ஜீரோ டூ ஹீரோ - கிரிக்கெட்டில் பெண்கள் சாதித்த கதை!
ஜீரோ டூ ஹீரோ - கிரிக்கெட்டில் பெண்கள் சாதித்த கதை! -ச.அன்பரசு.
ஜூலை 23. பெருமைமிகு
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஃபைனல்.இந்தியாவே டென்ஷனில் நகம் கடித்துக்கொண்டு டிவியின் ஸ்கோர்போர்டை பார்த்துக்கொண்டிருந்த மேட்ச்
அது. மக்களின் ஹார்ட்பீட்டில் எகிறிய டென்ஷன் கிரவுண்டிலிருந்த
வீரர்களுக்கும் ஷிப்ட் ஆனதுபோல, திடீரென ஹர்மன்ப்ரீத் கவுர்
51 ரன்னில் அவுட்டானார்.அப்போது இந்திய அணியின்
ஸ்கோர் 191(42.5ஓவர்). அப்போதும் ரன் சேஸிங்கில்
நம் பெண்கள் கில்லி என்ற நம்பிக்கையில்தான் இந்தியர்கள் தெம்பாக இருந்தனர்.
ஆனால் வீரர்கள்?
பிரஷரை தாங்க முடியாமல் பெண்கள் அணி அடுத்த 28 ரன்களுக்கு
7 விக்கெட்டை பறிகொடுத்து வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில்
இங்கிலாந்தை நான்காவது முறை சாம்பியனாக்கியது. தோற்றாலும் சச்சின்,
சேவாக் ஆகியோர் பெண்களின் முயற்சியை புகழ்ந்து தள்ளினர். மக்களின் கைத்தட்டல்களையும் ஆதரவையும் பெற இந்திய பெண்கள் அணி கடந்த வந்த பாதை
ஏராளமான வலியும் அவமானங்களும் நிறைந்தது.
கடந்த மார்ச் 8 அன்று பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட்
சாதனையாளர்களுக்கான விருதுகளை வழங்கியது. அதில் இந்திய பெண்கள்
அணி டெஸ்டில் முதல் வெற்றி பெற காரணமான முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சாந்தா ரங்கசாமிக்கு
வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் 25 லட்சரூபாய் தொகையும் அளித்து
கௌரவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட்வாரியத்துடன் பெண்கள் கிரிக்கெட்
அசோஷியேசன்(WCAI) இணைந்து 10 ஆண்டுகளுக்குப்
பிறகு பெண் வீரர்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் இது.
"ரயிலில் செகண்ட்கிளாஸ் பெட்டியில்
பயணித்து சுத்தமற்ற அறைகளில் தங்கி, கிரிக்கெட்டை ஆர்வமுடன் விளையாடியதற்கு
இன்றுவரையிலும்கூட சம்பளம் கிடைக்கவில்லை" என ஆற்றாமையோடு
அரங்கில் சாந்தா பேச, அரங்கமே கப்சிப்பென ஆனது. இன்று மிதாலிராஜின் தலைமையிலான இந்திய டீமுக்கு கிடைக்கிற அங்கீகாரம்,
வசதிகள் அனைத்துக்கும் காரணம், சாந்தா,டயானா, போன்ற முன்னாள் வீரர்களின் அர்ப்பணிப்பான உழைப்புதான்.
கிரிக்கெட்டின் முதல்படி!
1954 ஆம் ஆண்டு பெங்களூருவில்
7 சகோதரிகளுடன் பிறந்த சாந்தாவின் 12 வயதிலேயே
அவரின் தந்தை ரங்கசாமி இறந்துவிட்டார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த
சாந்தா, தன் வீட்டின் பின்புறம் டென்னிஸ் பந்தில் ஜாலியாக விளையாடத்
தொடங்கிய கிரிக்கெட் ஆர்வம் மனதில் தீயாய் பற்ற, 1973 ஆம் ஆண்டு
புனேவில் நடைபெற்ற தேசிய போட்டிக்கு செலக்ட் ஆகி சாதித்தார். பிறகு, லக்னோவைச் சேர்ந்த மஹிந்திரகுமார் என்ற விளையாட்டு
ஆர்வலரின் முயற்சியால் பெண்கள் கிரிக்கெட் அசோசியேஷன்(WCIA) உருவானது.
