கடலில் மூழ்கிய பொக்கிஷக் கப்பல்கள்!




கடலில் மூழ்கிய பொக்கிஷக்  கப்பல்கள்!


    உப்புக்காற்று பிசுபிசுக்க த்ரில்லான கப்பல் பயணங்கள் விடுமுறையைக் கழிக்க ஏற்றவைதான் என்றாலும் அதில் ஏற்படும் ஆபத்துக்கள் நிலத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. கப்பல் பயணம் ஆபத்து நிறைந்தது என்றாலும் அதன் சாகச அனுபவம் பலரையும் ஈர்த்து கடலோடு போராட வைக்கிறது. புயல், சுறாமீன், கொள்ளையர்கள், அரசுகளின் துப்பாக்கிச்சூடு என இதையெல்லாம் தாண்டி கப்பல்கள் கடலில் நடமாடிக்கொண்டு இருக்கின்றன. விபத்தில் சிக்கிய கடலில் மூழ்கும் கப்பல்களை   மீட்பது நவீன காலத்திலும் மிகவும் கடினமான ஒன்றுதான். கடலில் மூழ்கிய சில புகழ்பெற்ற கப்பல்களைப் பற்றித்தான்
இங்கு தம் பிடித்து மூழ்கி காணப்போகிறோம். வாருங்கள்!

மேரி ரோஸ், இங்கிலாந்து

    1511 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடற்படையில் இணைந்த மேரி ரோஸ் கப்பல் 33 ஆண்டுகள் சளைக்காமல் உழைத்து 1545 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில்புகழ்பெற்ற சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட ஆயுதம் தாங்கிய நெம்பர் 1 போர்க்கப்பலாக பலராலும் பாராட்டப்பெற்றது. 38 மீட்டர் நீளமும், 600 டன்கள் எடையும் கொண்ட மேரி ரோஸ் கப்பல் வணிக கப்பலின் வடிவமைப்பிலமைந்தது. உயரத்திற்கு போனால் கீழே வந்துதானே ஆகவேண்டும் என்பதைப்போல மேரி ரோஸின் கதையும் இறுதியை எட்டியது. அச்சமயத்தில் பிரெஞ்சுபடைகள் இங்கிலாந்தின் வடக்கு கடற்புரத்திலுள்ள போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில் ஊடுருவி தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தன. 1545 ஜூலை 19  அன்று அவர்களை எதிர்த்து தாக்க அனுப்பப்பட்ட மேரி ரோஸ் கப்பலில் சுமார் 400 போர் வீரர்கள் நின்று  எதிர்ப்புறத்தை நோக்கி தீவிரமாக தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தபோது ,திடீரென கப்பல் நீரில் சரசரவென மூழ்கியபோது தப்பித்தது வெறும் 40 வீரர்கள் மட்டுமே.

    1971 ஆம் ஆண்டு ஆழ்கடல் நீச்சலாளர்களால் மூழ்கிப்போன மேரி ரோஸ் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு, அடையாளம் உறுதி செய்த பின்பு, 500 தன்னார்வலர்களின் உதவியோடு 10 ஆண்டுகளாக பெரும் முயற்சி செய்து அதில் உள்ள பொருட்களோடு கப்பலும்  மீட்கப்பட்டது. பிறகு, 1982 ஆம் ஆண்டு மேரி ரோஸ் கப்பலின் அடித்தளம் இறுதியில் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. 1986 அன்று மேரி ரோஸ் அருங்காட்சியகத்தில் அக்கப்பலில் இருந்து எடுத்த  பொருட்களான கைத்துப்பாக்கிகள், உடைகள், நாணயங்கள், கடிதங்கள் உட்பட  28 ஆயிரம் பொருட்களை காட்சிபடுத்தி பிரமாண்டமான கண்காட்சியை அனைவரும் காணும்படி உருவாக்கியிருந்தனர். அதோடு அக்கப்பலில் இறந்து கிடந்த 190 வீரர்களின் மண்டையோடுகளையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்காக சேகரித்து வைத்துள்ளனர். தற்போது மேரி ரோஸ் அருங்காட்சியகத்தினை மக்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. ட்யூடர்(1485-1603) எனும் அரசர் எட்டாம் ஹென்றி காலத்தை நினைவுபடுத்தும் ஒரே சாட்சியம் நம்மிடமுள்ளது இந்த ஒரே கப்பல் மட்டும்தான்.


