இம்மானுவேல் மேக்ரானின் நட்பதிகாரம்!




Image result for emmanuel macron



இம்மானுவேல் மேக்ரானின் நட்பதிகாரம்
 

கடந்தாண்டு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வலதுசாரி போட்டியாளர் மரைன் லெபெனை தோற்கடித்து நாற்பது வயதில் அதிபர் பதவியை எட்டிப்பிடித்து சாதித்தார் இம்மானுவேல் மேக்ரான். பதவியேற்று ஓராண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எட்டிப்பார்க்கும் முதல் டூர் இது.  

இந்தியாவுக்கும பிரான்சிற்குமான உறவு 1998 ஆம் ஆண்டிலிருந்து வலுப்பெற்று வருகிறது. அந்த ஆண்டில்தான் வாஜ்பாய் தலைமையிலான அரசு பொக்ரான் -2 அணுகுண்டு வெடிப்பை நிகழ்த்தியது. உடனே பல்வேறு வல்லரசு நாடுகளும் ஐ.நாவில் இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க ஆவேசமாக களமிறங்கின. அப்போது மேற்கத்திய நாடான பிரான்ஸ் மட்டுமே இந்தியாவிற்கு எதிராக கையெழுத்திட மறுத்தது. அன்றிலிருந்து இன்றுவரை அணுஆயுத உறுப்பினர் நாடாக, .நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவது உள்ளிட்ட பல்வேறு உலகளவிலான அமைப்புகளில் இடம்பெற உதவி செய்வது வரையில் இந்தியாவிற்கு அநேக உதவிகளை செய்துவரும் பிரான்சிற்குமான அரசுரீதியிலான நட்பின் வயது 20.

 2008 ஆம் ஆண்டில் அமெரிக்கா- இந்தியா அணுஆயுத ஒப்பந்தம் ஏற்படும்வரை இந்தியாவை ஆதரித்து அதன் தனிமைச்சூழலை களைய முயற்சித்த நாடு பிரான்ஸ் மட்டுமே. ரஃபேல் போர்விமானங்கள், ஸ்கார்பின் நீர்மூழ்கி கப்பல்களை பிரான்ஸ் இந்தியாவிற்கு விற்பனை செய்துள்ளதோடு, விண்வெளி ஆராய்ச்சியிலும் உற்றதுணையாக  நின்றது.

"இந்திய இறையாண்மையை காக்க மோடி எப்படி பாடுபடுகிறாரோ அதேபோல பிரான்சில் நாங்கள் உழைக்கிறோம்" என்கிறார் மேக்ரான்

2015 ஆம் ஆண்டு பாரீஸ் சூழல் ஒப்பந்தத்தில் அமெரிக்கா வெளியேறுகிறது என ட்ரம்ப் சொன்னபோது, மோடி மேக்ரானை சந்தித்து ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என நம்பிக்கை கொடுத்தார். அதன் பின் மேக்ரான் ட்ரம்பின் வாசகத்தை மாற்றி 'நாம் அனைவரும் இணைந்து உலகை உயர்த்துவோம்' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

புது தில்லி - சண்டிகர் வரையிலான அதிவேக ரயில்போக்குவரத்திற்கான பணியிலும் பிரான்ஸ் இணைந்துள்ளது. மேலும் இந்தியாவில் புதுச்சேரி, சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திலும் பிரான்ஸ் நாட்டின் பங்குண்டு. இந்தியாவில் மகாராஷ்டிராவிலுள்ள ஜைதாபூரில் ஆறு அணு உலைகள் பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும்படி அமைக்க ஒப்பந்தமிட்டும் வேலை சுணங்கி வருகிறது. உலக சோலார் கூட்டணியில் பிரான்சுடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது.

சீனா ஏறத்தாழ இந்தியாவை சுற்றி புள்ளிவைத்து கோலம்போடுவது போல OBOR திட்டத்தை இந்தியாவின் அண்மைநாடுகளுக்கு கடன்களை வழங்கி வளைத்துப்போட்டு செய்துவருகிறது

  மேலும் இந்தியப்பெருங்கடல், பசிஃபிக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த இந்தியாவிற்கு பிரான்ஸின் ஆதரவு தேவை. அதேநேரத்தில் ஐரோப்பிய நாடுகளின் அரசியலிலும் புயல். இத்தாலியில் வலதுசாரி ரஷ்ய ஆதரவு அணிகள் வெற்றி பெற்றிருப்பதோடு, பிரெக்ஸிட் நிகழ்வுகளும் பிரான்ஸை ஐரோப்பிய யூனியனை ஆதரிக்கும் தனியொரு நாடாக மாற்றுவதை தவிர்க்க இந்தியாவின் ஆதரவு தேவை

மேலும் ஸ்பெயினின் பிரிவினைவாதிகள் பிரச்னை, போலந்து, ஹங்கேரி, ஆஸ்திரியாவில் வலதுசாரிகள் எழுச்சி, இஸ்‌ரேல்-பாலஸ்தீன பிரச்னைகள் என மேக்ரான் மட்டுமல்ல; உலக நாடுகள் அனைத்தும் இணைந்து தீர்வு காணவேண்டிய பிரச்னைகள் நிறையவே உள்ளன.

தொகுப்பும் ஆக்கமும்: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்