இந்தியர்களின் 5 தன்னிகரற்ற கண்டுபிடிப்புகள் -ச.அன்பரசு
இந்தியர்களின் 5 தன்னிகரற்ற
கண்டுபிடிப்புகள் -ச.அன்பரசு
கண்டுபிடிப்புகளில்
இந்தியாவின் பங்கு என்றால் ஜீரோ மற்றும் சதுரங்கம் என்று கூறுவார்கள். ஆனால்
சமகாலத்திலும் இந்தியர்கள் பல சமூகத்திற்கு பயன்படும் ஆல் நியூ அவதாரமாக கண்டுபிடிப்புகளை
நிகழ்த்தியிருக்கிறார்கள். இதுவரை நாமறியாத இந்தியர்கள் கண்டுபிடித்த
5 கண்டுபிடிப்புகளைப் பற்றித்தான் படிக்கப்போகிறோம்.
பிளாஸ்டிக் சாலைகள்
2015 ஆம்
ஆண்டு மத்திய அரசு பெருகிவரும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த அதனை சாலைகள் அமைக்க
பயன்படுத்தலாம் என கூறியிருந்தது. பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலை
கெடுத்தாலும் அதனை மறுபயன்பாட்டுக்கு கொண்டுவரும்போது அதன் மாசுபாட்டை குறைக்கமுடியும். அதற்கு ஒரு உதாரணம் பிளாஸ்டிக் சாலைகள்தான். இதனை சாதித்து
காட்டியவர் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் வேதியியல் துறைத்தலைவரான டாக்டர்
ராஜகோபாலன் வாசுதேவன். கழிவு மேலாண்மையில் ஆர்வம் கொண்ட ஆர்.
வாசுதேவன் 2006 ஆம் ஆண்டு தான் கண்டுபிடித்த பிளாஸ்டிக்
சாலைகளை உருவாக்கும் நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார். பிளாஸ்டிக் மனிதன் என்று கூறும் வகையில் பிளாஸ்டிக் சாலைகள், பிளாஸ்டோன் கற்கள் என இன்னோவேஷனில் பின்னுகிறார் மனுஷன்.
பிளாஸ்டிக் சாலைகளை அமைப்பது எப்படி?
முதலில் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளை
சிறிய துண்டுகளாக எந்திரம் மூலம் நறுக்கிக்கொள்ள வேண்டும் பின் இக்கலவையை
165 டிகிரி செல்சியஸ்சிற்கு சூடுபடுத்த வேண்டும். பின் தாரை 160 டிகிரி செல்சியஸ்சிற்கு வெப்பப்படுத்தவேண்டும்.
இதனை ஒன்றாக கலக்கும் பகுதிக்கு அடுத்து செல்கிறது. இங்கு வெப்பநிலை அளவில் அதிகவனம் தேவை. தார் மற்றும்
பிளாஸ்டிக் கலவை மொத்தமும் ஒன்றாக சேர்க்கப்பட்டு 110 - 120 டிகிரி
செல்சியஸ் வெப்பநிலையில் சரளைக்கற்களில் ஊற்றி 8 டன்கள் எடை கொண்ட
ரோலர் வண்டி மூலம் கற்களை அழுத்தினால் அழகான சாலை அசத்தலாக ரெடி. பனி, மழைக்காலம் என எக்காலத்திற்கும் தாங்கி உழைக்கக்கூடிய
சாலைகள் இவை. ஒரு கிலோ சரளைக்கற்களுக்கு 50 கிராம் தாரோடு பத்தில் 1 பங்கு பிளாஸ்டிக்கை கலந்து இதனை
சாலைக்கு பயன்படுத்த முடியும். சாலையில் நீர் தேங்காது என்பது
இதன் சிறப்பம்சம்.
