பாகிஸ்தான் அணியோடு எதிர்காலத்திலும் போட்டிகள் கிடையாது!



பாகிஸ்தான் அணியோடு எதிர்காலத்திலும் போட்டிகள் கிடையாது!

நேர்காணல்: எலினா நார்மன், ஹாக்கி இந்தியா சிஇஓ, டேவிட் ஜான், ஹாக்கி இந்தியா டைரக்டர்
தமிழில்: .அன்பரசு




சாம்பியன் ட்ராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா மண்ணைக்கவ்விய அதே சமயத்தில்தான் ஹாக்கி வேர்ல்ட் லீக் போட்டியில் இந்திய ஹாக்கி டீம், 7-1 என்ற கோல்கணக்கில் பாகிஸ்தான் அணியை நொறுக்கியது. கிரிக்கெட் சோகத்தை மாற்ற வேறுவழியேயின்றி இந்திய ஹாக்கி அணி நாளிதழ்களில் இடம்பிடித்தது. ஹாக்கி வேர்ல்ட் லீக் போட்டியில் அரையிறுதியில் மலேசியா, கனடா அணிகளிடம் தோற்றுள்ள நிலையில் அதன் சிஇஒ எலினா, டைரக்டர் டேவிட் ஆகியோரிடம் பேசினோம்.

டெல்லியில் ஹாக்கி போட்டிகளைக் குறித்த செய்தியையே நான் அண்மையில் பார்க்கவில்லை. எப்படி ஹாக்கியை புரமோட் செய்யப்போகிறீர்கள்?

பெங்களூரு, போபால் போன்ற இடங்களில் அடிப்படையான கட்டுமானங்கள் இருப்பதால் ஹாக்கி நடத்துவது எளிது. ஆனால் டெல்லி போன்ற இடங்களில் போட்டிகள் நடத்துவது சிரமமாகவே உள்ளது. ராய்பூர்,புவனேஸ்வர்,ராஞ்சி ஆகிய இடங்களில் ஹாக்கிக்கு நல்ல வரவேற்புள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் நடத்துவதற்கு முயற்சித்தீர்களா?

சில ஆண்டுகளுக்கு முன்பே இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சில விரும்பத்தகாத நிகழ்வுகளினால் ஒப்பந்தம் செய்தும் அவர்களோடு இணைந்து போட்டிகளை நடத்த முடியவில்லை. எதிர்காலத்திலும் வாய்ப்பு மிக குறைவு.

ஜூனியர் உலக கோப்பை வென்ற அணி வீரர்கள் தேசிய அணிக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அணியின் எதிர்கால பிளான் என்ன?

நீங்கள் கூறிய விஷயங்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஏன் ஜெர்மனியிலும் கூட நடைபெற்று வருபவைதான். நம்மிடம் தற்போதுள்ள அணி ஆண்டுக்கு 150 மேட்சுகள் விளையாடுவதால் நல்ல அனுபவம், குழு ஒற்றுமை ஆகியவை கிடைக்கின்றன. உலக கோப்பையில் இந்த ஜூனியர்கள் விளையாடுவார்கள் என்று உறுதி கூறுமுடியாது. காயங்கள் உடல் தகுதி என சிக்கல்கள் இருப்பதால் திட்டவட்டமான பதில் என்னிடமில்லை.

ஹாக்கி அணியில் தடுப்பாட்ட வீரர்கள் குறைவாயுள்ளது போல தெரிகிறதே.. எழுபதுகளில் இருந்த நிலையை ஒப்பிட்டு கூறுகிறேன்.

ஹாக்கி என்பது ஒரு 3டி கேம். பாலை லிஃப்ட் செய்து கொண்டு செல்வதைப் பற்றி கேட்கிறீர்கள். இந்திய அணியில் ஆகாஷ்தீப்புக்கு அந்த டேலண்ட் உண்டு என்றாலும் போதுமான அளவு இல்லை என்பதே கவலை. ஜூனியர் லெவலில் இந்த டெக்னிக்கை பல வீரர்கள் நன்றாக செயல்படுத்தி விளையாடுகிறார்கள். எந்திரம் போல விளையாடுவது ஹாக்கியில் அவசியமில்லை. இந்தியர்களின் ஆன்மாவிலுள்ள இயல்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவதே என் லட்சியம்.
விளையாட்டு வீரர்களை மேம்படுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
நாட்டிலுள்ள பல்வேறு வீரர்களையும் ஒன்றாக இணைக்க ஆங்கில வகுப்புகளையும், கம்ப்யூட்டரைக் கையாளும் வகுப்புகளையும் நடத்துகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் பல்வேறு வீடியோக்களை பார்க்க வாய்ப்பளிக்கிறோம். வீரர்கள் விடுமுறையில் வீடுகளுக்கு சென்று சாப்பிடும்போது தங்களுடைய டயட் குறித்த கட்டுப்பாட்டை மறக்காமலிருக்க தொடர்ந்து நினைவுறுத்துகிறோம். மேலும் வெளிநாடு சென்றால் அங்குள்ள கலாச்சாரத்தோடு இணைந்த உணவை சாப்பிட கற்றுத்தந்து வருகிறோம்.

ஒரு ஹாக்கி வீரரிடம் என்ன தகவல்களை பெறுகிறீர்கள்?

சர்க்கிள் என்ட்ரி, எத்தனை ஷாட்களை அடிக்கிறார், தன் பொசிஷனில் நிற்பது ஆகியவற்றை முன்னர் கவனித்தோம். தனிப்பட்ட வீரராக டிஃபென்ஸ், அட்டாக் மற்றும் களத்தில் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறோம். வீரர்களின் சிறு வயதிலேயே அவர்களின் திறமையை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்க முயற்சிக்கிறோம்.
மத்திய வர்க்க குடும்பங்களில் இருந்து வரும் இந்திய வீரர்களுக்கு ஹாக்கி குறித்த புரிதல் இருக்கிறதா?
கற்றுத்தரும் விதம் மாறுபடலாம். ஹாக்கி லீக் போன்ற போட்டிகளில் ஜெர்மன்,பெல்ஜியம், டச்சு வீரர்களோடு விளையாடும்போது பல்வேறு விஷயங்கள் அவர்களாகவே கற்றுக்கொள்கிறார்கள். புரத வகை உணவுகளை தினசரி 3 வேளை வழங்குவதால், காயங்களிலிருந்து வேகமாக மீண்டு வர முடியும்.

அரசு ஹாக்கிக்கு போதிய நிதியளிக்கிறதா?

நாங்கள் கேட்ட நிதியை அரசு வழங்கி வருகிறது. அணிக்கு அவசியம் ஒரு பொருள் தேவையென்றால் அரசு இதுவரை மறுத்ததில்லை.  

நன்றி: டைம்ஸ் ஸ்போர்ட்
வெளியீட்டு அனுசரணை: முத்தாரம் வார இதழ்