கரப்பான்பூச்சியைக் கொல்ல என்ன செய்யலாம்!
டான்களுக்கு மரியாதை!
க்ரைம்களை குறைக்க
என்கவுண்டர் வரை போகும் இந்தியப் போலீசின்
இந்த யூடர்ன் முயற்சி நக்கலா அல்லது நார்மலா என பலருக்கும் குழப்பம். எல்லாவற்றுக்கும்
மீரட் போலீசாரே காரணம்.
உத்தரப்பிரதேசத்திலுள்ள
மீரட்டில் போலீசார் எஃப்ஐஆர் பதிந்து களைப்பாகி, குற்றவாளிகளை திருத்த புது
முயற்சியை கையிலெடுத்துள்ளனர். யெஸ்! ஊர்
முன்னிலையில் குற்றவாளிகளுக்கு மாலை போட்டு மரியாதை செய்வதுதான் அது. அண்மையில் பதினைந்து ரவுடிகளுக்கு பூமாலை கௌரவம் கிட்டியுள்ளது. திருடனாய் பார்த்து திருந்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மீரட்டிலுள்ள லிசாரி
கேட் போலீஸ் நிலையம் இம்முயற்சியை செய்துள்ளது. "குற்றவாளிகள்
செய்த தவறுக்கு வருந்தி, திருந்தி வாழவேண்டும் என்பதே எங்கள்
எண்ணம்" என்கிறார் சூப்பரிடெண்ட் மான்சிங் சௌகான்.
ஆபாசத்திற்கு கத்திவெட்டு!
வைஃபை, ஹாட்ஸ்பாட்
என கிடைத்தது எதுவானாலும் பலரும் பார்ப்பது பஜனை படங்களைத்தான். இதற்கெல்லாம் மகன்கள் குற்றவுணர்ச்சி கொள்வதில்லை, பொறுப்பான
டாடிகள் அப்படி இருக்கமுடியுமா?
தெலுங்கானாவைச்
சேர்ந்த முகமது க்வாயம் குரேஷி, மகனிடம் கடமை தவறாமல் நடக்கும் கறார் கண்டிஷன்
அப்பா. கேபிள் கம்பெனியில் வேலை செய்யும் காலித், அவ்வப்போது ஜிலுஜிலு படங்களைப் பார்த்து பரவசமாகி வந்துள்ளார். இரவில் மொபைல் டேட்டா தீரும்வரை எக்ஸ் வீடியோக்களைக் பார்த்து வொர்க்அவுட்
செய்த காலித்தை தந்தை குரேஷி கடுமையாக எச்சரித்தும் திருந்தவில்லை. குரேஷி இதற்கு ஒரே தீர்வு என இரவில் காலித் தூங்கும்போது கறிக்கடை கத்தியை
உயரே தூக்கி மேலிருந்து கீழாக இறக்கினார். மகனின் மணிக்கட்டை
க்ளியராக வெட்டியேவிட்டார். அப்புறம்? 'ஜெயில்ல போடுங்க சார் எங்கப்பாவை' என காலித் அலற,
குரேஷி மர்டர் கேஸில் புக்காகி சிறையில் கொசு அடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் பெருமை!
ஸ்பெயினைச்சேர்ந்த
ஹாரி அத்வால் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 'பிரைடு
ஆஃப் பிர்மிங்காம்' விருது வழங்கப்படவுள்ளது. எதற்கு? கடந்தாண்டு நடைபெற்ற பார்சிலோனா தீவிரவாத தாக்குதலில்
காயம்பட்ட சிறுவனைக் காப்பாற்ற முயற்சித்ததற்காக.
ஸ்பெயினின் வடமேற்கு
பிர்மிங்காமில் திட்டமேலாளராக பணிபுரிந்து வரும் ஹாரி, தன் குடும்பத்துடன்
லாஸ் ராம்பிளாஸ் அருகிலுள்ள ஹோட்டலுக்கு சாப்பிடவந்தார். திடீரென
அங்குள்ள லாஸ் ராம்பிளாஸ் அருகே, தீவிரவாதிகள் வேனை பாதசாரிகள் மீது ஏற்றி கொலைவெறித்தாக்குதல்
நடத்தினர். ஓடோடிச்சென்ற ஹாரி, தாக்குதலில்
காயம்பட்ட ஜூலியன் அலசாண்ட்ரோ காட்மன் என்ற ஏழுவயது சிறுவனை காப்பாற்ற முயற்சித்தார். ஆனாலும் ஜூலியன் அங்கேயே பரிதாபமாக இறந்துபோனார். சம்பவ
இடத்திலேயே பலியான மக்களின் எண்ணிக்கை 13. "எனது சீக்கிய
மார்க்கப்படி, ஆபத்திலுள்ளவர்களுக்கு உதவுவது முக்கிய கடமை.