வாசுதேவன் இக்கண்டுபிடிப்பு தவிர பிளாஸ்டிக்
கலவையை ஃபிலிம் போல கற்கள் மீது ஒட்டி பிளாஸ்டோன் எனும் கற்கள் புதிய கண்டுபிடிப்பையும்
2012 ஆம் ஆண்டு நிகழ்த்தியிருக்கிறார். பிளாஸ்டோன்
தயாரிக்க கிரானைட் மற்றும் செராமிக் கழிவுகளோடு பிளாஸ்டிக் கழிவுகளையும் பயன்படுத்தி
இதனை தயாரித்திருக்கிறார் வாசுதேவன். பிளாஸ்டோன் உருவாக்க 300
பாலிதீன் பைகள், 6 பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மலிவான விலையில் சிமெண்ட் கற்களுக்கு மாற்றாக இதனை சுற்றுச்சுவர்களை
கட்ட பயன்படுத்தலாம். மழைநீர் கசிவை தடுக்கும் தன்மை கொண்டது
என்பதால் கால்வாய் உள்ளிட்டவற்றில் பயன்படுத்த ஏற்றது.
பல்வேறு நாடுகளிலும்
இந்த தொழில்நுட்பத்தை குறித்து அறிய விரும்புகிறார்கள். நான் கண்டுபிடித்த
இந்த தொழில்நுட்பத்தை முதலில் இந்தியாவில்தான் பயன்படுத்துவேன். இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள
பிளாஸ்டிக் கழிவுகளை இம்முறையில் மக்களுக்கு பயன்பாட்டுக்கு மாற்றியபிறகுதான் பிற நாடுகளுக்கு
பகிர நினைக்கிறேன் என்று நெகிழ்ச்சி பெருக கூறுகிறார் வாசுதேவன்.
காகித நுண்ணோக்கி
பல்வேறு லேப்களில்
ப்ரேம்லெஸ் கண்ணாடியோடு கவிழ்ந்து பார்த்துக்கொண்டிருப்பார்களே அதேதான். அந்த நுண்ணோக்கியைத்தான்
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியல் பொறியியல் துறை துணை பேராசிரியரான மனு பிரகாஷ்
ஆச்சரியப்படும் விதத்தில் 1 டாலரில் உருவாக்கியிருக்கிறார்.
மனு பிரகாஷ் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரில் பிறந்து
கான்பூர் ஐ.ஐ.டியில் கல்வி பயின்றவர் என்பது
நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம்தானே! முதன்முதலில் நுண்ணோக்கி
என்பது குறித்து எவ்வித அறிதலும் இல்லாமல் அதனை தானே உருவாக்கி அதில் நுண்ணுயிரியினை
கண்டவர், ஆன்டனி பிலிப்ஸ் வான் லூவென்ஹாக் எனும் டச்சு வணிகர்தான்.
நுண்ணுயிரியலின் தந்தை என்ற பெயருக்கு சொந்தக்காரரும் இவர்தான்.
தனித்துவமான ஃபோல்டோஸ்கோப்
காகிதத்தில் மடித்து
செய்வதால் இதனை ஃபோல்டோஸ்கோப் என பெயரிட்டிருக்கிறார். காகிதத்தில்தானே
உருவாக்குகிறோம் என ஏனோதானோ என்று உருவாக்கிவிடவில்லை
இந்த நுண்ணோக்கியை. காகித ஃபோல்டோஸ்கோப் மூலம் 2000 மடங்கு உருப்பெருக்கி பார்க்க முடியும். கடந்த ஆண்டு
ஆய்வகத்தில் முதல்கட்டமாக உருவாக்கிய 50 ஆயிரம் ஃபோல்டோஸ்கோப்பை
10 ஆயிரம் பேரிடம் கொடுத்து மனு பிரகாஷ் குழுவினர் சோதித்தனர்.
வாழைப்பழ விதைகள், பூச்சிகள், பூஞ்சைகள் என ஃபோல்டோஸ்கோப்பினை பயன்படுத்தி பார்த்த பல விஷயங்களை ஃபோல்டோஸ்கோப்
தளத்திற்கு அனுப்பி மனு பிரகாஷை மகிழ்ச்சியில் திகைக்க வைத்திருக்கின்றனர்.
