ரிக்‌ஷா ஓட்டியே பள்ளி கட்டிய அசாம் மனிதர்!




Image result for assam rickshaw man ahmad



கல்வித்தந்தையான ரிக்சாக்காரர்!

அசாமின் பதர்கண்டி கிராமத்தில்தான் அந்த சாதனை மனிதர் வாழ்கிறார். ஜீவனத்திற்காக ரிக்சா ஓட்டும் அஹ்மது அலி, தன் செலவு போக, சேர்த்து வைத்த காசில் ஒன்பது பள்ளிகளை உருவாக்கியிருக்கிறார். பிரதமர் மோடி தன் ரேடியோ நிகழ்ச்சியான 'மனதின் குரலில்' அஹ்மது அலியைப் பாராட்டி பேசியது இந்தியா முழுக்க அவரை புகழ்பெறச்செய்திருக்கிறது.

 "உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பிலும், இறைவனின் கருணையிலும்தான் பள்ளிகள் உருவாயின" என அடக்கமாக பேசுகிறார் அலி. தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை விற்று, ஊராரிடம் சிறிது தொகையைப் பெற்று தொடக்கபள்ளியைத் தொடங்கினார் அலி. இவரின் ஊக்கமான பணியால்  மூன்று தொடக்கபள்ளிகள், ஐந்து ஆரம்ப பள்ளிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி என  ஆலமரமாய் விரிந்திருக்கிறது. ஊராரின் வற்புறுத்தலால் தொடங்கிய பள்ளிகளில் ஒன்றுக்கு மட்டும் அலியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. "வறுமையால் என்னால் படிக்க முடியவில்லை. எங்கள் அனைவரின் முயற்சியால் இன்று பள்ளி செல்லும் குழந்தைகளைப் பார்ப்பது மகிழ்ச்சி" என்கிறார் அசல் கல்வித்தந்தை அஹ்மது அலி

2
இங்கிலீஷ் பேசியதால் சிறை!

மொழி தெரிந்தால் எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்ளலாம் என்பார்கள். ஆனால் ஆங்கிலம் பேசியவருக்கு, பீகாரில் லாக்அப் தண்டனையோடு பைக் திருட்டு கேசும் பரிசாக கிடைத்துள்ளது.

பீகாரில் காகரியா மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக்குமார், பனிரெண்டாம் வகுப்பு மாணவர். லீவில் தன் மாமாவை சந்திக்க சென்றிருக்கிறார். வண்டி திருட்டு தொடர்பாக அபிஷேக்கின் மாமாவை போலீஸ் என்கொயரி செய்தபோதுஎதற்காக கைது செய்திருக்கிறீர்கள்? என ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதுதான் அபிஷேக்கின் குற்றம். உடனே அவர் கொடுத்த டாகுமெண்ட்ஸை கூட சரிபார்க்காமல் இருநாட்கள் லாக்அப்பில் வைத்து அடிபின்னியுள்ளனர். பைக் திருட்டு வழக்கை அபிஷேக் மீது பதிவு செய்து பெயில் வழங்கிய போலீசாரின் மீது அபிஷேக் புகார் செய்தபின்தான் இவ்விவகாரம் சூடுபிடித்தது. தற்போது முகேஷ் மற்றும் சியாம் சுந்தர்சிங் என இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

3

சாலட்டில் கரப்பான்பூச்சி!

மொராக்கோவிலிருந்து மும்பைக்கு விமானத்தில் பயணித்த வக்கீல் ஒருவர், பணிப்பெண் பாசத்துடன் தந்த சாலட்டை ஸ்பூனில் அள்ளியவர் வாயில் வைக்கும் முன் பதறிப்போனார். பின்னே கரப்பான்பூச்சி குதித்து ஓடினால் எப்படி?

முதல் வகுப்பில் தன் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு மும்பைக்கு திரும்பிக்கொண்டிருந்த வக்கீல் யூசுப் இக்பால், பணிப்பெண் வழங்கிய சிக்கன் சாலட்டை ஆர்வமாக சாப்பிட வாங்கினார். ஸ்பூனை எடுத்து ஒரு விள்ளல் எடுத்தவர், உள்ளே கபடியாடிய கரப்பான்பூச்சியைப் பார்த்து வீறிட்டு அலறினார். தற்போது விமான கம்பெனி மீது 87 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். விமான கம்பெனி கரப்பான்பூச்சி எப்படி விமானத்திற்குள் போயிருக்க முடியும் என ஆய்வு செய்து வருகிறது. ஃபைனைக் கட்டிட்டு கரப்பான்பூச்சியை பிடிக்கலாம் பாஸ்!