விவசாயிகளின் கடன் தள்ளுபடியை எதிர்த்தேன் - ஒய்.வி.ரெட்டி சுயசரிதை




விவசாயிகளின் கடன் தள்ளுபடியை எதிர்த்தேன் - ஒய்.வி.ரெட்டி சுயசரிதை .அன்பரசு


இந்தியாவின் 21 ஆவது ரிசர்வ் வங்கி கவர்னராக(2003-2008) பதவியேற்ற ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஒய்.வி.ரெட்டி, ஜஸ்வந்த்சிங், .சிதம்பரம் என இரு நிதியமைச்சர்களோடு பணியாற்றியவர். 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலையிலும் இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரியாமல் பணவீக்கத்தை குறைத்து பொருளாதாரத்தை மீட்ட பெருமைக்குரியவர். "ஒவ்வொரு ஆட்சியிலும் மாறும் அரசுகள் ரிசர்வ் வங்கியை கையாள்வதில் மாறுபட்ட அணுகுமுறை கொண்டவை" என Advice and Dissent: My Life in Public Service  என அண்மையில் வெளியாகியுள்ள தன்னுடைய நூலின் முன்னுரையில் ஒய்.வி.ரெட்டி எழுதியிருப்பது பல்வேறு தரப்பினரையும் கவனிக்க வைத்துள்ளது. வெளியாகியுள்ள  அவரின் நூலிலிருந்து சில பகுதிகள்:

 பிப்ரவரி மாதம். ஆண்டு 2008. நான் அலுவலகத்திலிருந்தபோது திடீரென நிதியமைச்சரிடமிருந்து அழைப்பு. அரசு, விவசாயிகளின் கடன்தொகை 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியபோது, நான் அதனை உறுதியாக எதிர்த்தேன். எனது நிலைப்பாட்டுக்கு ஆதாரங்களை அன்றைய நிதியமைச்சரான ப.சிதம்பரத்திடம் கூறிக்கொண்டிருக்கும்போது, பிரதமர் மன்மோகன்சிங்கும் வந்துவிட்டார். நிதியமைச்சருக்கு ஆதரவாக அவர் நின்றதால் வேறுவழியின்றி அரசின் முடிவுக்கு சம்மதித்தேன்.  
ஆர்பிஐ விதிகளைப் பொறுத்தவரை கடன்களை வழங்குவதற்கான விதிகள் துல்லிய லாஜிக்குகளைக் கொண்டவை. இந்தியாவில் 50% மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்தான். நாட்டின் ஜிடிபியில் இவர்களின் பங்கு 15% என்றாலும் தனிநபர் வருமான வளர்ச்சியில் வெறும் 2% ஆக மட்டுமே இருந்தது அரசு இவ்விவகாரத்தில் உடனே தலையிடவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிட்டது.
அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தால், பதிலுக்கு விவசாயிகளின் சார்பாக அக்கடன்களை அரசே பொறுப்பேற்று வங்கியில் செலுத்தவேண்டும். அரசு ஆறு மாதங்களுக்குள் கடன்தொகையை வங்கிகளுக்கு அளித்தால், அரசின் நிதித்திட்டத்திற்கு வங்கிகள் இரு ஆண்டுகள் ஆதரவு தருவதாக எங்களுக்கும் நிதித்துறைக்கும் உடன்பாடானது. அப்போது நிதித்துறையில் எதிர்கால தொழில்வளர்ச்சிக்கு ஏற்ப சீர்திருத்தங்களை செய்ய ப.சிதம்பரம் பேரார்வமாய் இருந்தார்

நிதியமைச்சருக்கும் எனக்கும் நடந்த சீர்திருத்தம் குறித்த பலகட்டப் பேச்சுகளில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் முளைத்தன. வங்கித்துறை மற்றும் முதலீடு என இரு துறைகளில் முதலில் எதற்கு முன்னுரிமை அளித்து சீர்திருத்தங்களை செய்வது என்ற தடுமாற்றம்தான் கருத்து வேறுபாடுகளுக்கு காரணம். அரசின் சமூக வர்க்க பொருளாதார புரிந்துணர்வு பற்றி நான் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஆர்பிஐயின் ஆளுநராக நாட்டின் பணமதிப்பு, கடன் குறித்து முடிவெடுக்க நிதித்துறையுடன் முன்னதாகவே நான் விவாதிக்கும் அவசியமிருந்தது.
நிதித்துறையில் சீர்திருத்தங்களை ராக்கெட் வேகத்தில் அமல்படுத்தி பயன்களைப் பெற பிளான் செய்த சிதம்பரம், உற்பத்தி மற்றும் சேவைகள் பிரிவிலும் அதைச் செய்ய விரும்பினார். உற்பத்தி மற்றும் சேவைகளில் துறையில் ஏற்றுமதி இறக்குமதிகளில் அரசின் சட்ட தலையீடுகள் ஏராளம். எனவே சீர்த்திருத்தங்களின் விளைவுகளைக் காண நெடுங்காலமாகும் என்றாலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த ப.சிதம்பரம் அதிதீவிரமாகவும் பொறுமையின்றியும் இருந்தார்.