தாய்லாந்து சென்றிருந்தபோது அங்கிருந்த மருத்துவமனைகளில் நுண்ணோக்கியினை
பயன்படுத்தாமல் விலை அதிகமானது என அதனை தொடவே பயந்தனர். இதுவே
விலைகுறைவான தரமான எளிதில் கையாளும் வகையில் நுண்ணோக்கியினை உருவாக்கவேண்டும் என்ற
எண்ணத்தை உருவாக்கியது. காகிதங்களில் விளையாட எந்த குழந்தையும்
விரும்பும். எனது நோக்கம் எளிமையாக விளையாட்டு போல உருவாக்கிவிட
முடியும் இந்த நுண்ணோக்கியை ஒவ்வொரு குழந்தைகளும் தங்களது பாக்கெட்டில் வைத்திருக்கவேண்டும்
என்பதுதான். இந்த நுண்ணோக்கி கிராமப்புறங்களில் ரத்தத்தில் உள்ள
கிருமிகளை அறிய சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் என ஃபோல்டோஸ்கோப் உருவாகிய கதையை
உற்சாகமாக பேசுகிறார் மனு பிரகாஷ்.
எப்படி செய்வது?
தடிமனான அட்டையை
ஜப்பானிய ஓரிகாமி கலைப்படி மடிக்கவேண்டியதுதான். லென்ஸை பொருத்தவேண்டியதுதான்.
இப்போது உங்கள் கைகளில் 9 கிராம் எடை கொண்ட ஃபோல்டோஸ்கோப்
டக்கென ரெடியாகி கண்சிமிட்டும்.
செல்போனில் பொருத்துகிறாற்போல்
நுண்ணோக்கி உருவாக்க நினைத்தோம் ஆனால் அது விலை அதிகம். நாங்கள்
உருவாக்கக்கூடிய கருவி தானே செயல்படும் விதத்தில் இருக்கவேண்டும் என்று விரும்பினோம்
என்கிறார் மனு பிரகாஷ். பின்னணியில் வெளிச்சம் இருந்தால் ஃபோல்டோஸ்கோப்பை
நீங்கள் ஒரு புரொஜெக்டராகவும் பயன்படுத்த முடியும் என்பது வியக்க வைக்கிறது. இதனை உருவாக்கிய வேகத்தோடு போட்டிபோட்டு இந்த காகித நுண்ணோக்கி எங்கே கிடைக்கும்
என்று கேட்டால், இதனை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதுதான்
பதில். ஏனெனில் வணிகரீதியில் இன்னும் ஃபோல்டோஸ்கோப் தயாரிக்கப்படவில்லை
என்பதுதான் இதன் காரணம்.
சாப்பிடும் ஸ்பூன்கள்
பசி வயிற்றை எரித்தால்
குழம்பு பரிமாறும் கரண்டியைக் கூட கடித்து சாப்பிடத்தோன்றும் அல்லவா? ஆனால்
அது ஸ்டீல். ஹைதராபாத்தைச் சேர்ந்த நாராயணன் பீசபட்டி உருவாக்கியிருக்கும்
ஸ்பூன்களை நீங்கள் உணவு சாப்பிட்ட கையோடு கடித்து தின்றுவிடலாம். இதென்னப்பா வேடிக்கையாக இருக்கிறது என்கிறீர்களா? பிளாஸ்டிக்
ஸ்பூன்களின் பெருக்கத்தை குறைக்க கண்டுபிடித்ததுதான் இந்த அப்படியே சாப்பிடலாம் ஸ்பூன்கள்.
நான் பயணித்த இடங்களிலெல்லாம்
சாப்பிடும் இடங்களில் இருந்த பிளாஸ்டிக் ஸ்பூன்களின் பெருக்கம் என்னை தூங்கவிடாமல்
தொந்தரவு செய்தன.
இதற்கு மாற்று என்று யோசித்து உண்ணக்கூடிய வகையில் ஸ்பூன்களை தயாரித்தேன்
என்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த பேக்கீஸ் புட்ஸ் நிறுவனத்தின் தலைவரான 44 வயதாகும் நாராயணன்.
உருவாகிறது சாப்பிடும்
ஸ்பூன்!
அரிசி, கோதுமை,
சோளம் உள்ளிட்ட பொருட்களின் ஒருங்கிணைந்த கலவையாகத்தான் ஸ்பூன்கள் உருவாகின்றன.
