கல்வி போராளி!
கல்வி போராளி!
அமெரிக்காவின்
ஓக்லஹாமாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம். "கல்விக்கு அதிக செலவழிப்பதாக உணர்கிறீர்களா? கல்வி கற்பதை
புறக்கணிப்போம்" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திப்போராடும்
கூட்டத்தை தன் கூர்மையான பேச்சின் வழியே தீர்க்கமாக ஒழுங்குபடுத்துகிறார் ஆசிரியர்
கூட்டமைப்பின் தலைவரான ராண்டி வெய்ன்கார்டன்.
கல்விக்கான நிதியை அதிகரிக்கவே இப்போராட்டம்.
மேற்கு வர்ஜீனியா, இலினாய்ஸ், புவர்ட்டோ ரிகோ ஆகிய இடங்களிலும் போராட்டம்
தொடங்கியுள்ளது. "பள்ளிகளின் சீரமைப்பு, வகுப்பறைகளில் இருக்கை, மேஜைகளுக்கான தேவை அதிகரிப்பு,
பென்ஷன், பொதுக்கல்விக்கான தொகை, காலாவதியான பாடத்திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி போராடுகிறோம்"
என்கிறார் ராண்டி. மாணவர்களின் நலன்களைவிட ஆசிரியர்கள்
பயனடையவே மெனக்கெடுகிறார் என்று புகார்கள்
என்றாலும் ராண்டி எதையும் பொருட்படுத்துவதேயில்லை.
ட்ரம்ப் அரசுக்கு
எதிரான பல்வேறு பேரணிகளிலும் ராண்டியை நீங்கள் பார்க்கலாம். ஆசிரியர்
கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அவர்களுக்கான வழக்குரைஞராகவும் இரண்டு பணிகளையும் செய்து
வருகிறார். கார்னெல் மற்றும் கார்டோஸோ கல்லூரியில் சட்டம் படித்த
பட்டதாரி இவர். உடல்நலம் மற்றும் பாதுகாப்பு, பள்ளிகளின் சீரமைப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்து வென்ற தளராத போராட்டக்காரர்
கல்வி வட்டாரம் கடந்த பிரச்னைகளிலும் தன்னார்வமாக கலந்து கொள்ளும் தாராளவாத போராளி.
"அதிபர் ட்ரம்ப் மற்றும் கல்வித்துறை செயலாளர் பெட்ஸி டேவோஸ் இருவருக்கும்
கல்வி தொடர்பாக கடிதங்கள் அனுப்பியும் பயனில்லை" என்கிறார்
ராண்டி.