அன்லிமிடெட் அறிவியல் -தொகுப்பு -ச.அன்பரசு




வியப்பூட்டும் லண்டன் விமான கண்காட்சி

விமானங்களும் ரயில்களும் என்றுமே பார்க்க பார்க்க சலிக்காதவை. இவற்றை பார்வையிட்டு ரசிக்க உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை லண்டன் மேற்கு பகுதியில் நடைபெறும் ஃபார்ன்போரப் விமான கண்காட்சி இந்த ஆண்டும் கோலகலமாக தொடங்கிவிட்டது. ஜூலை 11 -17 தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பார்வையிட மக்களுக்கு 2 நாட்கள் அனுமதி உண்டு. இக்கண்காட்சியில் விமானநிறுவனங்கள் புதிய கான்செப்ட் பிடித்து உருவாக்கிய தமது விமானங்களை காட்சிக்கு வைக்கின்றனர். ராணுவம், தனிப்பட்ட பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக பலரும் இக்கண்காட்சியை தவறவிடுவதில்லை. இதில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த முக்கியமான விமானங்கள் மூன்றை இப்போது காண்போம்.

போயிங் 737 மேக்ஸ் 8

100 ஆண்டை நிறைவு செய்திருக்கும் சிகாகோவைச் சேர்ந்த விமான நிறுவனமான போயிங் தயாரித்துள்ள பயணிகள் விமானமே 737 மேக்ஸ் 8 ஆகும். விரைவிலேயே இந்த போயிங் 737 மேக்ஸ் 8 மூலம் அமெரிக்காவில் பறக்கமுடியும். எப்படி? டெக்சாஸின் டல்லாஸ் நகரில் உள்ள சவுத்வெஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம்,  போயிங் நிறுவனத்தின் 200 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. 1967 தொடங்கப்பட்ட சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகக்குறைந்த பயணக்கட்டணத்தில் பயணிகள் பயணிக்குமாறு சேவையை வழங்கி வருகிறது.


போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் 162-200 பயணிகள் பயணிக்க முடியும். உயர்த்தப்பட்ட மேற்புற கூரைகள், வளைவான உட்புற வடிவமைப்பு என இவ்விமானத்தில் கேபின்கள் அழகாகவும் இடவசதி கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ஏ320நியோ எனும் ஏர்பஸ் நிறுவன விமானத்தை விட இடவசதி கொண்டதாக கருதப்படுகிறது. 1967  ஆம் ஆண்டிலிருந்து வானில் பறந்து வரும் போயிங் நிறுவனத்தின் 737 விமானம் தொடர்ந்து தன் இயக்கத்திறனை மேம்படுத்தி வந்திருக்கிறது. இந்த விமானத்திலும் 8 சதவிகிதம் இயக்கச்செலவு குறைவாகவும் எரிபொருள் சிக்கனத்திலும் 8 சதவிகித அளவு மிச்சமாகிறது. விமானத்தின் உள்ளே எந்திர இரைச்சல்  கசிவு 40 சதவிகிதம் குறைவாக உள்ளது என நிறுவனத்தினர் கூறுகின்றனர்.  சிஎஃப்எம் லீஃப் 1பி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளள இந்த விமானத்தில் தனித்துவமான சி வடிவில் அமைந்த விமானத்தின் இறக்கைகள் 1.8 சதவிகித எரிபொருள் சிக்கனத்தோடு அழகிய வடிவமைப்பில் வசீகரமாக ஈர்க்கின்றன.


கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி500

21,900 கி.கி எடை கொண்ட கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி500 விமானத்தை சொகுசு மற்றும் புகழ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என இந்த விமானத்தை நிச்சயமாக கூறலாம். ஹாலிவுட் நடிகர்களான டாம் க்ரூஸ், ஜிம் கேரி, ஜான் டிரவோல்டா கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் உள்ளிட்டோர் பயன்படுத்துவது கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி500 விமானத்தைத்தான் எனும்போதே இதன் பெருமை, கௌரவம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே! பயன்பாடு, சொகுசு என இரண்டுக்கும் பொருள் இந்த விமானம்தான்.ரோல்ஸ்‌ராய்ஸ் நிறுவனத்தின் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ள இதில் 19 நபர்கள் சுகமாக பயணிக்க முடியும். மணிக்கு 690 கிலோமீட்டர் வேகத்தில் 9 ஆயிரத்து 250 கி.மீ தொலைவு வரை பயணிக்க முடியும். அதாவது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து லண்டன் வரை பயணிக்க முடியும். 45 மில்லியன் டாலர்களைக் கொடுத்தால் நீங்கள்தான் இதன் ஒரிஜினல் ஓனர்.  