நீர், உணவு என ஸ்பூன்கள் 15 நிமிடங்களுக்கு மேல் வைத்திருந்தால் மட்டுமே கடினத்தன்மையை இழந்து மென்மையாகிறது.
உணவை ஸ்பூனின் மூலம் எடுத்து சாப்பிட்டுவிட்டு பிறகு ஸ்பூனையும் பாசமாக
கடித்து சாப்பிடலாம் என்றால் சூப்பர்தானே! பயன்படுத்தாமல் வெளியில்
வைத்தாலும் கவலைப்படவேண்டியதில்லை. அதுவே சிதைந்து எறும்புகளுக்கு
உணவாகிவிடும். இனிப்பு,
உப்பு மற்றும் சீரகம், சாதரணமாக என மூன்று சுவையில்
ஸ்பூன்கள் கிடைக்கின்றன. ஸ்பூன்கள் உடையாமல் இருக்க பல்தைரீன்
எனும் செயற்கை பசை மூலம் தயாரிக்கப்பட்ட உறையினுள் வைக்கப்பட்டு காகிதப்பையினுள் வைத்து
விற்கப்படுகின்றன.
சந்தித்த சவால்கள்
ஸ்பூன்களை உருவாக்கும்
தொழில்முனைவோர் என்பதைத் தாண்டி, சர்வதேச வெப்பமண்டல வறண்ட பயிர்கள் ஆராய்ச்சி
நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான நாராயணன், நிலத்தடி நீர் குறைவான
பகுதிகளுக்கு ஏற்ப அரிசியை குறைத்து சோளம் உள்ளிட்ட நீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை
விளைவிக்க தொடங்குவதன் மூலம் குறைந்துவரும் நீரின் தேவையை சமநிலையாக்க முயன்றார்.
பிறகு சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு மக்களிடையே இருக்கும் தேவைதான் அதனை
ஸ்பூன்களின் தயாரிப்பில் முக்கியப் பகுதிப்பொருளாக சேர்க்க வைத்தது. சாப்பிடக்கூடிய ஸ்பூன்களை தயாரிப்பது எனும் மூளையின் கனவினை கைக்கெட்டும் செயல்பாட்டில்
கொண்டுவருவது அவ்வளவு எளிதானதா என்ன? 2010 ஆம் ஆண்டு நிறுவனம்
தொடங்கியபோது தேவைப்பட்ட 60 லட்சரூபாய் முதலீட்டுக்கு தன் இரு
வீடுகளை விற்கவேண்டி இருந்தது. அந்த தொகையில்தான் ஸ்பூன்களை செய்வதற்கான்
எந்திரங்களை வாங்கி வடிவமைத்திருக்கிறார். மேலும் தேவைப்படும்
தொகைக்கு மக்களிடையே இத்திட்டத்தை விளக்கி க்ரவுட்ஃபண்டிங் முறை மூலம் தொகை பெற்று
தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறார். 9 பெண்கள் பணிபுரிந்து வரும்
ஹைதராபாத் தொழிற்சாலை மூலம் ஆ்ண்டுக்கு
1.5 மில்லியன் ஸ்பூன்களை விற்றிருக்கிறார்கள். பிளாஸ்டிக்கின் கெடுதல்களை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தத்தான்
நாராயணன் மிகவும் மெனக்கெட்டு பாடுபட்டிருக்கிறார். 2 ஸ்பூன்கள்
ரூ.2க்கு விற்கப்படுகிறது. பேகீஸ் ஸ்பூன்கள்,
மர ஸ்பூன்களை விட விலை குறைவு என்றாலும் பிளாஸ்டிக் ஸ்பூன்களை விட இரு
மடங்கு விலை அதிகம். ஸ்பூன்களின் விலையை 1.50 அல்லது 1 ரூபாய் என கொண்டுவர முயற்சிசெய்து வருகிறார்
நாராயணன். சூழல் குறித்த அக்கறையில் ஜெயித்துவிட்டீர்கள் சார்.
