ரேப் செய்தால் மட்டன்குழம்பு பிராயசித்தம்! - புதன் பிட்ஸ்!






கற்பழிப்புக்கு மட்டன்குழம்பு தண்டனை!

சத்தீஸ்கரைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மட்டன் குழம்பு பார்ட்டியை தண்டனையாக விதித்துள்ளது.

சத்தீஸ்கரின் ஜாஸ்பூர் மாவட்டத்தில் மூன்று பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாகினர். வல்லுறவு செய்த குற்றவாளிகள் மீது பெண்களின் தந்தை புகாரளிக்க, மூன்று வல்லுறவு குற்றவாளிகளை விசாரித்த கிராம பஞ்சாயத்து 30 ஆயிரம் அபராதம் விதித்து மட்டன் குழம்பு பார்ட்டி நடத்தச்சொல்லி  உத்தரவிட்டது. டென்ஷனான பெண்ணின் தந்தை போலீசில் புகார் தந்ததை எதிர்த்த கிராம பஞ்சாயத்து குற்றவாளிகளிடம் காம்ப்ரமைஸாக போக வற்புறுத்தி 45 பேரிடம் தலா ரூ.485 வசூலித்து தந்துள்ளதுகற்பழிப்புக்கு கறிக்குழம்பு பார்ட்டி வைப்பது கொண்டாட்டமா? தண்டனையா?

தியேட்டரில் வீட்டு ஸ்நாக்ஸ்!

தியேட்டர் டிக்கெட்டோடு பாப்கார்னுக்கு நூறு ரூபாய் கொடுக்கும் நிலையிலா இந்தியர்கள் இருக்கிறார்கள்? அதனால்தான் மகாராஷ்டிரா அரசு சினிமா ரசிகர்கள் ஸ்நாக்ஸை வீட்டிலிருந்தே கொண்டு வந்து தியேட்டரில் சாப்பிடலாம் என உத்தரவிட்டிருக்கிறது.

"உணவு வழங்குதல்துறை அமைச்சர் ரவீந்திர சவான், சினிமா திரையரங்குகளில் வெளிப்புற உணவுகளை அனுமதிக்கலாம். மாநில அரசுகள் இவ்விதியை ஏற்காத தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிமை உண்டு" என கூறியுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் இவ்விதியால் ஸ்நாக்ஸ்களை தியேட்டருக்கு எடுத்துச்சென்று சாப்பிடுவதோடு அங்கேயே வாங்கினாலும் விலை வெளியிலுள்ள மார்க்கெட் ரேட்டில் இருக்குமாம். "அரசின் இம்முடிவு ஏதும் எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக கிடைக்கவில்லை" என்கிறார் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் சங்கத்தின் தலைவரான தீபக் ஆஷர்.

ஜாதியால் விரக்தி!

குஜராத்தைச் சேர்ந்த ஆட்டோ ட்ரைவர் சமூகத்தின் ஜாதி ஒடுக்குமுறையால் விரக்தியடைந்து தன்னை மதச்சார்பற்ற மனிதர் அல்லது நாத்திகர் என அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குஜராத்தின் சந்த்கெடா பகுதியைச் சேர்ந்த ராஜீவ் உபாத்யாய், "எந்த மதத்தையும் ஒருவர் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அரசியலமைப்புச்சட்டம்(சட்டம் 25,26) வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் நிலவும் ஜாதி அமைப்புமுறை எனக்கு கடுமையான மன வருத்தத்தை அளிக்கிறது. எனவே என்னை மதச்சார்பற்றவன் என அறிவிக்கவேண்டும்" என்று கூறியவரின் புதுமை கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் நிராகரித்துவிட்டார். அதனால் என்ன? உடனே கோர்ட்டுக்கு போய்விட்டார் ராஜீவ்.   பட்டியல் இனத்தின் குரு பிராமின் வகுப்பைச் சேர்ந்தவரான ராஜீவ் "என்னை நாத்திகர் அல்லது மதசார்பற்றவர் என அழைக்க அனுமதி கிடைக்காவிட்டால் தேசியவாதி என்று அழைக்கவாவது அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன். நீதிமன்றம் என் கோரிக்கையை விசாரணைக்கு ஏற்றால் நானே ஆஜராகி வாதாட உள்ளேன்" என திகைக்க வைக்கிறார். இந்தியாவில் யாருமே யோசிக்காத கோணம் ப்ரோ!

பான்கார்டு சீர்திருத்தம்!

விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் வளர்ப்பு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள் பான்கார்டுகளில் முன்னாள் கணவர் அல்லது தங்கள் தந்தை பெயரை பயன்படுத்த அவசியமில்லை என்ற சீர்திருத்தத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள்நல அமைச்சர் மேனகாகாந்தி நிதித்துறையிடம் முன்மொழிந்துள்ளார்

நிதியமைச்சர் பியூஷ் கோயலுக்கு மேனகா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், விவாகரத்து பெற்ற பெண்கள் தங்களுடைய தந்தை பெயரை குறிப்பிடாமல் பான்கார்டு பெற உதவும் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பல்வேறு அரசு அமைப்புகளில் அடையாள அட்டையாக பயன்படும் பான்கார்டைப் பெற விவாகரத்து பெற்ற பெண்கள் தம் முன்னாள் கணவர் அல்லது தந்தை பெயரை தெரிவிப்பது கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது. பெண்கள்நல அமைச்சகத்தின் முயற்சிக்கு தேசிய பெண்கள் கமிஷனைச் சேர்ந்த ரேகா சர்மா, பெண்களை முன்னேற்றும் முயற்சி என்றுகூறி பாராட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கு 1 ரூபாய் இழப்பீடு!

அண்மையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 1,092 விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டது. இதில் ஆச்சரியம் வழங்கப்பட்ட தொகைதான். இழப்பீடாக நபருக்கு தலா ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை வழங்கப்பட்டதுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பீட் மாவட்ட நிர்வாகம் மத்திய கூட்டுறவு வங்கியில் பயிர்க்காப்பீட்டுத்தொகை டெபாசிட் செய்திருப்பதாக அறிவித்து பட்டியலை வெளியிட்டது. அதில் 773 விவசாயிகளுக்கு ரூ.1, 669 விவசாயிகளுக்கு ரூ.2, 50 விவசாயிகளுக்கு ரூ.3, இதிலும் அதிர்ஷ்டம் பெற்றவர்களுக்கு ரூ.5 ம் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாவட்டங்களிலேயே அதிக விவசாயிகள்(11,68,359 பேர்) பீட் மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுக்கு தங்கள் பெயரை இணைத்தனர். பிரதான்மந்திரி ஃபஸல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பயிர்க்காப்பீடு, மோசடித் திட்டம் என்பது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. "அரசு இழப்பீடாக 2 ஆயிரத்து 200 கோடி தருவதாக கூறியுள்ள நிலையில் வெறும் 165 கோடி மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்கிறார் ஸ்வபிமானி ஸ்டேட்கரி சங்காதனா அமைப்பைச் சேர்ந்த யோகேஷ் பாண்டே





பிரபலமான இடுகைகள்