ஏரோஎல்விரா ஆப்டிகா

நான்கு பேர் நிறுவனர்களாக உள்ள ஏரோவில் நிறுவனத்தின் விமானம்தான் ஆப்டிகா. தெற்கு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் வானைத்தொட்டது 1979  ஆம் ஆண்டு என்றாலும் பல்வேறு காரணங்களால் நின்றுபோன விமான தயாரிப்பு  11 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் அனைத்து கண்களையும் தன்மேல் ஈர்த்துக்கொண்ட விமானம் இதுதான். ஹெலிகாப்டரின் கேபின் போல அமைக்கப்பட்டிருப்பதன் காரணம் முழுக்க விஷயத்தை கவனிக்க எனும் பொருட்டு இது உருவாக்கப்பட்டிருப்பதுதான் என்கிறார் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான எமிலின் கோல்டிகாட். ஸ்பெயின் நாட்டு அரசு இந்த விமானத்தின் முந்தைய மாடலை காட்டுத்தீயை ஆராய பயன்படுத்தி வந்தது என்பதை இங்கே சொல்லியே ஆகவேண்டும்.  3 பேர் பயணிக்க முடியும் இந்த விமானத்தின் விலை ஹெலிகாப்டரின் விலையில் பாதிதான்.  அதிக ஒலியும் எழுப்பாத அமைதியான பையனான இதில், வானத்தில் 8 மணிநேரம் பயணிக்க முடியும் என்று தம்ஸ் அப் காட்டுகிறார் கோல்டிகாட். இன்னும் சில ஆண்டுகளில் இந்த சிறிய விமானத்தில் இருக்கை நிறைத்து நாம் பயணம் செய்யும் வாய்ப்பும் கூட அமையலாம்.



வேற்று கிரகவாசிகளைக் கண்டுபிடிக்கும் டெலஸ்கோப்

வேற்றுகிரகவாசிகளை அமெரிக்கா மட்டும்தான் கண்டுபிடிக்கமுடியுமா என்ன? நாங்களும் கண்டுபிடிப்போம் என தோள் தட்டி களமிறங்கி கலக்கியிருக்கிறது சீனா. மேட் இன் சீனா என அச்சு குத்தி ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை உருவாக்கித்தான் மேற்சொன்னதை சாதித்து காட்டியிருக்கிறார்கள்.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான கைசுவில் ஃபாஸ்ட் எனும் ரேடியோ சிக்னல் தொலைநோக்கி அமைக்கப்பட்டு செயல்படத் தயாராக உள்ளது.  இது பெய்ஜிங்கிலிருந்து வடமேற்கு பகுதியில் 1610 கி.மீ தாண்டி அமைந்துள்ளது. 500 மீட்டர் அளவு பெரிய பரவளைய தொலைநோக்கி ஒன்றை உருவாக்கும் வேலை இங்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. தொலைநோக்கிக்கு  ஃபாஸ்ட் என்று பெயர் வைத்துள்ளனர். சோதனைகள் தற்போது நடந்து வருவதால், இவற்றில் தேறினால் செப்டம்பர் மாதம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த டெலஸ்கோப்பின் பரவளையத் தட்டில் 4500 பேனல்கள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றின் மூலம் 11 மீட்டர் அளவுக்கு விண்வெளியை ஆய்வு செய்ய முடியும். சிறியளவு மாற்றங்களை செய்வதன் மூலம் ரேடியோ சிக்னல்களை அனுப்பிப் பெறுவதன் மூலம் விரிவாக விண்வெளியை ஆராய்ச்சி செய்ய முடியும்.

இந்த தொலைநோக்கி பெரியதோ சிறியதோ விண்வெளியில் வேற்றுகிரகவாசிகள் இருந்தால் அவர்கள் குறித்து ஆய்வு செய்ய உதவும் என்ற நம்பிக்கையை விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள அரிசிபோ(Arecibo) எனும் வானியல் தொலைநோக்கியை விட இந்த ஃபாஸ்ட் தொலைநோக்கி மூலம் விண்வெளியை நுட்பமாக நோக்கி ரேடியோ சிக்னல்கள் மூலம் தகவல்களைப் பெற்று ஆராய முடியும் என தம்ஸ் அப் காட்டி தைரியமாக பேசுகிறார் தேசிய வானியல் கண்காணிப்பகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் லீ டி.