உலக பொருளாதார மந்தநிலையில் இந்தியாவின் கடனைக் குறைப்பதும், வரிவருவாயை உயர்த்துவதும் என் முன்னிருந்த அவசிய அவசரப்பணி. நிதியமைச்சர் சிதம்பரத்தின் தாராள நிதித்துறை சீர்திருத்தங்களின் மூலம் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதில் எனக்கும் நம்பிக்கை  இருந்ததால் அதனை மனமார வரவேற்றேன். ஆனால் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அரசு எவ்வித நிபந்தனைகளுமின்றி இந்தியச் சந்தையைத் திறந்துவிடுவது நம் பணமதிப்பை சிதைத்துவிடும் என்பதை பல்வேறு பேச்சுக்களிலும் அவரிடம் நான் குறிப்பிடத்தவறவில்லை. அரசின் கையிலுள்ள பொதுத்துறை வங்கிகள் நிதித்துறையில் குறிப்பிட்ட செயல்பாடுகளை மட்டுமே செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தன என்பதுதான் என் கவலைக்கு முக்கிய காரணம். சில விதிவிலக்குகளைத் தவிர்த்து நிதியமைச்சரின் முக்கிய அறிவிப்புகளுக்கு, நாங்கள் இருவரும் இணைந்து உரையாடியதில் பெற்ற கருத்துக்களே காரணம்.

வங்கித்துறை முழுக்க அரசின் கைகளில் இருந்ததால் புதிய சீர்திருத்தங்களுக்கு அவற்றால் ஈடுகொடுக்க முடியாது என்பதால், பலவீனமான தனியார் வங்கிகளை பிற தனியார் வங்கிகளோடு இணைக்கலாம் என்ற எனது யோசனையையும் உடனே ப.சிதம்பரம் ஆதரித்தார். வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அரசு ஒப்புதல்கள் தேவைப்பட்டபோது ஆபீசில் இல்லாத நேரத்திலும் கூட  உடனே அதற்கு ஏற்பாடு செய்தது அவருக்கு சீர்திருத்தங்கள் மேலிருந்த ஆர்வத்தை எனக்கு உணர்த்தியது.
நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் எனக்கும் முதன்முதலில் கருத்து வேறுபாடுகள் உருவானது நிதித்துறையை மேம்படுத்தும் விஷயங்களில்தான். சிதம்பரம், அரசின் நிதிப்பத்திரங்களை பற்றிய கருத்தை முன்வைத்தபோது, நான் அதற்கு மாற்றாக உடனடி சீர்திருத்தம் செய்யவேண்டிய விஷயங்களைக் கூறினேன். ஏனெனில் சந்தை முதலீடு, கடன் ஆகியவை அரசின் நிதி பாதுகாப்பு குறித்தவை என்பதாலும், சந்தையின் மதிப்பை முடிவுசெய்வதும் அரசின் பொறுப்பு என்பதால் இதனை வலியுறுத்தினேன். பிறகு ஒருமனதாக ஆர்.ஹெச்.பாடீல் கமிட்டியின் சீர்திருத்தங்களை கார்ப்பரேட் கடன் சந்தையில் செயல்படுத்த சிதம்பரம் ஒப்புக்கொண்டு, பட்டியல் தயாரானாலும், வேலை முன்னகரவில்லை.

