இந்தியாவின் அசாதாரண மனிதர்கள்!- ச.அன்பரசு



இந்தியாவின் அசாதாரண மனிதர்கள்!- .அன்பரசு



கல்வி தரும் ஒளிவிளக்கு! -ரமேஷ் ஹரி ஹரால்கர்

மும்பையின் பரேல் மற்றும் சியோன் பகுதியில் 1000 தலித் குழந்தைகளை ஒன்று திரட்டி கல்வி அமுதூட்டும் மும்பை கார்ப்பரேஷனில் பெயிண்டரான ரமேஷ் ஹரி ஹரால்கரின் முயற்சி, சமூக சமத்துவத்துக்கான கல்வி வேள்வி.
"ஆய்வக டெஸ்டில் இறந்த ஏராளமான எலிகளை அள்ளும் வேலைதான் முதலில் எனக்கு கிடைத்தது" என்று தன் இளமையை நினைவுகூர்ந்து பேசும் ரமேஷின் பூர்வீகம் பாகிஸ்தான். "துப்புரவு வேலையில் மட்டும் 80% நபர்கள் தலித்துகள்தான்" என கசப்பாய் புன்னகைக்கிறார் ரமேஷ். 1972 ஆம் ஆண்டு கல்வியே, சமூகத்தை மாற்றும் என குடிசைப்பகுதி தலித் மாணவர்களுக்கு கல்வி வகுப்புகளை 'Jhadu Virudh Khadu'  என்ற அமைப்பு மூலம் நடத்த தொடங்கினார். அரசு பள்ளிகளில் கல்வி மற்றும் அறிவியல், கலை வகுப்புகளோடு கைவினைப்பொருட்கள் தயாரிப்பு  உள்ளிட்டவற்றையும் நண்பர்களோடு இணைந்து நடத்த தொடங்கியது புதிய நம்பிக்கை வெளிச்சம். இன்று இவரிடம் கல்வி பயின்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜாதி இழிவை தகர்த்து பல்வேறு வேலைகளில் இருப்பதே ரமேஷின் கல்வி முயற்சிக்கு அட்டகாச வெற்றி.


பெண்களுக்கு புதிய பாதை! -ஹரீஷ் ஐயர்


தன்னுடைய பாலியல் உறுப்புகள் குறித்து விழிப்புணர்வற்ற வயதில் குழந்தைகளுக்கு நேரும் பாலியல் வல்லுறவு அவர்களின் வாழ்வை உருக்குலைத்துவிடும். மும்பையின் ஹரீஷ் ஐயருக்கு நேர்ந்ததும் அதே கொடூரம்தான். குடும்ப வன்முறை, பாலியல் வல்லுறவு, அமில தாக்குதல், திருநங்கைகள் உள்ளிட்டோரின் துயருக்காக நீதி கேட்டு  'யுனைடெட் வே' தன்னார்வ அமைப்பு மூலம் ஹரீஷ் ஊக்கத்துடன் போராடக் காரணம் அவரது பால்யம்தான். தன் 18 வயதிலிருந்து பல்வேறு கட்டுரைகள், போராட்டங்கள், சட்டவழி தீர்வு என இடையறாது உழைத்துவரும் ஹரீஷ், கார்டியன் நாளிதழில் LGBT நலன்களுக்காக போராடும் 100 முக்கிய மனிதர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர். ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களில் வன்முறைகளால், பாலியல் தாக்குதலுக்கு ஆட்படும் பெண்களுக்கு வழிகாட்டும் ஹரீஷ், ஸ்பெஷல் ஹெல்ப்லைனையும் உருவாக்கி செயல்பட்டு வருகிறார். பாலியல்ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில், கண்டுகொள்ளாமல் இருப்பது, சமாளிப்பது என்பதைக் கடந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மகிழ்ச்சியான எதிர்கால வாழ்வை உருவாக்குவது குறித்த ஹரீஷின் செயல்பாடுகள்தான் அவரை பாலின சமத்துவபோராளிகளில் தனித்துவமாக்குகிறது.


