தங்கவேட்டை கொள்ளையர்கள்!
வரலாற்று சுவாரசியங்கள்
ரா.வேங்கடசாமி
ஒரு நாட்டிலுள்ள தங்க இருப்பிற்கு ஏற்ப இன்று பணம் அச்சடிக்கப்படுகிறது. வியாபாரத்தில் தங்கத்தை பரிமாற்றம் செய்வதை ஊக்குவித்த நாடு பிரிட்டன்தான். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக போரிட தங்க நாணயங்களே பெருமளவு உதவின. தங்கத்தை கள்ள நாணயமாக பயன்படுத்தும் போக்கும் உருவாகி வளர்ந்தது.
மாசிடோனியாவைச் சேர்ந்த பணக்கார யூதர் ஜோஸ் பெராகா. 1941 ஆம் ஆண்டு ஜெர்மன் படை யூகோஸ்லேவியா நாட்டை ஆக்கிரமித்தபோது, ஜோஸ் பெராகவின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அப்போது பெராகவும் மிகச்சில உறவினர்களும் அல்பேனியாவுக்கு படகு வழியாக தப்பிச்சென்றனர். உதவியது, தங்க நாணயங்கள்தான்.
இத்தாலி மொழியைக் கற்ற பெராகா, தன் உறவினர்கள் மூலம் வியாபாரம் செய்யத் தொடங்கினார். ஆனால் கரன்சி நோட்டுக்களின் மீதான கிடுக்குப்பிடி சட்டங்களால் ஏற்றுமதி தொழில் நஷ்டமாகி அழிந்தது. பிரிட்டனின் தங்க நாணயத்தில் பயன்படும் தங்கத்தின் மதிப்பு 9 பவுண்டுதான். ஆனால் மதிப்பு 20 பவுண்டு. உடனே மூளையில் பளிச்சென பிலிப்ஸ் பல்ப் எரிய நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலையை சுயம்புவாக தொடங்கினார் பெராகா. அரசின் நாணயங்களை விட அச்சிலும் தரத்திலும் பெராகா மார்க் தங்க நாணயங்கள் சூப்பராக வசீகரித்தன. 1951 ஆண்டு பெராகா கோடீஸ்வரராகி விட்டார். உடனே குஷியானவர், தொழிலை தன் மேனேஜரிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்துடன் ஸ்விட்சர்லாந்துக்கு சென்றுவிட்டார். 1952 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, பெராகாவின் தொழிற்சாலையைக் கண்டுபிடித்து ஸ்விட்சர்லாந்திலுள்ள பெராகாவை ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசைக் கோரியது. தான் தயாரித்தது சவரன் என்ற நாணயம்தான். இதனை கடைகளிலோ, கருவூலத்திலோ யாரும் பெறுவதில்லை; தங்கம் சேகரித்து வைப்பவர்களும் நாணயச்சேகரிப்பாளர்கள் மட்டுமே வாங்குவார்கள் என புதுக்காரணம் சொன்னார் பெராகா. அப்புறம் என்ன? அட்வகேட்டாக மாறி பெராகா சொன்ன வாதம் பிரிட்டிஷ் அரசும் நிராகரிக்க முடியாதபடி இருந்ததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்று ஸ்விட்சர்லாந்து நாட்டு அரசு கூறிவிட்டது.
ஸ்டாம்ப் கொள்ளை
பணம் அச்சிடுவது லாபம், ஆனால் ஸ்டாம்ப் அச்சிட்டு விற்பது லாபமும் கிடையாது. அவ்வளவு எளிதில் விற்கவும் முடியாது. இதில் கொடிகட்டிப் பறந்தவர்தான் சாமுவேல் ஆலன் டைலர்(1838-1913). 1863 ஆம் ஆண்டு இவரின் பாஸ்டன் கேங் எனும் குழு, கள்ள தபால்தலையை உருவாக்கியது. அன்று பல்வேறு உள்ளூர் தபால்நிலையங்கள் தபால்தலைகளை தாங்களாகவே அச்சிட்டு வெளியிட்டன. டெய்லர் இதுபோன்ற தபால்தலைகளை செலக்ட் செய்து அச்சிட்டு லாபம் பார்த்தார். போலீஸ் இடையிடையே பிடித்தாலும் விரைவில் ரிலீசாகி 1905 ஆம் ஆண்டுவரை தொழிலை திறம்பட நடத்தினார்.
இங்கிலாந்திலிருந்த ராயல் பிலாடலிக் சொசைட்டி போலி ஸ்டாம்புகளை கண்டுபிடிக்க உறுப்பினர்களை நியமித்தது. அப்போது ஜீன் டி ஸ்பெராட்டி(884-957) என்ற இத்தாலிக்காரர் போலி ஸ்டாம்புகளை தயாரித்ததோடு அவை ஒரிஜினல் என வல்லுநர்களிடம் நற்சான்றிதழ் வாங்கி வெளியிட்டு சம்பாதித்தார். பிரான்ஸ் நாட்டுக்கு வெளியே இவற்றை கடத்த முயன்றபோது போலீஸ் பிடித்தவுடன், இவை போலி ஸ்டாம்புகள் என்று சொல்லி தப்பித்தார். தபால்தலை சேகரிப்பாளர் சங்கம் ஸ்பெராட்டிக்கு 20 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து தொழிலிலிருந்து ரிடையர்ட்டாக வைத்தனர். ஏன் இதனை செய்தாராம்? ஜஸ்ட் ஃபார் ஜாலி என்று சிரித்தார் மரணப்படுக்கையில் படுத்திருந்த ஸ்பெராட்டி.