பால்வெளியில் உள்ள சூரிய குடும்பம் தாண்டி ரேடியோ சிக்னல்கள் மூலம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு பின்னால் உள்ள காந்தவிசை கொண்ட நட்சத்திரங்கள் () நியூட்ரான் நட்சத்திரங்களை கண்டறிய முடியும். இவை குறித்த தகவல்களை ஆராய்வதன் மூலம் பூமியின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மேலும் அறிய முடியும். நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் காட்டிய உற்சாக உத்வேகத்தால் இந்த வானியல் தொடர்பான திட்டம் 185 டாலர்கள் செலவில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதும், விண்வெளி மையத்தினை வட்டப்பாதையில் உருவாக்குவது குறித்த செயல்பாடுகள் 2018 ஆம் ஆண்டு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி திட்டத்திற்காக இங்கிருந்த 2000 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 5 கி.மீ தொலைவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இக்குடும்பங்களுக்கு 1,21,311 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவிக்கிறது. எது எப்படியோ விண்வெளியில் நாம் மட்டும் தனியாக உள்ளோம் என்று நினைக்க வைக்காமல் இவ்வளவு செலவு செய்து கட்டியதற்காகவாவது ஏதாவது ஏலியன் மாட்டினால் சரிதான்.




 அழகில் அசத்தும் சைக்ளோட்ரான் சைக்கிள்

மோட்டார் பைக்குகளே நேக்கட் டெக்னாலஜி,எல்இடி விளக்குகள் என மிரட்டி வரும்போது சைக்கிள்கள் மட்டும் சும்மாவா? கியர் சைக்கிள், பந்தயங்களுக்கான பிரத்யேக சைக்கிள், சொகுசு சைக்கிள், ஸ்மார்ட் சைக்கிள் என சைக்கிள்களிலும் பல்வேறு அப்டேட்கள் ஏற்படுத்தப்பட்டு நமது உற்சாக பெடல்களை அழுத்தி சந்தோஷத்தில் ஆழ்த்துக்கின்றன. இதோ எதிர்காலத்திற்கான சைக்கிள் இதுதான் என உறுதியாக சொல்ல வைக்கிறது சைக்ளோட்ரான் சைக்கிள். அப்படியென்ன புதிதாக அரிதாக இதில் உள்ளது?

டிஸ்னியின் ஹாலிவுட் படமான ட்ரோன் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு இரு சக்கரங்களிலும் நியான் விளக்குகள் ஒளிர வாகனத்தில் நாயகன் பயணிப்பாரே அதேதான். அச்சு அசல் அதே  வடிவமைப்பில்தான் 12 கியர்களைக் கொண்டு இந்த சைக்ளோட்ரான் நமது மனம் கவருகிறது. இதன் லித்தியம் அயன் பேட்டரி எட்டு மணி நேர பயணத்திற்கு நம்பிக்கை தருகிறது. இதன் கியர்கள் நாமே மாற்றிக்கொள்வது என்ற ஆப்சன்கள் இருந்தாலும் எலக்ட்ரானிக் கியர்பாக்ஸ் வசதி இன்னும் சொகுசானது. தானே மாறிக்கொள்ளும் கியர்களினால் நமது வேலை பயணத்தை ரசிக்கவேண்டியது தவிர வேறில்லை. இரவில் தானாகவே சென்சார் மூலம் ஒளிரத்தொடங்கும் சைக்கிளின் சக்கரங்களில் உள்ள விளக்குகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டும். உறுதியான பாலிமரால் உருவாக்கப்பட்டுள்ள காற்று அடைக்கப்படாத இந்த சைக்கிளின் டயர்கள் மூலம் 9ஆயிரத்து 659 கி.மீ பயணம் செய்ய முடியும் என நிறுவனத்தினர் தைரியம் தருகின்றனர்

கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ள சைக்கிள் உடல்பாகங்களின் உறுதி மற்றும் குறைந்த எடை மற்றும் அழகு நம்மை மெய்மறக்கச்செய்கின்றன. எலக்ட்ரானிக் கியர்பாக்ஸ் இருக்கும் சைக்ளோட்ரான் மாடல் ஏரோடைனமிக் வடிவமைப்பில் இந்த சைக்கிளின் எடை வெறும் 11 கிலோ என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சைக்ளோட்ரான் என்பது ஸ்மார்ட் பைக் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள இதனுடன் ஆப் ஒன்றையும் தருகிறார்கள். இதன் மூலம் நாம் பயணிக்கும் தூரம் உள்ளிட்டவற்றை இதில் பதிவு செய்துகொள்ள முடியும். இடம் குறித்து அறிய ஜிபிஎஸ் வழிகாட்டுதல்களும் உண்டு. சைக்கிளை திருடு போய்விட்டால் கவலை வேண்டாம் அதையும் இருந்த இடத்திலிருந்து ஆப் மூலமே கண்டுபிடித்துவிட முடியும். இந்த மேலதிக விஷயங்கள் அனைத்துமே கட்டணசேவைக்குட்பட்டவைதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.  சைக்ளோட்ரானை நீங்கள் சொந்தமாக்க 12 கியர் உள்ள சைக்கிளுக்கு 66 ஆயிரத்து 700 ரூபாயும், 18 கியர் உள்ள சைக்கிளுக்கு 97 ஆயிரத்து 396 ரூபாயும், எலக்ட்ரானிக் கியர் பாக்ஸ் உள்ள சைக்கிளுக்கு 1 லட்சத்து 93 ஆயிரத்து 113 ரூபாய் தந்தால் போதுமானது.  2018 ஆம் ஆண்டு  மே மாதம் புக் பண்ணி வாங்கிய சைக்கிளில் நீங்கள் பெருமையாக ஜாலி ரைடு அடிக்கலாம்.



 உலகின் ஆழமான கடல்குகை

தெற்கு சீன கடல்பகுதியில் உள்ள பராசல் தீவு அருகில் கடல்குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் நடுவே உள்ள இந்த கடல்குகையின் ஆழம் 984 அடி(300 மீ). இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கடல்குகையை விட(202 மீ.,லாங் தீவு, பஹாமா,) இது 91 மீ. ஆழம் அதிகம். பிரமாண்டமான ஈஃபில் டவரினை இந்த கடல்குகைக்கு உதாரணமாக கொள்ளலாம்.   இதனை கடல்மட்டத்திற்கு மேலே இருந்து பார்த்தால் நீலநிறத்தில் தெரியும் எனவே நீலத்துளை என்று அழைக்கப்படுகிறது.

2.58 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்நீர் தற்போது உள்ளதை விட 120  மீட்டர் குறைவாக இருக்கும்போது கடல்குகை உருவானதாக கூறப்படுகிறது. இதனுள்ளே சுண்ணாம்பு பாறைகள் அல்லது பவளப்பாறைகள் வளருகின்றன. பெரும்பாலான கடல்குகைகளில் நன்னீர் மற்றும் கடல்நீர் கலந்திருக்கும். நீர்பரப்பில் கடல்குகை பெறும் நீலநிறத்திற்கு நீரின் அடர்த்தியும் இதனுள் இருக்கும் சுண்ணாம்பு படிவுகளும்தான் காரணம். ஆஸ்திரேலியா, எகிப்து, மத்திய அமெரிக்காவில் உள்ள பெலிஸ் ஆகிய நாடுகளில் கடல்குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

சீனாவில் ட்ராகன் துளை என்று அழைக்கப்படும் இந்த கடல்குகை  நூற்றாண்டுகளுக்கு மேலாக அங்கே இருக்கிறது. இந்த கடல்குகையின் உள்ளே மனிதர்கள் சென்று பார்க்க முடியாதபடி கடும் அழுத்தம் நிலவுவதால் ஷன்சா பவளப்பாறை ஆராய்ச்சி நிறுவனம் எந்திரன்களை பயன்படுத்தி ஆழத்தை துல்லியமாக அளவிட்டு அறிந்துள்ளனர்.   அதோடு இதில் வாழும் புதிய 20 வகை மீன்களையும்  கண்டறிந்துள்ளனர். இந்த ட்ராகன் கடல்குகையில் மேலும் 300 அடிக்கு மேல் சென்று ஆராய்ந்தால் அங்கு ஆக்சிஜன் உள்ளதா என்பது தெரியவரும். கடல்குகையை ஆராயும்போது, கடலின் நீர்மட்டம், சீதோஷ்ண நிலை ஆகியவை  முந்தைய காலகட்டங்களில் என்னென்ன பரிமாண மாற்றங்களை அடைந்து வந்துள்ளது என்பதோடு நில அமைப்பு, நீரியல் அமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றைக் கண்டறிய முடியும் என சீனாவின் கடல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் யாங் சுவோசெங் நம்பிக்கையோடு கூறுகிறார். ஆழமான விஷயம்தான் இது.

தொகுப்பு:ச.அன்பரசு