குங்குமம் ஸ்பெஷல்! -ரோனி ப்ரௌன்
காசு வேண்டாம்
காதல் போதும்!
என் மகள் இப்படி
பண்ணிட்டாளே என மனம் குமைந்து கிடக்கிறார் மலேசிய பணக்காரரான கே பெங். பின்னே,
மூன்று கண்டங்களில் வீடு, பிரைவேட் ஜெட் அத்தனையும்
விட்டுவிட்டு ஆசைமகளான ஏஞ்சலினா ஃப்ரான்சிஸ், பத்து பைசாவுக்கு
பிரயோஜனமில்லாத தருமி போன்ற ரேஞ்சிலுள்ள காதலனை மணந்துகொண்டதுதான் அப்பாவின் வருத்தத்துக்கு
காரணம்.
300 மில்லியன்
சொத்துக்களின் சொந்தக்காரியான பெங்கின் மகள் ஏஞ்சலினா, 2008 ஆம்
ஆண்டில் ஆக்ஸ்போர்டில் படிக்கும்போது ஜெடிடியா ஃப்ரான்சிஸ் என்ற கரீபிய கட்டழகன் மீது
மையலாகிவிட்டார். அப்பா பெங், கண் சிவந்து
நம்பியாராகி கையைப்பிசைய, எம்ஜிஆராக ஜெடிடியா மாற வேறென்ன?
ஏஞ்சலினாவும் ஜெடிடியாவும் கமுக்கமாக 30பேர் முன்னிலையில்
கெட்டிமேளம் கொட்டி 1500 டாலர்களில் மேரேஜை முடித்து ஃபிரான்சிஸின்
அறையில் குடித்தனமே செய்யத்தொடங்கிவிட்டனர். காதலே ஜெயம்!
அவமானத்தை வென்ற
மாற்றுத்திறனாளி!
மனிதவளம் கொட்டிக்கிடக்கும்
இ்ந்தியாவில் எளிய மனிதர்களுக்கு ரெஸ்பெக்ட் கிடைப்பதே சால கஷ்டம். இதில்
பிறரின் உதவியாலேயே வாழும் மாற்றுத்திறனாளிகளின்
நிலைமை என்னாகும்? பாரா அத்லெட் சுவர்ணா இதற்கு சாம்பிள்.
டெல்லியைச்சேர்ந்த
சுவர்ணா,
பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் உலகளவில் அறியப்பட்ட முகம்.
இரண்டு வயதில் போலியோ கால்களை முடக்கிப்போட்டதால் இன்றுவரை வீல்சேர்வாசம்.
அண்மையில் நாக்பூர் டூ நிஜாமுதீன் ரயிலில் பயணித்தார். உட்காரும் வசதியுடைய சீட்டை சுவர்ணாவுக்கு அதிகாரிகள் ஒதுக்கவில்லை.
மேலே படுக்கும் வசதியுள்ள சீட்டை பயன்படுத்த சுவர்ணாவை வற்புறுத்தியுள்ளனர்.
மாற்றுத்திறனாளியான சுவர்ணா, தரையில் அமர்ந்து
பயணிக்கும் அவலத்தை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவேயில்லை. இந்த
மேட்டர் இந்தியா முழுவதும் பரவ, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு
என்கொய்ரிக்கு உத்தரவிட்டு சைலண்டானார். NCPEDP என்ற மாற்றுத்திறனாளி
அமைப்பின் உயரிய விருதை சுவர்ணாவுக்கு வழங்கப்போவது யார் தெரியுமா? அதே ரயில்வே அமைச்சரேதான். அம்பு திருப்பி வந்து தாக்குதே!
ஹைதராபாத்தில்
ட்ராபிக் ராமசாமி!
சென்னையில் போலீசாரை
அலறவைக்கும் ட்ராஃபிக் ராமசாமி, தெலுங்கு தேசத்திற்கு ஷிப்ட் ஆகவில்லைதான்.
