புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் - புதிய ஜனநாயக வெளியீடு.






புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள் - புதிய ஜனநாயக வெளியீடு. 



இந்தியாவின் காங்கிரஸ்,பா.ஜ.க என ஒவ்வொரு கட்சியின் ஆட்சிகாலத்திலும் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு எப்படி சுருக்கப்படுகிறது, அவர்களின் சந்தை சுருங்கப்படுவது, வருமான வாய்ப்புகளை அங்குலம் அங்குலமாய் அபகரிக்கப்படுவது எப்படி என கூறும் நூல் இது. எந்த வித அலங்கார வார்த்தைகளும் இல்லாத நேரடியான உண்மையை சுடச்சுட பேசுகின்ற நூல், இன்று வரை மாறிவரும் அரசுகள் விவசாயிகளை கிள்ளுக்கீரையாக நடத்தும் முறைக்கு உலகச்சந்தை எப்படி காரணமாகிறது என்பதை  துல்லியமான யாரும் மறுக்கமுடியாத தரவுகளோடு பேசுவது இந்நூலின் மாபெரும் பலம். 

விவசாய சந்தையை பெருநிறுவனங்களின் கைகளுக்கு மாற்ற அரசு திட்டமிட்டு பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களில் ஷரத்துகளை நுழைத்து அதில் மாநில அரசையும் உதவ முடியாதபடி துண்டித்து தனிமைப்படுத்தி விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் அரசின் முற்கால சாதனைகளை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. நூலில் பயிர்களுக்கான கடன்கள், பயிர்க்காப்பீடு மோசடி, அரசின் மானியங்கள், முத்ரா உள்ளிட்ட வங்கி கடன்கள் என அனைத்தும் எப்படி விவசாயிகளுக்கு என்று தீட்டப்பட்டு பெரு நிறுவனங்களின் நலன்களுக்கு தாரைவார்க்கப்படுகின்றன என்பதை புள்ளிவிவரங்களோடு  கூறியுள்ளது தேசபக்த வேடர்களின் முகத்திரையை கிழித்தெறிகிறது. அரசின் எந்த திட்டங்களும் மக்களை சேராததற்கான காரணம் என்ன என்பதை நூலை தெளிவாக படித்து முடித்தவுடன் நம் மனதில் உணர்வதே  இ்ந்நூலின் ஆகச்சிறந்த வெற்றி. விவசாயிகளின்  பரிதாப நிலைக்கு காரணம் அறிய விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய அவசிய நூல் இது. 
-கோமாளிமேடை குழு