சிலையை வித்துடுங்க!


Related image





வரலாற்று சுவாரசியங்கள்

ரா.வேங்கடசாமி

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆர்தர் பெர்கூசுன், நாம் முன்னர் பார்த்த விக்டர் லஸ்டிக்கின் வகையறா. பிழைப்புக்காக நாடகத்தில் சிறிய ஜூனியர் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருந்த ஆர்தர், 1925 ஆம் ஆண்டு லண்டன் வந்தார். அங்கிருந்த டிரபல்கார் சதுக்கத்தில் நெல்சன் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டார். இங்கிலாந்து கப்பல்படை வீரரான நெல்சனை மக்கள் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்
 
"பிரிட்டனின் தேசியக்கடன் அதிகமாகிவிட்டதால், நெல்சனின் சிலையை விரைவில் விற்கப்போகிறார்கள்" என்று சோகமாக பேச, அருகிலிருந்த அமெரிக்க பணக்காரருக்கு ஆச்சரியம். ஆச்சரியத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட ஆர்தர் பேச்சை வளர்த்து சிலையை விற்கும் உரிமை பொதுப்பணித்துறை அதிகாரியான தன் வசமே இருக்கிறது என சொல்லி பேசினார். இந்த டீலிங்கை யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்லி சத்தியம் வாங்கிக்கொண்ட ஆர்தரை அப்படியே நம்பினார் அமெரிக்கர்.

சிலையை பீடத்திலிருந்து இறக்குவதற்கான கம்பெனி முகவரியை கொடுத்த ஆர்தர், 6 ஆயிரம் பவுன்களுக்கான செக்கை வாங்கிக்கொண்டு எஸ்கேப்பானார். அடுத்தடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையை தான் வாங்கியுள்ளதாகவும், பிக்பென் கடிகாரம் எனது சொத்து எனவும் ஒருவர் வந்து புகார் தர போலீசுக்கு தலையைப் பிய்த்துக்கொள்ளும் நிலை. போலீஸ் அவருக்கு வலைவிரித்தபோது ஆர்தர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.
முதல்போணி, வெள்ளை மாளிகை. 99 ஆண்டு குத்தகைக்கு மாளிகையை விற்பனை செய்த ஆர்தர்ஆண்டுக்கு பத்தாயிரம் டாலர்கள் விலை சொல்லி, ஓராண்டு தொகையை முன்பே வாங்கி டெக்சாஸ் பிரபுவை கோவிந்தா சொல்லவைத்தார்.
அடுத்த எய்ம், ஆஸ்திரேலியா. அமெரிக்காவின் ஹட்சன் நதியை விரிவாக்க சுதந்திரதேவி சிலையை அரசு விற்கவிருப்பதாக புரளியை உண்மை போலவே பேச ஆஸ்திரேலியாக்காரர் அப்படியே சுருண்டார். ஆர்தர் அந்த பரவசத்தில் செய்த தவறு சிலையருகே எடுத்த புகைப்படம்தான். வங்கிக்கு ஒருலட்சம் டாலர்களை ரெடிபண்ணச்சொல்லி ஆஸ்திரேலியாக்காரர் போன் போட, வங்கி ஷாக் ஆனது. உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க, புகைப்படத்திலிருந்தது ஆர்தர் என உறுதியாக ஸ்கெட்ச் போட்டு ஆர்தரை போலீஸ் வளைத்து பிடித்து அடித்து நொறுக்கி சிறையில் தள்ளியது. ஐந்து ஆண்டு சிறைவாசம் முடிந்து வெளியே வந்த ஆர்தர், வங்கிச்சேமிப்பிலிருந்த பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து 1938 ஆம் ஆண்டு ஆர்தர் காலமானார்.

ஸ்டென்பியின் ஆட்டம்!

விக்டர் லஸ்டிக்கை குருவாக வரித்த ஸ்டென்பி லோவே அவரின் வழியை பின்பற்றி வந்த அசகாய எத்தர்தான். இவர் என்ன செய்தார்? தன் குரு என்ன செய்தாரோ அதை ரீமேக் செய்தார் அவ்வளவுதான். "இரண்டாம் உலகப்போரில் ஈபிள் டவர் மோசமாக சேதமடைந்து விட்டது. எனவே கோபுரத்தை பிரித்து விற்றுவிட நினைக்கிறார்கள்" என ஆகாச புளுகை அவிழ்த்துவிட்டார் ஸ்டென்பி. யாரிடம்? யோசிக்க சோம்பல்படும் பேராசைக்கார அமெரிக்கரிடம்.

ஆசையில் கண்கள் விரிந்த டெக்சாஸ் பெரும்புள்ளி, விலை எவ்வளவு பாஸ் என்று ஸ்டென்பியின் வலையில் தானாக காலை உள்ளேவிட்டார். அப்புறம் என்ன? 40 ஆயிரம் டாலர்களை வேட்டையாடினார் ஸ்டென்பி. ஆனால் என்ன? சின்ன மிஸ்டேக்கினால் பணத்தோடு வீட்டுக்கு போகவேண்டியவர், ஒன்பது மாதம் சிறைக்கு செல்லும்படி ஆகிவிட்டது. பின் புகழ்பெற்ற ஆங்கிலப்படத்தயாரிப்பாளர் என்று சொல்லி முன்பணம் வாங்கி ஏமாற்றினாலும் ஸ்டென்பிக்கு ஆத்ம திருப்தி ஏற்படவில்லை. மால்பரோ அரண்மனையில் வேலைக்கு சேர்ந்தார். எதற்கு? ராணியின் நகைகளை அபேஸ் செய்து லைஃபில் செட்டிலாகும் லட்சியத்திற்காகத்தான். ஆனால் ஒருமுறை ஜாகுவார் காரில் வந்திறங்கி வேலைக்காரராக உள்ளே போனபோது போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. பின் திருந்தி வாழ்ந்தவர் எளிய வாடகை வீட்டில் வாழ்ந்து இறந்துபோனார்.