ரோனியிடம் கேளுங்கள் - ரோனி ப்ரௌன்





ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

அதிர்ச்சி செய்திகளை கேட்கும்போது பலரும் வாயைப் பொத்திக்கொள்வது ஏன்?

உளறிவைத்தால் ஏதாவது வம்பு வந்துவிடுமே என்பதற்காக நிச்சயம் அல்ல. உண்மையிலேயே உங்களுக்கு ஷாக் ஏற்பட்டால் அங்கேயே பதறி அலறிவிடுவீர்கள் என்பதுதான் நிஜம். அப்படி நடக்காமல் நாசூக்காக வாயை பொத்துகிறீர்கள் என்றால், அதிர்ச்சியை பழகி அதனை ஏற்க துணிந்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். மேலும் அதிக அபாயமில்லை, அலறி கூட இருப்பவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்ககூடாது என்ற லேட்டரல் திங்கிங் கூட காரணமாக இருக்கலாம்.   

ஏன்?எதற்கு?எப்படி? - Mr.ரோனி

கண்ணாடியில் உருவங்கள் ஏன் மேல் கீழாக தெரியாமல் இடது வலதாக தெரிகிறது?

கண்ணாடிகள் உருவத்தை ரிவர்ஸாக்கி காட்டுவதில்லை. உங்களது பிம்பமாக தெரிவது முன்பின்னான உங்கள் உடலின் பிரதிபலிப்புதான். முகத்தை கண்ணாடியில் இடதுபுறமாக திருப்பிக்காட்டினால் கண்ணாடியிலும் அது இடதுபுறமாகத்தான் தெரியும். ஆனால் அதுவே மற்றவர்களை பார்க்கும்போது, 180 டிகிரியில் நம்மைப் பார்த்தபடி நிற்கிறார்கள் என்பதை நாம் முன்பே கவனித்துவிடுவோம் என்பதால், பிரதிபலிப்பு அப்படியேதான் வரும். ஆனால் ஆனால் அதனை நாம் தலைதிருப்பி பார்த்தால் ரிவர்ஸாகி தெரியும்.

ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

ஒருவர் இறந்ததும் அவரது உடலின் அனைத்து உறுப்புகளும் உடனே செயலிழந்துவிடுமா?

நிச்சயமாக இல்லை. உடலின் இயக்கத்திற்கு ஆக்சிஜன் அடிப்படை. முதலில் மூளை, நரம்புசெல், இதயம், கல்லீரல், கிட்னி, கணையம் ஆகியவை ஒரு மணிநேரத்திற்குள் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் செயலிழந்துவிடும். தோல், இதயவால்வுகள், தசைநாண்கள், விழிப்படலம் ஆகியவை ஒருநாள் தாக்குப்பிடிக்கும். உடலின் ரத்தத்திலுள்ள வெள்ளையணுக்கள்தான் இதில் கெட்டி. உயிரற்ற உடலில் முழுதாக 3 நாட்கள் ஸ்மூத்தாக செயல்படும்.


ஏன்?எதற்கு?எப்படி? -ரோனி

நிலவில் நட்டுவைக்கப்பட்ட கொடிகள் இன்றும் உள்ளதா?

நிலவில் இன்றுவரை ஆறு கொடிகள் ஊன்றப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் அப்போலோ விண்கலம் ஊன்றிவைத்தது அதில் ஒன்று. ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்னையால் நீல் ஆம்ஸ்‌ட்ராங், அட்ரியன் ஆகியோர் ஆகியோர் இருவரும் அக்கொடியை எடுத்துவிட்டனர். லூனார் மூலம் எடுத்த படங்களில் மீதியுள்ள 5 நைலான் கொடிகளும் நின்றாலும், அவை சூரிய ஒளியால் நிறமிழந்து வெள்ளையாகி விட்டன.

 ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி
பூனைகள் ஏன் சிறிய இடங்களையே விரும்புகின்றன?