நோயிலிருந்து மீளும்
குரல்
உலகில் ஒருவரின்
குரல் போல் மற்றொருவருக்கு குரல் அமைவதில்லை. எந்த உறுப்பையும் இழந்தால் பெற்றுவிடமுடியும்.
ஆனால் குரலை? நிச்சயம் முடியாது. உங்களுக்கு நெருக்கமான ஒருவர் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பேச முடியாமல்
போகும் அடையும் துன்பம் சாதாரணமா? அனுபவித்தால்தானே அந்த நரகம்
புரியும். அதனை தவிர்க்கத்தான் பேசும் கருவியை புற்றுநோய் மருத்துவர்
விஷால் ராவ்(37) கண்டுபிடித்திருக்கிறார். நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குரலை மீள வைத்திருக்கிறார் அதுவும்
67 ரூபாய் விலையில். சந்தையில் பேசும் கருவிகள் 15 ஆயிரம், 30 ஆயிரம் என விற்றுக்கொண்டிருப்பதை அறிந்தால்தான்
மரு. விஷால் ராவ் கண்டுபிடிப்பின் அருமை நமக்கு புரியும்.
செயல்படுவது எப்படி?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட
நோயாளிகள் வாயால் உணவு உட்கொள்ள முடியும். ஆனால் மூக்கின் வழியே சுவாசிக்க
முடியாது. கழுத்தில் இடப்பட்ட துளை வழியேதான் சுவாசிக்க முடியும்.
விஷால்ராவ் கண்டுபிடித்துள்ள ஓம் பேசும் கருவி உணவுக்குழாயினை பேசும்
பகுதியாக மாற்றுகிறது. எப்படி சார் சாத்தியம்?
சிலிகானால் உருவாக்கப்பட்டுள்ள
இந்த ஓம் எனும் பேசும் கருவி தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பேசும் பகுதி
அல்லது குரல்வளை அகற்றப்பட்டவர்களுக்கு பேச உதவுகிறது. 25 கிராம்
எடையும் 2.5 செ.மீ நீளமுள்ள இந்த பேசும்
கருவி சுவாசக்குழாய் மற்றும் உணவுக்குழாய் என இரண்டுக்கும் இடையே பொருத்தப்படுகிறது.
நுரையீரலிலிருந்து வரும் காற்றினால் இந்த பேசும் கருவி அதிர்வுற்று குரல்
எழுகிறது. உணவுக்குழாய்க்குள் காற்று செல்லும்போது அதிர்வுறும்
கருவி மூளையுடன் கொண்ட தொடர்பால் பேச்சாக மாறுகிறது. நுரையீரலுக்குள்
உணவோ நீரோ சென்றுவிடக்கூடாது என்பது இதில் முக்கியம் என விரிவாக விளக்குகிறார் மரு.
விஷால் ராவ்.
பல நோயாளிகள் இவரிடம்
பேசும் கருவியை குறித்து அறிந்தாலும் தொகை அதிகம் என்பதால் வாங்க முடியவில்லை என்று
கண்ணீர்மல்க கூறுவதை சரி செய்ய முயன்றபோது
நண்பர் ஷஷாங்க் மகேஷ் கூறிய சொல் இவரை சிந்திக்க தூண்டியிருக்கிறது.
நீ ஏன் பல மனிதர்களை
சார்ந்தே இயங்கவேண்டும்?
நீயாக இவற்றை உருவாக்க முடியுமே? என்று கேட்ட கேள்வியை
பலமுறை தன் மனதிற்குள்ளாகவே விஷால் கேட்டுக்கொண்டார். எப்படி
பேசும் கருவியை உருவாக்குவது என்று அறிந்தாலும் அதனை உருவாக்குவது எப்படி எனக்கு எதுவும்
தெரியாதே என்று தயக்கம் காட்டிய விஷாலுக்கு நம்பிக்கை ஊட்டியவர் ஷஷாங்க் மகேஷ்தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து 30 நோயாளிகளுக்கு மேல் சோதனை செய்து பார்த்த பின்னே ஓம் என்ற பேசும் கருவியின்
தரத்தை இறுதி செய்து ஓம் பேசும் கருவியை 67 ரூபாய்க்கு வழங்கத்
தொடங்கினர்.
