"நான் படிச்சதே மக்களை உயர்த்தத்தான்"- ஜெயந்தி பருடா



Image result for jayanthi buruda





"நான் படிச்சதே மக்களை உயர்த்தத்தான்" - பழங்குடியில் முதல் ஜர்னலிஸ்ட் - .அன்பரசு

கல்வி ஒருவருக்கு தரும் தன்னம்பிக்கை என்பது தற்காலிக சந்தோஷங்களான உடை, தோற்றம் என்பதைக் கடந்தது என்பதற்கு சாட்சி ஒடிஷாவைச் சேர்ந்த ஜெயந்தி பருடா. அப்படியென்ன படிப்பில் சாதித்திருக்கிறார் இவர்? ஒடிஷாவில் மால்கங்கிரி மாவட்டத்திலுள்ள கோயா பழங்குடிகளில் கல்வி கற்க பள்ளி வாசலைத் தொட்டு பட்டம் பெற்று மக்களின் முன்னேற்றத்திற்காக அங்கேயே பணியாற்றியும் வருகிறார் என்பது தலைநிமிர்ந்து பேச வேண்டிய பெருமிதம்தானே!

"எங்கள் பழங்குடி இனத்தில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை பதினைந்து சதவிகிதத்திற்கும் குறைவுதான்" என வேதனையான குரலில் பேசும் ஜெயந்தி, கல்வியின்மையால் நிகழும் குழந்தை திருமணங்களைத் தடுக்க தன்னார்வ அமைப்பைத் தொடங்கி உழைத்து வருகிறார். ஏழை விவசாயியான தந்தையின் ஊக்கத்தால் ஜெயந்தி உட்பட அக்குடும்பத்தின் நான்கு சகோதரிகளும் கல்வி கற்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். "பள்ளிகளில் குறைந்தபட்சம் அடிப்படை கல்வி கற்றால் மட்டுமே நகரில் ஏதேனும் வேலை கிடைக்கும் என்ற நிலையில் படிக்காதவர்களின் நிலைமை என்னவாகும் சொல்லுங்கள்? மால்கங்கிரியில் வாழும் பழங்குடிகளில் நாங்கள் மட்டுமே கல்வி கற்ற முதல் குடும்பம்" என்று தன்னைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபடியே பேசுகிறார் ஜெயந்தி.

மால்கங்கிரியிலிருந்து நூற்றைம்பது கி.மீ தூரமுள்ள சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிக்க விரும்பிய ஜெயந்திக்கு வாய்ப்பு கிடைத்தது. தினசரி வாழ்வை நடத்த தடுமாறும் விவசாயிகளான பெற்றோரிடம் எப்படி உதவி கேட்பது என தயங்கியவருக்கு, தோழியின் பெற்றோர் உதவிக்கரம் கொடுத்தனர். "படிப்பிற்கான பணத்தை சிரமப்பட்டு திரட்டிவிட்டாலும் ஹாஸ்டலில் தங்குவதற்கு பணமில்லை. அப்போது தோழியின் குடும்பம்தான் தங்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்து உதவினார்கள்" என்ற ஜெயந்தி படிப்பு முடிந்ததும் புவனேஸ்வருக்கு இன்டர்ன்ஷிப்புக்காக சென்றார். இயக்குநர் பைரன்தாஸ், பழங்குடிப்பெண்ணான ஜெயந்திக்கு தேவையான பயிற்சிகளையும் தங்குமிடத்திற்குமான உதவிகளை மனமுவந்து செய்திருக்கிறார்.

இன்று நக்சலைட்டுகளின் ஊடுருவல் கொண்ட மால்கங்கிரி மாவட்டத்தில் செயல்படும் கலிங்கா தொலைக்காட்சி செய்தியாளராக பல்வேறு சவால்களை சந்தித்து பணியாற்றி வருகிறார் ஜெயந்தி.

1965 ஆம் ஆண்டு தண்டகாரண்யா திட்டத்தின் கீழ் வங்கதேச அகதிகள், தொண்ணூறுகளில் இலங்கை தமிழ் அகதிகளும் இங்கு வசிக்க குடியிருப்புகள் அமைத்து கொடுத்திருக்கின்றனர். "இப்பகுதியில் நான் ஒரே பெண் செய்தியாளர் என்பதால் ஆண் நிருபர்களுடன் போட்டியிட்டு என்னை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கும் போராட்டம் தொடர்கிறது. ஆங்கிலம் அறிந்த பழங்குடிப்பெண்ணான என்னை மாவோயிஸ்ட்டாக கருதி விசாரிக்கும் போலீசின் மனப்போக்கை சமாளிக்கும் சிக்கல்களும் இதில் உள்ளது" என்கிறார் பத்திரிகையாளர் ஜெயந்தி. போலீஸ் மற்றும் நக்சலைட் தாக்குதலால் பெற்றோர்களை இழந்த பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு,உடை,கல்வி ஆகியவற்றை தனது தன்னார்வ அமைப்பு உருவாக்கித் தந்துள்ளார் ஜெயந்தி பருடா. "இது பெரிய உதவி என்று சொல்லமுடியாது. என்னால் முடிந்ததை அவர்களுக்கு செய்ய முயற்சிக்கிறேன்" என அடக்கமாக பேசுகிறார்


நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசும் செய்தியாளராக இருக்கையில் ஏன் நகரத்திற்கு செல்லக்கூடாது என்ற கேள்விக்கு, "நான் வேறு நகரத்திற்கு சென்றால் இங்குள்ளதை விட வசதிகளும் பணமும் கிடைக்கும்தான். ஆனால் இது என்னுடைய தாய்நிலம். என்னுடைய வேர்கள் இங்குதான் உள்ளன. நான் படித்த படிப்பு என்னுடைய மக்களுக்காக பயன்படாதபோது அதற்கு என்ன மதிப்பிருக்கிறது?" என்று சொன்ன ஜெயந்தியின் லட்சிய சொற்களின் அசாத்திய வலிமை மலைக்க வைக்கிறது. உலகை வெல்வோம் வா தோழி