விஸ்வரூபமெடுக்கும் போலிச்செய்தி பூதம்! - அலசல் ரிப்போர்ட்



Image result for fake news



போலிச்செய்திகள்- விஸ்வரூப வில்லன்! -.அன்பரசு


மகாபாரத கதையில் துரோணரை வீழ்த்த தர்மர், தன் வாழ்நாளில் முதல்முதலாக பொய் சொல்ல ஒப்புக்கொள்வார். ஆம்! அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது என்று சொல்லாமல் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என கூறி, தந்திரமாக துரோணரை வீழ்த்துவார்கள். இன்று ட்விட்டர் வழியே போலிச்செய்திகள் இப்படித்தான் காட்டுத்தீயாக பரவி உலகெங்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன.
அண்மையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் ஊடக நிறுவனத்தின் வழக்கில் சிக்கிக் கொள்ள அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது

அப்போது ட்விட்டரில் "கார்த்தி மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி ப.சியின் ஜூனியர் வக்கீலாமே?" என்ற தொனியில் கேள்வி கேட்டிருந்தார் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி. பொய்யான இத்தகவலை பின்னர் இவர் அழித்துவிட்டாலும் அதற்குள்ளாகவே இந்த ட்வீட் இரண்டு லட்சம் பேர்களுக்கு மேல் சென்றடைந்து நீதிபதி மீதான சந்தேகத்தை தூண்டும் விவாதம் உருவாகிவிட்டது

உண்மையில் குருமூர்த்தியின் நோக்கம் ஜெயித்துவிட்டது.
அடுத்து கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் E=mc2 என்பதைவிட இந்தியர்களின் வேத அறிவு முன்னோடியானது என மறைந்த ஹாக்கிங் கூறினார்" என ஹாக்கிங்கின் இரங்கல் செய்தியில் பேசி உலகிற்கே அதிர்ச்சியூட்டினார்

செய்தியின் உண்மைத்தன்மையை சோதித்தால் அவர் சுட்டிக்காட்டிய இணையதளமே போலிச்செய்திகளைக் கொண்டது என தெரியவந்தது. "போலிச்செய்திகள் மக்களுக்கு விரைவில் மனபீதியை ஏற்படுத்தும்விதமாக திட்டமிட்டு தயாரிக்கப்படுகிறது" என்கிறார் ஆல்ட்நியூஸ் இணையதளத்தைச் சேர்ந்த பிரதிக் சின்கா. இத்தளம் இணையச்செய்தி உண்மையா, பொய்யா என கண்டறிய உதவுகிறது. 1890 ஆம் ஆண்டு வேர்ல்ட் மற்றும் ஜர்னல் ஆகிய பத்திரிகைகள் கடைப்பிடித்த கவர்ச்சிகரமான படிக்கத்தூண்டும் வதந்தி செய்திகளை குறிப்பிடும் யெல்லோ ஜர்னலிசம் என்பதின் இணைய வெர்ஷன்தான் போலிச்செய்திகள் எனலாம்.  

உணர்ச்சிகளை வேட்டையாடு!

கடந்தாண்டு ஜார்க்கண்டில் மட்டும் சமூகவலைதளங்களில் வெளியான போலிச்செய்திகளால் ஏழுபேர் கொல்லப்பட்டனர்.  SMHoaxSlayer , BoomLive  போன்ற இணையதளங்கள் ஆல்ட்நியூஸைப் போலவே போலிச்செய்திகளை ஆராய்ந்து தடுக்க உதவுகின்றன. அரசியல்வாதிகள் பணம் கொடுத்து போலிச்செய்திகளை உருவாக்கி கலவரத்தை உருவாக்கும் வேகத்திற்கு தன்னார்வமாக பணிபுரியும் இத்தகைய இணையதளங்கள் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே எதார்த்த உண்மை.

கடந்த ஜூனில் நடந்த கிரிக்கெட் மேட்சில் பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியது. உடனே வாட்ஸ்அப் சமூகதளங்களிலும் இந்திய முஸ்லீம்கள் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவது போல வீடியோக்கள் வெளியாயின. அவற்றின் காஷ்மீர் முஸ்லீம்களின் வீடியோ மட்டுமே உண்மை. "கட்டுரை உண்மையா,பொய்யா என உணர்வதற்குள் பல லட்சம் பேரிடம் இந்த வீடியோ பரவிவிட்டது. நாங்கள் குறுஞ்செய்தியைவிட வீடியோவின் பின்னணியை ஆராய்கிறோம். சாதாரண செய்தியை விட போலி வீடியோ ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்" என்கிறார் பிரதிக் சின்கா.

இந்தியாவின் கோயபல்ஸ்குழு!

