மாணவர்களுக்கு கல்வியூட்டும் தேவதை!



Image result for nikitahari



மாணவர்களின் திறனறிவைக் கூட்டும் ஆராய்ச்சி மாணவி! - .அன்பரசு


கடவுள் தேசமான கேரளாவின் வடகரையின் பழங்காவு பகுதியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் தேவதையாய் வசீகரிக்கும் நிகிதா ஹரியைப் பற்றி பேச நிறையவே இருக்கிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் பொறியியல் முனைவர் மாணவியான இவர், ஏழை மாணவர்களுக்கு ஏஐ எனும் செயற்கை அறிவை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு அறிவியலின் உலகை திறப்பதற்காக உழைத்து வருகிறார்.

எம்.டெக் படிப்பில் தங்கமெடல் அணிந்த ஐக்யூ அரசி நிகிதா, கோழிக்கோட்டில் உள்ள என்ஐடியில் லெக்சரராக பணியாற்றியபடியே ஐஐடியில் ஆராய்ச்சிப்படிப்புக்கு விண்ணப்பித்தார். ஆனால் அங்குள்ள சூழல் நிகிதாவுக்கு ஏமாற்றம் தர, உடனே விமான டிக்கெட் போட்டு அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் முனைவர் படிப்பில் சேர்ந்தார். கடந்தாண்டு டெலிகிராஃபின் கணினி பொறியியலில் டாப் 50 பெண்கள் லிஸ்டில் இடம்பிடித்த பின்தான் இந்தியா திரும்பியிருக்கிறார் நிகிதா. கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பொறியியல் துறை மாணவி, டெலிகிராப் பத்திரிகையின் டாப் 50 லிஸ்டில் இடம்பிடிப்பது இதுவே முதல்முறை. அதிலும் இந்தியரான நிகிதா ஹரி என்பது நமக்கு ஸ்பெஷல் பெருமை.
"ஐஐஎம்மில் படிக்கும்போது மாணவர்களுக்கான வுடி(Wudi) ஸ்டார்ட்அப் ஐடியா மனதில் தோன்றிவிட்டது. மாணவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே வானமே எல்லை என்ற ரேஞ்சில் யோசிக்க வேண்டும் என்பதுதான் இந்த கண்டுபிடிப்பின் லட்சியம்என முகம் மலரப்பேசுகிறார் நிகிதா ஹரி. இவரின் இரண்டு ஸ்டார்ட் அப் முயற்சிகளில் நிகிதாவின் சகோதரர் அர்ஜூனும் கைகோர்த்திருக்கிறார்.

சரி வுடி என்றால் என்ன? திறமைகளை எடைபோடும் செயற்கை அறிவு புரோகிராம். இதன் மூலம் மாணவர்கள் தங்களின் துறைசார்ந்த அறிவை மேலும் மேம்படுத்திக்கொள்ள முடியும். "கவிதை எழுதும் டேலன்ட் இருக்கிற மாணவரிடம் நாம் ஏன் ஜியாமெட்ரி அறிவை எதிர்பார்க்கணும்? அவரிடம் கவிதையை இலக்கணப்பிழை இன்றி எழுதுவதை ஊக்குவிக்கலாமே! எங்களின் குழு Edu-Wudi மென்பொருளை பள்ளிகளுக்கு விலையின்றி வழங்கி மாணவர்களின் திறன்களை அவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் உணர்ந்துகொள உதவுகிறோம்." என ஆர்வமாக பேசுகிறார் நிகிதா.  

கோழிக்கோட்டில் ஐஐஎம்மில் பணியாற்றியபோது தோன்றிய நிகிதாவின் வுடி ஸ்டார்ட்அப் ஐடியாவை செயல்படுத்த இன்றுவரை நூற்றுக்கும் மேலானவர்களோடு அமைப்புகளும்  பதிவு செய்திருக்கின்றனர். வுடி திட்டத்தை பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பள்ளிகளில் செயல்படுத்தும் முயற்சிகளில் நிகிதா ஈடுபட்டுள்ளார்.