ஜூலியனைக் காப்பாற்ற முயற்சித்ததும் அப்படித்தான்" என அடக்கமாக புன்னகைக்கிறார் ஹாரி.
குழந்தை திருமணம்
வேண்டாம்!
இந்தியாவில் குழந்தைதிருமணம் 50 சதவிகிதத்திலிருந்து
30 சதவிகிதமாக குறைந்துள்ளதாக யுனிசெஃப் அறிக்கை தெம்பூட்டுகிறது.
அதாவது, இந்தியாவில் இன்றும் ஐந்தில் ஒரு பெண்குழந்தைக்கு
குழந்தை திருமணம் நிகழ்கிறது. தெற்கு ஆசியாவில் இந்தியாவில் உள்ள
வயது வந்தோரின் அளவு 20%. இந்த மக்கள்தொகையோடு ஒப்பிட்டால் இன்றும்
குழந்தை திருமணங்கள் இந்தியாவில் அதிகமே.
உலகில் ஆண்டுக்கு 1.2 கோடி
பெண்கள் பதினெட்டு வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பிருப்பதாக யுனிசெஃப் கணக்கிட்டுள்ளது.
"பெண்கள் குழந்தைப்பருவத்தில் திருமணம் செய்துவைப்பதால்,
அவர்களின் மனமும் உடலும் உருக்குலைந்துபோகிறது. பள்ளியைவிட்டு நிறுத்தி திருமணம் நடைபெறுவதால், வேலைவாய்ப்பு
கிடைக்காமல் பிறரை சார்ந்து அல்லது வறுமையில் வாடும் நிலை ஏற்படுகிறது"
என்கிறார் யுனிசெஃப் பாலினப்பிரிவு தலைவர் அஞ்சு மல்ஹோத்ரா. குழந்தை திருமணம் இதே வேகத்தில் நடைபெற்றால்
2030 இல் உலகெங்கும் 15 கோடி சிறுமிகளுக்கு குழந்தை
திருமணம் நடைபெறும் அபாயம் உள்ளது என யுனிசெஃப் எச்சரித்துள்ளது.
முதல் மரியாதை!
ரெஸ்பெக்ட் தவறினால்
என்னாகும்?
சோறு கிடைக்காது என்பதை எல்லைப் பாதுகாப்பு படை வீரருக்கு இந்திய தேசபக்தர்கள்
உணர்த்தியிருக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்திலுள்ள
மகத்பூரில் எல்லை பாதுகாப்புபடை முகாம் உள்ளது. இங்கு பணிபுரிந்து வந்த சஞ்சீவ்குமார்,
பரேடில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி என்பதை மோடி என்று மட்டும் குறிப்பிட்டது
மேலதிகாரி அனுப்லால் பகத்தை கண்சிவக்க வைத்துவிட்டது. என்ன விட்டுவிட்டார்?
'மரியாதைக்குரிய அல்லது ' என்ற சொற்களை பயன்படுத்தாமல்
மோடியை பெயர் சொன்னது செக்ஷன் 40 படி குற்றம் என சிம்பிளாக ஒரு
வாரச்சம்பளத்தை வெட்டிவிட்டார். ஆனால் விஷயம் மீடியாவில் வெளியாகி சர்ச்சையாக, தற்போது
சஞ்சீவ்குமாருக்கு வார்னிங் கொடுத்து சம்பளவெட்டிலிருந்து விடுவித்திருக்கின்றனர்.
மன்னருக்கு மரியாதை தந்துதானே ஆகணும்?
கரப்பான்பூச்சி
நெருப்பு!
சின்னதுதான். ஆனால்
கரப்பான்பூச்சியை வீட்டை விட்டு விரட்டுவது அல்லது அழிப்பது சாதாரணமா? ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம்தான் இதற்கு சிம்பிள் உதாரணம்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள மௌண்ட் ஐசா பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர், அடிக்கடி
தொந்தரவு செய்யும் கரப்பான்பூச்சியை அழிக்க பிளான் செய்தார். ஒரு கையில் பூச்சி மருந்து ஸ்ப்ரேயும் இன்னொரு கையில் லைட்டருமாக கரப்பான்
பூச்சியை வேட்டையாடத் தொடங்கினார். சில கரப்பான் பூச்சிகளை ஸ்ப்ரேயை
பீய்ச்சி, உடனே லைட்டரை
அழுத்தி பொசுக்கியவர், திடீரென நடுவில் சொதப்பிவைக்க, வீடு தீப்பற்றிக்கொண்டது. சமையலறை, ஜன்னல் என பல இடங்களும் நெருப்பினால் சேதமானது. வீட்டின்
அருகிலிருந்தவர்கள் உடனே ஃபயர் சர்வீஸூக்கு போன் செய்ய, வீட்டின்
உரிமையாளர் தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.