போலிச்செய்திகளை தனிநபர்களை விட அரசியல் கட்சிகள் ஆட்களை சம்பளத்துக்கு அமர்த்தி கச்சிதமாக உருவாக்கி ட்விட்டர்,ஃபேஸ்புக் மூலம் வெளியிடுகின்றன. அமெரிக்காவில் வலதுசாரி கருத்துக்களை வெட்டி ஒட்டி வெளியிடும்  Breitbart      தளத்தின் இந்தியபதிப்பு போலவே Postcard தளம் பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிறது. insistpost,ViralinIndia, Newstrend.news ஆகியவற்றில் ஸ்பெஷலாக உருவாகும்  போலிச்செய்திகளை சமூகவலைதளத்தில் வைரலாக்குகிறார்கள்.

இச்செய்திகளின் மூலம் கலவரம், படுகொலை நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு? ஏனெனில் ஒருவர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகதளங்களில் செய்தியை பிறருக்கு அனுப்பி பகிர்ந்துவிட்டு அதனை தன் செல்போனில் அழித்துவிடமுடியும். வீடியோ எடிட்டிங் மூலம் ஒருவர் தன் இஷ்டப்படி இதனை வெட்டி ஒட்டுவது விபரீதத்திற்கு வழிவகுக்கிறது. சைபர் சட்டங்கள் அமுலில் இருந்தாலும் போலிச்செய்திகள், ட்ரோல்களை தடுப்பதற்கான சட்டங்களும் இன்றுவரையில் இயற்றப்படவில்லை. எதற்கு இந்த பிரயத்தனம்? அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் பலத்தைக் காட்டவே போலிச்செய்திகள், போலிவீடியோக்களை நாஸி கட்சியின் ஜேம்ஸ் கோயல்ஸைப் போல இரக்கமின்றி பயன்படுத்துகின்றனர்.

ஜனநாயகத்துக்கு வேட்டு!

போலிச்செய்திகளை பரப்புவதில் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என கட்சிபேதமே கிடையாது. கடந்தாண்டு உள்துறை அமைச்சர் காலடியில் குஜராத் டிஎஸ்பி அமர்ந்திருப்பது போன்ற மார்பிங் செய்த போலி படத்தை காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சஞ்சய் ஜா, அர்மான் அரோரா ஆகியோர் வெளியிட்டு பின்னர் அதனை வாபஸ் பெற்றனர். அண்மையில் திரிபுராவிலுள்ள ராஜிவ்காந்தி சிலையை ஒருவர் உடைப்பது போன்ற படத்தை ஆர்கனைசர் இதழ் ஆசிரியர் பிரபுல்லா கெட்கர் வெளியிட்டார். இச்சிலை ஆந்திராவில் உள்ளது பின்னர் தெரியவந்தது.


போலிச்செய்திகள் மற்றும் ட்ரோல் செய்வதற்கு தனி குழுக்களை கட்சிகள் கொண்டிருக்கின்றன. இதற்கு சம்பளமாக  ஒருவருக்கு தினசரி ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா நடக்கிறது. பல்வேறு சிம்கார்டுகளைக் கொண்ட போன்கள், பல்வேறு டூப் பெயர்கள் என தொடங்கி குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் ட்ரெண்டிங்கில் கொண்டுவந்து டிவிகளிலும் இடம்பெற வைக்கிறார்கள். போலிச்செய்திகள் விவாதத்தை தொடங்க மிக அவசியம். "ஓட்டுமெஷின்களின் குறைபாடு பற்றிப் பேசும்போது, மால்டா பகுதி வன்முறையைப் பற்றி கருத்து கேட்டு விவாதத்தை தடம்புரள வைப்பார்கள்" என்கிறார் ஆம் ஆத்மியைச் சேர்ந்த அங்கித்லால். ட்விட்டரில் பிரபலங்களின் கமெண்ட்டுகளை வழிமொழிவது, அவர்களை ட்ரோல் செய்வது போன்றவற்றை மறைமுகமாக கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதரிக்கின்றன. கம்பெனிகளை பற்றி தங்கள் கமெண்ட்டில் குறிப்பிடும் பிரபலங்களுக்கு கரன்சியை வாரி இறைக்கும் இவை ட்ரெண்டிங் கமெண்டுகளை காட்டி டிவியில் வரவைத்தால் மேலதிக வரும்படி நிச்சயம். "பதிவுக்கு ரூ.10-1000 வருமானம் பார்க்கலாம்.அதற்கு உங்கள் சமூக அந்தஸ்தோடு, நிறைய ஃபாலோயர்ஸ் தேவை" என்கிறார் சமூகவலைதள மேலாளரான அக்ஷய் கவுர். தற்போது இந்த ட்ரோல்பாணி, இன்ஸ்டாகிராமிலும் பரவிவருகிறது.

ட்ரோல் எனும் மனநோய்!