பூனை ஒருநாளுக்கு 18 மணிநேரங்களை தூங்கிக்கழிக்கின்ற உயிரினம். எனவே, அலாரச்சத்தம் கேட்காமல் தூங்கும் இடத்தை தேடினால் கிடைப்பது சிறிய மறைவான இடங்கள்தானே! ஷூ வாங்கிய அட்டைப்பெட்டி திறந்துகிடந்தால் கூட டக்கென ட்ரெயினின் செகண்ட் கிளாஸ் பெட்டி போல உடனே துண்டு போட்டு ஏறி அடுத்த நிமிடமே குறட்டை விடும் சமர்த்து பூனைக்குண்டு. 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பூனைகள், பாலைத்திருடித்தின்பதாக கனவு காண ஏற்ற சூழல்


 ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

விலங்குகளுக்கும் பிளட் குரூப் உண்டா?

நிச்சயமாக. விலங்குகளுக்கும் இனத்திற்கும் இனம் மாறுபாடுகள் கொண்ட ரத்த வகை, பிரிவுகள் உண்டு. எப்படி ரத்தப்பிரிவை முடிவு செய்கிறார்கள்? அது, சிவப்பணுக்களில் உள்ள ஆன்டிபாடிகள் மற்றும் புரதத்தை பொறுத்தது. மனிதர்களின் உடலில் 35 ரத்தப்பிரிவுகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விலங்குகளில் நாய்களுக்கு 13, குதிரைகளுக்கு 8, பூனைகளுக்கு 3 ரத்தப்பிரிவுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.


ஏன்?எதற்கு?எப்படி? -ரோனி

நீர்மூழ்கி கப்பல்களில் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன?

மனிதர்களின் கண்கள் அலைநீளம் அதிகம் கொண்ட நிறத்தை உணர்வதில்  தடுமாற்றம் கொண்டவை. எனவே சிவப்பு நிறத்தை செலக்ட் செய்து கடல்படையின் உள்ளே பயன்படுத்துகிறார்கள். வெளியே இருட்டும்போது சிவப்புநிற லைட்டுகள் உள்ளே போடப்பட்டு, பெரிஸ்கோப் மூலம் அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்கிறார்கள்.

ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

மக்கள் கூட்டத்தை கலைக்க பாதுகாப்பான ஆயுதம் எது?

உண்மையில் மக்கள்கூட்டத்தை கலைக்க பாதுகாப்பான ஆயுதம் எதுவுமில்லை என்பதே நிஜம். ரப்பர்குண்டுகளில் சுட்டால் ஆபத்தில்லைதான், ஆனால் தலையில்பட்டால் பிரச்னை. டேசரில் வரும் மின்சாரம் இதயநோய்கொண்டவர்களை நிரந்தர அமைதியாக்கிவிடும். தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது அதிக பாதிப்பில்லை என்றாலும் கீழே தள்ளி, கூட்டத்தில் தள்ளுமுள்ளு பாதிப்பு உண்டாக்குகிறது. தற்போது ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்படவிருக்கும் ஏடிஎஸ் எனும் குற்றலைகள் இதில் வேறுரகம். இந்த அலைகள் குறிப்பிட்ட அலைவரிசையில் ஒருவரின் மீது படும்போது தோல் எரியும் உணர்வெழ 5 நிமிடங்கள்தான் தாக்குப்பிடிப்பார். பிறகென்ன, எஸ்கேப் ஓட்டம்தான். இந்த ஆராய்ச்சியில் மிகச்சிலருக்கு மட்டும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.


ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

விண்வெளியில் இரும்பு துருப்பிடிக்குமா?

