புடினும் ஜின்பிங்கும் உலகிற்கு சொல்ல வருவது என்ன?
உலகின் புதிய மன்னர்கள்!
ரஷ்யாவில் நான்காவது
முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாதீமிர் புடின், 2024 வரை ஆட்சியில் இருக்க ஜனநாயக
வழியிலேயே புதியபாதை உருவாக்கிவிட்டார். புடினின் ஜனவசீகரத்தை
பத்திரிகைகள் புகழ்ந்தாலும் புடினுக்குப் பிறகு ரஷ்யா என்னாகும் என்ற கேள்விக்கு யாரிடமும்
பதில் இல்லை என்பதே கசக்கும் நிஜம்.
சீனாவில் அதிபர் சட்டத்தை திருத்தி வாழ்நாள் அதிபராக
மாறியுள்ள ஜின்பிங் மற்றும் புடின் என இருவருமே நவீன ஜனநாயகத்தை மீண்டும் மன்னராட்சி
காலகட்டத்திற்கு நகர்த்தி செல்கிறார்கள். சீனா, ரஷ்யா இருநாடுகளும் உலகில் வலிமையானதற்கு லெனின்,
ஸ்டாலின், மாவோ உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் காரணம்
என்றாலும் இன்று, அந்த அடையாளங்களை துடைத்துவிட்டு வலதுசாரிகளின்
முக்கிய மையங்களாக மாறிவருகின்றன.
ரஷ்யாவின் இங்கிலாந்து,
அமெரிக்கா, உக்ரைன் சைபர் தாக்குதல்கள்,
உளவாளிகளின் கொலை, சீனாவின் கடல் ஆதிக்கப் போர்,
கடன் வலையில் நாடுகளை வளைப்பது என ஆசியப்பகுதிகளில் கதாநாயகனாக இருப்பது
யார் என்று போட்டியிலும் இறங்கிவிட்டன. மன்னரின் சொல்லே கட்டளை
பின் அதுவே சாசனம் என்று மாறும்போது அந்த நாட்டில் வாழ்வதற்கு பொருத்தமானவர்கள் எந்திரங்களே
தவிர மக்கள் அல்ல;
-கோமாளிமேடை டீம்
நன்றி: முத்தாரம்