     ஆண்டு 2007. 13 ஆவது நிதித்துறை கமிஷனின் தலைவர் பதவிக்கு திறமையான ஒருவரைப் பரிந்துரைக்கச் சொல்லி முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான சி.ரங்கராஜன்(தற்போது இந்திய புள்ளியல்துறை தலைவர்) என்னை அணுகினார். "நானே அப்பதவிக்கு விண்ணப்பிக்கிறேன். ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன்" என்று சட்டென கூறிவிட்டேன். நிதியமைச்சரோடு தொடர்ந்த ஒத்திசைவில்லாத மனக்கசப்பான சூழல் என்னை அப்படி பேசவைத்துவிட்டது. ஆனால் சிதம்பரம் என்னை பதவி விலகவேண்டாம் என்று ரங்கராஜனிடம் கூறி அனுப்பினார். ஆனாலும் நிதியமைச்சருக்கும் எனக்குமான இடைவெளி அப்படியே தொடர்ந்துவிட்டது துயரம்.
பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரும் சீர்திருத்தவாதி என்ற முத்திரை சிதம்பரம் மீது குத்தப்பட்டதால், அவரின் பணிஅழுத்தம் அதிகரித்தது. ஒருகட்டத்தில் ஆர்பிஐயின் பாதுகாப்பு செயல்பாட்டினால்தான் சீர்திருத்தங்களை சரிவர மேற்கொள்ளமுடியவில்லை என புகார்களை கூறத்தொடங்கினார். 2008 ஆம் ஆண்டில் சீர்திருத்தங்களின் தோல்வியினால் தன் வெளிநாட்டு சுற்றுலாப்பயணத்தையே தவிர்த்துவிட்டார் சிதம்பரம். அந்த நெருக்கடி நேரத்தில்தான் பிரதமர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே டெல்லிக்கு வந்ததும் சிதம்பரத்திற்கு போன் செய்து பிரதமரின் சந்திப்பு குறித்து கூறியதும், 'எனக்கு அதில் எந்த தொடர்புமில்லை' என்று ஒற்றைவரியில் பேச்சை முடித்துக்கொண்டார்.

 பொதுவாக ஞாயிறன்று பார்வையாளர்களை சந்திக்காத பிரதமர் மன்மோகன், அன்று காய்ச்சால் உடல் தளர்ந்து முகம் வாடி களைப்பாக தெரிந்தாலும் என்னை சந்தித்தார். "வேணு, நிதியமைச்சர் ஏனோ உங்கள் மீது கடும் வருத்தத்தில் இருக்கிறார். நான் உங்கள் பக்கம் நிற்பதா, அவர் பக்கம் நிற்பதா? எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது" என்ற மெல்லிய குரலில் அவர் பேசியவுடன் என் மனமே கலங்கிவிட்டது. உடல்நலத்தை விசாரித்துவிட்டு, நிதியமைச்சரிடம் பேசுகிறேன் என்று கூறியபின்தான் அவர் முகம் மலர்ச்சியானது. உடனே சஃப்தர்ஜங்கிலுள்ள சிதம்பரத்துக்கு தொலைபேசியில் அழைத்து பேசி, வீட்டுக்கு வருவதற்கு அனுமதி கேட்டேன். "நீங்கள் என்னை சந்திக்க அவசியமில்லை" என்று கூறியவருக்கு எந்த பதிலும் கூறலாமல் அவரின் வீட்டுக்கு சென்றேன்.           
பிரதமரின் பேச்சினால் தூண்டப்பட்டு நிதியமைச்சருக்கு போன் செய்து வீட்டுக்குச்சென்றேனே தவிர என்ன பேசவேண்டும் என்று கூட நினைவிலில்லை. இருவருமே பொருளாதார துறையில் எக்ஸ்பர்ட்கள். மனக்கசப்புகளை மறந்து பணியாற்ற முடியும் என நான் நம்பினேன். 2007 ஆம் ஆண்டு நடந்த ப.சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டிலும் 'என்னுடைய பொருளாதார குருக்களில் ஒருவர்' என்று கையெழுத்திட்டு தன் புத்தகத்தை எனக்கு வழங்கியது நெகிழ்ச்சியான தருணம். கடந்தகால மனக்கசப்புகளுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பணியை விட்டு விலகலாம் என்ற முடிவுக்கும் வந்திருந்த காலகட்டம் அது.

ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, பிரதமர் மன்மோகன் என்னை மீண்டும் ஆர்பிஐ ஆளுநராக நியமிக்க இருப்பதாக ரங்கராஜன் தகவல் தெரிவித்தார். நிதியமைச்சரோடான கருத்துவேறுபாடுகளையும், வயது 67 என்று கூறியபோதும் அதனை ரங்கராஜன் ஏற்கவில்லை. "நான் பதவியிலிருந்து விலகவே விரும்புகிறேன். 3 ஆண்டுகள் ஆளுநராக இயங்க அனுமதித்தால் மீண்டும் பதவியேற்கிறேன்" என அவரது கோரிக்கையை தவிர்க்க கூறியது பயனளித்தது. 2008 ஆம் ஆண்டு செப்.5 அன்று ஆளுநர் பதவியிலிருந்து விலகினேன். நிதியமைச்சர் சிதம்பரத்துடன் பணியாற்றி 4 ஆண்டுகளில் பல்வேறு புதிய ஐடியாக்களை உருவாக்க, செயல்படுத்த மெனக்கெட்டிருக்கிறோம் என்பது மகிழ்ச்சி.







