சத்தியம் எப்போதும் தோற்பதில்லை !




Related image




சீண்டினால் தூக்கு!

பெண் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், வன்புணர்வு அதிகரித்துவரும் நிலையில் தடாலடியாக ஹரியானா அரசு தண்டனை சட்டங்களை இயற்ற ஆலோசித்து வருகிறது.

கடந்த ஆண்டு இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக பனிரெண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு என மத்தியப்பிரதேசம் சட்டமியற்றிவிட்டது. தற்போது ஹரியானாவும் அதனைப் பின்பற்றி செக்ஸ் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளது.

 பனிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்களுக்கு தூக்கு அல்லது பதினான்கு ஆண்டுகள் சிறைதண்டனை. இதனை ஆயுள் சிறையாகவும் மாற்றும் வகையில் தண்டனை வழங்கப்படலாம். இரண்டாவது, குழுவாக கற்பழிப்பவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை அல்லது இருபது ஆண்டுகள் சிறை நிச்சயம். சிறை தண்டனை, ஆயுளாகவும் மாறலாம். கூடவே அபராத்தொகையும் உண்டு. அமைச்சரவையின் இந்த சட்டப்பரிந்துரைகளை ஹரியானா அரசு  சட்டமாக்க ஆலோசித்து வருகிறது.  


 2
காலில் வெடிகுண்டு!

சினிமா தியேட்டரில், பொது இடத்தில் பாம் வைத்திருக்கிறார்கள் என்றால் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால ஆபரேஷன் தியேட்டரில் அதுவும் பேஷன்டிற்கு பாம் வைத்திருக்கிறார்கள் என்றால் மேட்டர் புதுசுதானே!

அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள சான் ஆன்டனியோவில் நோயாளி ஒருவருக்கு காலிலுள்ள பிரச்னையைத் தீர்க்க அறுவை சிகிச்சைக்கு முடிவானது. மருத்துவமனையில் பாதி ஆபரேஷனில் வலது காலின் கீழ்ப்பகுதியில் வெடிகுண்டு டிவைஸ் தென்பட, டாக்டர்கள் அனைவரும் கத்தி, கத்தரிக்கோல்களை வீசிவிட்டு வாய் பொத்தி அலறிவிட்டனர். அப்புறம், உடனே பாம் ஸ்குவாட்டிற்கு போன் செய்து, "சார் ஆபரேஷன் தியேட்டரில் பாம். சீக்கிரம் வந்து காப்பாத்துங்க" என பயத்தில் படபடத்து உதவி கோரினர். வெடிகுண்டு மீது நீர் அபிஷேகம் செய்த டாக்டர்கள், பாம் ஸ்குவாட் உதவியுடன் அதனை அகற்றி பரலோக பிதாவுக்கு நன்றி சொல்லியிருக்கின்றனர்.

3
பெண்களை உற்றுப்பார்க்காதீர்கள்!

பெண்கள் மீதான வல்லுறவு, குடும்ப வன்முறை பற்றி டஜன் கணக்கில் கட்டுரைகளை பலரும் தீட்டினாலும் மலையாளப் பத்திரிகை போல ஸ்ட்ராங்காக ஒரு படத்தை பிரிண்ட் செய்து உலகெங்கும் பாராட்டுகளை அறுவடை செய்ய முடியுமா?

கேரளாவிலிருந்து வெளியாகும் இருமாத இதழான கிரிகாலஷ்மி, ஒரு பெண் தன் குழந்தைக்கு பாலூட்டுவது போல படத்தை தன் அட்டையில் வெளியிட்டு உலகெங்கும் வைரல் பாராட்டுக்களை அள்ளியுள்ளது. "பாலூட்டும்போது எங்களை உற்றுப்பார்க்காதீர்கள்" என்பதுதான் கவர்ஸ்டோரி வாசகம். "எனது உடலை நான் நேசிக்கிறேன். பத்திரிகைக்கு போஸ் கொடுத்தது எனது மனசாட்சிக்கு நேர்மையாக எடுத்த முடிவுதான்" என கேள்விகளுக்கு நெத்தியடியாக பதில் சொல்லியிருக்கிறார் அட்டை மாடலான கிலு ஜோசப்.


4

சத்யமேவ ஜெயதே!

அரசு பதவிகளில் நேர்மைக்கு பரிசாக என்ன கிடைக்கும் என்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் கஸ்னி என்பவரே ஆகச்சிறந்த உதாரணம்.

ஹரியானாவில் ஐஏஎஸ் அதிகாரியாக வேலை செய்த பிரதீப் கஸ்னி, தன் 34 ஆண்டுகள் கறாரான பணிவாழ்க்கையில் 71 இடமாறுதல்களை சந்தித்துள்ளார். அதிலும் அரசியல்வாதிகளின் இறுதி தாக்குதலாக பிரதீப்பின் பணிமூப்பு காலத்தின் கடைசி ஆறுமாத காலத்திற்கு சம்பளமே தரவில்லை.  1984 ஆம் ஆண்டு மாநில அரசு பணிகளிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக 1997 ஆம் ஆண்டு புரோமோஷன் பெற்றவர் பிரதீப். கோர்ட் இவரது வழக்கை எடுக்க மறுக்க, மத்திய நிர்வாக ஆணையத்திடம் முறையிட்டு தன் சம்பளத்தை பெற்றிருக்கிறார். "இடமாறுதல்களை நான் நெஞ்சில் அணியும் மெடல்களாகவே நினைக்கிறேன். சிறிய மாநிலத்தில் இரண்டே நாட்களில் மூன்றுமுறை ட்ரான்ஸ்பர் செய்யப்பட்ட பெருமையும் எனக்குண்டு" என புன்னகைக்கிறார் பிரதீப்.

-குங்குமம்