உலக பெண்கள் கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடந்த டெஸ்டில் இந்தியா, மாஸ் வெற்றிபெற்றது. அதில் சாந்தா 381 ரன்கள் விளாசியதற்கு பரிசாக, இந்திய அரசு அர்ஜூனா விருதை
சாந்தாவுக்கு வழங்கியது.
1978 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில்
நடந்த பெண்கள் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது. "அப்போட்டியில் நாங்கள் பின்பற்ற
எங்களுக்கு எந்த ரோல்மாடலும் இல்லை. மக்களுக்கு எங்கள் மீதிருந்த
ஒரே எதிர்பார்ப்பு, நாங்கள் ஸ்கர்ட் அல்லது டிரவுசர் என இரண்டில்
எதை அணிந்து விளையாடுவோம் என்பது மட்டுமே" என ஆற்றாமையோடு
பேசும் சுபாங்கி குல்கர்னி 1976 ஆம் ஆண்டு தன் 17 வயதில் தேசிய அணிக்கு தேர்வாகி மேற்கிந்திய தீவுகள் அணியோடு விளையாடிய முதல்
இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை சாய்த்த லெக் ஸ்பின்னர்.
பணமும் இல்லை பர்மிஷனும் இல்லை!
அன்றைய மும்பையின் முதல் கிரிக்கெட் கிளப்பான அல்பீஸில்
விளையாடிக்கொண்டிருந்த பௌலரான டயானா எடுல்ஜி, 1978 ஆம் ஆண்டு
இந்திய அணிக்கு கேப்டனானார். "1974 ஆம் ஆண்டு விளையாடத்தொடங்கியபோது
எங்களுக்கு கிரிக்கெட் தவிர்த்து வேறு வேலை இல்லை. மேட்சுகள்
விளையாட மும்பை டூ பாட்டியாலா வரை பஸ்சில் சென்று வரும் கஷ்டத்தோடு, அதற்கான காசையும் நாங்களேதான் கொடுத்து விளையாடி வந்தோம்" என யோசனையோடு பேசுகிறார் டயானா. 1982 ஆம் ஆண்டு நியூசிலாந்தில்
நடந்த உலக கோப்பை போட்டிக்கு செல்ல இந்திய அணிக்கு 10 ஆயிரம்
ரூபாய் தேவை என்ற நிலையில் இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளிவந்ததும் அப்போதைய மகாராஷ்டிரா
முதல்வர் ஏ.ஆர்.அந்துலே உதவியிருக்கிறார்.
1988 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பைக்கும் இதே நிலைதான்.
நிதியும், அனுமதியும் முறையாக கிடைத்தபோது போட்டியிடுவதற்கான
காலம் முடிந்துபோயிருந்தது பெண்கள் கிரிக்கெட் மீது அரசுக்கு இருந்த அக்கறைக்கு சாட்சி.
2003 ஆம் ஆண்டு முன்னாள் கேப்டனான சுபாங்கி பெண்கள் கிரிக்கெட் அசோஷியேசனில்
செயலாளரான பின்தான் பெண்கள் அணிக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கத்தொடங்கின. உலக கோப்பையில் ஃபைனலை கனவாக நினைத்திருந்த இந்திய அணி, 2005 ஆம் ஆண்டு உலககோப்பையின் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய தன்னம்பிக்கைக்கு
காரணம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பும், அவர்கள் அளித்த கூடுதல் உடற்பயிற்சி, உளவியல் ட்ரெய்னர்களுமே
காரணம். 2006 ஆம் ஆண்டு ICC யின் பரிந்துரையால்
இந்திய கிரிக்கெட் வாரியம் பெண்கள் கிரிக்கெட் அசோஷியேசனை தன்னோடு இணைத்துக்கொண்டது
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.
"முன்னாள் கிரிக்கெட் வீரரான டிராவிட் புதிய
வீரர்களை அடையாளம் கண்டு அடுத்த ஜெனரேஷன் வீரர்களை ரெடி செய்வதுபோல பெண் வீரர்களையும்
உருவாக்குவது எங்கள் பிளான்" என்று உற்சாகமாகும் டயானா,
பெண்கள் கிரிக்கெட் அசோஷியேசனில் உறுப்பினர். வெளிநாட்டு
அணிகளோடு மேட்சுகள், பயிற்சி, சிறந்த வீரர்களுக்கு
ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் என்பவை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவுடன் சாத்தியமாகியுள்ளன.