வராக்கடன் விவகாரத்தை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை -ஒய்.வி.ரெட்டி


இந்நூலில் அனைத்து விஷயங்களையும் சொல்லியிருக்கிறீர்களா?
எனது புக்கில் வில்லன்களே கிடையாது. தெலுங்கில் சுயசரிதை எழுதியபோது பல்வேறு அமைச்சர்கள் குறித்து எழுதியுள்ளீர்களா என கேட்டார்கள். அன்புள்ள கணவன் மனைவி என்றாலும், அவர்கள் போடும் சின்ன சண்டை பிறரை எளிதில் கவனிக்க வைக்கும் அல்லவா? நூலில் சொல்லப்படாத கதைகளுக்கு வரிக்கு வரி  ஹின்ட்ஸ்கள் உண்டு. அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்நூலை எழுத தொடங்கிய 1996 ஆம் ஆண்டில் ஆர்பிஐ பணவீக்க சிக்கலை சந்தித்தது. இன்றும் அதனை பேசிக்கொண்டிருக்கிறோம் எனில் நாம் அதிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லையா?

இல்லை. முதலில் பணவீக்கம் ஏற்பட்டபோது ஆர்பிஐ, அரசு, சந்தை என மூன்றுக்குமான தொடர்புகளை சரிவர இணைத்து பார்க்கவில்லை. தற்போது முன்னேறியுள்ள சந்தை அமைப்புகளால் அரசு, ரிசர்வ் வங்கி, ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பு முறைப்படுத்தப்பட்டுள்ளதால் அரசு சிம்பிளாக பணத்தை அச்சிட்டு வெளியிட முடியாது. பணவீக்கம் அதிகரித்தாலும் அதனை முறைப்படுத்துவதற்கான விதிகளை அரசு புறக்கணித்தால் மக்களுக்கு தெரிந்துவிடும் காலமிது.

அரசின் வசமுள்ள 70% வங்கிகள்தான் பிரச்னைகளுக்கு காரணமா?

பிரச்னையின் ஆதாரம் அதுதான். ஸ்டாண்டர்டு வங்கியில் என்ன நடந்தது? வங்கிக்கு அதிக முதலீடு தேவை என்ற நிலையில் ஆர்பிஐ அது குறித்து வங்கிக்கு ஆபத்து என்பதை கூறினால், தேவையான முதலீட்டை திரட்டுவது உரிமையாளரின் பணி. அதை அவர் சரிவர செய்யாதபோது வங்கி நடவடிக்கைகளை நிறுத்த ஆர்பிஐக்கு உரிமை உண்டு. இங்கு உரிமையாளர் அரசு என்றால், அதனைக் காப்பாற்ற ஆர்பிஐ தனது பணத்தை செலவழிப்பதுதான் சிக்கல். வங்கியில் கடன் பெற்றவரிடம் வங்கி () நிர்வாகமா () உரிமையாளர்களா மூவரில் யார் கடனை வசூலிப்பது? வங்கிகளை கம்பெனி சட்டத்தில் கொண்டுவராமல், நிறுவனம் தாண்டிய  அதிகபொறுப்பு அளிப்பது அதன் லாபநோக்கத்தை குறைப்பதோடு, சீர்த்திருத்த விதிகளும் செயலிழக்கின்றன. அதிக முதலீட்டை ஈர்க்க வங்கிகளுக்கு குறைந்த பொறுப்புகள் தேவை. அரசு வங்கிகளில் அது சாத்தியமா?

நீங்கள் தங்கம் பற்றி பேசுகிறீர்கள் அல்லவா?

ஆமாம். வங்கியைப் பொறுத்தவரை தங்கம்தான் முதலாளி. எனவே சட்டம் அதனை பொறுப்புடன் பாதுகாக்கிறது. மத்திய உளவுத்துறை, வருமானவரித்துறை இது தொடர்பான சிக்கல்களை தீர்க்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் அரசும் தனியாரோடு கலப்பு முறையில் இணைந்துள்ள அமைப்பு காலாவதியான ஒன்று. இவ்வமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக மாற்றமேயின்றி அப்படியே இருக்கிறது.

இதற்கு தீர்வென்ன?

வங்கிகளை கம்பெனிகள் சட்டத்தில் கொண்டுவரவேண்டும். நிதித்துறை சீர்திருத்தங்களில் இந்தியா மிகவும் சுணங்கியுள்ளது. பிரச்னைகளை தீர்க்காமல் இங்கு எந்தமாற்றங்களும் சாத்தியமேயில்லை.