ஸ்கார்பியன் எஸ்எஸ்என் 589, அமெரிக்கா

    உலகப்போருக்கு பின்னான பனிப்போர் காலகட்டத்தில் (1947-1991) அமெரிக்க கடற்படை சந்தித்த இழப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. 1968 ஆம் ஆண்டில் மட்டும் 3 அயல்நாட்டு (மினர்வ்(ப்ரெஞ்சு), டாகர்,(இஸ்‌ரேல்), கே-129(ரஷ்யா)) தயாரிப்பில் உருவான நீர்மூழ்கி கப்பல்களை விபத்தில் பறிகொடுத்தால் உடம்பு பதறாதா?  1968 மே 20 அன்று, அதன் தலையில் அடுத்த அதிர்ச்சி இடி இறங்கியது. ஸ்கார்பியன் எனும் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ரேடியோ சிக்னல் இழந்து தொடர்பிலிருந்து விலகிவிட்டது என தகவல் கிடைத்தது.  1958 ஆகஸ்ட் 20 அன்று உருவான ஸ்கார்பியன் கப்பல் 76.8 மீட்டர் நீளம் கொண்டது. 100 படைவீரர்களோடு பயணித்த வி வடிவ கப்பலான ஸ்கார்பியனில் அணு ஆயுதம் ஏவும் வசதியும் உண்டு. ஸ்கார்பியன் கப்பல் விபத்தில் மூழ்கியிருக்கலாம் என யூகித்த அமெரிக்கா, மற்றவர்கள் கையில் கப்பல் கிடைப்பதற்குள் நாம் அதை மீட்டுவிடவேண்டும் என 4ஜி வேகத்தில் இயங்கி தனது படைகளை தேடுதலில் விரட்டியது. மத்திய அட்லாண்டிக் கடலில்(சர்காஸோ கடல்) 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் ஸ்கார்பியன் கப்பல் மூழ்கி கிடப்பதை உறுதி செய்ய ரிமோட்டில் இயங்கும் நீர்மூழ்கி கேமரா ஒன்றை பயன்படுத்தியது. மோசமான பேரழிவு நிகழ்வு என்று வர்ணிக்கப்பட்ட இந்த விபத்தில் கப்பலில் இருந்த 99 வீரர்களும் இறந்துபோனது உறுதி செய்யப்பட்டது. கப்பலில் அணு ஆயுதக்கசிவு உள்ளதா என்று சோதிக்கப்பட்டு அவை இல்லையென ஆய்வு முடிவுகள் தெரிவிக்க அமெரிக்க அரசு நிம்மதி பெருமூச்சு விட்டது. ஸ்கார்பியன் கடல் படுகையிலிருந்து இன்னும் மீட்கப்படவில்லை.

வாஸா, ஸ்வீடன்

    1627 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த போர்கப்பல் 69 மீட்டர் நீளமும், 52.5 மீட்டர் உயரமும் கொண்டது. உலகிலேயே சக்தி வாய்ந்த போர்க்கப்பலாக உருவாக்கிய மன்னர் குஸ்தாவஸ் அடோல்பஸ்(Gustavus Adolphus) போலாந்து உடனான போரில் இதனைப் பயன்படுத்த நினைத்தார். ஆனால் அதன் வடிவமைப்பை சரியாக மேற்பார்வை செய்யாமல் விட்டுவிட்டார். வாஸாவின் முதல் பயணம் ஸ்டாக்ஹோம் துறைமுகத்திலிருந்து 1628, ஆகஸ்ட் 10 அன்று மக்களின் வான் பிளக்கும் கரகோஷத்தோடு தொடங்கி, பெரும் சோகமாக முடிந்தது. ஏனெனில் 1 கிலோமீட்டர் செய்த அந்த பயணத்திலேயே வாஸா கப்பல் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கிப்போய் நகரையே சோகமயமாக்கிவிட்டது. 1950 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் துறைமுகத்தின் அருகில் மூழ்கிப்போன வாஸா கப்பலை மீட்கும் பணிகள் ஆயிரத்து 300 ஆழ்கடல் நீச்சல் வீரர்களைக் கொண்டு தொடங்கி 18 மாதங்களுக்கு மேல் நடந்தன. கப்பல் நீரில் மூழ்கியதற்கு காரணம், அதன் மேற்பகுதியில் ஆயுதம் வைப்பதற்கு ஏற்ப செய்திருந்த அதிக எடையிலான ஏற்பாடுகள் மற்றும் கீழ்ப்புற மோசமான வடிவமைப்பு கப்பலின் சமநிலைத்தன்மையை குலைத்துவிட்டது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தம் ஆராய்ச்சி முடிவில் கூறினர். தற்போது மீட்கப்பட்ட கப்பலான வாஸா, அதன் பெயரில் அமைந்த அருங்காட்சியகத்திலேயே ஸ்டாக்ஹோமில் வைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக சிறப்புடன் செயலாற்றி வருகிறது.

