விண்வெளியில் இந்தியர்கள் முன்னேறி வருகிறார்களா?

Image result for elon musk



விண்வெளி பிரைவேட் லிட்.




நாசா, இஸ்ரோ என கோலாச்சி வந்த விண்வெளி பந்தயத்தில் இனி தனியார் நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் எலன் மஸ்க், வர்ஜின் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் உலகளவில் விண்வெளி டூர் உள்ளிட்டவற்றை பிரபலப்படுத்துகின்றனர். தற்போது இந்தியாவிலும் இதற்கென தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. கடந்த மாதம் பிப்.6 அன்று எலன்மஸ்க் விண்வெளிக்கு தன் டெஸ்லா காரையே அனுப்பி சுற்றிவரச்செய்தார்.

எலன்மஸ்கின் முயற்சிகள்தான் மைசூரிலுள்ள பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரோகன் கணபதிக்கு இன்ஸ்பிரேஷன். தன் 22 வயதில் இந்நிறுவனத்தைத் தொடங்கிய ரோகன், 2016 ஆம் ஆண்டு இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்யுமளவு முன்னேறியுள்ளார். மேலும் வணிகரீதியிலான ராக்கெட் தொழிற்நுட்பத்திற்கான குடியரசுத்தலைவர் விருதையும் பெற்றுள்ளனர்.

"ராக்கெட்டுகள் தற்போது 40 ட்ரான்ஸ்பான்டர்களை தூக்கிச்செல்கிறது என்றால், எரிபொருள் பயன்பாட்டை குறைத்தால் நூற்றியெட்டு ட்ரான்ஸ்பான்டர்களை சுமந்து செல்ல முடியும்" என ஆர்வமாக பேசுகிறார் ரோகன் கணபதி. உந்துவிசைக்கு மரபாக வேதிப்பொருட்களை பயன்படுத்துவதற்கு மாற்றாக எலக்ட்ரிக் முறையை இவர் பரிந்துரைக்கிறார்.
400 பில்லியன் டாலர்கள் கொட்டும் துறையான விண்வெளி அறிவியலில் 49 ஆண்டுகால அனுபவம் கொண்ட இஸ்ரோ, பல்வேறு வன்பொருள் தேவைகளுக்கு மூன்றாவது நபர்களையே நாடி வருகிறது. இதன் சகோதர அமைப்பான ஆன்ட்ரிக்ஸ், சீனா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மார்க்கெட்டுகளை சமாளித்து பெறும் வருமானம் 250 மில்லியன் டாலர்கள். விண்வெளி ஆராய்ச்சியிலுள்ள முக்கிய நிறுவனங்களை பார்த்துவிடுவோம்.

இந்தியாவில் 150 ஆராய்ச்சி நிலையங்களை வைத்திருக்கும் நோபோ நானோ டெக்னாலஜிஸ் நிறுவனம், 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அமெரிக்காவிலுள்ள கென்டக்கி ஆய்வுமையத்தில் க்யூப் செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எக்ஸோவியன் டெக்னாலஜிஸ், முதன்முதலில் கான்சாட்(CANSAT) என்ற மாடலை 65 ஆயிரம் ரூபாயில் உருவாக்கியது. தற்போது பெஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வகத்துடன் ஒப்பந்தமிட்டு சவுண்ட் ராக்கெட்களை தயாரித்து வருகிறது. இதைப்போலவேதான் அனிரா விண்வெளி நிறுவனமும். உள்நாட்டில் அனுமதி கிடைக்காத நிலையில் இந்தியாவுக்கு வெளியில் புரோடோஸ்டார் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயற்கைக்கோள்களை தயாரித்து வருகிறார் இதன் நிறுவனரான ரகுதாஸ்ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலும் தன் பிஸினஸை மேம்படுத்தி வருகிறார்.

இதில் யாரும் தொடாத கல்வியை தன் ஐடியாவாக பிடித்திருக்கிறார் சச்சின் பம்பா. "நிலவை, நட்சத்திரங்களை, கிரகணங்களை பார்க்க குழந்தைகள் விரும்புவார்கள். அவர்களுக்கு வானியலை சொல்லித்தருவதுதான் எங்கள் வேலை" என புன்னகைக்கும் சச்சின், 2001 ஆம் ஆண்டு ஸ்பேஸ் எனும் நிறுவனத்தை நடத்திவருகிறார். ராஜஸ்தானில் ஆல்வார் என்ற இடத்தில் தொலைநோக்கி போன்றவற்றை பொருத்தி, ராக்கெட்டுகளில் சிறுவர்களை விண்வெளி டூருக்கு அழைத்து செல்வது போன்ற விஷயங்களை சாத்தியப்படுத்துகிறார் சச்சின்.
"ஜே.வி.நார்லிகர் எழுதிய நூலைப்படித்துத்தான் விண்வெளி பற்றிய ஆர்வம் வந்தது. எங்களது ராக்கெட்டீர்ஸ் ஸ்டார்ட்அப், 12-22 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இயற்பியலின் அடிப்படைகளை கற்றுத்தர உதவுகிறது. டெல்டா எக்ஸ், தொழிற்சாலை அளவிலான கல்வியைக் கற்றுத்தருகிறது." என்று புன்னகையுடன் பேசுகிறார் ககன். இவரின் ஐஐஎஸ்டி எனும் நிகழ்ச்சி, இஸ்ரோவுடன் செய்த ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெறுகிறது. நாராயணன் பிரசாத்தின் துருவா ஸ்பேஸ், சாட்சர்ச் ஆகிய ஸ்டார்ட்அப் முயற்சிகளும் 2024 ஆம் ஆண்டில் செவ்வாயில் கால் வைக்கும் நம்பிக்கை தருகின்றன.

தொகுப்பு: விக்டர் காமெஸி, ஷன்மு
நன்றி: முத்தாரம்