ஆனால் அங்குள்ள ஒருவரும், ட்ராஃபிக் ராமசாமியைப்
போலவே அதிரடி வழிகளில் போலீசாரை நூதனமாக பெண்டை கழற்றி வருவதற்கு, மக்களின் கரகோஷங்களும் பெருகி வருகிறது. மேட்டர் செப்பு
சாரே?
ஹைதராபாத்தைச்
சேர்ந்த
Majlis Bachao Tehreek (MBT) என்ற அரசியல் கட்சியைச் சேர்ந்த அம்ஜெத்
உல்லா கானுக்கு போலீஸ் மேல் பல நாட்களாக கடுப்பு. பீக் அவரில்
நடுரோட்டில் பைக், ஆட்டோக்களிடம் சலான் நீட்டி பைசாவசூலில் இறங்குவது,
ட்ராஃபிக்கை கண்டுகொள்ளாமல் சிக்னல் லைட்டில் விளையாடுவது, வேடிக்கை பார்ப்பது என ஆல்ரெடி நொந்தவரை
ஹெல்மெட்தான் சேஃப் என்று போலீசார் அட்வைஸ் பண்ணியதும் பொங்கிவிட்டார். ஹைதராபாத்தின் பைபாஸ், ஹைவே, முட்டுச்சந்து
ஆகிய இடங்களில் போலீசார் ஹெல்மெட் போடாமல் ஒன்வே ரூட்டில் ஒய்யாரமாக போனதை படம் பிடித்தார்.
ட்விட்டரில் கண்ணியமாய் பதிவிட்டு டிஜிபியின் கணக்கோடு கடமை தவறாது இணைத்தார்.
அவ்வளவேதான். மக்களும் இந்த ஜோதியில் ஐக்கியமாக,
மாட்டிக்கொண்ட போலீசாருக்கு திருடனை ஸ்கார்பியன் கடித்தது போல திகைத்து
நிற்கின்றனர்.
சீனாவின் அதிரடி
தள்ளுபடி!
டிவி வாங்கினால்
ரிமோட் ப்ரீ,
புடவை எடுத்தால் காய்கறி ப்ரீ, இரண்டு வாங்கினால்
ஒன்று இலவசம் என்ற ஆஃபர்களை அண்ணாச்சி டூ அசந்தா&கோ.வரை கேட்டு சலித்திருப்போம். ஆனால் இதெல்லாம் சீனா தள்ளுபடிக்கு
முன்னே நிற்கமுடியுமா? அப்படியென்ன ஆஃபர்?
சீனாவின் ஹாங்சூ
மாலிலுள்ள டிரெண்டி ஷிரிம் ஹோட்டலின் விளம்பரம் அது. தள்ளுபடியின் ரேஞ்சை பார்த்துத்தான்
பலரும் அதிர்ச்சியானார்கள். பின்னே, எக்ஸ்க்ளூசிவ்
பெண்களுக்கான ஆஃபர் அது. பெண்களின் உள்ளாடை சைஸை பொறுத்து டிஸ்கவுண்ட்
கூடும் குறையும் என்ற விளம்பரத்தை பார்த்து பலரும் டென்ஷனாகி உள்ளூர் கவுன்சிலில் புகார்
செய்ய விளம்பர பேனர் உடனே அகற்றப்பட்டது. "இந்த விளம்பரத்தினால்
பிஸினஸ் 20% எகிறிவிட்டது. பெண்களே இதை
குறை சொல்லவில்லை. பெண்களின் உள்ளாடை அளவை வெயிட்ரஸ் பெண்கள்தான்
அளப்பார்கள்" என
டேக் இட் ஈஸியாக பேட்டி தட்டுகிறார் ஹோட்டல் மேனேஜர். பிஸினஸில்
இதுவும் கூட சகஜமாப்பா?
ஆபீசுக்கு போக
ஆறுதான் ரூட்!
