ஸ்மார்ட்போன்களுக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம்?
கல்வி அறிவை ஸ்மார்ட்போன்கள் அதிகரித்திருக்கிறதா?- ச.அன்பரசு
நாள் முழுக்க இணையத்தில் உலவும் நாம் அதிலேயே மின்சாரம், போன் பில் கட்டுகிறோம்; ஸ்மார்ட்போனிலேயே தினகரன் நாளிதழை
வாசிப்பதோடு படத்தையும் கூட பார்க்கிறோம். இதற்கு காரணம் வாங்கும்
சக்தியா? அல்லது கல்வியறிவா?
இந்த வசதிகள் தங்களின் ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த கல்வியறிவால் சாத்தியமானது
என அரசியல்கட்சிகள் சவடால் அடித்தாலும் உண்மை அதுவல்ல என்பதை சைபர் மீடியா ஆராய்ச்சி
உடைத்து சொல்லியுள்ளது.
நம் தாத்தா, பாட்டி தலைமுறையினர்
பலருக்கும் ஸ்மார்ட்போன்களை ஆன் செய்யவும், அழைப்பு வந்தால் பட்டன்
அழுத்தி பேசவும், ஆஃப் செய்து வைக்கவும் மட்டுமே தெரியும்.
மேலதிகமாக போன்களை பயன்படுத்த தெரியாவிட்டாலும் அவர்கள் போன்களை பயன்படுத்துகிறார்கள்.
இதனை கல்வி அறிவென ஒப்புக்கொள்ளலாமா? ஒரே விஷயங்களை
திரும்ப திரும்ப செய்யும் பழக்கத்தினால் அது இயல்பாக நம் மனதில் பதிவதை இதற்கு காரணமாக
கொள்ளலாம்.
இந்தியாவில் கேரளா, குஜராத், மகராஷ்டிரா, இமாச்சல பிரதேசம்
ஆகியவை அதிக கல்வியறிவு கொண்ட மாநிலங்களாக உள்ளன. அதேசமயம் இங்கு
ஸ்மார்ட்போன்களின் பரவலும் அதிகம். படிப்பில் 94 சதவிகித தேர்ச்சி காட்டும் கேரளாவில் போன்களின் வளர்ச்சி 62%. அதே சமயம் 79 சதவிகித கல்வி விகிதம் கொண்ட குஜராத்தில்
போன்களின் பரவல் விகிதம் 56%. இந்தியாவின் தேசிய ஸ்மார்ட்போன்களின்
பரவல் விகிதம் 42% என்ற நிலையில் கல்வியில் முந்தும் மாநிலங்களான
இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஸ்மார்ட்போன்களின்
பரவல் விகிதம் 52% சதவிகிதமாக உள்ளது. இம்மாநிலங்களில்
கல்வி அறிவு என்பதை விட மக்களின் வாங்கும் சக்தியே ஸ்மார்ட்போன்களின் அதிகரிப்புக்கு
காரணம் எனலாம்.
கல்வி அறிவு குறைந்த மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள
பீகாரில்(61.8%),
27 சதவிகித ஸ்மார்ட்போன்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. தேசிய கல்வி சராசரியை விட மேற்கு வங்கம் கல்வி அறிவில் முந்தி 36 மாநிலங்களில் 20 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
சாதாரண போன்களிலிருந்து ஸ்மார்ட்போன்கள் வாங்க முக்கியக்காரணம்,
செல்போன் நிறுவனங்களின் மலிவு விலை இணைய பிளான்களும், வாங்கும் பட்ஜெட்டில் கிடைக்கும் பல்வேறு வசதிகளைக் கொண்ட போன்களும்தான்.
" வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வாழும்
மக்கள் உள்ள மாநிலங்களில் ஸ்மார்ட்போன் பரவல் குறைவாக உள்ளது.
இதில் மக்களின் வாங்கும் சக்தியும் முக்கியக்காரணி" என்கிறார் சைபர்மீடியா ஆராய்ச்சி நிறுவனத்தின் ஃபைஸல் கவூசா.
இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் இன்றும் ஸ்மார்ட்போன்களின்
விற்பனை,
வளர்ச்சி குறைவாக உள்ளது. தற்போது இதனை அடையாளம்
கண்டுகொண்ட போன் தயாரிப்பு நிறுவனங்கள், அங்கு கவனம் குவித்துள்ளன.
கல்வியும் போன்களின் பரவலும்!
பீகார் - 61.8%, 27%
மேற்கு வங்காளம் - 76.2%, 33%
ஒடிஷா - 72.8%, 34%
கேரளா - 94%, 62%
குஜராத் - 79%, 56%
(சைபர்மீடியா ஆய்வு, சென்சஸ்
2011 தகவல்படி)
ஸ்மார்ட் இந்தியா!
ஸ்மார்ட்போன்கள் வளர்ச்சி - இந்தியா(17%) சீனா(58%)
சமூகதளங்கள் பரவல் - இந்தியா(68%) சீனா(63%)
தினசரி பயன்பாடு - இந்தியா(43%),
சீனா(58%)
(Pew Research Centre 2016 Report)
தொகுப்பு: விஜி பிரமோத், ரேய்ஸ் வில்சன்
நன்றி: குங்குமம்