அடிமை முறையின் வேர்!





Image result for roots alex haley


ஏழு தலைமுறைகள்(சுருக்கம்)
அலெக்ஸ் ஹேலி
தமிழில்: எத்திராஜூலு
சிந்தன் புக்ஸ்
ரூ.150
(நான்காவது சென்னை புத்தகத்திருவிழா, ராயப்பேட்டை YMCA)


ஏழுதலைமுறைகள் எனும் அலெக்ஸ் ஹேலி எழுதிய மூல நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 900 பக்கங்கள் தாண்டும். அதைத்தான் படிக்கவேண்டும் என எழுத்தாளர் என்.ஸ்ரீராம் கூறினார். ஆனால் வாங்கிய நூலை அதற்காக தள்ளி வைக்கவா முடியும்?

ஆப்பிரிக்க கிராமத்தில் தொடங்கி அமெரிக்கா வரை செல்லும் அடிமைகளின் வேதனைகளை ஏழு தலைமுறைகளாக விவரிக்கும் நூல். எழுத்தாளர் அலெக்ஸ் ஹோலி பனிரெண்டு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எழுதிய நூல் இது. ஒருவகையில் இது அவரின் பாரம்பரிய வரலாற்றை தேடும் முயற்சியும் கூடத்தான்.

ஆப்பிரிக்க கிராமத்தில் உமரோ பிண்ட்டே தம்பதியின் மகனாக பிறக்கும் குண்ட்டா கிண்ட்டேயின் குடும்ப வரலாறுதான ்கதை. குண்ட்டா கிண்ட்டேதான் அவர்களுடைய மாண்டிங்கா இனத்தின் தந்தை. அவரின் இரண்டாம் மனைவி ஆயேஷா மகன்தான் உமரோ.  குண்ட்டா கிராமத்து வாழ்வில் இயற்கையுடன் வாழும்போது ஏற்படும் வளம் வறுமை துன்பம், சந்தோஷம், கொண்டாட்டம், விழாக்கள் என அனைத்தையும் வாசகர்களுடன் பகிர்கிறார்.

வேட்டையாடும் பயிற்சி பெற்று ஊர் திரும்பியவர் திருமணம் செய்வதற்கான கன்னிப்பெண்களை மனக்கண்ணில் கற்பனை செய்து கொண்டிருக்கும்போதுதான் அவரது வாழ்க்கை மாறுகிறது. வெள்ளையர்களால் கடத்தப்பட்டு அமெரிக்காவிற்கு கப்பலில் கொண்டு செல்லப்படுகிறார். அவர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கில் மாண்டிங்கா உள்ளிட்ட பிற இனங்களைச் சேர்ந்த ஆட்களும் பிடிக்கப்பட்டு பயணிக்கிறார்கள். பயணத்திலேயே பலரும் இறந்துபோக உயிருடன் உள்ளவர்கள் அடிமையாக சில நூறு டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறார்கள். அங்கே நரகவாசல் இரண்டு திறக்கிறது. கப்பலில் அடிமைகளை அழைத்து செல்லும் அத்தியாய அனுபவங்களே பீதியூட்டும் விதமாக எழுதப்பட்டுள்ளது. சங்கிலியில் மூன்று கைதிகளை இணைத்து அடித்து நொறுக்குவது, வாந்தி, மலம்  மேலேயே படுத்து தூங்குவது, புரட்சி செய்யும் அடங்கமறு பழங்குடி ஒருவனை துப்பாக்கி கட்டையால் அடித்து கொன்று கடலில் வீசுவது, ஆப்பிரிக்க பெண்களை வல்லுறவு செய்துவிட்டு போரடித்தால் நடனமாடச்சொல்லி ரசிக்கும் வெள்ளையர்களின் வக்கிரம் என மனதைவிட்டு நீங்காத காட்சிகள் இந்நூலில் ஏராளமுண்டு.

நாவலின் முக்கியமான இடம் தப்பி ஓடி ஆணுறுப்பை இழப்பதா, பாதத்தை
இழப்பதா என குண்ட்டா முடிவெடுக்கும் இடம் அவரின் பிற்கால வாழ்வை மாற்றியமைக்கிறது. அதுவும் குறிப்பாக மகள் கிஜ்ஜியிடன் தன் தந்தை, தாய் வாழ்ந்த இடம், வரலாறு, பழங்குடி ''க'' சொற்கள் ஆகியவை தொடர்ச்சியாக பல்வேறு தலைமுறைகள் தாண்டி அலெக்ஸ் ஹேலி காதுகளை எட்டும் வரை அவை செய்தியாக உள்ளன. இதோ இன்று மாண்டிங்கா இனத்தைச் சேர்ந்தவரின் வாழ்க்கை நூலாகியிருக்கிறது என்றால் குண்ட்டே கிண்ட்டாவின் தீர்க்கதரிசனம் பலித்திருக்கிறது என்றே கொள்ளவேண்டும். கிஜ்ஜி - டாம் ஹாலே மூலமாக பிறக்கும் ஜார்ஜின் கதை சுவாரசியமானது. சேவல் பந்தயக்காரனான ஜார்ஜ் மூலமாகத்தான் குண்ட்டே கிண்ட்டே தலைமுறையே வளர்கிறது. ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள் என அபார வளர்ச்சி. 1850-60 களில் அடிமை ஒழிக்கப்படுவது அமுலானாலும் பல்வேறு மாநிலங்களில் அதற்கு எதிரான கிளர்ச்சி உருவாகும் வரலாறு என வலி, வேதனை உணர்வுகளுக்கு நிகராக அடுத்து என்னவாகும் என எதிர்பார்க்க வைக்கும் எழுத்து அருமை.


அங்கிள் டாம்ஸ் கேபின் நூலுக்கு அடுத்து கருப்பு அடிமைகள் குறித்த முக்கியமான நூல் என அலெக்ஸ் ஹேலி நூலை பெருமையாகவே கூறலாம். தப்பில்லை.

-கோமாளிமேடை டீம்