ட்ராஃபிக்கினால்
ஒரு மனிதர் இப்படியெல்லாம் விரக்தி அடைவாரா என்று ஊர் உலகத்தில் அனைவருமே அப்படியொரு
ஆச்சர்யம். பெஞ்சமின் டேவிட்டின் ஐக்யூவின் கதை
அப்படி ப்ரோ!
ஜெர்மனியின் ம்யூனிச்
நகரைச் சேர்ந்த பெஞ்சமின் டேவிட்டுக்கு தினசரி ட்ராஃபிக் கடும் எரிச்சலை தர, என்ன செய்வது
என அலாரம் செட் பண்ணி யோசித்தார். அடுத்தநாள், ஆபீஸ் செல்லும் ரூட்டில் உள்ள ஐசர் என்ற
ஆற்றில் எட்டிக்குதித்துவிட்டார். யெஸ். சட்டை, போன், பர்ஸை வாட்டர்ப்ரூப் பேக்கில் கழற்றி தோளில் மாட்டிக்கொண்டு
நிக்கரோடு நீந்தி ஆபீஸ் சேர்ந்திருக்கிறார் பெஞ்சமின். ஒன்றல்ல
இரண்டல்ல முழுதாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இதே ரூட்டில் 2 கி.மீ முங்கு நீச்சல் போட்டு ஆபீஸ் சென்றுகொண்டிருக்கிறார் இந்த புதிய பாதை மனிதர்.
ஏன் பாஸ் இப்படி என்றால், 'சாலையை விட ஆறு புத்துணர்ச்சியாக
இருக்கு' என புதிர்பதில் தருகிறார் பெஞ்சமின்.
ரயிலை சாய்த்த
மக்கள்!
வண்டி ஸ்டார்ட்
ஆகலியா? நாசாவையே மிரட்டும் டெக்னிக்குகளில் வண்டியை புரட்டி எடுப்பது, பஸ்களை மாட்டுவண்டி போல தள்ளுவது என்பதெல்லாம் நம் ஊரில் தினசரி வார்ம் அப்
பயிற்சிகள். ஆனால் சீனாவிலுமா அப்படி என ஆச்சரியப்படுத்துகிறது
வைரல் வீடியோ ஒன்று.
சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள
டாங்ஷிமென் ரயில்வே ஸ்டேஷனில்தான் நடந்தது அந்த அதிர்ச்சி சம்பவம். இரவு எட்டுமணிக்கு
ஸ்டேஷனில் ரயில் ஏறவந்த ஒருவர் திடீரென கால்வழுக்கி, ட்ரெயினுக்கும்,
பிளாட்பாரத்திற்கும் இடையேயுள்ள கேப்பில் எக்குதப்பாக மாட்டுக்கொண்டுவிட்டார்.
பெண்கள் வாய்மேல் கைவைத்து அலறியதில், எஞ்சின்
ட்ரைவரும் எமர்ஜென்சி ப்ரேக் அழுத்தினார். பிரயோஜனமில்லை. மாட்டியவரை இம்மி அளவுகூட நகர்த்த முடியவில்லை. அப்புறம்
என்ன? கபாலீசுவரர் தேரை ஊரே கூடி இழுப்பது போல, ஒரு கைபோடுங்க பாஸ் என அத்தனை பயணிகளையும் சங்கிலியாய் கட்டி ட்ரெயினை லைட்டாக
தள்ளி பொறியில் எலிபோல மாட்டியவரை காப்பாற்றி இருக்கிறது ரயில்வே நிர்வாகம்.
பிளாட்பார்ம் பார்த்து கால் வையுங்க மக்களே!
வயிற்றுக்குள்
கம்பி!