அண்மையில் இந்தி நடிகை கல்கி கொச்சின், ரவீணா டாண்டன் ஆகியோர் கடுமையாக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் விமர்சனம் செய்யப்பட்டனர். கல்கி, மேலாடையின்றி போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதுதான் கடுகடு வசவுகளுக்கு காரணம். ட்ரோல் எனும் வசவுகளுக்கு முக்கிய காரணம், இணையத்தில் ஐந்து மணிநேரங்களுக்கும் மேலாக செலவு செய்யும் சமூகத்திலிருந்து ஒதுங்கியுள்ள மனிதர்கள்தான். டாப்லெஸ் போட்டோ விமர்சனத்திற்குள்ளாகிறது எனில் இந்திய பாணியில் புடவை கட்டிய ரவீணா டாண்டன் ஏன் கடுமையாக வசைபாடப்படுகிறார்? காரணம் மற்றவர்களை காயப்படுத்துவதன் மூலம் மகிழ்ச்சி பெறும் மனநோய்க்கு உள்ளான இணையமனங்கள்தான் காரணம்.

பிரபலங்களை விடுங்கள்; நீங்கள் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் அல்லது மனைவியுடன் செல்ஃபீ, பொது நிகழ்வில் கலந்துகொள்வது, பிறந்தநாள் பார்ட்டி என எதை ட்விட்டரில், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினாலும் உங்களை சீண்டி வெறுப்பேற்ற புண்படுத்தவெனவே மனிதர்கள் கழுகுகளாய் ட்விட்டரில் காத்திருப்பதே இன்றைய நிஜம்.
பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் தாருணிகுமார் மோடியின் மூன்றாண்டு ஆட்சி குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டவர், உடனடியாக நெட்டிசன்களிடமிருந்து வாழ்வில் இதுவரை சந்திக்காத கடுமையான வசவுகளை சந்திக்க நேரிட்டது. வீடியோவைப் பற்றியல்ல; தாருணியின் தோற்றம், அவரது நடத்தை பற்றிய காதுகூசும் வார்த்தைகள் அவரது அலுவலக போன், அவரின் தொலைபேசி என விடாமல் துரத்தியிருக்கின்றன. "என்னை தாக்க பயன்படுத்திய வார்த்தைகளை என்றுமே மறக்கமுடியாது

இணையத்தில் குழுவாக என்னை வன்புணர்வு செய்த உணர்வுதான் மிச்சமிருக்கிறது" என்கிறார் தாருணிகுமார்.   இதேநிலைதான் கேரளாவின் பெண் ஆட்டோ ஓட்டுநரான சித்ரலேகாவுக்கும் கிடைத்தது. அவரின் இடதுசாரி எதிர்ப்பு குறித்த விமர்சனங்கள் மெல்ல ஜாதி, அவரது பாலினம் குறித்த வசையாக மாறியதை இன்றும் கொடுங்கனவாக மறக்கவே நினைக்கிறார் சித்ரலேகா. சைபர் சட்டங்கள் இன்னும் விரிவுபடுத்தப்பட்டு போலிச்செய்திகள், இணையத்தாக்குதல்களையும் உள்ளடக்குவதே இதற்கு ஒரே தீர்வு.



சத்யமேவ ஜெயதே!

Altnews.in
2016 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த கணினி பொறியாளர் பிரதிக் சின்காவினால் தொடங்கப்பட்டது. பெற்றோர்களால் ஊக்கம் பெற்ற சின்கா, 2016-17 ஆம் ஆண்டு இந்திய -பாக் எல்லையில் மின்விளக்குகளை அமைத்ததாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட போலிச்செய்தியைக் கண்டுபிடித்தது முக்கியமானது.

SMHoaxSlayer.com

2015 ஆம் ஆண்டு மும்பையில் கணினி பொறியாளர் பங்கஜ் ஜெயின் தொடங்கிய தளம் இது. பாகுபலி 2 திரைப்பட வசூலில் 112 கோடியை ராணுவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு வழங்குவதாக பரவிய போலிச்செய்தி, 2016 இல் இரண்டு ராணுவ வீரர்களை பாகிஸ்தானில் தலைவெட்டிக்கொன்ற போலிப்படச்செய்தி ஆகியவற்றை கண்டுபிடித்தார்.

Boomlive.in

2016 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த கோவிந்தராஜ் எத்திராஜ், ஜென்சி ஜோசப் என்ற நண்பர்களால் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது. கடந்தாண்டு வெளியான வீடியோவில் கர்ப்பிணிப்பெண்ணை அழைத்து வருபவரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் காட்சி போலியானது என கண்டுபிடித்தனர்.

Check4spam.com

2016 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த பால்கிருஷ்ண பிர்லா, சம்மாஸ் ஆலியாத் ஆகியோரால் தொடங்கப்பட்ட இணையதளம் இது. தாவூத்தின் 17 ஆயிரம்கோடி சொத்துக்கள் அரபு அமீரக அரசால் கையகப்படுத்தப்பட்டது என்ற போலி செய்தியைக் கண்டுபிடித்தனர்

தொகுப்பு: வின்சென்ட் காபோ அண்ட் கோ
நன்றி: குங்குமம்