வராக்கடன் பிரச்னையை ஆர்பிஐ சுதந்திரமாக அணுக அரசு அனுமதிக்கவேண்டும் என்கிறீர்களா?

வராக்கடன் போன்ற அசாதாரண பிரச்னைகளுக்கு ஆச்சர்யமளிக்கும் புதிய தீர்வுகள் தேவை. பணப்புழக்கம், சிஸ்டம் ஆகியவற்றை புறக்கணித்து அமல்படுத்தப்பட்டால் ஆர்பிஐக்கு தற்போதுள்ள அதிகாரங்கள் நிரந்தரமாகும். ஆனால் பழைய சிஸ்டம் சிதறிப்போய்விடும்.

வராக்கடன்கள் உருவாகிவந்த காலத்தை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை முட்டாள்தனமான செயல் என நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்களா?

வராக்கடன் உருவாகாமல் இருக்க விதிகளை டைட் செய்வது பற்றி கூறியிருக்கிறேன். பொருளாதார நிலை தினசரி மாறுவதால் கடன் தொகை மெல்ல உயர்கிறது. இது இத்துறையின் அடிப்படை பிரச்னை இதில், நிதிக்கொள்கைகளை இயற்றும் அரசு, கடன் பெறும் நிறுவனங்கள் என யாரை குறை சொல்வது?

வங்கிகள் மீதான அபராத தண்டனைகளை வெளிப்படையாக விதித்த முதல் ஆர்பிஐ ஆளுநர் நீங்கள்தான். தற்போது அபராதத்தோடு வங்கிகளில் கணக்கு தணிக்கையும் நடக்கிறது என்பதில் நாம் அறிய ஏதேனும் உண்டா?

வங்கிச்செயல்பாட்டின் அடிப்படையே நம்பிக்கைதான். வங்கிகளின் தவறான நடவடிக்கைகளுக்கு அபராதம் விதித்தேன் எனினும் அது வங்கியில் நேரும் பாதிப்பை தடுக்கும் நோக்கத்தில்தான் நிகழ்ந்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு செயல்படுவதைவிட இது அதிக பயன்தருகிறது. தனியார் வங்கிகள் முதலீட்டு வரம்பை உறுதிசெய்து வராக்கடன்களை சமாளிக்கின்றன. அரசு வங்கிகளின் திறன் பிரச்னைகள் ஒருபுறமிருந்தாலும் அரசு வங்கிகள் வலுவாகவே உள்ளன.
லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் தங்கள் பணத்தை வெளிநாட்டிலுள்ள வங்கிகளில்தான் சேமிக்கிறார்கள். ஏன் பல நாடுகளிலுள்ள வங்கி கவர்னர்களே அப்படித்தான் செயல்படுகிறார்கள். இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில்தான் மக்கள் தம் வாழ்நாள் சேமிப்பை நம்பிக்கையுடன் வங்கிகளில் ஒப்படைத்திருக்கிறார்கள். வராக்கடன் பிரச்னையை நாம் பெரிதுபடுத்த தேவையில்லை.

வெளிப்படையான செயல்பாடு ஆபத்தானதா?

ஏன்?எதற்கு?எப்படி என்பதே இதில் முக்கியம். நம்பிக்கையும் உண்மையும் ரிசர்வ் வங்கி மீது இருக்கும் நம்பிக்கையும் உண்மையும்தான் அமைப்பை உறுதியாக்குவதோடு, இதிலுள்ள குறைகளை பேசுவது அதனை நீங்கள் தீர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் விதைக்கும்.   

ஒய்.வி.ரெட்டி ஹிஸ்டரி!

1941, ஆகஸ்ட் 17 இல் சீமாந்திராவின் ஒய்எஸ்ஆர் மாவட்டத்திலுள்ள கடப்பாவில் பிறந்த யாக வேணுகோபால் ரெட்டி, முதுநிலை பொருளாதாரப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும், தனது பிஹெச்.டியை ஹைதராபாத்திலுள்ள உஸ்மானியா பல்கலையிலும் படித்தார். 1964 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆந்திரா அரசு, உலகவங்கி, என பணியாற்றியவர், 1995 ஆம் ஆண்டு நிதித்துறை செயலாளரானார். 2003-2008 காலகட்டத்தில் ரிசர்வ்வங்கி ஆளுநராக பணியாற்றினார்.தற்போது ஹைதராபாத்திலுள்ள இந்திய அரசின் CESS மையத்தில் கௌரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.    
 தொகுப்பு:விக்டர் காமெஸி,கா.சி.வின்சென்ட்