மற்றுமொரு கல்வி முயற்சியாக நிகிதா தன் பிஹெச்டி நண்பர்களான பாவ்லோ, ஸ்டெஃபனோ, மார்டின் ஆகியோருடன் இணைந்து தொடங்கியதுதான் ஃபாவேலி(Favalley). சேரிகளிலுள்ள மாணவர்களை அமெரிக்காவின் சிலிக்கன்வேலியிலுள்ள ஐக்யூ ஆளுமைகளாக மாற்றுவதே நிகிதாவின் லட்சிய பிளான். "எங்கள் அப்பா ஹரிதாஸ், எலக்ட்ரிக் பொருட்கள் தயாரிப்பாளராக 35 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். நாங்களும் படித்து சமூகதொழில் முனைவோர்களாக மாறியிருக்கிறோம். வுடி திட்டத்தின் வெற்றி, பிற ஐடியாக்களையும் கவனமாக டெவலப் செய்யும் பொறுப்பை தந்துள்ளது" என துறுதுறுவென பேசுகிறார் நிகிதாவின் சகோதரர் அர்ஜூன். கல்வி மற்றும் தொழில்நுட்பம் மட்டுமே எதிர்கால தலைமுறையை மேம்படுத்தும் என ஆழமாக நம்புகிறார் நிகிதா. மாணவர்களுக்கு கணினி மொழிகளின் அடிப்படைகளை எளிதாக கற்க பயிற்சி தருவது இந்த ஃபாவேலி ஸ்டார்ட்அப்பின் பணி.

"இம்முயற்சி தொடங்கியதே அழகிய கதை. பாவ்லோ, ஸ்டெஃபானோ ஆகிய நண்பர்களுடன் பேசியபோது விளையாட்டு மூலம் கோடிங்கை சொல்லித்தரலாம் என நினைத்தோம். பின் இதனை பிஸினஸ் மாடலாக மாற்ற மார்டின் உதவினார்." என்கிறார் நிகிதா. சேரிகளில் உள்ள குழந்தைகளுக்கு கணினி மொழிகளை சொல்லித்தந்து ஐடி வேலைகளை பெற வழிகாட்டுகிறது ஃபாவேலி டீம்.
ஃபாவேலி ஐடியாவை  புதிய சமூக தொழில்முனைவோருக்கான ஹல்ட் பரிசுக்கு விண்ணப்பித்து டாப் 10 இடங்களில் ஆறாம் பிடித்திருக்கிறது நிகிதா அண்ட் கோ. "போட்டியில்  எங்களின் ஐடியாவுக்கு பலரும் ஆதரவளித்தது பெரும் நம்பிக்கை தந்தது. நகரங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிலையான வருமானம் பெற்றுத்தருவதே எதிர்கால பிளான். 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளையும் 15 கோடி பேருக்கு நிலையான ஊதியத்துடனான பணிகளை 2022  ஆம் ஆண்டுக்குள் உறுதி செய்வதே லட்சியம்" என உறுதியாக பேசி விடை தருகிறார் நிகிதா. கனவுகள் வெல்லட்டும்!



மாணவர்களின் நோபல்!

2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹல்ட் பரிசு 5 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது. உலகெங்குமுள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு தரும் ஐடியாவைக் செயல்படுத்தும் சமூகதொழில்முனைவோர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து பரிசளித்து ஊக்கப்படுத்துகிறது. ஹல்ட் உலக வணிகப்பள்ளி மாணவரான அகமது அஸ்கார் என்ற மாணவரின் ஐடியா இது.

நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரம் தன்னார்வலர்களின் ஆதரவோடு ஒரு கோடி மாணவர்களின் கனவுகளை உலகிற்கு அறிமுகம் செய்த ஹல்ட் பரிசு பற்றி டைம் இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. 'முதலில் கல்வி'1 என்ற லட்சியத்தில் ஐம்பது ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஹல்ட் குழுமம், 53 நாடுகளில் கல்விச்சுற்றுலா, மொழித்திறன் பயிற்சிகள், பட்டப்படிப்பு அறிமுகம் என சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  

நன்றி:குங்குமம்

பிரபலமான இடுகைகள்