருக்கு' என புதிர்பதில் தருகிறார் பெஞ்சமின்.