பூமியின் வளிமண்டலம் ஆக்சிஜனைக் கொண்டிருப்பதால் பூமியிலிருந்து 700 கி.மீ வரை உள்ள இரும்பு பொருட்கள் துருப்பிடிக்கும். சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அலுமினியம் மற்றும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஆகிய உலோகங்களில் ஆக்ஸைடு லேயர் இருப்பதால் துருப்பிடிப்பதில்லை. ஆனால் வெள்ளி மற்றும் இரும்பு இருக்கும் பொருட்கள் பெருமாள் மீது ஆணையாக துருப்பிடிக்கும். விண்வெளியில் வெகுதூரம் செல்லும்போது ஆக்சிஜன் இல்லாத நிலையில் விண்கலங்கள் மீது துருப்பிடிப்பதில்லை.  
 ஏன்?எதற்கு?எப்படி? Mr.ரோனி

உப்பு உண்மையில் கிருமிகளை அழிக்கிறதா?

உப்பு சில வகை கிருமிகளை அதனுடலிலுள்ள நீரை நீக்கி கொல்வது உண்மைதான். பாக்டீரியாக்களை ஆஸ்மோஸிஸ் எனும் இம்முறையில் உப்பு அழிக்கிறது. பாக்டீரியாவின் செல்களை நீரை அகற்றி, அந்த இடத்தில் உப்பு நுழையும்போது அதன் புரத என்ஸைம்கள் நீரின்றி செயலிழந்துபோகின்றன. உப்பை எதிர்க்கும் பாக்டீரியாக்களுக்கு ஹாலோடாலரண்ட் என்று பெயர். இவை ஸ்பான்ஞ் போன்ற மூலக்கூறுகளின் மூலம் உப்பினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்கின்றன. .கா. Staphylococcus

ஏன்?எதற்கு?எப்படி? -ரோனி

இரட்டையர்களுக்கு கைரேகை மட்டும் எப்படி மாறுபடுகிறது?

ஒரே டிஎன்ஏவினை இரட்டையர்கள் பகிர்ந்துகொண்டு பிறந்தாலும், அவர்களின் உருவாக்கும் ஒவ்வொரு செல்லும் மற்றொருவரைப் போலவெல்லாம் இருக்கவே இருக்காது. உடல்தோற்றம் ஒன்றாக இருந்தாலும் அவர்களின் கைரேகை மாறுபடக்காரணம், ஹார்மோன்களின் அளவு உடலில் மாறுபடுவதே. இந்த விஷயங்கள் குழந்தைகள் கருவில் உருவாகும்போது தொடங்கிவிடுகின்றன. தோல் செல்களின் நிறமிகளும் இவ்வகையில் வேறுபட்டு உருவாகின்றன.

ஏன்?எதற்கு?எப்படி? -Mr.ரோனி

பூமியிலுள்ள மனிதர்கள் விண்ணில் தூக்கியெறியப்பட சான்ஸ் உண்டா?

பொதுவாக பூமியிலுள்ள மனிதர்கள் விண்ணில் தூக்கியெறியப்படாததற்கு காரணம், நாம் ஈர்ப்புவிசையால் பிணைக்கப்பட்டிருப்பதே. பூமியோடு ஈர்ப்பு விசையோடு இணைந்து அதன் போக்கில் சுற்றிவந்துகொண்டிருக்கிறோம். நம்மை நிலைநிறுத்தியுள்ள மையவிலக்கு விசை திடீரென தாறுமாறாக அதிகரித்தால் விண்வெளி ஏக சான்ஸ் கிடைக்கும். ஈக்குவடாரில் மையவிலக்கு விசை(28,437Km/h) அதிகமாகவும், துருவப்பகுதியில் ஜீரோவாகவும் உள்ளது. ஈக்குவடாரில் உள்ள வேகம் 84 நிமிடங்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது என்றால், அது 17 மடங்கு வேகமாக நடந்தால் பைசா செலவின்றி விண்ணுக்கு செல்ல முடியும்.

தொகுப்பு: அல்லாடி முருகேஷ்.
வெளியீட்டு அனுசரணை: முத்தாரம் வார இதழ் 

  

பிரபலமான இடுகைகள்