  
கைதிகளுக்கு மலர்ச்சி தந்த ஓவியம்! - யஷ்வந்த்வத்ஸவா


ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதிகள் ஓவியங்கள் வரைந்து அதை கண்காட்சி நடத்தியதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் திறந்து வைத்த அந்த பெருமைக்குரிய கைதிகளின் வாழ்வை மாற்றிய ஓவியக்கண்காட்சிக்கு காரணம் ஓவியர் யஷ்வந்த்வத்ஸவா. ஓவியக்கலையில் முதுகலைப் பட்டம் வென்ற யஷ்வந்த், 1971 ஆம் ஆண்டிலிருந்து கற்ற கலையை சமூகத்திற்கு பயன்படும் வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருபவர். இவரிடம் ஓவியத்தை பயின்று, உள்ளூர் முதல் உலகம் வரையிலான அங்கீகாரம் பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 700 க்கும் அதிகம். அப்படித்தான் ஜெய்ப்பூரிலுள்ள சிறை கைதிகளுக்கும் ஓவியத்தை மெல்ல பழக்கி, அவர்களை சமூகத்திற்கான மனிதர்களாக மாற்றியது இவரது வாழ்வின் பெருமைக்குரிய பணி. யஷ்வந்த், தன்னுடைய ஓவிய வகுப்புகளுக்கு எவ்வித கட்டணங்களும் பெறுவதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

மக்களின் நலவாழ்வு! - நரேஷ் குமார் பதானியா, டேனிஷ் மேக்ராஜ்

கிராமங்களில் உடனடி முதலுதவி கிடைக்காததால் நெஞ்சுவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றால், மரணங்கள் நிகழ்வது அவலம். முதலுதவி சிகிச்சை மூலம் இதனை மாற்ற களமிறங்கியவர்தான் நரேஷ்குமார் பதானியா. பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முகாம்கள், பேரணிகள், விழிப்புணர்வு பிரசாரம் மூலம் தீவிபத்து, விலங்கு தாக்குதல், விபத்து காயம் ஆகியவற்றை சமாளிப்பது குறித்த வழிகாட்டுதலை வழங்கி வருகிறார். பஞ்சாப்பின் பதிண்டா கிராமத்தில் முதன்முதலில் தனது செயல்பாட்டைத் தொடங்கிய நரேஷின் பணி 20 ஆண்டுகளை கடந்தும் 300 கிராமங்களை கடந்து தொடர்கிறது. சிகிச்சைக்கான நிதியுதவிகளை அளிப்பது இவரது தன்னார்வ நண்பர்களே. காஷ்மீரின் புல்வானாவைச்சேர்ந்த டேனிஷ் மேக்ராஜ், 2015 ஆம் ஆண்டு சூழலை மாசுபடுத்திய 7 சிமெண்ட் ஃபேக்டரிகளால் மக்களுக்கு ஏற்பட்ட அலர்ஜி, தோல்நோய்களை எதிர்த்து போராடிய சூழலியல் போராளி. இவரது கட்டுரைகள், போராட்டங்கள் சிமெண்ட் நிறுவனங்களை அச்சுறுத்த, மாசுபடுதலை குறைக்கவும், மருத்துவமுகாம்களை அமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது புதிய விடியலின் தொடக்கம்.


நீர்வளத்தின் காவலர்கள்!- .எல்.ராமநாதன்,சிருஷ்டி நரேந்திர நெர்கர்.

தமிழ்நாட்டின் போர்வெல் குடிநீரில் புற்றுநோய் உண்டாக்கும் ஆர்செனிக் மற்றும் பற்கள் மற்றும் எலும்புகளைச் சிதைக்கும் ஃப்ளூரைடும் இருப்பதை கண்டறிந்த நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.எல்.ராமநாதன், மரபான முறையில் நீரினை சுத்திகரிக்கும் டெக்னிக்கை பீகார், .பியில் தன் குழுவினரோடு சோதித்து வெற்றிகண்டுள்ளார். இம்முறையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவார்கள். தற்போது மைக்ரோ ஹைட்ரோபவர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார் பேராசிரியர் ஏ.எல்.ராமநாதன்.
இதேபோல மகாராஷ்டிராவின் சிருஷ்டி நரேந்திர நேர்கர் நீர் குறைபாட்டைத் தீர்க்க, 65 லிட்டர் நீரை சேமிக்கும் குளியல் ஷவரை உருவாக்கியுள்ளார். இந்த ஷவரின் மூலம் எகானமியாக 15 லிட்டர் நீரே செலவாகும். மேலும் நகரம் இதன் மூலம் அனைவருக்கும் 34 நாட்களுக்கான நீர்த்தேவையை அளிக்க முடியும் என கண்டறிந்திருக்கிறார். தனது 11 வயதிலிருந்து நீராதார வளங்கள் குறித்த ஆராய்ச்சி செய்துவரும் சிருஷ்டி, தற்போது தனது சிக்கன ஷவருக்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளார்.

தொகுப்பு: ஷியாம் பிரணேஷ், மத்தாலி முகேஷ்