குரல் என்பது ஒருவருக்கு
ஆதாரமானது.
இதில் ஏழை என்றால் மலிவான பொருட்களால் உருவாக்கவேண்டும் என்று நினைக்கவில்லை
என்று கனவை சாதித்த மகிழ்ச்சியில் நம்பிக்கையோடு விடைதருகிறார் மரு.விஷால் ராவ்.
அர்ப்பணிப்பான
தன்னலம் கருதாத உழைப்புக்கு பெரிய வெற்றிகள் கிடைப்பதில் வியப்பென்ன இருக்கிறது!
சுவரின் வண்ணம்
ப்ளூ
2009 ஆம் ஆண்டு YInMn ப்ளூ எனும் புதிய நிறத்தை ஓரேகான் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த வேதியியல் பேராசிரியர்
மாஸ் சுப்பிரமணியன் மற்றும் அவரது மாணவர் குழுவினர் கண்டுபிடித்துள்ளார். சென்னையில் பிறந்த சுப்பிரமணியன் 1972-1977 ஆம் ஆண்டுவரைஏ
சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்பை படித்தார்.
பின் 1982 ஆம் ஆண்டு ஐ.ஐ.டி சென்னையில் முனைவர் படிப்பை நிறைவு செய்தவர் ஆவார்.
1093 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்
மாங்கனீசு ஆக்சைடு உள்ளிட்ட சேர்மானங்களை சூடுபடுத்தியபோது இந்த புதிய
YInMn ப்ளூ கிடைத்துள்ளது. குறிப்பிட்ட எலக்ட்ரானிக்
போர்டுக்கு தேவையான பொருள் ஒன்றுக்காக செய்த ஆராய்ச்சியில் விபத்தாக பெயிண்ட் உருவாகியது
எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. வெஸ் கிளைன் எனும் பிரான்ஸ்
ஓவியக்கலைஞரின் ஓவியங்களின் பயன்படுத்தப்பட்டிருக்கும் அல்ட்ராமரைன், இண்டிகோ,ராயல் ப்ளூ ஆகிய நிறங்களின் சாயல்களை கொண்டுள்ளது
கண்டுபிடிக்கப்பட்ட புதிய நிறம். படிக வடிவமைப்பு கொண்ட இந்த
நிறங்களை முன்னர் பயன்படுத்தி வந்தபோதும், தற்போது இதனை வணிகரீதியாக
பயன்படுத்தலாம் என்று யாரும் நினைக்கவில்லை. எகிப்தியர்கள் முன்னமே
நீல நிறத்தை கண்டறிந்தபோதும் இத்துறை சார்ந்தவர்கள்,அதன் நச்சுத்தன்மை,
பயன்படுத்த எளிமை உள்ளிட்ட
காரணங்களை யோசித்து தயங்கி சுணங்கி நின்றனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட YInMn ப்ளூ நிறம் மேற்சொன்ன
அனைத்து அச்சங்களையும் ரப்பர் கொண்டு அழித்து அனைத்து சோதனைகளிலும் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறது
என தன்னம்பிக்கை பொங்க பேசுகிறார் அறிவியலாளர் சுப்பிரமணியன்.
ஓஹியோ நகரைச்சேர்ந்த
ஷெப்பர்டு எனும் நிறுவனம் YInMn ப்ளூ நிறத்தை வணிகரீதியா இம்மாதம்
முதலே சந்தைப்படுத்த தொடங்கியுள்ளது. கண்டுபிடிப்பாளர் மாஸ் சுப்பிரமணியனிடம்
தங்கள் பெயரின் முன் மாஸ் என்று இருக்கிறதே என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு,
மாஸ் என்றால் ஸ்பானிஷ் மொழியில் அதிகம் என்று அர்த்தம் என்று கூறி புன்னகையோடு
பிரியாவிடை தருகிறார். நிச்சயம் உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம்
சுப்பிரமணியன்.
தொகுப்பு: பிருந்தா ஜோ, வினோத், கா.சி.வின்சென்ட்