சூழல்பிரச்னைகளை தீர்க்க கடிதம் எழுதுங்கள்!- டியர் டுமாரோ கதை!









தலைவன் இவன் ஒருவன்

திரிஷா ஷ்ரூம், ஜில் குபித்

பகதூர் ராம்ஸி


ஹார்வர்ட் பல்கலையில் படித்தவர்களான திரிஷா ஷ்ரூம், ஜில் குபித் இருவரும் பருவநிலை மாறுபாட்டை தங்களின் குழந்தைகளிடம் பேசுவதற்கு முயற்சித்தனர். அதற்காக தொடங்கியதுதான் டியர் டுமாரோ திட்டம். "சூழல் பிரச்னைகளைப் பற்றி என் மகளுக்கு புரியவைப்பது குறித்து யோசித்தபோதுதான் டியர் டுமாரோ ஐடியா கிடைத்தது. சிறந்த எதிர்காலத்தை குழந்தைகளுக்கு உருவாக்குவது நமது கடமைதானே!" என்கிறார் ஷ்ரூம்.

டியர் டுமாரோ என்பது இணையதளத்தில் கடிதம், ஒளிப்படங்கள், வீடியோ என எதனையும் பதிவு செய்து அனுப்பி அசத்தலாம். தற்போதுவரை 500 கடிதங்கள் இதில் எழுதி பரிமாறப்பட்டுள்ளன. "பருவச்சூழல் மாறுபாட்டை நாம் நம் குழந்தைகளின் கண்களின் வழியாக பார்ப்பது இன்றைய அவசியத்தேவை" என புன்னகையுடன் பேசுகிறார் குபித். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பத்தாயிரம் கடிதங்களை அனுப்புவதோடு 2 கோடி மக்களை டியர் டுமாரோவில் சேர்ப்பதே ஷ்ரூம் மற்றும் குபித்தின் இலக்கு.
நிறுவனத்தின் நிகழ்ச்சிகள், நிதி திரட்டுவது, ஐடியாக்கள் எழுதுவது, விளக்குவது ஆகியவற்றை திறம்பட செய்யும் குபித், ஹார்வர்டு கென்னடி பள்ளியில் பொதுநிர்வாகம் படித்தவர். டெட் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்று உரையாடியுள்ளார். அதே ஹார்வர்டு கென்னடி பள்ளியில் சூழல் பொருளாதாரம் கற்ற திரிஷா, டியர் டுமாரோ தளத்தில் அடிப்படைகளை வகுத்தளித்திருக்கிறார். உயிரியல் பட்டதாரியான திரிஷா, சூழல் சட்டங்களைக் குறித்த ஆய்வை பத்தாண்டுகளுக்கு மேலாக செய்துவருகிறார்.

"நம் குழந்தைகள், பேரப்பிள்ளைகளுக்கு கடிதம் எழுதுவதுதான் இதில் முக்கியமானது. குறிப்பிட்ட சூழல் பிரச்னைகளை நாம் எப்படி உணர்கிறோம், தீர்வுக்கு முயற்சிக்கிறோம் என்பது ஆவணமாகிறது. தற்போது கடிதங்கள், காணொளி, ஒளிப்படங்கள் என ஆர்வமுள்ளவர்கள் பங்களிக்கிறார்கள்" என்கிறார் குபித். இத்திட்டத்திற்கான ஊக்கத்தை கரிம எரிபொருட்கள் விரைவில் தீர்ந்துவிடும் என்ற எச்சரிக்கை இவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

எழுதியதில் உங்களுக்கு பிடித்த கடிதம் எது என்ற கேள்விக்கு, "டென்னிசியைச் சேர்ந்த களப்பணியாளர் தன் மகளுக்கு எழுதிய கடிதம் எனக்கு அசத்தல் இன்ஸ்பிரேஷன். மகளின் இயற்கை ஆர்வத்தோடு தொடங்கி சூழல் மாறுபாட்டைப் பற்றி பேசும் அந்த கடிதம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்." என நெகிழ்கிறார் குபித். மக்கள் இணைந்து சூழல் கேட்டிற்கு எதிராக போராடுவார்கள். அன்பு நிறைந்த ஆரோக்கிய உலகம் தொடங்கும் என்பது குபித், திரிஷாவின் நம்பிக்கை.