"மித்தாலிராஜ் அடுத்த ஜெனரேஷன் வீரர்களுக்கு
இன்ஸ்பிரேசன் என்றாலும், புதிய வீரர்களை வேலைவாய்ப்பு முதலியவற்றை
அதிகம் வழங்கி ஈர்க்க வேண்டும். இன்று அரசு அமைப்புகளான ஏர் இந்தியா,
ரயில்வே ஆகிய நிறுவனங்கள் மட்டுமே பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு பணிவாய்ப்பு
தருகின்றன. வெற்று பாராட்டுகள், நிகழ்ச்சிகள்
கிரிக்கெட்டில் பெண்களின் பங்கை உயர்த்த போதாது" என கள எதார்த்தம்
பேசுகிறார் கிரிக்கெட் வீரரான பிரனாய் சன்கிலேச்சா.
"2005 ஆம் ஆண்டு ஃபைனலில் இந்தியா,
ஆஸ்திரேலியாவிடம் தோற்றபிறகு, 2017 ஆம் ஆண்டில்
இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடமும்
வீழ்ந்துள்ளது என்பதற்கான ஒரே காரணம், பெண் வீரர்கள்,
பிரஷரான சூழலை சமாளிக்க தடுமாறுவதுதான். வீரர்களுக்கு
தேவையான வசதிகளை உடனே செய்துதரும் அர்ப்பணிப்பான மனிதர்களை நிர்வாககுழுவில் அமர்த்துவதே
இன்றைய தேவை" என நறுக்கென பேசுகிறார் முன்னாள் ஆடிட்டர்
ஜெனரலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாககுழு உறுப்பினருமான
வினோத்ராய்.
பாக்ஸ் 1
மித்தாலிராஜ் ஹிஸ்டரி!
ஆந்திராவின் செகந்திராபாத்திலுள்ள கனாச்சிகுடாவில்
வசிக்கும் இந்திய அணிக்கேப்டன் மித்தாலி, ஒருநாள் போட்டியில்
நம்பர்1 ரன் மெஷின். மித்தாலிக்கு சிறுவயதில்
கிரிக்கெட் பயிற்சியளித்த தந்தை துரைராஜ், ஏர்ஃபோர்ஸில் பணியாற்றி
ஓய்வுபெற்றவர். சகோதரர் மிதுனுக்கு அளித்த கிரிக்கெட் பயிற்சி,
மித்தாலியையும் ஈர்க்க, பரதநாட்டியத்தை கைவிட்டு
கிரிக்கெட்பேட்டை கையில் எடுத்தார். 10 ஆவது படிக்கும்போதே தேசிய
அணிக்கு செலக்ட் ஆன பெருமை மித்தாலியின் சொத்து. ரயில்வேயில்
18 வயதில் வேலைக்கு சேர்ந்த மித்தாலிக்கு இன்று 34 வயது. 2021 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடமாட்டேன்
என அறிவித்து விட்ட மித்தாலி, பெண்களுக்கு அட்டகாச இன்ஸ்பிரேஷன்!.
டாப் 5 வீரர்கள்!
மித்தாலி ராஜ்
ரன்கள்- 409(100-1, 50-3) அதிகபட்சம் 109
பூனம் ராவுத்
ரன்கள்-381(100-1, 50-2) அதிகபட்சம் 106
ஹர்மன்ப்ரீத் கவுர்
ரன்கள் - 359(100-1, 50-2) அதிகபட்சம் -171
தீப்தி சர்மா
விக்கெட்டுகள் -12(எகனாமி
4.70 பெஸ்ட் 3/47)
ஜூலன் கோஸ்வாமி
விக்கெட்டுகள்- 10(எகானமி
-4.14 பெஸ்ட் -3/23)
(ICC உலக கோப்பை 2017)
சம்பளம் எவ்வளவு?
1-9 டெஸ்டுகள் - ரூ.15
லட்சம்(3 ஒருநாள் போட்டிகள் 1 டெஸ்ட்டுக்கு சமம்)
10-24 டெஸ்டுகள் - ரூ.25
லட்சம்
25-49 டெஸ்டுகள்- ரூ.30
லட்சம்
பென்ஷன்
1-9 போட்டிகள்(2003-2004க்கு முன்) -ரூ.15 ஆயிரம்(மாதாமாதம்)
10 டெஸ்டுகளுக்கு மேல் - ரூ.22 ஆயிரம்
(indianexpress.com)
நன்றி: குங்குமம் வார இதழ்
தொகுப்பு: கணிகர் ரமணி, ராஜேஷ் சேனாபதி