தன் உடலுக்குள்
என்ன நடக்கிறது என்ற ப்ரோசஸூக்கு உதடுபிதுக்கி, சிஎன்என் டிவியில் குளோபல் அறிவு
வளர்ப்பதில் என்ன புண்ணியம்? இந்த ஆஸ்திரேலிய லேடியும் சீரியல்
போன போக்கில் தன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார் எதுவரை? அன்றைக்கு வயிற்றுவலி வரும்வரை. நடந்தது என்ன?
ஆஸ்திரேலியாவின்
பெர்த் நகரைச் சேர்ந்த ஆன்ட்டிக்கு அன்று அப்படியொரு வயிற்றுவலி. அவருக்கு
சிகிச்சையளித்த சார்லஸ் கார்ட்னர் ஹாஸ்பிடலே தன் ஹிஸ்டரியில் அப்படியொரு பேஷண்டை பார்த்ததில்லை.
வலியில் துடித்தவரை அப்படியா என்று கேட்டு, மாத்திரைகளைக்
கொடுத்து அனுப்பிவிட்டனர். அடுத்தநாளே ஆம்புலன்சில் வந்து வலி
என்று கதறியவரை உடனே ஆபரேஷன் தியேட்டரில் படுக்க வைத்து அவரின் பாக்கெட் தவிர்த்து
பாடியையும் செக் செய்தபோது, வயிற்றின் சிறுகுடலை பங்க்சர் செய்த
7 செ.மீ கம்பி ஒன்று கச்சிதமாக டாக்டர்களின் கண்ணில் மாட்டியது. கம்பி சாப்பிடற வழக்கம் இருக்கா ஆன்ட்டி? என டாக்டர்கள்
கேட்டபோதுதான், அது 10 ஆண்டுகளுக்கு முன்பே
லேடியின் வாயில் பற்களில் கட்டிய கம்பி சிறுகுடலில் டெபாசிட் ஆன ஹிஸ்டரி தெரிய வந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டீல் ஆன்ட்டி!
உப்புமா திருடர்கள்!
படு ஹைடெக்காக
கொள்ளைக்கு ப்ளூபிரிண்டு போட்டு கொடுத்து திருடும் சீரியஸ் குழுக்கள் ஒருபுறமென்றால், திருடும்போதும் மதியம் அப்பளம் நொறுங்காமல் மீல்ஸ்
கட்டிக்கொண்டுபோய் போலீசிடம் மாட்டி செம மாத்து வாங்கும் கொழந்த கேங்ஸ் இரண்டாவது ரகம். காமெடிக்கு கேரண்டி தரும் இரண்டாம் குழுவின் டெக்னிக் இருக்கிறதே அடடா..
அப்பப்பா ரகம்.
துபாய் ஏர்போர்டில்
இரு பயணிகள் காத்துக்கிடந்தனர். அவர்களின் பெட்டிகளையும் முகத்தின் பதட்டத்தையும்
பார்த்த கஸ்டம்ஸ் அதிகாரிகளின் என்கொய்ரியில்
உப்புமாவில் ஆவி பறந்திருக்கிறது யெஸ். பெட்டி நிறைய ஹாட்டாக
கிலோ கணக்கிலிருந்தது அத்தனையும் உப்புமா. உப்புமா ஏற்றுமதி கம்பெனியோ
என டவுட்டில் விடாமல் செக் பண்ண, மாட்டிக்கிச்சு குருவி.
பெட்டியின் உள்ளே சீக்ரெட் இடத்தில், வைக்கப்பட்டிருந்த
வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள் அதிகாரிகள். உள்ளே பார்த்தால்
அத்தனையும் டாலர்கள், யூரோக்கள். எவ்வளவு
தெரியுமா? 86,600 டாலர்கள். அந்த நேரத்திலா
அடுத்த உப்புமா ஆளும் வரவேண்டும்? அவரையும் வளைத்து பிடித்துவிட்டார்கள்.
உப்புமா ஆறிப்போச்சு!
தொகுப்பு: நானக் கால்ஸா, விக்ரம் சாஸ்திரி
நன்றி: குங்குமம் வார இதழ்