தலைவன் இவன் ஒருவன்!
தலைவன் இவன் ஒருவன்
கேத்தரின் மில்லர்
பகதூர் ராம்ஸி
லோகோ: கார்ட்டூன் கதிர் |
குறிப்பு: 11.5.2018 இதழோடு நான் எழுதிவந்த தலைவன் இவன் ஒருவன் எனும் சமூகநலம் சார்ந்த தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இளைஞர்கள் பற்றிய தொடர்(42 வாரம்) நிறைவடைகிறது. இத்தொடருக்கு லோகோக்களை செய்து தந்த Aum Designs மெய்யருள், மற்றும் கார்ட்டூன் கதிர் ஆகியோருக்கு என் நன்றிகள் கோடி. இத்தொடரை அனுமதித்த குங்குமத்தின் முதன்மை ஆசிரியர் கே.என்.சிவராமன், முத்தாரம் உதவி ஆசிரியர் ச.அன்பரசு ஆகியோருக்கும் என் பேரன்பு.
-பகதூர் ராம்ஸி
அமெரிக்காவிலுள்ள ஜேம்ஸ் பியர்ட் பவுண்டேஷனில் பணிபுரியும்
கேத்தரின் மில்லர், செஃப்களை இணைத்து ஆரோக்கிய உணவுகளை
தயாரிக்க வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். "சமையல்
குறித்த கருத்துகளை மக்களிடம் பேச விரும்பினால், உங்களுக்கு சமையல்
டெக்னிக்குகள் நன்றாக தெரிந்திருப்பது அவசியம்" என்கிறார்
கேத்தரின்.
உள்ளூர் உணவுவகைகளை பிரபலப்படுத்த செஃப்களுடன் இணைந்து
செயல்படுவது, நாஷ்வில்லே மேயர் மேகன் பேரியுடன் இணைந்து உணவு
வீணாவதை தடுக்கும் உணவு சேமிப்பு சவால் ஆகியவற்றை நடத்திய துணிச்சல் பெண்மணி கேத்தரின்.
"அமெரிக்கர்கள் தாங்கள் சாப்பிடும் உணவு பற்றி ஹோட்டல்காரர்களுடன்
பேச வேண்டிய நேரமிது." என கவனமாக பேசுகிறார் கேத்தரின்.
தன்னார்வ லாபநோக்கற்ற நிறுவனமான ஜேம்ஸ் பியர்ட்
பவுண்டேஷன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக உணவு வல்லுநர்களை ஊக்குவித்து
உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. "உணவுவகைகளை
உருவாக்குவதில் ரெஸ்டாரண்ட்டுகளும் செஃப்களும் தவிர்க்கமுடியாதவர்கள். அவர்களின் விழிப்புணர்வே மக்களின் ஆரோக்கியம் காக்கும்" என பொறுப்பாக பதில் பேசுபவர், செஃப் ஆக்ஷன் நெட்வொர்க் அமைப்பின் நிறுவனரும் கூட.
தரமான உணவை சரியான விலையில் பெறுவது உணவுக்குப்பைகளையும்
குறைக்கும் என்பதால், அதற்கான செயல்பாடுகளை தொடங்குவது
கேத்தரினின் லட்சியம். "நல்லுணவை அனைவருக்கும் கிடைக்கும்படி அவர்களை வாங்கும் விலையில்
தருவது இதற்கு சிறந்த தீர்வு. குடும்பத்தில் பல்வேறு முடிவுகளை
பெண்களே எடுப்பதால் அவர்களை இவ்வகையில் அணுக முயற்சிக்கிறோம்" என புன்னகை குறையாமல் பேசுகிறார் கேத்தரின்.
உணவுத்துறையிலுள்ள செஃப்களுக்கு ஆரோக்கிய உணவு பற்றிய
விழிப்புணர்வு அளிப்பதை தன் ஆயுள் லட்சியமாக கருதும் கேத்தரின் அதனை ஜேம்ஸ் பியர்டு
அமைப்பின் மூலம் பலருக்கும் பரப்ப உழைத்து வருகிறார்.
"புகழ்பெற்ற அமைப்பில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு பெரிய அதிர்ஷ்டம்.
தற்போது இதில் இணைந்துள்ள செஃப்களின் அறிமுகம் கிடைத்துள்ளது.இதன் வழியே அடுத்த தலைமுறைக்கான ஆரோக்கியத்தை உருவாக்கும் நம்பிக்கை பிறந்துள்ளது"
என விடை தருகிறார் கேத்தரின்.