கொள்ளைக்கப்பல் ஆன்ஸ் ரிவென்ஞ்

    1710 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டின் ராயல் நேவி கடற்படையால் அறிமுகப்படுத்தப்பட்ட கான்கார்டு எனும் போர்க்கப்பல் இது. துரதிர்ஷ்டவசமாக 1711 ஆம் ஆண்டு நடந்த போரில்  பிரான்ஸ் படைகளினால் கைப்பற்றப்பட்டு லே கான்கார்டு டி நான்டெஸ் எனும் பெயரில் அடிமைகளைக் கொண்டு செல்லும் கப்பலாக பயன்படுத்தப்பட்டதுபின்  எட்வர்ட் டீச் () பிளாக் பியர்டு எனும் கொள்ளைக்காரரின் கட்டளையின் பேரில் பெஞ்சமின் ஹார்னிகோல்டு என்பவர் இந்த கப்பலை போராடி சிறைபிடித்தார். பிறகு ஆன்ஸ் ரிவெஞ்ச் என்று பெயர் மாற்றப்பட்டு   பிளாக் பியர்டின்  தனித்துவமான மண்டையோட்டுக் கொடியோடு கோலகலமாக உலா வந்த கப்பல் இது. சூப்பரான கப்பல் கிடைத்தால் சும்மா இருப்பாரா கொள்ளைக்காரர் எட்வர்ட் டீச்? மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கரீபியன் பகுதிகளுக்கு சென்று இங்கிலாந்து, டச்சு, போர்ச்சுகீசியர்கள் என வணிக கப்பல்களை பாய்ந்து கொள்ளையடித்து பதற வைத்து, தனது பெயரை அவர்களது மனதில் பயத்தோடு பதிய வைத்தார். 1718 ஆம் ஆண்டு நார்த் கரோலினா அருகில் உள்ள பியூஃபோர்ட் இன்லெட் எனுமிடத்தில் மணல்மேடு மீது தரை தட்டி ஆன்ஸ் ரிவெஞ்ச் மூழ்கிப்போனது. அங்கிருந்து சாதுரியமாக தப்பித்த எட்வர்ட், பின் நடந்த சண்டையொன்றில் இறந்துபோனார்.

    1996 ஆம் ஆண்டு பியூஃபோர்ட் இன்லெட் கடல்பகுதியில் கப்பலை தேடிய குழுவினர், அங்கிருந்து 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை மீட்டெடுத்து சாதித்தனர். போர்க்கப்பல்களை மீட்டெடுப்பது சரி என்றாலும் கொள்ளைக்கப்பல் ஒன்று  மீட்டெடுக்கப்பட்டது வரலாற்றில் ரொம்பவே புதுசு!

கி.மு. 70 கால தொன்மை கப்பல், ரோம்

    1900 ஆம் ஆண்டில் க்ரீக் நாட்டிற்கு சொந்தமான ஆன்டிகைதெரா(Antikythera) தீவில் உள்ள க்ளைபாடியா எனும் கடற்பகுதியில் உள்ள கடல் குகை ஒன்றை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஆராய்ந்துகொண்டிருந்தபோது 50 மீட்டர் ஆழத்தில் தொன்மையான கப்பல் ஒன்று மூழ்கிக்கிடந்ததைக் கண்டறிந்து முதன்முதலாக உலகிற்கு அறிவித்தனர். கி.மு 60 - கி.மு. 70 காலகட்டத்தைச் சேர்ந்த இந்த ரோமானியக்கப்பல் இத்தாலி செல்லும் வழியில் புயலால் பாதிக்கப்பட்டு மூழ்கியிருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இக்கப்பலிலிருந்து முதன்முதலில் வெண்கல சிலை ஒன்று மீட்கப்பட்டது. சரக்குப்பொருட்கள், பரிசுகள் என ஆச்சர்யங்களின் சுரங்கமாக இருந்த இந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை பார்த்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இதனை மிதக்கும் அருங்காட்சியகம் என்று அழைத்தார்இந்த இடத்திலிருந்து தொடர்ந்து கிடைத்து வரும் பொருட்கள் க்ரீக் மக்களின் பண்பாட்டை விளக்கும் பொருட்களாக விளங்குவதோடு அவர்களது அறிவியல் வளர்ச்சி குறித்து அறியவும் உதவியாக உள்ளன.   4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அனலாக் கணினி, அறிவியல் வரலாறு கொண்ட உலோகத்துண்டு, சிலைகள் என கிடைக்கப்பெற்ற பொருட்கள் அனைத்தும் ஏதேன்ஸில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தில் அக்கறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூழ்கிய கப்பல்களின் வரலாறும் முக்கியம்தானே!


நன்றி: ச.அன்பரசு
கட்டுரை தொகுப்பு: வில் பார்க்கர், முகமது ரியாஸ்